ரத்த மகுடம்-75



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

தன் வாழ்நாளில் அதுபோல் என்றும் கரிகாலன் அதிர்ந்ததில்லை... இனியும் இப்படியொரு அதிர்ச்சி தனக்கு ஏற்படாது என்பது அவனுக்கு திட்டவட்டமாகத் தெரியும். அந்தளவுக்கு மின்னல் தாக்கியது போலவும் இடி விழுந்தது போலவும் கரிகாலன் தடுமாறினான்.
காரணம், கஜ சாஸ்திரி உச்சரித்த ஒரேயொரு சொல்தான்.‘வேளிர்களின் தலைவன்’.தன்னை நிதானப்படுத்திக் கொள்ள கரிகாலனுக்கு பல கணங்கள் ஆகின. காஞ்சி மாநகரத்தில், தான் தப்பிக்க உதவிய கடிகை பாலகன் வேளிர்களின் தலைவனா...?இந்த வினாதான் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. இறுக்கமாக பிணைக்கவும் செய்தது.

இதைத் தொடர்ந்து காட்சிகளும் அவன் மனக்கண்ணில் விரிந்தன. காஞ்சி கடிகையில் அந்த பாலகனைச் சந்தித்ததும், பிறகு சுரங்கத்தில் அவனை எதிர்கொண்டதும், விசாரணை மண்டபத்தில் உயிரைத்துச்சமென நினைத்து அவன் நின்ற கோலமும் கரிகாலன் மனதில் வந்து வந்து போயின.

அனைத்தையும் கடந்து விஸ்வரூபம் எடுத்து நின்றது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் மனம் கவர்ந்த மனிதனாக அந்த பாலகன் விளங்கியதுதான்... அப்போது பெருமையாக உணர்ந்த அந்த சேர்க்கை... இப்போது இடித்தது.

ஒரு நாட்டின் மன்னராக இருந்தபோதும் சாதாரணமாக கடிகையில் படிக்கும் ஒரு பாலகன் மீது விக்கிரமாதித்தர் அன்பைக் கொண்டிருக்கிறாரே... என்று அப்போது வியந்தது இப்போது விஷமாகக் காட்சியளித்தது. ஏனெனில் அந்த பாலகனும் சாளுக்கிய மன்னரும் பரஸ்பரம் மரியாதை செலுத்தி அன்பைப் பொழிவது பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நல்லதல்லவே...

‘‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா..? அந்த பாலகன் வேளிர்களின் தலைவனா..?’’ தன்னைக் கட்டுப்படுத்தியபடி கஜ சாஸ்திரியிடம் கரிகாலன் கேட்டான்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத புன்னகையுடன் கரிகாலனை ஏறிட்டான் கஜ சாஸ்திரி. ‘‘உண்மையை மட்டுமே நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியாதா..?’’கரிகாலன் தன் இமைகளை மூடினான். மனதில் சூழ்ந்த காரிருள் பார்வைக்கும் படர்ந்தது. ‘‘இந்தக் கூட்டணி தமிழகத்துக்கு மிக மிக ஆபத்தாயிற்றே..?’’ தன்னையும் மீறி முணுமுணுத்தான்.

‘‘தமிழகத்துக்கு அல்ல... பல்லவர்களுக்கு என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தம் கரிகாலா...’’‘‘விளங்கவில்லை... என்ன சொல்ல வருகிறீர்கள்..?’’ இமைகளைப் பிரித்து சட்டென கஜசாஸ்திரியிடம் கேட்டான்.‘‘மதுரைக்குச் சென்று பாண்டியர்களைச் சந்தித்துவிட்டு அந்த பாலகன் திரும்பியிருக்கிறான் என்று சொல்கிறேன்...’’கரிகாலன் தன் உமிழ்நீரை விழுங்கினான். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றான்.
‘‘உண்மையிலேயே ஒரு மாபெரும் வீரன் முன்னால் நாம் நிற்கிறோம் கரிகாலா...

இன்றைய சரித்திரம் மட்டுமல்ல... நாளைய வரலாறும் சாளுக்கியர்களின் மாமன்னர் இரண்டாம் புலிகேசி என்றே குறிப்பிடும். ஆனால், உண்மையில் சாளுக்கிய மன்னர்களிலேயே சிறந்த விவேகியும் ராஜதந்திரியும் விக்கிரமாதித்தர்தான்... இந்த விஷயம் அவருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தெரியும்... என்றாலும் தன் தந்தை இரண்டாம் புலிகேசிக்கு மொத்த புகழையும் கொடுத்துவிட்டு அமைதியாக அவர் நிழலில் இளைப்பாறுகிறார்... எதிரியாக இருந்தாலும் விக்கிரமாதித்தர் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவர்...’’

‘‘இதே உணர்வைத்தான் வேறு வார்த்தைகளில் சாளுக்கிய மன்னரும் என்னிடம் வெளிப்படுத்தினார்...’’ வறண்ட குரலில் கரிகாலன் சொன்னான்.
‘‘அப்படியா..?’’ கஜ சாஸ்திரி கேட்டான்.‘‘ஆமாம்... நம் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை மிக மிக உயர்வாக மதிக்கிறார்... நாட்டு மக்களைக் காக்கவும் கலைப் பொக்கிஷங்கள் சேதமடையக் கூடாது என்பதற்காகவும் தன் தலைநகரையே எதிரிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற மகான் என்று குறிப்பிட்டார்... போரில் நம் அனைவரையும் சந்திக்கவே, தான் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே என்னையும் என் தந்தையையும் சிறை செய்ய முற்படும் அவரது போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தான் இருப்பதாகவும் சொன்னார்...’’
‘‘மாபெரும் வீரர் அல்லவா..? அதனால்தான் அப்படி நினைக்கிறார்...

நினைத்ததை தன் எதிரி நாட்டு உபதளபதியிடமும் மனம்திறந்து சொல்லியிருக்கிறார்... இது அவரது பலவீனத்தை காண்பிக்கவில்லை... மாறாக அவரது வீரத்தையே பறைசாற்றுகிறது... வீரர்களுக்கு என வகுக்கப்பட்ட அறத்துடனும் விழுமியங்களுடனும் பல்லவர்களை வெற்றி கொள்ள நினைக்கிறார்... இந்த விஷயத்தில் அறத்தை விட்டு விலக அவர் விரும்பவில்லை... அதேநேரம் தன் தேசத்துக்கு துரோகம் செய்யவும் அவர் முற்படவில்லை...

ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி பல்லவர்களை வேரோடு சாய்க்க திட்டமிடுகிறார்... இதன் வழியாக தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நினைக்கிறார்... மாபெரும் வீரரான விக்கிரமாதித்தர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம்... அந்த மாபெரும் வீரரை, மனிதரை எதிர்த்து போர்க்களத்தில் நிற்கப் போகிறோம்... என்பதில் பெருமை கொள் கரிகாலா...’’உணர்ச்சியின் கொந்தளிப்பை மறைக்காமல் கஜ சாஸ்திரி வெளிப்படுத்தினான்.

அவை எல்லாம் உண்மை என்பது கரிகாலனுக்கும் புரிந்தே இருந்தது. சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி அவரது மனப்போக்கை ஸ்படிகம் போல் அறிந்தவன் அவன்தானே..? எதிரிகளை எந்தளவுக்கு அவர் மதிக்கிறாரோ அதே அளவுக்கு தன் நாட்டுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்கவும் விக்கிரமாதித்தர் முற்படுகிறார் என்பதை அப்போது உணர்ந்தான். இப்போது கஜ சாஸ்திரியும் அதையே வெளிப்படுத்தியபோது சாளுக்கிய மன்னர் மீதான அவனது மரியாதை அதிகரிக்கவே செய்தது...

இதைத் தொடர்ந்து கிளைவிட்ட கரிகாலனின் சிந்தனை சட்டென்று நின்றது. காரணம், கஜ சாஸ்திரி தொடர்ந்து பேசியதுதான்.
‘‘நரசிம்மவர்ம பல்லவரும் அவரது படைத்தளபதியான பரஞ்ஜோதியும் சாளுக்கியர்களின் மாமன்னரான இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்ததுடன் அவர்களது தலைநகரான வாதாபியையும் தீக்கிரையாக்கினார்கள். அதற்குப் பழிவாங்க இப்பொழுது விக்கிரமாதித்தர் புறப்பட்டு வந்திருக்கிறார்...

உண்மையில் நரசிம்மவர்ம பல்லவர் சாளுக்கியர்களை வென்றதைவிட இப்போதைய பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் சாளுக்கியர்களை வெல்லப் போவதுதான் முக்கியம் கரிகாலா... இந்த விஷயம் நம்மை விட விக்கிரமாதித்தருக்கு நன்றாகத் தெரியும்... அதனால்தான் பல்லவர்களை முறியடிக்க தன் தந்தை திட்டமிடாத எல்லைக்குள் புகுந்து போர்த் தந்திரம் வகுத்திருக்கிறார்... அதன் ஒரு பகுதிதான் வேளிர்களின் தலைவனான அந்த கடிகை பாலகனை தன் பக்கம் ஈர்த்தது... அந்த பாலகனையே மதுரைக்கு அனுப்பி பாண்டியர்களிடம் பேச வைத்தது...’’நிறுத்திய கஜ சாஸ்திரி, நின்று கரிகாலனை உற்றுப் பார்த்தான்.

‘‘உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் கரிகாலா... வேளிர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் விக்கிரமாதித்தரின் நடவடிக்கை
இதுவரை இந்த பாரத தேசம் காணாத யுத்த தந்திரம்...’’அது உண்மைதான் என்பது சோழனான கரிகாலனுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் வேளிர்களால் அதிகமும் பாதிக்கப்பட்டது அவனது முன்னோர்கள்தான். அரசுகள் உருவாகாத காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பை ஆண்டவர்கள் வேளிர்கள்தான்.

வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். இவர்களின் அரசராக இருந்தவர் ‘வேள்’ என அறியப்பட்டார். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும் சேர்ந்து வந்ததால் வள்ளல் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதன் பொருள் உதவி என்பது.
ஆம். மற்றவர்களுக்கு கொடை அளிப்பதில் இவர்களே பெயர் போனவர்கள்.

கால மாற்றத்தில் அரசுகள் தோன்ற ஆரம்பித்து தமிழகத்தில் மூவேந்தர்களாக சோழ, பாண்டிய, சேரர்கள் தலைதூக்கியபோது அவர்களுக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்தியவர்கள் வேளிர்கள்தான். என்றாலும் சமயத்துக்கு ஏற்றபடி மூவேந்தர்களுக்கும் வேளிர்கள் யுத்த காலங்களில் உதவியிருக்கிறார்கள்.

சங்ககால இலக்கியங்களின் அடிப்படையில் பாண்டிநாட்டு வேளிர்களாக ஆய் ஆண்டிரன், பொதியிற் செல்வன் திதியன், பாரிவேள், இருங்கோவேள் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சோழநாட்டு வேளிர்களாக நெடுங்கை வேண்மான், நெடுவேளாதன், செல்லிக்கோமான் ஆதன் எழினி, வாட்டாற்று எழினியாதன், அழுந்தூர்வேள் திதியன், வேளேவ்வி, வீரைவேண்மான் வெளியன் தித்தன், நன்னன்சேய் நன்னன், பொருநன் உள்ளிட்டோர் திகழ்ந்திருக்கிறார்கள்.

சேரநாட்டு வேளிர்களாக நெடுவேளாவி, வேளாவிக் கோமான் பதுமன், வையாவிக் கோப்பெரும் பேகன், நன்னன் வேண்மான், வெளியன் வேண்மான் ஆய், எயினன், வெளிமான், எருமையூரன் ஆகியோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர வரலாற்றின் ஏடுகளில் பதிவாகாத எண்ணற்ற வேளிர்கள் தத்தம் மக்களின் காவலர்களாக இருந்திருக்கிறார்கள். அரசு உருவாக்கத்துக்கு எதிராகவும் மூவேந்தர்கள் நிலப்பரப்பை கூறுபோட்டு ஆளவும் தடைக் கற்களாக இருந்த இவர்களை எதிர்த்து சோழ, பாண்டிய, சேர அரசர்கள் இணைந்தும், விலகியும் பல காலம் போர் புரிந்திருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் வேளிர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டார்கள். இதன் பிறகே பல்லவர்கள் தோன்றினார்கள்.

காலங்கள் உருண்டோடியபோதும் மக்கள் மனதில் இன்றும் வேளிர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். பாணர்கள் நாள்தோறும் வேளிர்களின் அருமை பெருமைகளைப் பாடித் திரிகிறார்கள். கலைஞர்கள் விழாக்காலங்களில் கூத்து நடத்தி வேளிர்களின் புகழை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் வெளிப்படையாக இல்லாமல் ரகசியக் குழுவாக இன்றும் வேளிர்களின் தலைவர்கள் சந்தித்து அவ்வப்போது தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருகிறார்கள் என கரிகாலன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், ஒருபோதும் அதற்கு அவன் அழுத்தம் கொடுத்ததில்லை. ஆட்சியும் நிலமும் படைபலமும் இல்லாத அவர்களால் என்ன செய்ய முடியும் என அலட்சியமாக இருந்துவிட்டான்.

ஆனால், அப்படி, தான் அலட்சியப்படுத்தியதையே பல்லவர்களுக்கு எதிரான போரில் முக்கிய துருப்புச் சீட்டாக சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் பயன்படுத்த முற்படுகிறார் என்பதை அறிந்ததும் கரிகாலன் உண்மையிலேயே நிலைகுலைந்தான்.

ஏற்கனவே பல்லவர்களின் மூதாதையர்கள் எந்த இனம், நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சர்ச்சை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வரும் நிலையில் மண்ணின் மைந்தர்களாக பழம்பெருமை பேசி வரும் வேளிர்கள் சாளுக்கியர்களின் பக்கம் சேர்ந்தால் கண்டிப்பாக அதன் தாக்கம் பல்லவப் படைகளில் எதிரொலிக்கும் என்பதை நினைத்து கரிகாலன் கவலைப்பட்டான். போதும் போதாததற்கு வேளிர்களின் தலைவனான கடிகை பாலகன் வேறு பாண்டிய மன்னரைச் சந்தித்திருக்கிறான்...

‘‘சாளுக்கியர்களின் சார்பில் தூது சென்ற வேளிர்களின் தலைவருக்கு பாண்டிய மன்னர் என்ன பதில் சொல்லி அனுப்பினார்..?’’ சட்டென கஜ சாஸ்திரியிடம் கேட்டான் கரிகாலன்.பதில் சொல்ல முற்பட்ட கஜ சாஸ்திரி திடீரென்று அமைதியானான்.காரணம், கண் முன்னால் விரிந்த காட்சி.
பேசிக்கொண்டே வனத்தில் நடந்து வந்த கஜ சாஸ்திரியும் கரிகாலனும் இப்பொழுது வெட்ட வெளியை அடைந்திருந்தார்கள்.

அங்கு பல்லவ வீரர்கள் அமர்ந்திருக்க... சங்கிலியால் பிணைக்கப்பட்டு நெஞ்சை நிமிர்த்தியபடி சிவகாமி நின்றுகொண்டிருந்தாள்!தொலைவில் இருந்து அவளைப் பார்த்த கரிகாலனின் கண்கள் இடுங்கின. ஒரே சிவகாமிதான் அங்கு நின்றிருந்தாள்.

ஆனால், அவள் ஒருத்தி அல்ல. அசுவ சாஸ்திரி, வாள் சண்டை வீராங்கனை, அம்புகளைக் குறி தவறாமல் எய்யும் வித்தை அறிந்தவள், தன்னுடன் காதல் மொழி பேசியவள், சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... என பல முகம் கொண்டவள். இதில் எந்த முகம் உண்மை வதனம்..? அறிந்தபோது கரிகாலனின் உணர்வுகள் ஊசி முனையில் ஆடத் தொடங்கின...அவளா இவள்..?!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்