சமந்தா 96!



கல்யாணத்துக்குப்பிறகும் மத்தாப்புச் சிரிப்பும் மயக்கும் அவுட்ஃபிட்டுமாக ஜொலிக்கிறார் சமந்தா. இப்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பரபரப்பதால், பொண்ணு முகத்தில் ஹேப்பியோ ஹேப்பி.

‘‘த்ரிஷாவுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கும் போல. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு பதிப்பில் நான் பண்ணினேன். இப்ப ‘96’ பண்றேன். எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது. தமிழ்ல இயக்கின பிரேம்குமாரே தெலுங்குலயும் டைரக்ட் பண்றார். பிரில்லியன்ட் இயக்குநர்.

ஒண்ணு தெரியுமா..? க்ளாசிக் மூவியான ‘96’ஐ ரீமேக் பண்ணலாமானு உங்களை மாதிரியே நானும் நினைச்சேன். ஆனாலும் டைலம்மாவா இருந்தது. அமேஸிங் மூவி. தெலுங்கு ஆடியன்ஸும் கண்டிப்பா ரசிப்பாங்கனு தோணுச்சு. தவிர ஜானு கேரக்டரை மிஸ் பண்ண மனசு வரலை. ஸோ, ஆஃபர் வந்ததும் கமிட் ஆகிட்டேன்!.’’ சிலிர்க்கிறார் சமந்தா.

மேரேஜூக்குப் பிறகு லைஃப் எப்படி இருக்கு?
பியூட்டிஃபுல்! ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கு. இதுதான் என் உலகம்னு தோணுது. கல்யாணத்துக்கு முன்னாடி அடுத்து என்ன... இன்னும் என்ன இருக்குனு யோசனைகள் பறந்துகிட்டே இருக்கும். இப்ப அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைச்சா மாதிரி இருக்கு!

மாடலிங்ல இருந்து சினிமாவுக்கு வந்தீங்கனு உலகுக்கே தெரியும்... ஆனா, மாடலிங்குக்கு எப்படி வந்தீங்கனு சிலருக்குதான் தெரியும். ஸோ..?
சொல்லிட்டா போச்சு! நான் காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப ஒரு சமயம் இங்கிலீஷ் பேப்பர் ஒண்ணோட கடைசி பக்கத்துல என் போட்டோ வந்தது. யாரும் கவனிக்க மாட்டாங்கனு அசால்ட்டா இருந்தேன். தவிர மாடலிங், சினிமா ஐடியா எல்லாம் அப்ப இல்ல.

எதிர்பாராத விதமா நியூஸ் பேப்பர்ல வந்த அந்த போட்டோவைப்பார்த்துட்டு போட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம் எனக்கு போன் பண்ணினார். ‘மாடலிங் பண்றீங்களா’னுகேட்டார். அவர்தான் என்னை வைச்சு முதல் போட்டோ ஷூட்டும் பண்ணினார். இப்பவும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லுவேன்!

சென்னையில் உங்க பல்லாவரம் தவிர வேற எந்த ஏரியா உங்க ஃபேவரிட்..?
சென்னையே ஃபேவரிட்தான்! இங்குள்ள ஒவ்வொரு ஏரியாவிலும், ஒவ்வொரு ரோட்டிலும் ஒரு கதை இருக்கு. ஸ்கூல், காலேஜ், வீடுனு அடுக்கிக்கிட்டே போகலாம். ஐ லவ் சென்னை!  

மை.பாரதிராஜா