நாவல்களுக்கு திரும்பும் தமிழ் சினிமா!



தமிழ் சினிமாவின் ரசனை மாறத் தொடங்கியிருக்கிறது. இலக்கிய வகையில் புகழ் பெற்ற நாவல்கள் மறுபடியும் கவனம் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் ‘அசுரன்’ பெற்ற வெற்றி அந்த வகையைச் சேர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு இயக்குநர் மகேந்திரன் எடுத்துக் கொண்ட பாணி தமிழ் சினிமாவிற்கு அழகு சேர்த்திருக்கிறது. அவருக்குப் பிறகு நாவல்களை கைக்கொள்ளத் தொடங்கிய முயற்சிகள் குறைந்து போய்விட்டன.

ஹாலிவுட்டில் பரவலாக நடந்து கொண்டேயிருக்கும் முயற்சிகளை ரசிப்பவர்கள், இங்கே அத்தகைய விஷயங்களுக்கு இடமளிப்பதில்லை என்பது வருத்தமானதே.இதற்கான காரணங்களை ஆராயப்புகுந்தபோது பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தன. ஒரு நாவலைப் படமாக்குவதன் சிரமங்கள், இயக்குநரின் ஈடுபாடு, தயாரிப்பாளரின் புரிதல்கள் என பலவும் இருக்கின்றன என்பது புலப்பட்டது.

இதுகுறித்து தமிழ் சினிமாவோடு தொடர்புடைய முக்கியமானவர்களிடம் பேசிய விவரத்தொகுப்பு இதோ…சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன் நிதானமாக பேசத் தொடங்கினார்: ‘‘இப்போது நாவல் படமாவது பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். இந்த விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.

ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையை மரியோ பூஸோ ‘காட்ஃபாதர்’ என எழுதுகிறார். சேதன் பகத் அவரது கல்லூரி வாழ்க்கை, காதல்கள் பற்றி எழுதுகிறார். இதெல்லாம் ஒருத்தருடைய அனுபவமாக இருக்கும். அவருடைய கதையாக இருக்கும். இதை ஸ்கிரிப்ட் ஆக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

இங்கே இலக்கிய அமைப்புடன் இருக்கிற நாவல்கள்தான் அதிகம். காட்சி வடிவத்தில் இருக்கிற நாவல்கள் குறைவு. 90க்குப் பிறகு மாடர்ன் லிட்ரேச்சர் வந்துவிட்டது. கதையே சொல்லக்கூடாது என்ற முடிவில் அவர்கள் இருந்தார்கள். உதாரணமாக ‘வெக்கை’யை எடுக்கலாம்.

‘வெக்கை’யை வைத்துமட்டும் ஒரு முழுப்படம் செய்திட முடியாது. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு புதுக்கதை பண்ணியிருக்கார். ‘விசாரணை’யிலும் அப்படித்தான் செய்தார். எடுக்க முடிகிற, எடுக்க முடியாத நாவல்கள்னு நம்மகிட்டே இரண்டு பக்கமும் இருக்கு. ‘வெக்கை’யை வாசிச்சவங்களைக் கேட்டால் இதிலிருக்கிற எந்தத்தன்மையும் ‘அசுர’னில் இல்லை என்பார்கள். இப்படி முரண்பாடு இருக்கு.

ஆனால், சினிமாவின் மொழி ஒரு ரிதமாக உருவாகணும். திரைவடிவத்திற்கு மாற்றுகிற சிரமங்கள், திரைக்கதை ஆசிரியர்களின் போதாமை என இதெல்லாம் கலந்துதான் நம்மகிட்டே சிக்கல்கள் இருக்கு. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு கதையை எழுதி அதை ‘வெக்கை’
யோடு சேர்த்திருக்கார். அது பெரிய பணி. ‘வெக்கை’ படிச்ச ஒரு லட்சம் வாசகர்கள் இருப்பாங்க. அவங்களை திருப்திப்படுத்தி, படம் பார்க்கிறவங்களையும் திருப்தி பண்றது உயிரை எடுக்கிற வேலை. இதுக்கு ஒரு புதுக்கதையை யோசித்து கொடுத்தால் யாரும் திட்ட மாட்டாங்க. கொஞ்சம் இதுல அவப்பெயர் சுமக்க ரெடியாக இருக்கணும்.

நானும் ‘காவல் கோட்டம்’ நாவலை ‘அரவான்’ படமாக எடுக்கும்போது இப்படிச் சுமந்தேன். சுய வெற்றி, தோல்வியோட யாருமே இப்ப சொந்த வாழ்க்கையை எழுதுறதில்லை. ரங்கநாதன் தெருவில் முறுக்கு வித்த தாத்தாவால் ஒரு நாவல் எழுத முடிந்தால் அதுதான் ரங்கநாதன் தெருவின் உண்மையான கதையாக இருக்கும். இப்ப ‘மாதொருபாகன்’ கதையை, அகரமுதல்வனின் நாவலை படமாகச் செய்ய முடியும்னு சொல்றாங்க.

‘திருடன் மணியம்பிள்ளை’ மாதிரி கதையை சுலபமாக எடுக்கலாம். 100 சம்பவம் இருக்கும். அதில் பொறுக்கி எடுக்கலாம். சுலபம். ‘தில்லானா மோகனாம்பாள்’ நாடகமா போட்டு ரிகர்சல் பார்த்ததுதான். இப்பதான் ‘பொன்னியின் செல்வ’னுக்கு காலம் வருது. தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’வை கமல்சார் எடுக்க ஆசைப்பட்டார். நடக்கலை..

திரைக்கதை வடிவத்திற்கு ஒரு மொழி இருக்கு. ஆனால், எழுத்தாளர்கள் அதை கடைசி வரைக்கும் எழுத்தாகவே பார்க்கிறாங்க. இங்கே கமர்ஷியல் சக்ஸஸ் வேற இருக்கு. எழுத்தாளரை திருப்திப்படுத்தணுமா, ரசிகனை திருப்திப்படுத்தணுமான்னு பார்த்தால் ரசிகன்தான் நமக்கு குறியாக இருக்கணும்.
இதுமாதிரி நாவல் வந்தால் தமிழ் வாழ்க்கை வரும். அதில் சாதி, வாழ்நிலை, விழுமியங்கள் எல்லாம் கிடைக்கும்...’’ என்கிறார் வசந்தபாலன்.
இயக்குநர் கோபி நயினார் சொல்வது வேறு விதம்: ‘‘சினிமாவில் இருக்கிறவங்களுக்கு வாசிப்பே இல்லை. வாழ்க்கையை இலக்கியத்தின் வழி பார்க்காமல் எப்படி ஒரு கதையை உருவாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை!

இங்கே சினிமாக்கதை வேறுமாதிரி கட்டமைக்கப்பட்டுவிட்டது. தமிழ் சினிமாவின் கதை அமைப்பு கேவலமா இருக்கு. தவிர பெரும்பாலான நாவல்கள் திரைப்படமாக பண்ண முடியாதபடிக்கு இருக்கு. மாக்சிம் கார்க்கியோட ‘தாய்’ வாசிச்சால் அப்படியே காட்சியாக போய்க்கிட்டே இருக்கு. அதுமாதிரி இங்கே நான் அதிகம் படிச்சதில்லை.

ஒரு நாவலைப் படிக்கும்போதே அதுவே விசாரணையைத் தொடங்கணும். வாசகனோடு பேசணும். அப்படியெல்லாம் இங்கே படிச்சதில்லை. அப்படி எதாவது நான் படிக்காமல் ஒன்றிரண்டு இருக்கலாம். ஒரு நாவலைப் படமாக்குகிற விதத்தில் பொருளாதாரமும் முக்கியமாக இருக்கு.

அதற்கான தயாரிப்பாளர் இங்கே இல்லை. படைப்பு இலக்கியத்தின் வாசகன் வேறு, திரை வாசகன் வேறு என்பதாக இங்கே இருக்கு. இங்கே எதாவது ஒரு திரைக்கதையை அமைத்து பார்வையாளரின் ரசனையைத் தோற்கடிக்கிறார்கள்.

எனக்கு சிவகாமியின் ‘ஆனந்தாயி’யை ப் படமாக்க ஆசை. அதற்கான வகையான சாத்தியம் இல்லாமல் இருக்கு. சினிமா மீடியா மொத்த சமூகத்தையும் இழுத்திட்டுப் போற தேராக மாறணும்ங்கிற நினைப்பு யார்கிட்டேயும் இல்லை.

இங்கே ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமே இல்லை. ஒரு குழந்தையைத் தூக்கிட்டுப்போன நரி மேலே பழைய நாடோடி சமூகத்திற்கு பகை இருந்ததில்லை. ஏன்னா, இவனே முதல் நாள் ஒரு சிங்கத்தை வேட்டையாடிக் கொன்றிருப்பான். அப்படி ஒரு சமூகத்திற்கு நான் ஏங்கிக்கிட்டே இருக்கேன்.

நல்ல புரிதல் உள்ள தயாரிப்பாளரும் படைப்பு அம்சத்தில் சிறந்து விளங்குகிற இயக்குநரும்தான் இதில் முக்கியமானவர்கள்...’’ என்கிறார் கோபி நயினார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தீர்க்கமாகச் சொல்வது இது: ‘‘ஹாலிவுட்டில் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களில் 80 சதவீதம் நாவல்களே. தமிழில் திரைப்படமாக்க வேண்டிய நல்ல நாவல்கள் நிறையவே உள்ளன. எந்தவொரு நாவலையும் அப்படியே படமாக்க முடியாது. பல்வேறு உலகப் புகழ் பெற்ற நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி அடையாமல் போயிருக்கின்றன.

இயக்குநரின் புரிதலும், ஆளுமையுமே நாவலை படமாக்குவதில் வெற்றியை உருவாக்குகிறது. டேவிட் லீன் இயக்கிய ‘டாக்டர் ஷிவாகோ’ இதற்கு சிறந்த உதாரணம். இந்திய அளவில் ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை சத்யஜித் ராய் சிறப்பாக உருவாக்கினார்.

நல்ல கதை கிடைக்கவில்லை என புலம்பிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா சூழலுக்கு சிறந்த நாவல்களை முறையாக உரிமை வாங்கிப் படமாக்குவதே சிறந்த வழி. முக்கிய இயக்குநர் ஒவ்வொருவரும் ஒரு நாவலை படமாக்க முயன்றால் சினிமாவில் புதிய மாற்றம் நிச்சயம் உருவாகும்.

நாவலின் கதாபாத்திரங்கள் வாசகர் மனதில் வேறுவிதமான உருவகமாகப் பதிந்துவிட, நட்சத்திரங்கள் அதே கதாபாத்திரமாக நடிக்கும்போது சில நேரம் அது வாசகர்களுக்கு பிடிக்காமல் போய் விடுகிறது.

டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ இரண்டு முறை படமாக்கப்பட்டு, இரண்டு முறையும் நாவல் பெற்ற வெற்றியில் பாதியைக்கூட பெறவில்லை. இதுவேதான் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும் ‘நாவலுக்கும் நடந்தது. நாவல் படிக்கும் போது ஏற்படுகிற நெருக்கம் பல நேரம் படமாகப் பார்க்கும் போது இருப்பதில்லை. விதிவிலக்காக ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அதன் வெற்றிக்கு ஜெயகாந்தனும், இயக்குநர் பீம்சிங்கும் இணைந்து செயல்பட்டதே காரணம்.

கொத்தமங்கலம் சுப்பு எழுதின ‘தில்லானா மோகனாம்பாள்’ பெரும் வெற்றி பெற்றது. சுஜாதாவின் ‘காயத்ரி’, ‘அனிதா இளம் மனைவி’, புஷ்பா தங்க
துரையின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ போன்றவை நாவலாக பெற்ற வெற்றியை சினிமாவில் பெறவில்லை.நாவலை திரைக்கதையாக்குவது முக்கியமான சவால். நாவலின் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளில் எதை வைத்துக்கொண்டு, எதை நீக்குவது என்பது இயக்குநரின் விருப்பமே.

ஹாலிவுட்டில் நாவலின் உரிமையை வாங்கி, அதற்கு வேறு ஒருவர் திரைக்கதை எழுதுகிறார். ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் இணைகிறார்கள்.
நாவலின் மையம் மாறிவிடக்கூடாது என்பது திரைக்கதையின் பொது விதி. தமிழ் சினிமாவின் புதிய இயக்குநர்கள் நாவல்களைப் படமாக்க முயன்றால் நிச்சயம் தரமான படங்கள் உருவாகும்...’’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.மறுபடியும் ‘வெக்கை’யின் மூலமாக தமிழ் சினிமாவில் புது வெளிச்சம் ‘அசுரன்’ படமாக பாய்ந்திருக்கிறது. தொடர்ந்தால் வரவேற்கலாம்.             

நா.கதிர்வேலன்