சசிகுமார் படத்துல நட்பு, நட்புனு சொல்லும்போது எரிச்சலா வரும்!



மனம் திறக்கிறார் இயக்குநர் சரண்

‘‘இப்ப சினிமா ரொம்ப மாறியிருக்கு. ஒரு சுவாரஸ்யமான சினிமாவுக்கான பொறுப்பு எனக்கு இருக்கிறதா எப்பவும் நினைப்பேன்.
ஒரு இயக்குநரா வேறு வேறு உலகத்தையும், அனுபவங்களையும் தரவேண்டியது என் கடமை. இரண்டரை மணி நேரத்திற்குள்ளே காமெடி, பேய், ஃபேன்டஸி, சென்டிமென்ட், ஆக்‌ஷன்னு சரியான பேக்கேஜ்தான் ‘மார்க்கெட் ராஜா MBBS.’

மக்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். ரத்தம், சத்தம், துரோகம், குரோதம்னு வாழ்ற மனுஷங்களுக்குள்ளே ஒளிஞ்சு கிடக்கிற வேறு உலகத்தை ஆல்பம் மாதிரி புரட்டிக் காட்டப்போறேன்...’’ நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சரண். தமிழ்ச் சினிமா எப்பவும் தேடுகிற கலைஞன். மார்க்கெட் ராஜா MBBS - வசூல் ராஜாவின் தொடர்ச்சியா?

இல்லை. ஆனால், அப்படி நினைக்க வாய்ப்பு இருக்கு. இந்த இரண்டு படத்திற்கும் இருக்கிற ஒரே ஒற்றுமை டைரக்டராக இருக்கிற நான்தான்! ‘வசூல் ராஜா’ பெயருக்கே ஒரு பெரிய கிரேஸ் இருக்கு. அதைப் பயன்படுத்திக்கிட்டேன். நம்ம ஹீரோ ஒரு ரவுடி. அவனுக்கு இந்த உலகத்துல யாருக்குமே வராத பிரச்னை ஒண்ணு வருது. அவன் எப்படி அதை சமாளித்து எழுந்து நிற்கிறான்னு அடுத்தடுத்து படம் போய்க்கிட்டே இருக்கும்.

என் பொண்ணு, ‘அப்பா நீங்க த்ரில்லரா ஒரு படம் எடுக்க மாட்டீங்களா’னு கேட்கிறாள். நமக்கு லாரன்ஸ் வகையில் படம் எடுக்கத் தெரியாது. ஆனால், ‘முனி’யே நான் போட்ட விதைதான்! நான் தயாரிச்ச படம் அது. தமிழ்ச் சினிமாவில் இப்ப பெருகி வளர்ந்திருக்கிற திகில் வரிசைக்கே என் படம்தான் ஆரம்பம்.

நான் வளர்த்த பூனை வளர்ந்து வளர்ந்து புலியாகி நிற்கிற நேரம். நான் அந்தப் புலிக்கே இப்ப மணி கட்டியிருக்கேன். இந்த விஷயத்தையே நம்ம பாணியில் செய்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சப்ப வந்து உட்கார்ந்ததுதான் இந்தக் கதை.

ஆரவ் எப்படி?
வளர்கிற ஒரு பையனுக்கு படம் பண்ண யாருக்குமே ஆசையாக இருக்கும். நாம் நினைக்கிற மாதிரியும் படம் பண்ண முடியும். எனக்கு முதல் நாளிலிருந்தே ஆரவ் மேலே நம்பிக்கை இருந்தது. அவரும் ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருந்தார். அப்ப அமைஞ்சுதுதான் இந்தப் படம்.
ஒரே சாதம், பருப்பு, காய்கறிதான். அதையே ஹோட்டலில் சாப்பிட ஒரு மாதிரியாக இருக்கும்.

வீட்டில் செய்து சாப்பிட்டால் வேற மாதிரி இருக்கும். ஆக இந்த வித்தியாசம்தான் இந்தப்படம். இதுவரை 15 படங்கள் செய்திருக்கேன். ஆக்‌ஷன், காதல், ஒரு மெது ரசனைன்னு ஒரு பாணியை குடுத்திருக்கேன். ‘இப்ப வெவ்வேறு வகையில் டைரக்டர்கள் வந்திட்டாங்க. ஆனால், உங்க பாணிக்கு இங்கே யாரும் வரலை’னு சொல்றாங்க. அதை இந்தப் படத்திலும் காப்பாத்தியிருக்கேன்.
ராதிகா கெட்டப் ஆச்சரியமா இருக்கு…

நம்ம ஆரவ் இதில் பெரம்பூர் பக்கத்தில் இருக்கிற ஒரு ரவுடி. அவருக்கு அம்மாவாக பட்டாளம் சுந்தரிபாய்னு ஒரு கேரக்டர். இதை எழுதும்போதே ராதிகாதான் உடனே ஞாபகத்திற்கு வந்தாங்க. சுருட்டு பிடிச்சுக்கிட்டு, சர்வ அலட்சியமாக பைக் ஏறி உட்கார்ந்து ரைட் பண்ணிக்கிட்டு இருக்கிற கேரக்டர். அதில் சின்னதாக எம்.ஆர்.ராதாவோட சாயல், வாசனை இருக்கணும். ஒரு பெண் ரூபத்தில் அவர் இருந்தால் எப்படி எகத்தாளமாக இருக்கணுமோ அப்படி.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பின்னி எடுத்திட்டாங்க. ஒவ்வொரு தடவையும் காட்சி முடிஞ்சதும் கை தட்டல் வாங்குறதே அவங்களுக்கு வழக்கமாகப் போச்சு!படத்துல 20 பேருக்கு மேல ஆர்ட்டிஸ்ட்ஸ் இருக்காங்க. நாசர் இதில் சிவாஜி முத்தையாங்கிற கேரக்டரில் வருகிறார். காவ்யா தாப்பர்தான் ஹீரோயின். நல்ல ஆர்ட்டிஸ்ட். அடுத்து, விஜய் ஆண்டனி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாங்க.
உங்களுடைய வழக்கமான டெக்னீஷியன்ஸ் இல்லை…

ஆமாம். மியூசிக் டைரக்டர்ஸ் யார் மாறினாலும் எனக்கு எப்பவும் வைரமுத்துதான். இதில் சும்மா ஒரு மாற்றம் பண்ணிப் பார்த்தோம். என் தம்பி கே.வி.குகன்தான் கேமிரா. என் மனசை வாங்கிட்டு செய்த மாதிரி அருமையாகச் செய்திருக்கான்.

பாருப்பா, தம்பியை பக்கத்தில் வைச்சுக்கிட்டே பயன்படுத்திக்காம இருந்திருக்கோம்னு நினைக்க வைச்சிட்டான். இப்ப சார், தெலுங்குப் படங்கள் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார். கவிஞர் ரோகேஷ், கு.கார்த்திக், தமயந்தினு ஒரு அணியைப் பிடிச்சு பாடல்கள் எழுத வைச்சோம்.

ரோகிணிக்காக ‘கண்ணே கருவிழியே’னு ஒரு பாட்டு கார்த்திக் எழுதினார். கேட்டவங்க கண்ணெல்லாம் குளமாகுது. சைமன் கே. கிங்தான் மியூசிக். இன்னிக்கு ஒரு வரிசையில் பெரிய இடத்தில் நிற்கிறார். வரட்டும். புதுமையும், இனிமையுமாக புது இசையைக்கேட்போமே!உங்கள் கஷ்டங்களிலிருந்து மீண்டுவிட்டீர்களா பிரதர்?

நான் படத்திற்காக நல்ல ஸ்கிரீன்ப்ளே பண்ணுவேன். ஆனால், எனக்கே திரைக்கதை எழுதி, விளையாடி, ட்ராவல் பண்ணிட்டும் போயிட்டாங்க. மிகப்
பெரும் துக்கத்தை வைக்க இடம் தெரியாமல் தூக்கிக்கிட்டு தடுமாறினேன். தெரிஞ்சுக்காம, மாயமுகம் அறியாமல் அனுமதி கொடுத்தது என் தப்பு.

நம்பிக்கை மோசடி, துரோகம்னு அதுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைச்சுக்கங்க. அதில் நான் வைச்ச அந்த நம்பிக்கையும் ஊடாக இருக்கு. நமக்காகவே இருக்கிறாங்கனு கண் மூடித்தனமாக ஒருத்தரை நம்புறோம் இல்லையா, அதுக்கும் கிடைச்ச அடி.

எனக்கு சசிகுமார் படத்துல நட்பு, நட்புனு சொல்லும் போது எரிச்சலா வரும். அப்படி பார்த்தால் காதல் கூட உண்மையானதுதான். யார் மேல வைக்கிறோம், அதுக்கு யார் உண்மையாக இருக்காங்கனு ஒரு கணக்கே தவிர, காதலே தப்பு கிடையாது. அப்படியே நட்பும் தப்பு கிடையாதுனு பின்னாடி புரிஞ்சது.

எனக்கு நட்பு மிஸ் ஆகி சரிவு வந்தது. நான் படம் வரையும் போது பேப்பருக்கு வலிக்கும்னு பென்சிலுக்கு பதிலாக, பிரஷ் போடுவேன். பிள்ளைகளை இறுக்கி வைச்சுக்கிட்டு, மூச்சுத் திணறுகிற மாதிரி பெற்றோர் பைக்கில் கொண்டு போனால் கோபம் வரும்.

அப்படிப்பட்ட ஆள்கிட்டே நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டாங்க. யார்கிட்டேயும் எதற்கும் பதில் சொன்னது கிடையாது. சொன்னேன். கே.பாலச்சந்தர், ‘இருகோடுகள்’ தத்துவம் சொல்வாரே.... அப்படி ஒரு சின்ன கோடு வைச்சிட்டு திகைச்சு நின்னுட்டேன். இப்ப சினிமாவில் பார்த்தால், பெரிய கோடு வைச்சுக்கிட்டே சுதந்திரமாகத் திரியுறாங்க. பார்த்திட்டு வெளியே வந்திட்டேன்.

ஒடுங்கிப்போய் இருந்தவன், சிறகு விரிச்சிட்டேன். இனி ஓடி, ஒளிய வேண்டியதில்லை. படம் பண்ணணும். எல்லார்கிட்டேயும் பூங்கொத்தும் இருக்கு. கத்தியும் இருக்கு. எனக்கு லேட்டாகத்தான் புரிஞ்சது. அனுபவஸ்தனா சொல்றேன், நீங்க புரிஞ்சுக்கங்க!  

நா.கதிர்வேலன்