தனுஷின் மூத்த மகன்!



‘‘‘என்னது தனுஷ் சாருக்கு நான் மகனா?’ - இப்படித்தான் ஜெர்க் ஆனேன்! பின்னே... 30 வயசு நடிகருக்கு 20 வயசு ஆள் மகன்னா ஷாக் அடிக்கத்தானே செய்யும்!

ஆனா, இந்தளவுக்கு படமும் நானும் ரீச் ஆவோம்னு சத்தியமா நினைச்சுக் கூட பார்க்கலை...’’ நெகிழ்கிறார் ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகன் முருகனாக வந்து பட்டையைக் கிளப்பிய டீஜே அருணாசலம். ‘‘அப்பா தமிழ், அம்மா இலங்கை. இங்கிலாந்துல வளர்ந்தேன். அங்கதான் படிச்சேன். மியூசிக் கத்துக்கிட்டதும் அங்கதான். 40க்கும் மேலான பாடல்களை எழுதிப் பாடியிருக்கேன்.

அடிப்படைல நான் பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர். என் குறிக்கோளும் இசைதான். ஆண்ட்ரியா மேடம்தான் என்னைப் பத்தி வெற்றி சார் கிட்ட சொல்லியிருக்காங்க. திடீர்னு ஒரு நாள் வெற்றி சார் கூப்பிட்டார். ‘தனுஷ் சாருக்கு நீ பையன்’னு சொன்னார். ஆடிட்டேன். ‘உன்னால முடியும்’னு வெற்றி சார் நம்பிக்கை கொடுத்தார். இப்ப வரை எப்படி என்னை அவர் நம்பினார்னு குழப்பமாதான் இருக்கு...’’ சிரிக்கும் டீஜே அருணாசலம், நடிக்கத் தயங்கியிருக்கிறார்.

‘‘ஏன்னா எனக்கு மியூசிக் கான்செர்ட் இருந்தது. ‘முடிச்சுட்டே வா’னு வெற்றி சார் அனுப்பினார். அப்புறம் அமெரிக்கா போனேன். என் பாஸ்போர்ட் காணாமப் போய்... பெரிய சிக்கலாகிடுச்சு. ஒருவழியா சென்னை வந்து நான் சேர்ந்தப்ப ‘அசுரன்’ ஷூட்டிங் போயிட்டிருந்தது.‘படத்துல நான் இருக்கேனா’னு தெரியாம குழப்பத்தோட படப்பிடிப்புக்கு போனேன். ஆனா, சொன்ன மாதிரி வெற்றி & தனுஷ் சார் எனக்காக காத்திருந்தாங்க.

முதல் காட்சியே தனுஷ் சார் கூடதான். அவர் வேற மாதிரி இருந்தார். வெற்றி & தனுஷ் சார் கூட இருந்தா சினிமா, நடிப்பு பத்தி தெரிஞ்சுக்கலாம் என்பதை அனுபவ பூர்வமா உணர்ந்தேன்...’’ பூரிக்கும் டீஜே, ‘அசுரன்’ படத்தில் இரு பாடல்களையும் பாடியிருக்கிறார்.‘‘ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ‘தட்றோம் தூக்குறோம்’ ரிலீசுக்கு ரெடியா இருக்கு. அதுல நடிச்சிருக்கேன். இப்ப லேசா நடிப்பு மேலயும் ஆர்வம் வந்திருக்கு...’’ என்கிறார் டீஜே. ரைட்டு!

ஷாலினி நியூட்டன்