நியூஸ் சாண்ட்விச்



தீபிகா டிரெஸ் விற்பனைக்கு!

அக்டோபர் 10, உலக மனநல தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் உபயோகித்த ஆடை அணிகலன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.
தன் deepikapadukone.com என்ற இணையதளத்தில் தன் உடைமைகளை வெளியிட்ட தீபிகா, இதில் வரும் வருமானம் அவருடைய ‘லிவ் லவ் லாஃப்’ அமைப்பிற்காக (The Live Love Laugh) உபயோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தம், கவலை, மனச்சோர்வால் பாதிக்கப்படும் மக்களுக்காக இந்த அமைப்பு இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட டுவிட்டர்!

டுவிட்டர் பயனர்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காகக் கொடுத்த மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும், விளம்பரங்கள் அனுப்ப பயன்படுத்திக்கொண்டதாக டுவிட்டர் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்காக மன்னிப்பும் கேட்ட டுவிட்டர் நிறுவனம், இது தற்செயலாக நடந்த பிழை என்று தெரிவித்துள்ளது. இதனால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை திரட்ட முடியவில்லை என்று கூறி, இது மேலும் நடக்காமல் தடுக்க அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்!

மும்பையைச் சேர்ந்த 82 வயது பிச்சைக்காரர் ஒருவரின் உடலை, ரயில் தண்டவாளங்களுக்கு நடுவிலிருந்து மீட்ட போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரது குடிசையிலிருந்த பழைய  சாக்குப் பையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாணயங்களும், வங்கி விவரங்களும் கிடைத்தன.

அதில் அவரது பெயரில், நிரந்தர வைப்பில் எட்டு லட்ச ரூபாயும், சேமிப்புக் கணக்கில் 96 ஆயிரமும் இருந்துள்ளது. இதை பத்திரமாக ஒரு ப்ளாஸ்டிக் பையில் ஒளித்து வைத்திருக்கிறார். மொத்தமாக ரூ.11.5 லட்சம் பணத்தை போலீசார் இவரது பெயரிலிருந்து மீட்டு, ராஜஸ்தானில் வசிக்கும் அவரது மகனிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

ஆமைக்குட்டி வயிற்றில் ப்ளாஸ்டிக்

அமெரிக்காவில், கம்போ லிம்போ இயற்கை மையம், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் கையளவே இருக்கும் ஒரு ஆமைக்குட்டியின் அருகில் நூற்றுக்கும் அதிகமான மைக்ரோ ப்ளாஸ்டிக் துண்டுகள் இருந்திருக்கின்றன. மேலும், அந்த ஆமைக்குட்டி உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கியதாகவும், அதைக் காப்பாற்ற முயன்று முடியாமல் போனதும், ஆய்வாளர்கள் அதன் வயிற்றை அறுத்துப் பார்த்த போது, 104 ப்ளாஸ்டிக் துண்டுகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளனர்.

கடல் வாழ் உயிரினங்கள், சிறிய ப்ளாஸ்டிக் துகள்களை உணவு என்று நினைத்து, சாப்பிடுகின்றன. பின் அதை செரிமானிக்க முடியாமல் போய், உணவு உண்ண முடியாமல் கரை ஒதுங்கி இறக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.             

Happy Children in Netherland!

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், மகிழ்ச்சியான குழந்தைகள் வாழும் நாடாக நெதர்லாந்து இருக்கிறது.இதற்கான காரணங்களாக பல கூறப்படுகின்றன. அதில் முக்கியமானவை, அங்கு குழந்தைகள் காலை உணவை குடும்பத்துடன் சேர்ந்து தினமும் உண்பதும் அதிக நேரம் உறங்குவதும். தவிர பள்ளியில் முதல் மாணவராக வரவேண்டும் என்ற அழுத்தம் அங்கு கிடையாது என்பதும்.

தினமும் வெளியில் நண்பர்களுடன் விளையாடுகின்றனர். பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். அங்கு தேர்வுகளுக்கும் வீட்டுப்பாடங்களுக்கும் அதிக முன்னுரிமை இல்லாமல், நல்லொழுக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்குமே முதன்மை அளிக்கப்படுகிறது.

பள்ளத்தில் விழுந்த லேடி டாக்டர்!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நேஹா ஷீக், ஒரு மருத்துவர். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  கடந்த 9ம் தேதி, வேலை முடிந்து, கிளினிக்கில் இருந்து ஸ்கூட்டியில் வீடு  திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, தானே பிவண்டி பகுதியிலிருந்த  பள்ளத்தில் ஸ்கூட்டியின் சக்கரம் சிக்க, கீழே விழுந்து, பின்னால் வந்த  லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொதுமக்கள், இரவு நேரத்தில் சாலை விளக்குகள் இல்லாததும், அதிகாரிகளின் மெத்தனப் போக்குமே இந்த விபத்துகளுக்கு காரணம் என்கின்றனர்.l

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்