தனுஷின் இளைய மகன்!



தவுசண்ட் வாட்ஸ் பூரிப்பில்  மினுமினுக்கிறார் கென் கருணாஸ். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸின் மகன். ‘அசுரனி’ல் தனுஷின் இளையமகன் சிதம்பரமாக இயல்பும் யதார்த்தமுமாகக் கலக்கியவர். ‘‘‘அசுரன்’ ரிலீஸ் ஆனப்ப தனுஷ் சார் லண்டன்ல இருந்தார். அங்கிருந்தே அவர் என்னைக் கூப்பிட்டு ‘அசத்திட்டடா கென்’னு சொன்னார்.

அடுத்ததா தாணு சார், இயக்குநர் முத்தையா சார், சூரி சார்னு இண்டஸ்ட்ரீயில் இருந்து வரிசையா போன் கால்ஸ். வீட்லயும் அம்மாவும் அப்பாவும் செம ஹேப்பி. அதுவும் அப்பா, ‘பெருமையா இருக்கு’னு என் தோள்ல தட்டிக்கொடுத்தார். அத்தனை பாராட்டுக்களும் வெற்றி சாருக்கும், தனுஷ் சாருக்கும்தான் போய்ச் சேரணும்...’’ பணிவும் பவ்யமுமாக பேசுகிறார் கென் கருணாஸ்.

‘‘குழந்தை நட்சத்திரமா ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, ஒரு மெச்சூர்டான கேரக்டர் இப்பதான் அமைஞ்சது. திடீர்னு ஒருநாள் எங்க அப்பா என்னை வெற்றிமாறன் சார் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போனார். அப்புறம் என்னை மட்டும் ஒருநாள் வெற்றி சார் வரச் சொன்னார். போனேன். ‘நீ கொஞ்சம் உடம்பை குறைச்சிட்டு வந்து பாரு’ன்னார். மறுபடியும் ஃபிட்டா போய் அவர் முன்னாடி நின்னேன். ‘அசுரன்’ல செலக்ட் ஆகிட்டேன்.

தனுஷ் சாரின் மகன் கேரக்டர்ல நடிக்கறேன்னு தெரிஞ்சதும், வானத்துல பறக்கறா மாதிரி இருந்தது. தனுஷ் சார், மஞ்சு மேம்னு அத்தனை பேருமே ஷூட்டிங்ல என்னை என்கரேஜ் பண்ணுவாங்க. படப்பிடிப்பிலும் மறக்கமுடியாத இன்ஸிடென்ஸ் நிறைய இருக்கு.

ஒருநாள் எங்க அண்ணன் என்னை தள்ளிவிடுவார். அந்த சீன் ஷூட் பண்றப்ப அவர் தள்ளிவிட்ட இடத்துல ஒரு கட்டுவிரியன் பாம்பு இருந்துச்சு! அப்படியே வெலவெலத்துட்டேன்...’’ படபடக்கும் கென், இப்போது லயோலா கல்லூரியில் பிகாம் கார்ப்பரேட்டில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

‘‘காலேஜ்லயும், ‘நாங்க பழகுற கென்னுக்கும் நடிகர் கென்னுக்கும் எவ்ளோ மாற்றங்கள்... பிரமாதம்’னு சொல்லி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கை
குடுத்துட்டு போறாங்க. தொடர்ந்து நல்ல கதைகள் அமைஞ்சா நடிப்பேன். அதுவரைக்கும் படிப்புதான்!’’ என்கிறார் கென்.                  

மை.பாரதிராஜா