சைக்கிளிங் சாம்பியன் ஆர்யா!



முகம் மறுமுகம்

சினிமாவில் மட்டுமல்ல, ஃபிட்னஸிலும் சின்ஸியர் மேன் ஆர்யா. பலநூறு கிலோமீட்டர் தூர சைக்கிளிங் போட்டிகளில் அசால்ட்டாக
பங்கேற்று, பரிசுகளையும், பதக்கங்களையும் சத்தமே இல்லாமல் அள்ளி வருகிறார். சமீபத்தில் பாரீஸில் நடந்த paris brest paris (PBP) 1200 கி.மீ. போட்டியில் பங்கேற்று அசத்தியிருக்கிறார்.

சென்னையில் படப்பிடிப்பு என்றால், அண்ணாநகர் ஏரியாவிலிருக்கும் தன் வீட்டிலிருந்தே ஈசிஆர் வரை கூட சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜாலியாக வந்துவிடுகிறார். ஆர்யாவிடம் பேச ஆரம்பித்தால், சைக்கிள் மீது நமக்கும் காதல் வருகிறது!

‘‘இப்ப அரை கிலோமீட்டர் தூரம் போகணும்னாலே ஊபரை பிடிச்சு போக ஆரம்பிச்சிட்டோம். இல்லைனா பைக்கை எடுத்து சுத்தறோம். சாப்பாடு விஷயத்துலயும், ரொம்பவே ஃபாஸ்ட் ஆகிட்டோம். வீட்ல சமைக்கறதில்ல. பக்கத்துலயே இருக்கிற ஹோட்டலுக்கு போறதில்ல. பதிலா ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சு சாப்பிடறோம்!மொத்தத்துல அவுட்டோர் ஆக்ட்டிவிட்டீஸ்னா என்னனு கேட்கத் தொடங்கிட்டோம்! அதனாலதான் நான் சைக்கிள் பையனா மாறிட்டேன்!’’

சிரிக்கும் ஆர்யா, தசைகள் முறுக்கேறுவது சைக்கிளிங்கில்தான் என்கிறார். ‘‘ஆமாம் பாஸ்! ரன்னிங் போனா கூட மூட்டு ஜாயின்ட்ஸ்ல வலி வரும். ஆனா, சைக்கிளிங்ல அப்படி எதுவும் வராது. மிதிக்க மிதிக்க தசைகள் முறுக்கேறி ஜம்முனு இருப்போம். செலவே இல்லாத
எக்ஸர்சைஸ்.

சைக்கிள் ஓட்டிப் பழகினா, ஜாலியாவும் பயணிக்கலாம். உடம்பும், மனசும் சும்மா லேசாகி கட்டுக்கோப்பாகும். வெளிநாடுகள்ல வீட்டுல இருந்து ஆபீஸுக்கு போகணும்னா சைக்கிளைத்தான் எடுக்கறாங்க. நம்ம ஊர்லயும் அப்படி வந்தா நல்லா இருக்கும்...’’ புருவத்தை உயர்த்தி ‘சரிதானே’ என்பதுபோல் கேட்கிறார் ஆர்யா.

‘‘சின்ன வயசுல இருந்து சைக்கிளிங் மேல அப்படியொரு ப்ரியம். ஸ்கூலுக்கு சைக்கிள்லதான் போவேன். அப்ப, ஸ்ட்ரீட் கேட் சைக்கிள் வச்சிருந்தேன். அது ரொம்ப ஃபேமஸ். டிசைன் டிசைனா எக்கச்சக்க மாடல்ல வந்துகிட்டே இருக்கும். ஒவ்வொரு மாடல் வர்றப்பவும் அதை வாங்கிடுவேன்!
எப்படீன்னு கேட்கறீங்களா..? புது மாடல் வர்றப்ப என்கிட்ட இருக்கிற சைக்கிளை வேணும்னே தொலைச்சுடுவேன்! ‘சைக்கிள் காணாமப் போச்சு... ம்... ம்...’னு வீட்ல அழுவேன்.

என் அழுகையை உண்மைனு வீட்ல நம்பிடுவாங்க. புது சைக்கிள் வாங்கித் தந்தாதான் ஸ்கூலுக்கு போவேன்னு அடம் பிடிப்பேன். அவ்வளவு

தான். அப்பா என்னை கூட்டிட்டு சைக்கிள் கடைக்குப் போவார். புது மாடல் சைக்கிள் வந்திருக்கும்! அதைக் கேட்டு வாங்குவேன்!

வண்டலூர்ல இருந்த காலேஜுல சேர்ந்தப்பவும் அப்பப்ப சைக்கிள்ல கல்லூரிக்கு போவேன். ‘அவ்வளவு தூரம் சைக்கிள்லயேவா வந்த’னு ஆச்சர்யத்தோட பசங்க கேட்பாங்க. கெத்தா ‘ஆமா மச்சான்’னு சொல்லுவேன்!’’ மலரும் நினைவுகளில் மூழ்கிய ஆர்யா, ஜாலியாக மட்டுமே இருந்த சைக்கிளிங்கை, ஃபிட்னஸுக்கான விஷயமாக, தான் பார்த்தது ‘ராஜா ராணி’ படப்பிடிப்பின்போதுதான் என்கிறார்.

‘‘நஸ்ரியா இறந்து நான் தவிக்கிற சீன்ஸ் எடுத்த நேரம் அது. அப்ப என் உடல் எடையை குறைக்க வேண்டி இருந்தது. ஒர்க் அவுட் வழியா குறிப்பிட்ட நாட்களுக்குள்ள எடையை குறைக்க முடியலை. ஸோ, சைக்கிளிங் செய்ய ஆரம்பிச்சேன். உடனடியா பலன் கிடைச்சது. சில நாட்கள்லயே வெயிட் லாஸ் ஆகிட்டேன்!

சரியா இந்த நேரத்துல 200 கிமீ தூர சைக்கிள் போட்டி பத்தி கேள்விப்பட்டேன். BRM (Brevet des Randonneurs Mondiaux)ல 200, 300, 400, 600 கிமீ போட்டிகள் நடக்கும். 200 கிமீல கலந்துகிட்டு பார்ப்போமேன்னு போனேன். ‘சூப்பர் லாங் வின்னர்’ பரிசை பலமுறை வாங்க வாங்க சைக்கிளிங்குக்கு அடிமையாகிட்டேன்!

அப்ப கிடைச்ச உத்வேகம்தான் இப்பவரை தொடருது. அதனாலதான் சமீபத்துல பாரீஸ்ல நடந்த PBP 1200 கிமீ போட்டில பங்கேற்க முடிஞ்சுது...’’ என்ற ஆர்யா, பாரீஸில் நடந்த போட்டி குறித்து கண்கள் விரிய விளக்குகிறார்.

‘‘1200 கிமீ போட்டில கலந்துக்கறது உண்மைலயே சவால். 600 கிமீ தூர போட்டிகள்ல தொடர்ந்து கலந்துகிட்டு விடாம பிராக்டீஸ் செஞ்சாதான் PBPல கலந்துக்கறது சாத்தியம். மொத்தம் 90 மணி நேரத்துல 1200 கிமீ தூரத்தை கடக்கணும்.

முதல் ஒன்றரை, ரெண்டு நாள் தூங்காம கண்விழிச்சு ஓட்டிடுவோம். ஆனா, மூணாவது நாள் நம்மையும் அறியாம சைக்கிள் ஓட்டறப்ப தூங்கிடுவோம். அதுமாதிரி நேரத்துல ஒரு மணி நேரம் சின்னதா பிரேக் எடுத்துக்கிட்டு போட்டியைத் தொடர்வோம்.

இப்படி சில பல தடைகளைக் கடந்து கடைசில இலக்கைத் தொட்டு ஜெயிக்கறப்ப ஒரு உற்சாகம் வரும் பாருங்க... அதை வார்த்தைகள்ல விளக்க முடியாது. காதல் மாதிரி அது ஒரு ஃபீல்!
நான் பாரீஸ் போய் இறங்கினதும் ஆடிப் போயிட்டேன். 100 நாடுகள்ல இருந்து 7 ஆயிரம் பேர் அந்தப் போட்டிக்காக வந்திருந்தாங்க. முக்கியமா 70 - 75 வயது இளைஞர்கள் எல்லாம் அசால்ட்டா சைக்கிளோட வந்து நின்னாங்க!

இப்பவும் அந்தக் காட்சி என் கண் முன்னாலயே நிக்குது! சைக்கிளிங் செய்ய வயசு ஒரு தடை இல்லைனு அப்பதான் புரிஞ்சுகிட்டேன். ஆமாம் பாஸ். சைக்கிளிங்ல ஹெல்த்தி லைஃப் கேரன்டி. அதிகாலை சைக்கிளிங் ரொம்ப நல்லது. அப்ப டிராஃபிக் கம்மியாவும்
இருக்கும்.

பொதுவா 200 - 300 கிமீ தூர போட்டிகள் பைபாஸ்ல நடக்கும். அப்ப ரொம்ப கவனமா ஓட்டணும். குறிப்பா நம்மூர் பைபாஸ்ல! சூப்பர் லாங் போட்டிகளப்ப நிறைய தூரத்தை நாம கடக்க வேண்டியிருக்கும். அதனால சைக்கிள்லயே நமக்குத் தேவையான துணிமணிகள், பேஸ்ட், பிரஷ், தண்ணீர், சாப்பாடு எல்லாத்தையும் கொண்டு போகணும். எல்லா சிச்சுவேஷன்ஸையும் ஹேண்டில் செய்ய தெரிஞ்சிருக்கணும்.

வெறும் சைக்கிளிங்தானேனு நினைப்பீங்க... ஆனா, அதுல இவ்வளவு சவால்கள் இருக்கு...’’ கேஷுவலாக சொல்லும் ஆர்யா, தான் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய புதிதில் பின்னாலேயே கார் ஒன்று தன்னை பின்தொடர்ந்து வரும் என்கிறார்.‘‘இப்ப அதை அவாய்ட் பண்ணிடறேன். ஏன்னா, எந்த ரூட்ல போனா டிராஃபிக் இருக்காது... சேஃப்ட்டி நிச்சயம்னு எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கேன்.

கூட்டம் சேர்ந்தாலும் சமாளிக்கிற வித்தை கை கூடியிருக்கு.யார் வேணும்னாலும் சைக்கிளிங் செய்யலாம். சைக்கிள்ல பிராக்டீஸ் பண்ணலாம். நார்மல் சைக்கிளே அதுக்குப் போதும். என்ன... போட்டிகள்ல கலந்துக்க கியர் சைக்கிள்தான் வசதி. பத்தாயிரம் ரூபாய்லயே நல்ல சைக்கிள் கிடைக்குது. அடிக்கடி காத்து அடிக்கணும். நல்லபடியா சைக்கிளை பராமரிக்கணும். தனியா போறதை விட டீமா போறது நல்லது.

சூர்யா சார், விஷால் சார், சந்தானம் சார்... இப்படி நிறைய பேர் இப்ப சைக்கிளிங் பண்றாங்க. சில நேரங்கள்ல அவங்க கூடயும் சைக்கிளிங் போவேன். தினமும் சைக்கிளிங் பண்ணணும்னு அவசியமில்ல. ஆனா, வாரத்துல மூணு நாளாவது கண்டிப்பா ப்ராக்ட்டீஸ் பண்ணணும். நிறைய நாடுகள்ல இப்ப சைக்கிளிங் போட்டிகள் நடக்குது. போதுமான பயிற்சிகளோட யார் வேணும்னாலும் அதுல கலந்துக்கலாம்.

சைக்கிளிங் தப்பான ஹாபி கிடையாது! அதனால வீட்ல முழு ஆதரவு தர்றாங்க. இப்படி போட்டி போட்டியா கலந்துகிட்டு நான் ஜெயிக்க வீட்டோட சப்போர்ட்தான் காரணம். பாரீஸ்ல நடந்த போட்டில கலந்துகிட்ட பிறகு சைக்கிளிங் மேல இன்னும் ஆர்வம் கூடியிருக்கு. என்னென்ன போட்டிகள்ல கலந்துக்கணும்... என்னென்ன சவால்களை எதிர்கொள்ளணும்னு ஒரு ப்ளானர் ரெடி செய்திருக்கேன்!’’ புன்னகையுடன் தன் சைக்கிளை காதலுடன் தடவுகிறார் ஆர்யா. கலக்குங்க பாஸ்.

மை.பாரதிராஜா