மலை மனிதன்!



இத்தாலியில் உள்ள மிகப் பெரிய தீவு, சிசிலி. இதன் கிழக்கே பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது எட்னா எரிமலை. ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலைகளில் ஒன்று இது. எரிமலை வெடிப்புகள் உட்பட பல்வேறு காரணங்களுக்குப் பிறகு இப்போது இதன் உயரம் 3,326 மீட்டர்.
உலகில் செயல்பாட்டில் இருக்கும் முக்கிய எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. 2013ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய நினைவுச் சின்னத்தில் எட்னாவையும் சேர்த்துக் கொண்டது. சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த எரிமலை தோன்றியிருக்கலாம் என்று புவியியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

விஷயம் இதுவல்ல.ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் தவறாமல் எட்னா எரிமலையின் வளைவுகளை அளவீடு செய்கிறார் ஜான் முர்ரே. இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இவர். தவிர, எரிமலைக் குழம்புகளின் பரும அளவு மற்றும் அதன் நிலையையும் கணக்கீடு செய்வது இவருக்குப் பிடித்த ஒன்று.

முதன் முறையாக 1969ல் எட்னா எரிமலைக்கு விசிட் அடித்தார் ஜான் முர்ரே. தொலைநோக்கியின் வழியாகப் பார்த்த முதல் பார்வையிலேயே எட்னாவின் மீது தீவிர காதல் கொண்டு விட்டார். பொதுவாக எரிமலையை ஆராயும் நிபுணர்கள் தங்களின் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட நவீன கருவிகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், ஜான் முர்ரே நவீன கருவிகள் எதையும் பயன்படுத்துவதில்லை. கடந்த 50 ஆண்டுகளாக எட்னா எரிமலையை அவர் ஆய்வு செய்ததில் அதன் உயரம் 4 மீட்டர் அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை எந்த விதமான நவீன கருவிகளின் துணையுமின்றி கண்டறிந்துள்ளார்.

இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள் ‘மலை மனிதன்’ என்று செல்லமாக முர்ரேவை அழைக்கின்றனர். ‘‘என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அதுவரை இதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன்...’’ என்கிறார் முர்ரே.