தல புராணம்-இப்போது சட்டமன்றம்...சுதந்திரத்திற்குப் பிறகான முதல் தேர்தல் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்நேரம் 1950ல் அமல்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின்படி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

தவிர, வயது வந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இப்போது, சட்டமன்றப் பேரவையின் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இதில், 309 தொகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மீதி 66 தொகுதிகள் இரட்டை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் இருந்தது. அதாவது, ஒரே தொகுதியில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. இதில் சில சிக்கல்கள் எழுந்ததால் இந்தமுறை 1961ல் நீக்கப்பட்டு தனித் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலவை 72 உறுப்பினர்களைக் கொண்டதாக விளங்கியது. முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 159 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருந்தும், பெரும்பான்மை இல்லாததால் சிக்கல் நீடித்தது.

இதனால், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜியை முதலமைச்சராக பதவியேற்க கேட்டுக் கொண்டனர்.  1952ம் வருடம் ஏப்ரல் மாதம் முதல்வராகப் பதவியேற்றார் ராஜாஜி.இந்நேரம், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் புதிய சட்டமன்றப் பேரவை அரசினர் தோட்டத்தில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதை அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா திறந்து வைத்தார்.

இந்தப் புதிய சட்டமன்றத்தில்தான் சட்டப்பேரவை 1952 முதல் 1956 வரை நடந்தது. இதற்கிடையே ராஜாஜி பொறுப்பேற்ற சில நாட்களில் ஆந்திரர்கள் தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென கோரிக்கை வைத்து போராடினர். இதை முன்னின்று நடத்தியவர் பொட்டி ராமுலு. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தால் காலமானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தைத் தடுக்க, மத்திய அரசு ஆந்திராவை தனிமாநிலமாக அறிவித்தது.

இதேபோல கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. இதனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. பின்னர், 1953ம் வருட இறுதியில் முதல்வர் ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதை சட்டப்பேரவையில் பலரும் எதிர்க்க அவர் ராஜினாமா செய்தார். இதன்பிறகு, கு.காமராஜ் முதலமைச்சராக பதவியேற்றார்.  

தொடர்ந்து 1956ம் வருடம் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட தமிழக சட்டமன்றப் பேரவையின் இடங்கள் 205 ஆக ஆனது.இப்படி உறுப்பினர் எண்ணிக்கை குறைந்ததால் 1957ம் வருடம் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சட்டப் பேரவை கூட்டம் மீண்டும் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இதன் அருகேயே நிர்வாக சபை கூட்டங்கள் நடந்த அறை விரிவாக்கப்பட்டு அங்கே சட்டமன்ற மேலவை நடந்தது. சரி, புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றப் பேரவை என்ன ஆனது?

‘‘அரசினர் தோட்டத்திலிருந்த புதிய சட்டமன்றப் பேரவை மண்டபம் சில மாற்றங்களுடன் பாலர் அரங்கம் எனச் செயல்பட்டது. ஏறத்தாழ 700 இருக்கைகளும், சிறிய மேடையும், 35 மிமீ படக்காட்சி நடத்த வசதிகளும் கொண்டிருந்த அவ்வரங்கிற்கு 1971ம் வருடம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பெயரைச் சூட்டினார்கள்.

1972ம் வருடம் அக்கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 29-1-1974 அன்று புதிய கலைவாணர் அரங்கம் முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 1,040 இருக்கைகள் கொண்ட மிகச் சிறந்த அரங்கமாக அது திகழ்ந்தது. பின்னர், இவ்வரங்கம் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், திரைப்படக் காட்சிகளை நடத்தவும், முக்கிய அரசு விழாக்களை நடத்தவும் பயன்பட்டது. புதிய சட்டமன்ற வளாகம் அமைக்கப்படுவதையடுத்து இக்கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக புதிய கலையரங்கம் ஒன்று அமைக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது...’’ என்கிறது 2010ல் வெளியிடப்பட்ட, ‘புதிய சட்டப் பேரவை தலைமைச் செயலக வளாகம் திறப்பு விழா சிறப்பு மலர்’. பிறகு, புதிய கலைவாணர் அரங்கம் 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1959ம் வருடம் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைகள் சீரமைக்கப்பட்டதும் உறுப்பினர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்தது. இந்த வருடம் சட்டப்பேரவையின் ஒரு கூட்டத் தொடர் மட்டும் கோடை காலத்தையொட்டி ஊட்டியில் நடத்தப்பட்டது.  அங்குள்ள அரண்மூர் மாளிகையில் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் சட்டப்பேரவை நடந்தது. இதைப்போல சட்டமேலவை ஆறு நாட்கள் இந்த மாளிகையில் கூடியது. 180 பேருக்கு மட்டுமே இருக்கை வசதிகள் இருந்தன.

இதனால், இந்தக் கூட்டத்தில் 171 பேரவை உறுப்பினர்களும், 48 மேலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இரண்டு அவைகளின் ஆண் உறுப்பினர்களும் ஹோட்டல்கள், ெகஸ்ட் ஹவுஸில் தங்கினர். பெண் உறுப்பினர்கள் மட்டும் அரண்மூர் மாளிகையிலேயே தங்க வைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில், இந்த அரண்மூர் மாளிகை ஆங்கிலேயர் ஒருவரின் தோட்ட வீடாக இருந்தது.

பின்னர், இதை ஜோத்பூர் மன்னர் வாங்கினார். அவரிடம் இருந்து 1958ல் ரூ.5.50 லட்சம் செலவில் தமிழக அரசால் வாங்கப்பட்டு ‘தமிழகம்’ எனப் பெயரிடப்பட்டது. இப்போது கெஸ்ட் ஹவுஸாக உள்ளது. தொடர்ந்து, 1962லும் காங்கிரஸ் கட்சியே வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்நேரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சரிவுகள் ஏற்பட, முதல்வர் காமராஜர் மூத்த தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி கட்சி
வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன், அவர் தனது பதவியிலிருந்து விலக, 1963ம் வருடம் எம்.பக்தவத்சலம் முதல்வராகப் பதவியேற்றார். 1965ம் வருடம் தொகுதிகள் வரையறுக்கப்பட்டு 234 இடங்களானது. மேலவை உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆனது.

முதல்வர் எம்.பக்தவத்சலம் ஆட்சியில், பள்ளிகளில் இந்தி கட்டாயம், அரிசிப் பஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்தன. இது 1967ம் வருட தேர்தலில் எதிரொலித்தது. திமுக 138 இடங்களில் வென்று பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்றார்.

அண்ணா ஆட்சிக்கு வந்தபிறகு 1968ல் சென்னை மாநிலம்,  ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இதே வருடம் செப்டம்பரில் அண்ணா உடல்நலமின்றி தீவிர சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.சென்னை திரும்பியவருக்கு மீண்டும் 1969ம் வருடம் ஜனவரியில் உடல்நலம் பாதித்தது. சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 3ம் தேதி அதிகாலை காலமானார்.

இவரின் ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி  பிறகு தமிழக முதல்வராகப் பதவியேற்றார். பிறகு மீண்டும் 1971ல் நடந்த பொதுத் தேர்தலிலும் திமுக 184 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. கலைஞர் கருணாநிதியே முதல்வராகப் பொறுப்பேற்றார்.

1972ம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து 1975ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடிநிலையைக் கொண்டு வந்தார்.

இதனை முதல்வர் கலைஞர் கருணாநிதி எதிர்க்க, 1976ம் வருடம் ஜனவரி 31ல் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. இது ஒன்றரை வருடங்கள் நீடித்தது. பின்னர், 1977ல் நடந்த ஆறாவது பேரவைத்தேர்தலில் அதிமுகவெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். ெதாடர்ந்து ஏழு மற்றும் எட்டாவது சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்று எம்.ஜி.ஆரே முதல்வராகப் பதவியேற்றார்.

1986ம் வருடம் சட்ட மேலவையை நீக்கவேண்டும் என்கிற தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுடன் நீக்கப்பட்டது. ஏற்கனவே, 1984ல் உடல்நலக் குறைவால் முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காசென்று வந்தார். தொடர்ந்து 1987ல் அவர் உடல் நலம் பாதிக்கப்பட, டிசம்பர் 24ம் தேதி காலமானார்.பின்னர், அவரின் மனைவி ஜானகி முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், அவர் மெஜாரிட்டியை நிரூபிக்கும் நேரம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட அவரின் அமைச்சரவை நீக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து 1989ல் நடந்த ஒன்பதாவது பேரவைக்கான தேர்தலில் திமுக வெற்றி பெற்று கலைஞர் கருணாநிதி முதல்வரானார். பிறகு, 1991ல் அவரின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது.இதன்பிறகு நடந்த பத்தாவது பேரவைக்கான தேர்தலில் அதிமுக  வெற்றி பெற்று ஜெ.ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.

பிறகு, 1996ல் திமுக வெற்றி பெற்று பதினோராவது பேரவையில் கலைஞர் கருணாநிதி முதல்வரானார். இந்நேரம், தமிழக சட்டமன்றப் பவள விழா மற்றும் சட்டப்பேரவை வைரவிழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்தன. தொடர்ந்து, 2001ல் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. பின்னர், 2006ல் திமுக ஆட்சியில் அமர்ந்தது.

இப்போது கோட்டையில் சட்டப் பேரவை மண்டபம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றில் ஏற்பட்ட இடநெருக்கடியால் புதிய கட்டடம் அவசியமெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. இப்படியாக, 2008ம் வருடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.   பிளாக் ஏ, பிளாக் பி என இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. இதில், பிளாக் ஏ சுமார் 450 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டடம் 2010ம் வருடம் திறக்கப்பட்டது. இதிலிருந்து சட்டமன்றப் பேரவை செயல்பட்டது.

பின்னர், சுமார் 280 கோடி ரூபாயில் பிளாக் பி கட்டடமும் முடிக்கப்பட்டது. ஆனால், 2011ல் அதிமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் இந்தப் புதிய சட்டப்பேரவை வளாகக் கட்டடங்கள் பல்நோக்கு மருத்துவமனையாகவும் மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்பட்டன. இதனால், மீண்டும் கோட்டைக்கே சட்டப்பேரவை மாறியது.  பின்னர், பதினைந்தாவது பேரவைக்கான தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆனால், அவர் சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

இதனையடுத்து, அதிமுக கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட,முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கம்போல் பேரவைக் கூட்டங்கள் கோட்டையிலுள்ள பேரவை மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.  ஆக, தமிழக சட்டமன்றம் மற்றும் சட்டமன்றப் பேரவையின் வரலாறு கோட்டை தவிர்த்து செனட் ஹவுஸ், ராஜாஜி ஹால், அரண்மூர் மாளிகை, கலைவாணர் அரங்கம், அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட புதிய சட்டமன்ற வளாகம் என ஐந்து இடங்களில் பொதிந்துள்ளது.                  

பேராச்சி கண்ணன்

ராஜா