ரத்த மகுடம்-70பிரமாண்டமான சரித்திரத் தொடர்

வனமே அதிர்வது போல் இடி இடி என நகைத்தான் அந்த கஜ சாஸ்திரி!ஓலையின் இறுதியில் இருந்த ‘சிவகாமி’ என்ற பெயரைத் தன் விரல்களால் தடவியவன், ‘ஒற்றர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...’ என தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சுற்றிலும் இருந்த பல்லவ வீரர்களின் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. கஜ சாஸ்திரி குறித்து அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் திடீரென அவன் நகைத்ததையோ சட்டென மவுனமானதையோ அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவனது கட்டளைக்காக மட்டும் காத்திருந்தார்கள்.

ஆனால், பிடிபட்ட மூன்று சாளுக்கிய வீரர்களும் அப்படி இல்லை. தங்கள் முன் நின்றவனும் தங்களிடம் இருந்து ஓலையைப் பறித்துக் கொண்டு அதைப் படிக்கத் தொடங்கியவனுமான மனிதனையே உற்றுப் பார்த்தார்கள். அவர்களது இதயங்கள் முன்பை விட அதிகமாகத் துடிக்கத் தொடங்கின.

இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓலையின் மீது தன் கருவிழிகளை அந்த கஜ சாஸ்திரி பதித்தான். படித்ததையே திரும்பவும் வாசித்தான்.‘யானைகளைத் தரம் பிரித்து பல்லவப் படைக்கு பலம் சேர்க்கும் கஜ சாஸ்திரியே... கரிகாலனின் நண்பனே நலமா?!

சாளுக்கியர்களை வீழ்த்த பல்லவர்களின் பங்காளியான ஹிரண்ய வர்மர் கொண்டு வந்த விஷம் தோய்த்த ஆயுதங்களை - குறிப்பாக வாட்களை - எங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் தலைமையில் கைப்பற்றினோம். ஆனால், உன் நண்பனான கரிகாலன் அதை சாதுர்யமாக எங்களிடம் இருந்து அபகரித்து உன்னிடமே சேர்ப்பித்துவிட்டான். அதுவும் எப்படி..? கெடில நதியில் மரக்கிளைகளை மிதக்க விட்டு அதனுள் வாட்களைப் பதுக்கி...

ஒப்புக் கொள்கிறோம். கரிகாலனும் நீயும் புத்திசாலிகள்தான். ஆனால், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை விட அப்படியொன்றும் நீங்கள் இருவரும் அறிவாற்றலில் சிறந்தவர்கள் அல்ல! எதனால் இப்படிச் சொல்கிறேன் என்பதை காலம் உனக்கு உணர்த்தும்.காஞ்சியை சாளுக்கியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பாகவே உங்களுக்குத் தேவையான அசுவங்களை கரிகாலன் வரவழைத்து தரம் பிரித்து எல்லோருக்கும் கொடுத்துவிட்டான்.

சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் பல்லவ நாடு இருக்கும்போது கஜ சாஸ்திரியான நீ, யானைகளை பாரதம் முழுவதிலும் இருந்து வரவழைத்து அவற்றைத் தரம் பிரித்து படைகளிடம் சேர்ப்பித்து விட்டாய்.இதனால் சாளுக்கியர்களை விட பல்லவர்களான நீங்கள் படை பலத்தில் சிறந்து விளங்குவதாக இறுமாப்பு அடையாதே! உங்களிடம் விலங்குகள் இருக்கின்றன. எங்களிடம் ரத்தமும் சதையும் அறிவும் நிரம்பிய வீரர்கள் இருக்கிறார்கள்.

விலங்குகள், சொல்வதை மட்டுமே கேட்கக் கூடியவை. வீரர்கள் அப்படியல்ல. சுயமாக யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்கள். அப்படித்தான் தன் படையை எங்கள் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உருவாக்கி இருக்கிறார்.இத்தனையும் உனக்கு நான் சொல்லக் காரணம்... இறுமாப்பில் மிதக்காதே என சுட்டிக் காட்டத்தான். நடக்கவிருக்கும் போரில் புத்தியிலும் எண்ணிக்கையிலும் எங்களுக்கு சமமாக இருப்பவர்களுடன் மோதவே நாங்கள் விரும்பு
கிறோம். அப்பொழுதுதான் யுத்தத்துக்கான அர்த்தம் முழுமை அடையும்.

மான் வேட்டையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் சிறுத்தையின் பாய்ச்சலில் இருந்து மான்களால் தப்பிக்க முடியாது என்பது உலகுக்கே தெரியும்.இத்தனை காத தொலைவை நாங்கள் கடந்து வந்திருப்பது இன்னொரு சிறுத்தையுடன் மோதத்தான்.எங்களை ஏமாற்றாமல் பல்லவப் படையை சிறுத்தையாக மாற்றி நீயும் கரிகாலனும் கொண்டு வாருங்கள். புஜபலத்துடன் உங்களை நிர்மூலமாக்க சாளுக்கியர்களாகிய நாங்கள் காத்திருக்கிறோம்.
இதையெல்லாம் எதற்காக உன்னிடம் சொல்கிறேன் தெரியுமா..?

இன்னமும் நீயும் கரிகாலனும் சிறுபிள்ளைகளாக இருப்பதால்தான். இந்த வனம் உன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கரிகாலனும் இப்பொழுது உன்னுடன் இணைந்திருப்பதால் அதையே ‘உங்கள் கட்டுப்பாட்டில்’ என்றும் சொல்லலாம்.

ஆனால், என்ன பயன்..? சாளுக்கியர்களின் ஆயுதம்தான் நான் என்பதை ‘அரும்பாடுபட்டு’ கண்டறிந்த கரிகாலன், என்னைச் சிறைப்பிடித்து விசாரணைக்காக உன்னிடத்தில் அழைத்து வந்திருக்கிறான். இந்த நிலையிலும் சாளுக்கியர்களுக்கு என்னால் செய்தி அனுப்ப முடிகிறது! அதற்கு சாட்சிதான் உன்னால் பிடிக்கப்பட்ட மூன்று வீரர்களும், அவர்கள் கொண்டு வந்த ஓலையைக் கைப்பற்றி நீ படித்துக் கொண்டிருப்பதும்!
இதிலிருந்தே எந்தளவுக்கு பல்லவர்களான நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை உணரலாம். உணர்த்தத்தான் இந்தக் காரியத்தையே நான் செய்தேன்!

விலங்குகளை நம்பாதே! மனிதர்களைத் திரட்டு!எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் மேலும் உங்களுக்கு அவகாசம் வழங்குகிறார். தயவுசெய்து வீரர்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து போருக்கு அழைத்து வா! அப்பொழுதுதான் யுத்தம் சுவாரஸ்யமாக இருக்கும். எங்களுக்கும் நாங்கள் பெறும் வெற்றி அர்த்தம் பொதிந்ததாக மாறும்!இப்படிக்கு களத்தில் பல்லவர்களை துவம்சம் செய்யக் காத்திருக்கும் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியும், தற்சமயம் உன்னிடம் விசாரணைக் கைதியாக இருப்பவளுமான -சிவகாமி!

முக்கிய குறிப்புகள்:

* கஜ சாஸ்திரியான நீ உண்மையில் யாரென்று எனக்குத் தெரியும்! அதை விசாரணை மண்டபத்தில் அறிவிக்கிறேன்!

* நியாயமாகப் பார்த்தால், பகைவனாக இருந்தும் உனக்கு மரியாதை அளிக்க வேண்டும்! அப்படிப்பட்டவர்களின் வீட்டில்தான் நீ பிறந்திருக்கிறாய்! ஆனாலும் ஒருமையில்தான் உன்னை அழைக்கிறேன்; அழைத்திருக்கிறேன்! அது ஏன் என்பதை, இல்லாத மூளையைத் தேடிக் கண்டுபிடித்து உன் கபாலத்துக்குள் இறக்கி யோசி!

* பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் வளர்ப்பு மகளும் நரசிம்மவர்ம பல்லவரின் அருமைக் காதலியான சிவகாமி அம்மையாரின் வளர்ப்பு பேத்தியுமான சிவகாமி எங்கு இருக்கிறாள்... அவளது உருவத்தில் வந்திருக்கும் நான் யார் என்பதை முடிந்தால் கண்டுபிடி!

* இந்த ஓலையை நீ படிக்கும்போது உன் நண்பனான கரிகாலன் என் மேனியை முகர்ந்துகொண்டிருப்பான்! ஒருபோதும் உன்னால் அவனை எனது மயக்கத்தில் இருந்து விடுவிக்க முடியாது..!’

கோபத்துக்கு மாறாக புன்னகைத்தபடியே அந்த கஜ சாஸ்திரி ஓலைகளைப் படித்து முடித்தான். ஆம். மூவரிடமும் இருந்த மூன்று ஓலைகளையும்! அனைத்திலும் இதே செய்திதான் எழுதப்பட்டிருந்தன. மூன்று ஓலைகளிலும் ஒரே கையெழுத்துதான். ஒருவரால் எழுதப்பட்டதுதான்.
அலட்சியத்துடன் அந்த மூன்று ஓலைகளையும் ஒரு வீரனிடம் கொடுத்தான். கண்களால் செய்தி சொன்னான்.

புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்த அந்த பல்லவ வீரன், கஜ சாஸ்திரியை வணங்கிவிட்டு வனத்துக்குள் புகுந்து மறைந்தான்.
‘‘உங்கள் முகத்தைப் பார்த்தால் களைப்பு தாண்டவமாடுகிறது. ஓய்வில்லாமலும் உணவு அருந்தாமலும் பயணப்பட்டு வந்திருக்கிறீர்கள்... எனவே...’’ என்றபடி தன்முன் நின்றிருந்த மூன்று சாளுக்கிய வீரர்களையும் அந்த கஜசாஸ்திரி பார்த்தான்.

மூவரும் தங்கள் சுவாசத்தை நிறுத்தியபடி துடிக்கும் இதயத்துடன் அவனை ஏறிட்டார்கள்.ஆறு கண்களையும் சில கணங்கள் சந்தித்த கஜ சாஸ்திரி, பல்லவ வீரர்களின் பக்கம் திரும்பினான். ‘‘இவர்களுக்கு வயிறார உணவளியுங்கள்! இவர்கள் ஏறி வந்த புரவிகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு கொள்ளை கொடுங்கள். இவர்களும் புரவிகளும் சாப்பிட்டு முடித்தபின் அனுப்பிவிடுங்கள்!’’

கட்டளையிட்டுவிட்டு சாளுக்கிய வீரர்களின் பக்கம் திரும்பினான். ‘‘அடுத்த முறை உங்கள் மூவரையும் இந்தப் பக்கம் பார்த்தால் அந்த இடத்திலேயே உங்கள் உயிர் பிரிந்துவிடும். ஒருமுறைதான் உங்களுக்கு மன்னிப்பு. சென்று வாருங்கள்... உங்கள் மன்னர் விக்கிரமாதித்தருக்கு என் வணக்கங்களை தெரிவியுங்கள். ராமபுண்ய வல்லபரை விசாரித்ததாக சொல்லுங்கள்!’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தவனை சாளுக்கிய வீரனின் குரல் நிறுத்தியது. ‘‘நீங்கள்..?’’

‘‘கஜ சாஸ்திரி என்று சொல்லுங்கள்! உங்கள் மன்னரும் போர் அமைச்சரும் புரிந்து கொள்வார்கள்!’’  புன்னகையுடன்தான் இதை அவன் சொன்னான். அதே மலர்ச்சியுடன்தான் வனத்துக்குள் புகுந்தும் மறைந்தான்.சிவகாமியால் எழுதப்பட்ட அந்த ஓலைகளின் வாசகங்களே அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. குறிப்பாக, ‘இந்த ஓலையை நீ படிக்கும்போது உன் நண்பனான கரிகாலன் என் மேனியை முகர்ந்து  கொண்டிருப்பான்! ஒருபோதும் உன்னால் அவனை எனது மயக்கத்தில் இருந்து  விடுவிக்க முடியாது..!’ என்ற பதம்!உண்மையில் அப்பொழுது கரிகாலன் சிவகாமியைப் பதம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்!

அருவியில் இருந்து பின்னணியில் நீர் கொட்டியபடி இருக்க... வழிந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து கரை தொட்டு ஓட... கரையில் வளர்ந்திருந்த புற்களின்மேல் நின்றபடி சிவகாமியை தன்னை நோக்கி இழுத்தான்.‘‘விடுங்கள்... இப்படித்தான் பல்லவர்கள் விசாரணைக் கைதியை நடத்துவார்களா..?’’ முத்துக்களைச் சிதறவிட்டாள் சிவகாமி.

‘‘ஏன்... இந்த விசாரணை முறை உனக்குப் பிடிக்கவில்லையா..? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...’’‘‘ஓஹோ... பார்த்ததுமே கண்டுபிடிக்கும் வல்லமை படைத்தவரா நீங்கள்..?’’
‘‘சந்தேகமா..?’’ சிவகாமியின் வதனத்தை தன் முகத்துடன் இழைத்தபடி கரிகாலன் முணுமுணுத்தான்.

அவன் உதடுகள் தன் கன்னங்களில் பட்டுப் பட்டு விலகியதால் நெகிழ்ந்த தன் உடலை அடக்கியபடி, ‘‘போதும் விடுங்கள்... வெட்ட வெளி... வீரர்கள் யாராவது வந்தால் நன்றாக இருக்காது...’’ என்றபடி தன் கண்களை மூடினாள்.‘‘அப்படியானால் அந்தப் புதருக்குள் சென்றுவிடலாமா..?’’ கேட்டபடியே அவள் பின்னெழுச்சியில் தன் இரு கைகளையும் பதித்து கிள்ளினான்.

‘‘ஆ...’’ முகத்தைச் சுளித்தவள், ‘‘உங்களுக்கு விவஸ்தையே இல்லையா..?’’ சிணுங்கினாள். ‘‘ஏன், என் விவஸ்தைக்கு என்ன குறைச்சல்..?’’
‘‘புதருக்கு செல்லலாமா என்று கேட்டதன் அர்த்தம் என்ன..?’’
‘‘யாராவது வந்தால் என்ன செய்வது என்றாய்... அதற்கு, யாரும் பார்க்காதபடி புதரின் மறைவுக்கு செல்லலாமா என்றேன்... பேசத்தானே அழைத்தேன்... வேறு எதற்கு என்று நினைத்தாய்..?’’

கேட்டபடியே அவளது பின்னெழுச்சியை தன் இரு கரங்களாலும் உயர்த்தினான்.அதற்கு ஏற்ற பதிலை சிவகாமியின் உடல் அளித்தது. தன் இரு கால்களையும் உயர்த்தினாள். சட்டென்று அவளைத் தூக்கினான். உடனே தன் இரு கால்களையும் அவன் தொடைகளைச் சுற்றி படரவிட்டு கரிகாலனின் இடுப்பில் அமர்ந்தாள்.

‘‘கேட்டேனே...’’ அவள் கழுத்தில் முகம் பதித்தான்.‘‘ம்... ம்...’’
‘‘இதுதான் பதிலா..?’’ அவளது கச்சையைக் கடித்தான். ‘‘புதருக்குள் எதற்காக உன்னை அழைத்தேன் என்று நினைத்தாய்..?’’ மீண்டும் கேட்டான்.
என்னவென்று சொல்லுவாள்... பெருமூச்சுடன் தன் இமைகளை மூடி அவனிடம் ஒன்றினாள்.சிவகாமியின் பெருமூச்சால் தன் முகத்துக்கு நேராக எழுந்து தாழ்ந்த கொங்கைகளை ரசிக்கும் நிலையில் கரிகாலன் இல்லை...

அவளை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டதை ஒன்றுக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு அவளது கழுத்தில் பதித்திருந்த தன் முகத்தை அவள் தலைக்கு வெளியே கொண்டு சென்றான்.அவளை அணைத்துத் தாங்கியபடியே எவ்வித சந்தேகமும் எழாதபடி, கஜ சாஸ்திரி கொடுத்து அனுப்பிய மூன்று ஓலைகளையும் படிக்கத் தொடங்கினான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்