சிவப்பு மஞ்சள் பச்சை



டிராஃபிக் எஸ்.ஐ.க்கும், பைக் ரேஸருக்குமான மோதல், சண்டை, சமாதானத்தை விவரிப்பதே ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.
‘பிச்சைக்காரனி’ல் பளிச்சென்று வெளியே வந்த இயக்குநர் சசி, இந்தத்தடவை தொட்டிருப்பது அக்கா தம்பியின் விசாலமான அன்பை. வெகு காலமாக மறந்து போயிருந்த ‘குடும்பப் பட’ மரபை புதுப்பித்த வகையிலும் சசி கவனம் பெறுகிறார்.

சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு பைக் ரேஸ் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் அக்கா லிஜோ மோல்ஜோஸின் அன்புக்குரிய தம்பி. அவரை பிடிக்கும் முயற்சியில் எஸ்.ஐ. சித்தார்த் ஒரு நாள் ஆவேசமாய் உள்ளிறங்க பிடிபடுகிறார் ஜி.வி. அவரால் அவமானமும் அடைகிறார்.
இதனால் இருவரிடமும் முட்டல் மோதல் தொடர்கிறது. இந்த மூவரையும் பரபரக்கும் வாழ்க்கை இணைத்துப் பார்க்கிறது. அவர்களிடம் நடக்கும் பிரச்னைகளை, மோதல்களை கடந்து வந்தார்களா என்பதை அனுபவங்களாக சொல்லியிருக்கிறார்கள்.

சிரமம் கொண்ட கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக பின்னியிருக்கிறார் சித்தார்த். வேலையில் தூய்மையும், கடமையில் கறாரும், நடத்தையில் கனிவுமாக எல்லா இடங்களிலும் யதார்த்தமாக கடந்து செல்கிறார். மனதைத் தொடும் காட்சிகள் படம் நெடுகவும் ஆங்காங்கே அடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் அணியும் நைட்டி தொடர்பாக அம்மாவிடம் இருந்து கருத்துப் பெற்று, சித்தார்த் உருமாறும் இடம் அபூர்வமானது. நிதானமாக, கேரக்டர் உணர்ந்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார் ஜி.வி. சூப்பர்.

அக்காவின் மீதான ப்ரியம், சித்தார்த்தின் மீதான வெறுப்பு என இரண்டிற்குமான தளத்தில் தடுமாறி, பின் இறுகி கொதிப்பதில் நடிப்பில் நல்ல தூரம் கடந்திருக்கிறார். சித்தார்த், ஜி.வி. சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது துடுக்குத்தனமான ஒரு நிகழ்வை, அல்லது மோதலை மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது.

லிஜோ காதலியாக, அக்காவாக அனைத்திற்கும் கணிசமாகவும், கனிவாகவும் பொருந்துகிறார். காஷ்மீரா கொஞ்சமே வந்தாலும் சிறப்பு. ஜி.வி.யின் அத்தையாக தனம், சினிமாத்தனம் ஒரு புள்ளி கூட இல்லாமல் ஆச்சர்யம். உடனே நாமும் அவரிடம் பாசமாகி விடுகிறோம்.

பிரசன்னகுமாரின் கேமரா அழகிய குடும்பத்திலும், ஆக்ரோஷ பயணத்திலும் அருமையாக பயணிக்கிறது. சித்து குமாரின் இசையில் ‘மைலாஞ்சி...’ பாடல் தமயந்தியின் இளம் வரிகளில் கேட்க சுகம். மோகன்ராஜன் வார்த்தைகளில் ‘ஆழி சூழ்ந்த உலகிலே...’ கவர்கிறது.

இறுதிக்காட்சியில் தடம் மாறும் சண்டைக்காட்சிகள் நீளம். மதுசூதன ராவோடு சித்தார்த் மல்லுக்கட்டுவது நம்பும்படியாக இல்லை. உயர் அதிகாரிகள் வரைக்கும் தொடர்பு வைத்திருப்பவர், ஒரு எஸ்.ஐக்கு அஞ்ச வேண்டியதில்லையே!உறவுகளின் மேன்மையை சொல்லிய விதத்தில் மக்களுக்கு நெருக்கமாகிறது ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.                              

குங்குமம் விமர்சனக் குழு