கடன் @ மரணம்...வரி நெருக்கடியால் 38 ஆயிரம் தொழிலதிபர்கள் வெளிநாடு ஓட்டம்!கடந்த 2014 ஜனவரி வாக்கில், இந்திய வணிகம் மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) கூட்டத்தில் பேசிய அப்போதைய குஜராத் முதல்வரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி, “நாட்டில் நிலவுகிற ‘வரி பயங்கரவாதம்’ அபாயகரமானது; ஒவ்வொருவரும் திருடர்தான் என்ற நினைப்போடு, யாரும் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாது...” என்றார்.

இவரே, 5 மாதங்களுக்குப் பிறகு நாட்டின் பிரதமரானார். முதன்முதலாக ‘வரி பயங்கரவாதம்’ என்ற பதத்தை பயன்படுத்தியவரும் இவர்தான்.காவல் துறையினரோடும், ஊடகக்காரர்களோடும் குறிப்பிட்ட நபர்களின் வீடு, நிறுவனங்களில் புலனாய்வு மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் படை திடீர் சோதனைகளை நடத்துகிறது.

அதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தகவல்கள் ஊடகங்களில் கசியவிடப்படுகின்றன. நம்பகமற்ற, மிகைப்படுத்தப்பட்ட, அதிகாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத விவரங்கள் பரப்பப்படுகின்றன. ஆண்டுகள் கடக்கிறபோது, சம்பந்தப்பட்ட வழக்குகளின் விவரங்கள் மங்கிவிடுகின்றன.

மத்திய வருமான வரித் தீர்ப்பாயத்தில் 2014 மார்ச் மாத நிலவரப்படி நிலுவையில் இருந்த முறையீடுகள், வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.2.87 லட்சம் கோடி. 2018 மார்ச் மாதம் இந்தத் தொகை ரூ.6.11 லட்சம் கோடியாக எகிறிவிட்டது.

நிறைவேற்ற முடியாத வசூல் இலக்குகளை அரசு நிர்ணயித்ததுதான் வழக்குகள் குவிந்ததற்குக் காரணம் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். கைது, வலுக்கட்டாய வசூல் போன்ற கெடுபிடி அதிகாரங்கள் அதிகபட்சமாக வழங்கப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவுகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், ‘பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக முந்தைய பாஜக ஆட்சியில், நாட்டில் ‘வரி பயங்கரவாதம்’ அதிகரித்துவிட்டது...’ என்று பல பொருளாதார நிபுணர்களும் அழுத்தம் திருத்தமாகக் கூறினர். ஆனாலும், மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதால், தொழில்துறையினர் மற்றும் அரசியல் எதிரிகள் மீதான கெடுபிடிகள், ரெய்டுகள் ெதாடர்ந்து ஏவப்படுகின்றன.
வரியைப் பொறுத்தவரையில் மிகப் பல மடங்கு தொகைகளை ஏய்க்கக்கூடிய நிலையில் இருக்கிற பெரும் முதலாளிகள் மீது கை வைக்கப்படுவதில்லை என்றும், மாறாக, சிறு தொழில் நிறுவனங்களும், சிறு வணிகக் குழுமங்களும்தான் வருமான வரித்துறையின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு இலக்காகின்றன என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்திய தொழில் நிறுவனங்கள் பேரழிவிற்கு உள்ளாகின்றன; கூடுதலாக ‘வரி பயங்கரவாதம்’ அடுத்தடுத்த துயரங்களைச் சேர்க்கிறது. அதுவும், வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்துபவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடனை ஒரு திகிலூட்டும் மர்மமான பகுதியாக தொழில்துறையினர் பார்க்கின்றனர். இன்றைய பொருளாதார சூழல், மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யங்களைக் கூட கவலைப்படும் வகையில் தொந்தரவு செய்து வருகிறது.

இவ்வாறாக, கடன் நெருக்கடியில் சிக்கி உயிரை மாய்த்துக் கொண்டவர்தான் ‘காபி டே’ உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா.
ஏதோ நம்மைப் போல சொந்த செலவுக்குக் கடன் வாங்கவில்லை. பிசினஸுக்காக கடன் வாங்கியிருந்தார். தன்னைச் சார்ந்த 30 ஆயிரம் ஊழியர்களுக்காக கடன் வாங்கியவரே, கடன் தொல்லை தாங்க முடியாமல் ஜூலை 29ல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவரது தற்கொலை முடிவு, இந்திய தொழில்துறையினர் மத்தியில் பெரும் அச்சத்தை, பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம்... ‘கடன்’ என்பதை ‘மரணம்’ என்று சொல்லியிருக்கலாம். அவர்களுக்கு, இப்படித்தான் சமீபகால நிகழ்வுகள் ஒரே மாதிரியாக காதில் ஒலிக்கின்றன.
கடன் என்பது ஒரு வகையான மரணத்திற்கு முந்தைய நிலை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. இன்று இந்திய தொழில் சமூகத்திற்குள் புதிய பயங்கரமான சொல்லாக அது பரவி வருகிறது. பலருக்கு மறுபிறப்புக்குத் தேவையான பிரசவ வலியாக கடன் இருக்கிறது.

இதுதான், இந்தியாவை தூய்மைப்படுத்த எடுக்கும் முயற்சியாக இருக்குமா? புதுப்பிப்பதற்கான கடினமான பாதையில், அரசியல்வாதிகள், அதிகாரத்துவத்தினர், வங்கியாளர்கள் போன்றோர், வணிகர்களிடையேயான உறவை வேரறுக்க கொள்கை வகுப்பாளர்
களாக மாறி தொழில்முனைவோரை பயப்படுத்தி வருகின்றனர்.‘ஐடி’ துறையினர் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளை தூசிதட்டி நேர்மையற்ற வரி செலுத்துவோர் மட்டுமின்றி நேர்மையாக வரி செலுத்துவோருக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2007 - 2017ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் தலா 1 மில்லியன் டாலருக்கு நிகரான சொத்து மதிப்புள்ள 38 ஆயிரம் இந்திய தொழில்துறையினர், ‘ஐடி’ துறையின் மோசமான பிடியிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இப்படியாக தொழில்துறையினர் ஓட்டம் பிடிக்காமல் இருப்பதற்காக 2016ல் திவால் மற்றும் திவாலாகும் நிலையில் உள்ளவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ள கடன் கொடுத்தவர்களிடமும், வரித்துறையினரிடம் அரசு கேட்டுக் கொண்டது.

அதற்காக சில நிதி சீர்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனால், ‘வரி ஆக்கிரமிப்பு’ அல்லது ‘வரி பயங்கரவாதம்’ தொழில் துறையினரை தொழிலை தொடர்ந்து செய்யவிடாமல் நிம்மதி இழக்கச் செய்து வருகிறது. இதில், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் ஆட்டோ (வாகனங்கள்), ஜவுளி, எஃப்எம்சிஜிக்கள் (பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ்) போன்ற  துறையினர்தான் உள்ளனர்.

கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகள் வாக்கில் இந்தியர்கள் தங்கள் பணத்தை வெளிநாடுகளில் குவிக்கத் தொடங்கியது போல், இப்போது நாட்டின் பொருளாதாரக் கொள்கை சிதைந்திருப்பதால் வெளிநாட்டில் முதலீடுகளைக் குவித்து வருகின்றனர். அது உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.சரி... கடன்பட்ட சில நிறுவனங்களின் ‘கதி’ இன்று என்னானது?

1. காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் கடன் தொகையின் அளவு 2,100 கோடி. இது, காபி டே நிறுவனத்துக்கு இருக்கும் கடன் தொகையான 6,547 கோடி ரூபாயில், கணக்கில் சேராத கடன் என்கின்றனர். இவரது பெரும் பகுதியான கடன் தொகைகளை அவருடைய காபி தோட்ட வியாபாரத்தில் முதலீடு செய்யவே வாங்கி உள்ளார். எதிர்பார்த்த லாபம் இல்லாததால், மேலும் மேலும் கடனை வாங்கி, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வாங்கிய கடன்களுக்கான வட்டித் தொகை எல்லாம் சேர்ந்து, ஒரு பெரிய கடன் தொகையாக நீருக்குள் அவரை அழுத்திவிட்டது.
 
சித்தார்த்தா தனது மறைவுக்கு முன், தனது மென்பொருள் நிறுவனமான ‘மைண்ட் ட்ரீ’யின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2,100கோடி கடனை அடைக்க பெரும் முயற்சி செய்துள்ளார். ஆனால், ‘ஐடி’ துறையோ சூழலோ ஒத்துப்போகவில்லை. ஆனால், அவரது மறைவுக்குப்பின் அதன் பங்குதாரர்கள் ‘மைண்ட் ட்ரீ’ பங்குகளை விற்று கடனை அடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2. பிரபல தொழிலதிபரும் பிரதமர் மோடியின் ஆதரவாளருமான மொகுல் சுபாஷ் சந்திரா, செப். 30ம் தேதிக்குள்,
ரூ. 7,500 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த நிர்ணயித்த காலக்கெடுவைச் சந்திக்கிறார். அதற்காக ஜீ என்டர்டெயின்மென்ட்டில் தனது 36 சதவீத பங்குகளில் 11 சதவீதத்தை ஏற்கனவே உள்ள நிறுவன பங்குதாரரான இன்வெஸ்கோ ஓபன்ஹைமருக்கு ரூ.4,200 கோடிக்கு விற்றுள்ளார்.
இதனால், கடன் தொல்லையில் இருந்து விடுவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. கடனால் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்கள், மேற்கண்ட நிறுவனங்களைப்போன்று தனது பங்குகளை விற்பது தவிர நிறுவனத்தையே விற்கவும் முயற்சி செய்கின்றன.அந்த வகையில் அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் ரூ.29,523 கோடி; ஆனால், நிறுவனத்தின் மதிப்பு ரூ.5,052 கோடி; கிட்டத்தட்ட 82.89 சதவீதம் அளவிற்கு மதிப்பு குறைந்திருந்தாலும்கூட, அந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது.

ஜோதி கட்டமைப்பு நிறுவன கடன் ரூ.7,365 கோடி; நிறுவன சொத்து மதிப்பு ரூ. 3,691 கோடி; 49.88 சதவீதம் மதிப்பு குறைந்திருந்தும் சரத் சங்கி அண்ட் கோ நிறுவனம் வாங்கியுள்ளது.4. அதேபோல், அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் ரூ. 12,605 கோடி; சொத்து மதிப்பு ரூ. 4,334 கோடி; 65.62 சதவீதம் மதிப்பு குறைந்திருந்த நிலையில் லிபர்ட்டி ஹவுஸ் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

மோனட் இஸ்பாட் நிறுவனத்தின் கடன் ரூ.11,015 கோடி; நிறுவன சொத்து மதிப்பு ரூ. 2,892 கோடி; 73.74 சதவீதம் மதிப்பு குறைந்திருந்தும்கூட ஜெஎஸ்டபுள்யூ/ஏஐஓடபுள்யூ நிறுவனம் வாங்கிக் கொண்டது.

5. எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 13,175 கோடி; சொத்து மதிப்பு ரூ.5,320 கோடி; 59.62 சதவீதம் அளவிற்கு மதிப்பு குறைந்திருந்தும் வேதாந்தா நிறுவனம் வாங்கியது. பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த கடன் ரூ. 56,022 கோடி; ஆனால், சொத்து மதிப்பு ரூ.35,571 கோடி, கிட்டத்தட்ட 36.5 சதவீதம் மதிப்பு குறைந்திருந்தும்கூட பாம்னிபால் ஸ்டீல் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் கடன் ரூ. 49,473 கோடி; சொத்து மதிப்பு ரூ.30,030 கோடி; 39.3 சதவீதம் வரை மதிப்பு குறைந்திருந்தும், ஆர்சலர் மிட்டல் நிறுவனம் வாங்கிக் கொண்டது.இவ்வாறாக இன்றைய சூழலில் பெரும் தொழில் நிறுவனங்களே திக்குமுக்காடி வரும்நிலையில், லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழிலைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. இருபக்கங்களும் கூர்மையான கத்தியின் மேல் நடந்தபடி அவர்கள் தொழிலை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

தொழில்துறை பாதிப்பு என்பது மக்களின் உயிர் வாழ்வியலுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது; சிலரின் சுயநலன்களுக்காக சீர்திருத்தம் என்ற பெயரில் அடிப்படை கட்டமைப்பையோ, தொழிலையோ நசுக்குவது என்பது இன்னும் பல மனமுடைந்த சித்தார்த்தாக்களை உருவாக்கும்..!                 


செ.அமிர்தலிங்கம்