பகவான்-46



பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை!

தான், உடலை விட்டு விலகிய பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை சுவாமி அம்ரிதோவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் பகவான்.

தன் உடல் எப்படி அலங்கரிக்கப்பட வேண்டும், எந்தமாதிரியான உடை அணிவிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நிறம் உட்பட நுணுக்கமாக விவரித்துக் கொண்டிருந்தார்அவருடைய கண்களைக் காண்கையில் அவரது இறுதி ஊர்வலத்தை கனவில் காண்பவரைப் போல அம்ரிதோவுக்கு தோன்றியது.சோர்வான குரலில், “வேறு என்ன ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டார் அம்ரிதோ.

“அவ்வளவுதான். அருகிலிருக்கும் இடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரித்து விடுங்கள்!”
மரித்துப்போன மனித உடல் எரிக்கப்பட வேண்டும் என்பதில் ஓஷோ உறுதியாக இருப்பார். அவருக்கு இதில் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறையும்
இருந்தது.“மற்றவர்களிடம் நான் என்ன சொல்ல வேண்டும் பகவான்?”

சற்றே நெற்றியைத் தேய்த்தவாறே யோசித்தார் பகவான். மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தார்.“இன்று எதற்குமே பயனற்றுப் போகப் போகும் என்னுடைய இந்த உடல்தான் மத அடிப்படைவாதம் என்ன செய்யும் என்பதற்கான அடையாளம். இவ்வளவு நாட்களாக இந்த உடல் கொடுத்து வந்த வலிகளை என் உள்ளம் தாங்கி வந்தது. இந்த உடலுக்குள் நான் வசிக்கும் ஒவ்வொரு நொடியும் நரகத்தில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அமெரிக்காவில் என்னை சிறையில் அடைத்து அவமானப் படுத்தினார்களே, அப்போதே என் உடலின் ஒத்துழைப்புத் தன்மை கொஞ்சம் கொஞ்சமாகக்
குறையத் தொடங்கி விட்டது.சிறையில் எனக்கு கொடுக்கப்பட்ட உணவில் ஏதோ கலந்திருக்குமென்று நினைக்கிறேன். மேலும் கதிர்வீச்சு மூலமாகவும் அவர்கள் என் உடலைச் சிதைத்தார்கள்.

உங்களைப் போன்ற மருத்துவ நண்பர்கள் என்னை பரிசோதித்து வெளிப்படுத்திய உண்மைகள் அவை. எனினும் அவை எதையும் நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த முடியாது...”சொல்லி விட்டு கண்களை மூடினார் ஓஷோ.ஒரு மருத்துவராக இருந்தாலும் அம்ரிதோவும் மனிதர்தானே? அப்படியே கதறிவிட்டார்.உடனே ஓடிப்போய் சுவாமி ஜெயேஷைப் பார்த்தார்.“அனேகமாக பகவான் உடலைவிட்டு கிட்டத்தட்ட வெளியேறி விட்டார்...”
அம்ரிதோவும், ஜெயேஷும் ஓஷோ அருகில் வந்து நின்றனர்.

ஓஷோ மெதுவாகக் கண்களைத் திறந்தார்.மீண்டும் பேசத் தொடங்கினார்.”இருந்தார், மறைந்தார் என்றெல்லாம் என்னைப் பற்றி past tenseல் எப்போதுமே பேசாதீர்கள். நான் உடலைவிட்டுத்தான் விலகுகிறேனே தவிர, உலகை விட்டு, உங்களைவிட்டு விலக மாட்டேன். முன்னிலும் அதிகமாக என் இருப்பை நீங்கள் அனைவரும் உணர்வீர்கள்!”

ஓஷோ, இதைச் சொன்னதுமே ஜெயேஷும், அம்ரிதோவும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் குலுங்கிக், குலுங்கி அழத் தொடங்கினர்.
“நோ... நோ... என்னை வழியனுப்பும் முறை இதுவல்ல...” என்று சொல்லிய ஓஷோ, அவர்களை நோக்கிப் புன்னகைத்தார்.
உயிர் பிரியும் நிலையில் புன்னகைத்தவர்களை அதுவரை அம்ரிதோ கண்டதில்லை.

ஜெயேஷை நோக்கிச் சொன்னார்.“நான் உடலைவிட்டு விலகியபிறகு நம் தரப்பு கருத்துகளைக் கேட்கவும், அதன் வழியில் நடக்கவும் லட்சக்கணக்கானோர் வருவார்கள். நாம் திட்டமிட்டதைவிட மிக அதிகமான அளவில் என்னுடைய சிந்தனைகள் பரவும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய எண்ணங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இந்த உடல்தான் இதுநாள்வரை தடையாக இருந்தது.

இந்த உடலுக்குரிய அடையாளங்கள்தான் முட்டுக்கட்டையாக இருந்தது. அது அகலப்போகிறது. எனவே, என்னுடைய எண்ணங்களுக்கு விடுதலை கிடைக்கிறது. அவை மலர்ந்து இனி உலகமெல்லாம் மணம் வீசும். ஒளி வீசும்...”சொல்லிவிட்டு ஜெயேஷின் கண்களை உற்று நோக்கினார்.

“அருகில் வா...”
ஜெயேஷ், பகவானுக்கு அருகில் சென்றார்.அவரது காதருகில் ஓஷோ சொன்னார்.“ஆனந்தோ என்னுடைய தூதராக இருப்பாள்!”
ஷீலா விலகிய பிறகு மாதேவா ஆனந்தோ என்பவர்தான் ஓஷோவின் தனிச்செயலாளராகப் பணிபுரிந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர், 1975ல் சன்னியாசம் பெற்று ஓஷோவின் பிரதான சீடர்களில் ஒருவராகக் கடைசிவரை இருந்தார்.சொல்லிவிட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
“நோ... நோ... ஆனந்தோ என் தூதர் அல்ல. தொடர்பாளர். யெஸ்.. ஆனந்தோ வில் பீ மை மீடியம்...” என்றார்.

அதாவது உடலைவிட்டு விலகிய பகவான், சூட்சுமமான நிலையில் தன்னுடைய செய்திகளை ஆனந்தோ மூலமாக உலகுக்குத் தெரிவிப்பார் என்பதாக இதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஓஷோவின் மறைவுக்குப் பிறகு உலகமெங்கும் ஏராளமானோர் அவரது குரல் தங்கள் காதில் ஒலிப்பதாகக் கூறினார்கள்.ஓஷோவால் அங்கீகரிக்கப்பட்ட மீடியமான ஆனந்தோவோ, “அமைதிதான் அவரது செய்தி...” என்று ஆழமான பார்வையில் சொல்கிறார். ஒருவேளை அவருக்கு பகவானின் குரல் கேட்கவில்லையோ என்னவோ?

ஆனந்தோவைப் பற்றி ஜெயேஷிடம் சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடினார் பகவான்.
அவரது கைகளைப் பற்றி நாடித்துடிப்பை பரிசோதித்தார் அம்ரிதோ.
ஜெயேஷைப் பார்த்து, “பகவான் விலகிவிட்டார்...” என்றார்.
அப்போது மணி மாலை 5.00. ஜனவரி 19, 1990.

உடனடியாக டாக்டர் கோகுல் கோகனி, பகவானின் உடலைப் பரிசோதித்தார். அவர் உடலைவிட்டு விலகியதை உலகுக்கு அறிவிக்கும் மருத்துவச் சான்றிதழைத் தயார் செய்தார்.இரவு ஏழு மணி அளவில் கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் பகவானின் கடைசி நிமிடங்களைப் பற்றி உணர்ச்சி பூர்வமாக மேற்கண்டவாறு விவரித்தார் அம்ரிதோ.

அதன்பிறகு பகவானின் உடல் அவர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டு, புத்தா ஹாலில் பத்து நிமிட அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர் விரும்பியவாறே அவருக்கு கருப்பு நிற உடை, தொப்பியெல்லாம் அணிவிக்கப்பட்டிருந்தன.பின்னர் அவரது உடலை பக்தர்கள் சுமந்து சென்று இடுகாட்டில் எரித்தனர். ஓஷோவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், அவரை வழியனுப்பும் கொண்டாட்டம், அவர் ஏற்கனவே குறிப்பிட்டவகையில் அன்றைய இரவு முழுக்க கொண்டாடப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பகவானின் சாம்பல், சுவாங்ட்ஸூ அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவர் ஏற்கனவே சொன்னமாதிரி அங்கிருந்த படுக்கைக்குக் கீழ் அவரது சாம்பல் வைக்கப்பட்டது.தன்னுடைய சமாதியில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் என்னவென்று ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பாக பகவான் சொல்லியிருந்தார். அதன்படியே அந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கல்லும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழ்க்கை அவனது பரிசு
மரணமும் அவனது பரிசு
உடல் அவனது பரிசு
உள்ளமும் அவனது பரிசு
நாம் எல்லாவற்றையும்
கொண்டாடுவோம்!
பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை
இந்த உலகுக்கு
1931க்கும் 1990க்கும்
இடையில்
இவர் வந்து சென்றார்…

என்றும் மணக்கும் பூவாசம்!

தன்னுடைய உடல் விலகலைக் குறித்து சில வாரங்களுக்கு முன்பே பக்தர்களிடம் பேசியிருந்தார் பகவான்.”இருத்தல் மீதான என்னுடைய நம்பிக்கை அளவற்றது. நான் சொல்லியவற்றில் உண்மை இருந்தால், அவை வாழும். என் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அவற்றை மற்றவர்களுக்கு பரப்புவார்கள். அக்கருத்துகளில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். என் கருத்துகள் எக்காலத்திலும் யார் மீதும் திணிக்கப்படாது.

என் மீது அன்பு கொண்டவர்களுக்கு நான் எப்போதும் உந்துசக்தியாக இருந்துகொண்டேதான் இருப்பேன். என்னுடைய அன்பர்கள் அன்பு மிகுந்தவர்களாகவும், விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், கொண்டாட்டமானவர்களாகவும், குழந்தைத்தனமான குதூகலத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்கள் கரங்களில் நீங்கள் ஒரு பூவை ஏந்த முடியும். அதன் வாசத்தை ஏந்தமுடியுமா? வாசத்தை உணர்வதற்கு உங்கள் கரங்கள் தேவையில்லையே. பூ, என் உடல். வாசம், நான். நீங்கள் எந்தளவுக்கு என்னை நெருங்குகிறீர்களோ, அந்தளவுக்கு என்னுடைய அருகாமையை உணர்வீர்கள்..!”

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்