20 நிமிஷங்களுக்கு ஒரு ஜானர்!



ரங்கா ரகசியங்கள்

‘‘எங்க ‘ரங்கா’ டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில் படம் இன்ன வகைன்னு சொல்ல முடியாமல் போகும். பொதுவா ஆக்‌ஷன் த்ரில்லர்னு வகைப்படுத்திச் சொல்லலாம். ரொமான்ஸ் கலந்த ஃபேமிலி, ஊடாடும் மெல்லிய நகைச்சுவைனு படத்தில் சுவாரஸ்யங்கள் காத்திருக்கு. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை படத்தின் ஜானர் மாறிக்கிட்டே இருக்கிறதை நீங்கள் உணர முடியும்.

ரங்கநாதன்னா காப்பாற்றுகிற கடவுள். அப்படி ஓர் இடத்தில் சிபிராஜ் வந்து நிற்பார். அதற்காகவே, ‘ரங்கா’. தியேட்டருக்கு வந்தா, இந்தப் பெயர் வைச்சதுக்கான நியாயங்கள் நிச்சயமாப் புரியும்’’ நிதானமாக எடுத்துரைக்கிறார் அறிமுக இயக்குநர் DL. வினோத். இயக்குநர் வி.இசட். துரையின் சீடர்.டீசர் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது…

‘‘ஆமாம். எல்லோருமே ஒட்டுமொத்தமா அந்த மாதிரி அபிப்பிராயமே தந்தாங்க. ஒரு நல்ல ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் வந்து எவ்வளவு நாளாச்சு. யோசிச்சுப் பாருங்க... உங்க ஞாபகத்துக்குள் அது அடங்காது. முதல் பாதியில் அடுத்தடுத்து வேறு பயணம் எடுக்கும் விதம், அடுத்த இடத்தில் அவை அவிழ்கிற விதம்னு ஒரு நல்ல விஷயத்தையும் பேசி வச்சிருக்கோம்.

சென்னையில் இருக்கிற ஜோடி சிபி - நிகிலா. காதல் வயப்பட்டு அழகாக நடக்குது கல்யாணம். ஒரு நீரோடை மாதிரி, அழகான கனவு மாதிரி போய்க்கிட்டு இருக்கிற வாழ்க்கையில் தேனிலவுக்காக குளுமணாலி மாதிரி ஓர் இடத்திற்குப் போறாங்க. முகம் தெரியாத இடம், இடமறியாத நேரம், மொழி வசப்படாத பொழுது அங்கே அவர்களுக்கு வருகிற ஒரு பிரச்னை… அதை உடைச்சு, மீண்டெழுந்து எப்படி வர்றாங்க என்பதும் இதில் ஒரு முக்கியமான இடம்.

சிபி ஒரு கனிவான கட்டத்தில் வந்து நிற்கிறார்... இல்லையா?
அவர் செலக்‌ஷன் அப்படியிருக்கு. ரொம்ப நுணுக்கமாக செயல்படுகிறார். ஒரு படத்தை எப்படி செலக்ட் பண்ணணும் என்கிற விஷயத்திலும் நேர்த்திதான். ஒரு விஷயம் தொட்டுப் பேச ஆரம்பித்தால் அவரிடம் வந்து விழுகிற தெளிவு என்னை ஆச்சர்யப்பட வைக்கும்.

த்ரில்லரில் மக்களை உட்கார வைக்கிறது கஷ்டமான வேலைதான். அதை உணர்ந்தே இருக்கிறோம். கதையில் நிறைய கவனம் செலுத்தினோம். ஒரு கதைக்காக சில ஆரம்பப்புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். வெறும் த்ரில்லர் படமாக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டுவந்து காட்ட முடிந்தது. சிபியோட ஈடுபாடு சொல்லி மாளாது. எந்த கஷ்டத்தையும் மனதில் ஏத்திக்காமல் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டினது அழகு.

பயமே இல்லாமல் காஷ்மீர் போயிருக்கீங்க...குளுமணாலிதான் முன்னாடி நினைப்பில் இருந்தது. காஷ்மீர் இன்னும் அழகு தெறிக்குமேன்னு அங்கே போயிட்டோம். கடவுள் தேசம்னு சும்மா சொல்லலை. அனுபவிச்சுச் சொல்லியிருக்காங்க போல… எங்க யூனிட்டே குளிரையும், அங்கே நிலவுகிற பயத்தையும் மனதில் வைக்காமல் அருமையாக நடிச்சுக்கொடுத்தாங்க.

நாமாவது பரவாயில்லை, பெண்களுக்கு இந்தக் குளிர்படுத்தியெடுக்கும். நிகிலாவுக்கு குளிர் தாங்காமல் கண்ணில் தண்ணீர் வந்து நிக்கும். அவங்க அதையும் மீறி, கண்ணைத் துடைச்சிட்டு ஸ்பாட்டில் நிற்பாங்க. நாமும் அசராமல் உழைக்கும்போது அவங்க இரண்டு பேரோட உழைப்பும், உத்வேகமும் பெரிய டானிக்.

ஒரு நொடியில் 24 பொய்களைச் சொல்கிற சினிமாவில் யதார்த்தத்தைக் காண்பிக்கிறபோது அது உண்மையாகிறது. பார்வையாளர்களோடு இந்தப்படம் நெருங்கிவிடும் என நம்புகிறேன். கதைதான் இங்கே உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் முக்கியம். இதில் அது நடந்திருக்கு.

நிகிலா எப்படி?இன்னிக்கு மலையாளத்திலும், தெலுங்கிலும் அவங்க நல்ல இடத்தில் இருக்காங்க. கடைசியில் ‘கிடாரி’யில் நடிச்சாங்க. விளையாட்டுப்பொண்ணு. ஆனால், நடிப்புன்னு வந்து நின்னுட்டால் அவ்வளவு அருமையாக செய்து காண்பிப்பாங்க.

இதுக்கும் மேலே சதிஷ், மனோபாலான்னு ஆரம்பிச்சு பட்டியல் நீளுது. மோனிஷ், ஆருஷ், இர்பான்னு... அருமையான வில்லன்கள் கூட்டமும் இருக்கு. காஷ்மீர் மாதிரி ஓர் இடத்தை இன்னும் நாம் முழுவேகத்தில் பயன்படுத்திக்க முடியாமல் இருக்கிறது வேதனை. இயற்கையும், பசுமையும் அப்படி உள்ளே ஊடுருவுகிற விதம் இருக்கே, நீங்க நேரில் பார்த்தறியணும்.

பாடல்கள் நல்லாயிருக்கு...

ராம்ஜீவன்னு புதுமுகம். இது அவரோட உண்மையான வெளிப்பாடு. தாமரையும், விவேக்கும் எழுதிக் கொடுத்த பாடல்களை, அருமையான குரல்களோடு, இசையை குழைச்சு கொடுத்திருக்கார். ஒளிப்பதிவாளர் அர்விந்த், ‘பண்டிகை’ படத்திற்குப்பிறகு, இந்தப்

படம் செய்கிறார். படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போனதில் ஒளிப்பதிவாளருக்கு பிரத்யேகமான இடம் உண்டு. படத்தின் இயல்பு எனக்கு எழுத்திலேயே அமைஞ்சுடுது. அதை தெளிவாகக் கொண்டுபோய்ச் சேர்க்க சிபி மாதிரியானவர்கள் இருக்கும்போது, என் நண்பர் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா இருக்கும்போது எனக்கு சிக்கல் இல்லை!

நா.கதிர்வேலன்