நான்...பி.சி.ஸ்ரீராம்...



என்னைப் பற்றி நானே ‘நான்’ என சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன சாதித்து விட்டேன்? அப்துல் கலாம் அல்லது இஸ்ரோவின் இன்றைய தலைவர் சிவன் ஆகியோரிடம் கேட்டாலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது...பரவாயில்லை. சொல்கிறேன். ஆனால், யாரும் என் கதையை எடுத்துக்காட்டாகவோ இஸ்பிரேஷனாகவோ கொள்ளக் கூடாது. சரியா?

எதையும் நான் திட்டமிட்டதில்லை. வாழ்க்கையின் போக்கில் அப்படியே பயணிக்கும் நபர் நான். அப்பா மரணமடைந்தபோது ‘பா’ படப்பிடிப்பில் இருந்தேன். இப்படித்தான் வாழ்க்கை செல்கிறது அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில் செல்கிறேன்.9 அல்லது 10 வயதில் கேமராவை முதன் முதலில் கையில் எடுத்தேன். என்னவோ தெரியவில்லை... எனக்கும் கேமராவுக்கும் ஒரு பந்தம் இருப்பதாகவே அப்பொழுது உணர்ந்தேன்.

படிப்பில் பெரியதாக விருப்பம் இல்லை. ‘எல்லோருக்கும் படிப்பு வருது... உனக்கு மட்டும் ஏன் வரலை...’ என அடிக்கடி என் அப்பா சந்திரமௌலிகேட்பார். அவருக்கு ஹார்ட்டிகல்ச்சர்தான் தொழில். அதிலும் பூக்கள் தோட்டம்தான் பிரதானம். அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.


மலர்கள் திசு வளர்ப்பு, ஒட்டு முறை... இதையெல்லாம் படம் பிடித்து ஆவணப்படுத்துவார்கள். அவற்றை போட்டோ எடுக்கத்தான் வீட்டில் கேமரா இருக்கும்.அந்த கேமராவை என் கையில் கொடுக்க மாட்டார்கள். ஆசைப்பட்டு கேட்டபோது கொஞ்சம் அதிக விலையுள்ளதைக் கொடுக்காமல் பிரௌனி என்கிற பிளாஸ்டிக் லென்ஸ் உள்ள கேமராவை தாத்தா கொடுத்தார்.  

ஆசைதீர ஃபிலிம் ரோல் முடியும் வரை அதை க்ளிக்கினேன். ஆனால், ஆர்வம் தாங்காமல் ரோல் பாக்ஸை அப்படியே திறந்தேன்... எடுத்தவை எல்லாம் போய்விட்டது.அப்பாவும் தாத்தாவும் எதுவும் சொல்லவில்லை. மாறாக மீண்டும் கேமராவைக் கொடுத்து எடுக்கச் சொல்லி படங்களைப் பார்த்தார்கள்.

தாத்தா புன்னகையுடன், ‘இப்ப புரியுதா... ஒருசில விஷயங்களை ஏன் பெரியவங்க வேண்டாம்னு சொல்றாங்கன்னு..?’ என்றார்.
இத்தனைக்கும் அதைத் திறக்கக் கூடாது... எடுத்த போட்டோக்கள் அழிந்துவிடும்... எனத் தெரியும். ஆனாலும் ஆர்வம் யாரை விட்டது?
படிப்புக்கு என் மேல் கோபம். என்னிடம் நெருங்கவே இல்லை. இந்நிலையில் இது மாதிரியான பிரச்னைகள் வேறு. அதனால்தான் அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறேன்... என்னை யாரும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று.

உடனே அவரும்தான் படிக்கவில்லை... இவரும்தான் படிக்கவில்லை... என்றெல்லாம் பட்டியல் போடாதீர்கள். இன்றைய நிலையில் படிப்பு அவ்வளவு முக்கியம். இதை ஒருபோதும் மறக்காதீர்கள். ஒரு மனிதன் எந்தத் துறையில் சாதிக்கவும் முக்கியத் தேவை அவனுக்கு அமையும் வாத்தியார். எனக்கு அப்படிப்பட்ட வாத்தியாராக ராபர்ட் சார் கிடைத்தார்.

நிறைய கற்றுக் கொண்டேன். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான டிப்ளமா கோர்ஸில் நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.
அப்பொழுதெல்லாம் ஒரு கோர்ஸுக்கு ஐந்து பேர்தான். இன்று பத்து பேர். ஆனால், தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி வாடுகிறது. எப்படிப்பட்ட கல்லூரி தெரியுமா அது..? அரசு எப்படியாவது அதை சரிசெய்ய வேண்டும்.பாருங்கள். எங்கெங்கோ அலைபாய்கிறேன்... இது தவறல்லவா..? அதனால்தான் என் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்கிறேன்.

சரி... விஷயத்துக்கு வருகிறேன். என்னுடன் படித்த ஐவரில் இருவர் மட்டுமே திரைத்திறையில் இருக்கிறோம். என் பக்கத்து வகுப்பு மாணவர்களாக கமல் ஹாசன், ருத்ரய்யா, சந்தான பாரதி, ராதாரவி, ஆர்.சி.சக்தி ஆகியோர் இருந்தார்கள். இன்றும் நேரம் கிடைக்கும்போது நாங்கள் கூடி எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

டிப்ளமா முடிந்தது. அதாவது படித்து முடித்தேன் என்றெல்லாம் வீட்டில் என் மீது பெரியதாக நம்பிக்கை எல்லாம் இல்லை. காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவாக செல்வேன். அலைவேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
‘என்ன இன்ஸ்டிட்டியூட்டா..?’ என அலட்சியமாகப் பார்ப்பார்கள்.

நான் ஒளிப்பதிவு செய்த முதல் இரண்டு படங்களும் வெளிவரவே இல்லை. முத்து இயக்கத்தில் ஒரு படம். அடுத்து கறுப்பு வெள்ளையில் ஒரு படம். இது பாதியுடன் நின்றுவிட்டது.வேலு பிரபாகரன் எனக்கு நண்பர். தயாரிப்பாளர் பரணியிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் மூலம் மௌலி இயக்கிய ‘வா இந்தப் பக்கம்’ கிடைத்தது. வெளியான அடிப்படையில் இதுவே எனது முதல் படம். பிறகு ராதிகா தயாரிப்பில் பிரதாப் போத்தன் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’.

பொதுவாக எனது ஒவ்வொரு படத்துக்கும் ஓர் இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி கூட என் அப்பாவை சங்கடப்படுத்தியது. ‘என்னடா... இப்படி சும்மா இருக்க..?’ எனக் கேட்பார். ஏனெனில் அவர் ‘சும்மா’ இருந்ததே இல்லை. அப்படி வேலை செய்வார்.இந்த வார்த்தைதான் இன்றும் என்னை ‘சும்மா’ இருக்கவிடாமல் எதையாவது செய்துகொண்டே இருக்கச் செய்கிறது. படம் இல்லாத நேரங்களில் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிடுவேன்; அதனுள் மூழ்கிவிடுவேன்.

அப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்த பட்மாக அமைந்தது ‘மெளன ராகம்’தான். ‘பையன் ஏதோ பண்றான்’ எனப் புரிந்தது. கொஞ்சம் ‘மரியாதை’யாக என்னை நடத்தினார்.அம்மா... என்ன சொல்ல..? ‘உங்களை மாதிரி ஒருத்தர் யாருக்கு அம்மாவா கிடைச்சாலும் அவங்க சாதிப்பாங்க...’ என்பேன் அடிக்கடி. ‘போடா...’ என புறங்கையால் அதை ஒதுக்குவார்.

ரொம்ப சாந்தமான மனுஷி. பெயரும் சாந்தம். அவர்கள் பெயரைத்தான் என் அலுவலகத்துக்கு வைத்திருக்கிறேன். வயது கொஞ்சம் கொஞ்சமாக என் மீது படிகிறது. இதற்கிடையில் என் வாழ்க்கையையே திசை திருப்பி கடவுள் என்னை ஒதுக்கி வைத்த சம்பவமாக என் மகளின் மரணம் அமைந்தது...எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை... நாத்திகவாதி... என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பிடிக்கவில்லை. ‘அட போங்கய்யா’ என ஒதுக்கிவிட்டேன். அவ்வளவுதான். மற்றபடி என் கறுப்புச் சட்டைக்கும் கடவுளை ஒதுக்கிய சம்பவத்துக்கும் தொடர்பில்லை. என் சட்டையின் கலர் கேமராவில் விழுந்து காட்சிக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றுதான் கறுப்புச் சட்டையை அணிந்தபடி இருந்தேன். மகளின் மரணத்துக்குப் பின் அது வெள்ளை நிறமானது.

அன்று பி.சி. என்றால் கறுப்புச் சட்டை + தாடி. இன்று பி.சி. என்றால் வெள்ளைச் சட்டை + தாடி.பி.சி? ஆம். புதுக்கூர் சந்திரமௌலி ராம். இதுதான் என் முழுப் பெயர். தனியாக நான் எதையும் செய்யவில்லை. எனக்கு உள்ளுணர்வின் மேல் எப்பொழுதும் நம்பிக்கை உண்டு. கதை கேட்கும்போது ஆழ்மனதில் பிடித்திருந்தால் மட்டுமே ஓகே சொல்வேன். இதே ஆழ்மனதுதான் படம் இயக்கச் சொன்னது; அதுவேதான் இப்போதைக்கு வேண்டாம் என்றும் தடுத்திருக்கிறது.

சிலருடைய கூட்டணியும் அவர்களுடனான புரிதலும் என் பயணத்துக்கு உதவியது; உதவியும் வருகிறது. மணிரத்னம், ஃபாசில், பால்கி, ஷங்கர் என ஆரம்பித்து சமீபத்திய பாக்யராஜ் கண்ணன் வரை சில பல மேஜிக்குகள் சாத்தியமானது அதனால்தான். ‘எனக்கு என்ன வேணும்... அவங்களுக்கு நான் என்ன தரணும்...’ என்பது தெளிவாக இருதரப்புக்கும் புரிந்ததாலேயே அவை சாத்தியமாகின.

இதனால் பி.சி. பிஸியாக இருந்தான்! ஒரு கட்டத்தில் வீட்டுச் சூழலில் இருந்து நான் தப்பித்து ஓடுவதுபோல் இருந்தது. என்னை விட என் மனைவி சீதா இதனால் அதிகம் பாதிக்கப்பட்டார். ஷங்கரிடம் சொல்லி ‘ஐ’ படப்பிடிப்பு சமயத்தில் அவரையும் சீனாவுக்கு அழைத்துச் சென்றேன். அது அவருக்குள் சின்னதாக மாற்றத்தை ஏற்படுத்தியது.அன்று ஷங்கர், ‘ஏன்’ என்று கேட்டிருக்கலாம். ‘அங்க எதுக்கு சார் அவங்க’ என இழுத்திருக்கலாம். ஆனால், நானும் சீதாவும் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தோம் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

இதைத்தான் முக்கியமாக நினைக்கிறேன். புரிதல்... என் தாத்தா, அப்பாவில் ஆரம்பித்து என்னைப் புரிந்து கொண்டவர்களே என் வாழ்க்கை முழுக்க உடன் வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். இதனாலேயே உறவினர் வீட்டுப் பையன் அல்லது மகளை... சிபாரிசுடன் வருபவர்களை என் உதவியாளர்களாக நான் சேர்த்துக்கொள்வதே இல்லை. ஆர்வம் இருக்க வேண்டும்... பரஸ்பர புரிதல் எங்கள் இருவருக்கும் இடையில் கட்டாயம் மலர வேண்டும். இதைத்தான் முக்கியத் தகுதியாக நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று. யாரையும் உதவியாளர்களாக நான் நினைப்பதே இல்லை. ஏனெனில் நானே உதவியாளராகத்தான் எப்பொழுதும் இருக்கிறேன். பயணத்தில் சக பயணிகள். அவ்வளவே. வெற்றியோ தோல்வியோ என்னை பாதிப்பதில்லை. ஆனால், என் பணியை சரிவர நான் செய்யவில்லை என்றால் ரெஸ்ட்லெஸ் ஆகிவிடுவேன்.

சமீபத்தில் அதீத ஈடுபாட்டுடன் பணிபுரிந்த படம், அக்‌ஷய் குமார் நடித்த ‘padman’. நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கையைத் தழுவிய இந்திப் படம் அது. இந்திய அரசு அந்தத் தமிழனுக்கு பத்ம விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இதை எல்லாம் அறியாமல் இதே தமிழகத்தில் நானும் இருந்திருக்கிறேனே என ரொம்பவும் வருத்தப்பட்டேன். அதை ஈடுகட்ட அதீத ஈடுபாட்டுடன் உழைத்தேன்.

மூன்று ரூபாய்க்குக் கூட நாப்கின் வாங்க முடியாத நிலையில் நம் நாட்டுப் பெண்கள் இருப்பதையும்... இதைப் போக்க ஒரு தமிழன் அத்தனை அவமானங்களையும், உதாசீனங்களையும் சந்தித்து விடாமுயற்சியுடன் போராடி யிருக்கிறான் என்பதும் எப்பேர்ப்பட்ட விஷயம்!

அதிகாலை ஒளி எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷல். அமிதாப் பச்சனாக இருந்தாலும் சரி... சிவகார்த்திகேயனாக இருந்தாலும் சரி... 5.45க்கு ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்கள். ஓர் ஒளிப்பதிவாளனாக அதை அவர்களுக்குப் புரிய வைத்து விடுவேன்.ஏனெனில், ஒவ்வொரு நாள் அதிகாலை ஒளியிலும் ஒரு கதை... ஒரு செய்தி இருக்கிறது. நான் கமிட் ஆகும் படத்தின் முதல் ஷாட் எப்பொழுதுமே அதிகாலையில்தான்!
ஒலி பிறக்க ஒளி. ஒளி பிறக்க ஒலி!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்