ஆன்லைன் டிக்கெட் ஆப்பா... ஆனந்தமா..?



‘ஆன்லைனில்தான் இனிமேல் சினிமா டிக்கெட்டுகள் தரப்படும். அதற்கானமுழு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன...’ என அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு அறிவிப்பு செய்தாலும் செய்தார், தமிழ் சினிமா ஏரியாவில் சலசலப்பு.

சவலைப்பிள்ளை மாதிரி நடந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு இது புத்துயிர் அளிக்குமா, இன்னும் சிக்கலில் கொண்டு போய் தள்ளிவிடுமா என சினிமா பார்வையாளர்களின் பரிதவிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

படங்களின் பெரிய வெற்றி என்பது குறைந்துகொண்டே போக, படத்தை வெளியிடுவது மிகச்சிரமமான செயலாகிவிட... தவிக்கிறது தமிழ் சினிமா.
இதற்கு முன்னர் டிக்கெட் விலையில் செய்த சின்ன மாறுதலே தமிழ் சினிமாவிற்கு பெரும் ஆறுதலாக மாற, பெரிய நன்மைக்கு காத்திருந்தார்கள் அவர்கள்.லோக்கல் வரிகள், புதிதாக சுமத்தப்பட்ட ஜிஎஸ்டி என மேலும் அழுத்த, வரிகள் செலுத்துவதில் அரசை ஏமாற்றும் வேலைகள் ஆங்காங்கே நடந்தன. அண்டை மாநிலங்கள் சினிமாவின்மீது வைத்திருந்த அக்கறை இங்கே இல்லை என்ற ஆதங்கம் எங்கும் எழ முணுமுணுப்பு சூழ்ந்தது.

இப்போதுதான் நாலைந்து ஆண்டுகளுக்கு சேர்த்து மாநில சினிமா விருதுகள் அளிக்கப்பட்டன. இதனால் மொத்த சினிமா உலகமுமே விருது வாங்க உட்கார்ந்திருந்த அதிசயமும் நடந்தது.இத்தகைய வேளையில் அமைச்சரின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமாவில் என்னென்ன விளைவுகள், மாறுதல்கள் ஏற்படும்? புதிதாக எழப்போகும் அவஸ்தைகள் என்ன... என்பது பற்றி அறிய தமிழ் சினிமாவின் பிரதானமானவர்களை அணுகினோம்.
அதில் நிறைய விஷயங்கள் புரிபட்டன. நடப்புதெரிந்தது.

அவர்களின் கேள்விகளும், எதிர்பார்ப்புகளும், பயங்களும் வௌிப்பட்டன. ஆனால், இவை எல்லாமே தமிழ் சினிமாவின் உயர்வுக்கு இட்டுச் சென்றன. இவையெல்லாவற்றையும் சரியாகக் கடைப்பிடித்தால் நிச்சயமான மாற்றம் காத்திருக்கிறது என்பது உறுதியானது. பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னது இயல்பான உண்மையாக இருந்தது: ‘‘ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்படும் என்பது சரியாக வராது. அதை செயல்படுத்துவது சாத்தியமே இல்லை.

தமிழகம் அதிகம் கிராமங்கள் சார்ந்திருக்கு. சொல்லப்போனால் முக்கால்வாசிப் பேர் கிராமவாசிகள். அவர்களுக்கு இது மாதிரியான ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வது எப்படி தெரியும்? மத்திய அரசு எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் எனச் சொல்லி எத்தனை வருஷமாகிவிட்டது. நம்மால் அதற்கு முழுமையாக மாற முடிந்ததா?! இன்னும் பணத்தை கையில் வாங்கிப் பார்த்துத்தான் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிற காரியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழகுவார்கள். அதற்கு காலஅளவு நிர்ணயிக்க முடியாது. அதற்கு கட்டாயப்படுத்தினால் சினிமா கண்டிப்பாக பாதிக்கும். அப்படி ஆன்லைனில் நடத்தினாலும், அதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் 90% தியேட்டர்கள் ஆன்லைன் ஏற்பாட்டிற்குத் தயாராகிவிட்டன. ஆக, only online என்பது நம் தமிழ்நாட்டிற்கு சரிப்பட்டு வராது.

ஆன்லைன் வர்த்தகத்தில் பேங்கிற்கு கொஞ்சம், அந்த நிறுவனத்திற்கு கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதன் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மக்கள் அதை வெறுப்பார்கள். அல்லது சிரமப்படுவார்கள். இரண்டில் ஒன்று நடைபெற வாய்ப்பிருக்கிறது.

இவ்வளவு நாளாக பிஸினஸில் இருக்கும் எனக்கே ஆன்லைனில் புழங்குவது கஷ்டமாக உள்ளது. சின்ன தப்பு செய்தால் வேறு யாருக்காவது பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறது. எனவே, இந்த சிஸ்டத்தை கற்று உணர்கிற வரைக்கும் நேரடி தியேட்டர் புக்கிங்கில் 50 சதவீதமும், ஆன்லைனில் 50 சதவீதமும் இருக்கும்படிதான் இருக்க வேண்டும்.

நான் நடப்பைச் சொல்கிறேன். காலம் செல்லச் செல்ல மக்கள் செல்போனிற்கு பழகிய மாதிரி, ஆன்லைனிற்கும் பழகிவிடுவார்கள். அதுவரைக்கும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்...’’ என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.பிரபல தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன், ‘‘ஆன்லைனில் இப்போது சேவைக்கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. அந்தக் கட்டணத்தை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தை  ஆரம்பிப்பது பொருந்தி வராது.

நான் அமைச்சரிடம் பேசினேன். அவர் ஒரு குழுவை அமைத்து, அதில் உங்கள் தரப்பும், எங்கள் தரப்பு அதிகாரிகளும் இருந்து பேசுவோம். அதில் பல விஷயங்கள் தெளிவாகும். பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றார். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

அரசு என்பது அதிகாரம் நிறைந்தது. நாம் என்ன நினைத்தாலும் அதை நடப்புக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும், செயலாற்றலும் அரசிடம்தான் இருக்கிறது. ஆனால், இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நிறைய தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் இருக்கின்றன. அதற்கெல்லாம் ஏதாவது ஒருவழி கண்டுபிடிக்க வேண்டும்.

நாங்களும், அரசுத்தரப்பும் உட்கார்ந்து பேசினால்தான் இதில் நல்ல வழி பிறக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு பேருமே இதில் கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்ற நிலைமையும் அப்பொழுது இருக்கும். அதுவரையில் நாம் இதைப்பற்றி எது பேசினாலும், அது நமக்குள் பேசிக்கொண்டது மாதிரிதான்...’’ என்கிறார் அபிராமி ராமநாதன்.

பிரபல படத்தயாரிப்பாளரும் தயாரிப்பு சங்கப் பொறுப்பில் இருந்தவருமான எஸ்.ஆர்.பிரபு கூறியது: ‘‘ஆன்லைன் வர்த்தகம் நல்லதுதான். போன தடவை டிக்கெட் விலையில் மாற்றம் செய்த போதே அதில் பலன் விளைந்தது. இதனால் தொழிலில் பல மாற்றங்கள் வரும். அரசு வருமானம் சீராக கிடைக்கும். யாருக்கு, என்ன வகையான வசூல் கிடைக்கிறது என்ற உண்மை நிலவரம் கூட தெரியவரும். தொழிலில் ஒரு தெளிவு கிடைக்கும். ஆர்ட்டிஸ்ட்டுகள் தங்களின் உண்மையான வியாபாரத்தை தெரிந்துகொள்ளலாம்.

வெளியே வட்டிக்கு வாங்குவது குறையும். பேங்க் கூட தயாரிப்புக்காக கடன் கொடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. டிஸிப்ளின்டு புரடியூசர்கள் வருவார்கள். ப்ளாக் டிக்கெட்கள் விற்பது கணிசமாகக் குறையும். பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் டிக்கெட் விலையில் வித்தியாசம் இருந்தால்தான் நல்லது. ஹோட்டலில் நாம் சாப்பிடும் உணவுக்கேற்ப விலையில் வித்தியாசம் இருப்பதுமாதிரி படங்களுக்கும் இருப்பது நியாயம்தான்.

இங்கே படங்களுக்கு உள்ளூர் வரியோடு, ஜிஎஸ்டியும் சேர்ந்துவிட்டது. இதை கணிசமாகக் குறைத்தாலே போதும். பக்கத்து மாநிலங்களை விட இங்கே சினிமாவிற்கான வரி அதிகம் என்பது தெரிந்ததே.

இங்கே சினிமா சம்பந்தமான அனுமதிகள், பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள பல இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. இதை மாற்றி சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பேசித் தீர்க்க ஓர் இடம் வேண்டும். நாங்கள் ரூல்ஸ் எதுவும் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்த ஓர் இடம் வேண்டும்.

சினிமா என்பது தியேட்டர் வருமானம் என்பது மட்டுமல்ல. அதனால்தான் ஒருமித்து பிரச்னைகளைப் பேசித்தீர்க்க ஓர் இடம் வேண்டும் என்கிறேன். மற்ற நாடுகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை மட்டுமே சேவைக் கட்டணம். தமிழகத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வசூலிக்கிறார்கள்.

ஆன்லைன் ஏற்பாட்டை செய்வதால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும். இதனால் ஏற்கனவே இருக்கும் சினிமா மீதான வரியைக் குறைக்க வேண்டும்...’’ என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.சினிமாவில் மாற்றங்களுக்கான நேரம் வந்து விட்டதாகத் தெரிகிறது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் விடியலும், பாதியிலேயே விட்டுப்போய்விட்டால் மேலும் சிக்கல்களும் வந்து சேரும். அரசும், சினிமாவும் சேர்ந்து சினிமா பார்க்கும் ரசிகர்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நா.கதிர்வேலன்