கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-28
தீய வழியில் சென்றவர்களை நல்வழிப்படுத்தும் திருக்கோயில்
வருடங்கள் நொடி போல் கடந்தன. ஆனாலும் காஞ்சிபுரத்தின் அருகே மர மல்லி வனத்தில் தவமிருந்த தேவ கன்னிகைகளின் உறுதி குறையவில்லை.
 எங்கே தங்கள் அழகு அழிந்துவிட்டால் சுவர்க்கத்தில் தங்களுக்கு இடம் இல்லாமல் போகுமோ என்ற அச்சத்தில் ஈசனை நோக்கி தவம் இருந்தார்கள். நியம நிஷ்டையுடன் அவர்கள் செய்த வழிபாட்டில் பக்தி மிளிர்ந்தது.ஒருநாள் அவர்கள் பூஜை செய்து கொண்டிருக்கையில் ரம்பை அழகான ஒரு பூமாலையை ஈசனுக்கு சமர்ப்பித்தாள்.
அப்போது அருகில் இருந்த ஊர்வசிக்கு ரம்பையை எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியது. ‘‘ரம்பா! கவனம். இந்த தெய்வநாயகேஷ்வரரின் திருமேனி தீண்டாத் திருமேனி. சிவாச்சாரியார்கள் கூட பூஜை செய்யும் வேளையில் இவர் மீது தங்களது கை படாத வண்ணம் ஒரு கோலைக்கொண்டே அலங்கரிப்பார்கள்.
 அப்படியிருக்க தேவலோகத்து போகப் பொருளான நாம் இவரைத் தீண்டலாமோ? கூடாது. கவனம் கொள்வாய்...’’பக்தியில் தன்னை மறந்திருந்த ரம்பை அதைக் கேட்டு சுய நினைவிற்கு வந்தாள். எச்சரிக்கையாக ஆராதனைகளைச் செய்தாள்.
இப்படி தேவ மாதர்களால் கண்ணும் கருத்துமாகவும் வைபோகமாகவும் ஈசனுக்கு பூஜைகள் நிகழ்ந்தன. அதனால் அவர்களின் பாபச் சுமை கழிந்து திருவருள் கூடும் சுப தருணமும் வந்தது. ஒரு நாள் தேவமகளிர்கள் உள்ளம் உருக முக்கண்ணனை பூஜிக்கும் வேளை சப்தரிஷி களும் வேத முழக்கம் செய்ய, சிவ பூதகணங்கள் ஆர்ப்பரிக்க, தேவர்கள் மலர்மாரி பொழிய, விடையேறி வந்தார் பரமன்.
இடது மடியில் அம்பிகையை வைத்துக்கொண்டு வலது கையால் ஆசி வழங்கிய படி இருந்த அவரது திருக்கோலமே அலாதியாக இருந்தது. அவரது மூன்று கண்களும் கருணை என்னும் அமுதத்தை வாரி வாரி இறைத்தன. அந்தக் கடைக்கண் பார்வை பட்டவுடன், ரம்பை முதலியவர்களின் அழகு கூடியது. ஒவ்வொருவருக்கும், தான் ஒருவரே மற்றவரைக் காட்டிலும் அழகு என்ற பூரிப்பு எழுந்தது.
அதனால் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய தேவலோக காரிகைகள் ஈசனது பாத கமலங்களுக்கு தண்டனிட்டார்கள். உடனே மின்னலைப் போல ஈசன் மறைந்துபோனார்!அந்தோ! அற்புத தரிசனம் போனதே என்று ரம்பை முதலியவர்கள் புலம்பினார்கள். அந்த சமயம் கல்லால மரத்தின் அடியில் மானையும் மளுவையும் ஏந்தி, தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார் கங்காதரன்!அந்த எழில்மிகு திருக்கோலத்தை ரம்பை முதலியவர்கள் ஊன் உருக உயிர் உருக சேவித்து மகிழ்ந்தார்கள். ஈசனோ அவர்களுக்கு கடைக் கண்ணால் அருளியபடியே தனது வலது திருக்கரத்தில் சின் முத்திரை செய்து அதை தனது மார்புக்கு அருகில் வைத்து தேவலோக நங்கைகளைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகை பூத்தார்.
‘‘இதுக்கு என்ன தாத்தா அர்த்தம்?’’ தன்னை மறந்து கதை கேட்டுக் கொண்டிருந்த கண்ணன், நியாயமான கேள்வியை நாகராஜனிடம் கேட்டான். ‘‘கண்ணா! தேவலோக மங்கைகளான அவங்க, அழியக் கூடிய இந்த உடல் அழகை பெருசா மதிச்சாங்க. அது அழியக் கூடாதுனு தவம் செய்தாங்க. ஆனா, உண்மையான ஞானமும் அழகும் நம்ம ஆன்மாவை உணர்ந்து, அதை ஈசன் திருவடில சேர்ப்பதுலதான் இருக்கு.
இதை அவங்களுக்கும் நமக்கும் உணர்த்தத்தான் சுவாமி அந்த ரூபத்துல தரிசனம் தந்தார். அந்த ரூபத்துல, அதாவது தட்சிணாமூர்த்தி கோலத்தை, இன்னிக்கும் நாம காஞ்சிபுரத்துக்கு பக்கத்துல இருக்கிற இலம்பையங்கொட்டூர் கோயில்ல பார்க்கலாம்...’’
‘‘ஏங்க! வழி தவறிப் போன சம்பந்தரை இந்த சுவாமி தடுத்தாட் கொண்டார் இல்லையா. அதையும் சொல்லுங்க!’’ மாலதியை ஆதரவாக அணைத்த படியே ஆனந்தவல்லி எடுத்துக் கொடுத்தாள். தன் மனைவி சொன்னதை ஆமோதித்தபடியே நாகராஜன் சொல்லத் தொடங்கினார்... காஞ்சிபுரம் வழியாக அந்த பல்லக்கு சென்றுகொண்டிருந்தது. ஊரே அந்த பல்லக்கை வணங்கியது.
காரணம் இல்லாமல் இல்லை. ஈஸ்வரியின் முலைப்பால் உண்ட ஞானசம்பந்தப் பெருமான் பல்லக்கில் இருந்தால் யார்தான் அதை வணங்க மாட்டார்கள்?!இத்தனைக்கும் அந்த பல்லக்கு ஒன்றும் சாதாரண பல்லக்கு கிடையாது. தலம் தலமாக ஈசனை தரிசித்து, சுந்தரத் தமிழில் கவி பாட குழந்தை சம்பந்தர் கிளம்பினார். அவரோ சிறு குழந்தை. ஆனால், அவர் எடுத்துக் கொண்ட பயணமோ மிகப் பெரியது.
இந்தப் பயணத்தில் அவரது பிஞ்சுப் பாதங்கள் வலிக்குமோ என்று அந்த மகாதேவனின் உள்ளம் இளகியது. உடன் ஒரு முத்துச் சிவிகையை சம்பந்தருக்குக் கொடுத்து விட்டார் அந்த தயாபரன். ஈசன் பரிசாகத் தந்த பல்லக்கில் ஈஸ்வரியின் முலைப்பால் உண்ட குழந்தை வருகிறது என்றால் கோலாகலத்திற்கு என்ன குறை வந்துவிடப் போகிறது?
சம்பந்தரை தரிசிக்க வந்தவர்கள் அனைவரும் ‘ஹர ஹரா சிவ சிவா’ என்று ஜபித்தபடி இருக்கவே அந்த இடத்தில் ஒரு தெய்வீக சூழல் உருவானது. பல்லக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதன் உள்ளிருந்த ஞானத் தமிழ்க் குழந்தை, அனைவருக்கும் திருநீறு வழங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் பல்லக்கின் அருகில் வந்த ஒரு பாலகன், ‘‘சுவாமி! நீங்கள்தானே சம்பந்தர்? சற்று என்னோடு வருகிறீர்களா..? நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்...’’ என்றான்.
சம்பந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தச் சிறுவனை ஏற இறங்கப பார்த்தவர், ‘‘அப்பனே! எனக்கு இப்போது நேரம் இல்லை... பிறிதொரு நாள் வருகிறேன்...’’ என்றார். பல்லக்கு நகர்ந்தது. அந்த சிறுவன் மட்டும் நகராமல் அதே இடத்தில் இருந்தபடியே பல்லக்கு கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு முதியவர் வந்து சம்பந்தரை தன்னோடு வருமாறு கேட்டுக் கொண்டார். சம்பந்தர், சிறுவனிடம்மறுத்தது போலவே அவரிடமும் மறுத்தார். மீண்டும் சம்பந்தரின் பயணம் தொடர்ந்தது. பிறகு ஒரு பசு மாடு தீராத ஆவேசத்துடன் சம்பந்தரின் பல்லக்கைத் தாக்க வந்தது. அதைக் கண்டு அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.
சம்பந்தரோ பல்லக்கை இறக்கச் சொல்லி அதிலிருந்து வெளியே வந்தார். ‘‘சிவ பூஜைக்குத் தேவையான பஞ்ச கவ்யமான பால், தயிர், நெய், வெண்ணெய் போன்றவற்றைத் தருவது பசுதான். அத்துடன் நாம் நெற்றியில் பக்தியுடன் பூசிக் கொள்ளும் திருநீறும் பசும் சாணத்திலிருந்தே உருவாகிறது. ஆகையால் சிவபக்தர்களான நாம் அனைவரும் பசுவிற்கு கடமைப்பட்டுள்ளோம். எனவே அதை தாக்கக் கூடாது. போற்ற வேண்டும். புரிகிறதா?’’ தம்மை தரிசிக்க வந்தவர்களிடம் சொல்லிவிட்டு, ஓடி வரும் பசுவை நோக்கி கை குவித்து வணங்கினார் சம்பந்தர். அந்தப் பசு அவரைக் கண்டதும் ‘என் பின்னே வா...’ என்பது போல் தலையை ஆட்டியது. சம்பந்தரும் மறுவார்த்தை பேசாமல் சிவ நாமம் ஜபித்தபடியே அதைப் பின்தொடர்ந்தார். கூட்டம் சம்பந்தரைத்தொடர்ந்தது.
அந்தப் பசு மாடு மர மல்லி காட்டுக்குள் நுழைந்து, தெய்வநாயகேஷ்வரரின் முன்பு நின்று திரும்பி சம்பந்தர் வருவதை நிச்சயம் செய்துகொண்டது. அடுத்த நொடி, மின்னலைப் போல் மறைந்தது!உடனே சம்பந்தருக்கு உண்மை புலப்பட்டது. மெல்ல ஈசனின் திரு முன்பு சென்றார். விழியில் ஆனந்த அருவி பாய அவரை வேண்ட ஆரம்பித்தார். ‘‘பாலனாகவும் முதியவராகவும் வந்து வழிகாட்டிய போது இந்தப் பாவிக்கு விளங்க வில்லை. எனவே பசுபதியான நீங்கள் ஒரு பசுவின் ரூபம் எடுத்து வந்து உங்களையே எனக்குக் காட்டி அருளிவிட்டீர்கள்...’’
உருகிய சம்பந்தர் தனக்குள் சொல்லிக் கொண்டார். ‘‘அம்பிகையின் பால் உண்ட பின்பும் என்னை அறியாமை விட்டு நீங்கவில்லை... அதனால்தான் முதலில் ஈசன் வந்த போது அவரை என்னால் உணர முடியாமல் போயிற்று...’’ ‘‘பார்த்தியா மாலதி! சம்பந்தர் வழி தவறி எங்கயோ போக இருந்தார். அவருக்கு நல்ல வழி காட்டி தெய்வநாயகேஷ்வரர் அருளினார். அவரைப் போய் தரிசனம் செய். வழி தவறிப் போன உன் மகன் கண்டிப்பா நல்ல வழிக்கு திரும்பி வருவான்...’’ என்றார் நாகராஜன்.
மாலதியின் முகம் தெளிந்தது. தன் கஷ்டங்கள் தீர்ந்தது போல் உணர்ந்தாள். ‘‘தேங்க்ஸ் அங்கிள்...’’ ‘‘நம்பிக்கையோடு போ மாலதி... இன்னிக்கும் அருள் சுரக்கிற அட்சயபாத்திரமா அங்க சுவாமி இருக்கார். 1983ல இலம்பையங்கொட்டூரை நோக்கி பெரிய இடி இறங்கிச்சு. அதை தன் கோயில் விமானத்துல தாங்கி ஊரையே அந்த ஈசன் காப்பாத்தினார்.ஒண்ணு தெரியுமா..? சந்திரன் தன்னோட சாபம் தீருவதற்காக இலம்பையங்கொட்டூர் ஈசனுக்கு பூஜை செய்திருக்கார். அதனால ஜாதகத்துல சந்திரனும் குருவும் சரியில்லாதவங்க இந்தக் கோயிலுக்குப் போய் வணங்கினா போதும்... சரியாகிடும்.
இதை நமக்கு புரியவைக்கத்தான் ஆண்டுதோறும் சில நாட்கள் சூரியன் தன் ஒளியால இந்த ஈசனை பூஜிக்கிறார். ஈசனுக்கு சமமா அங்க அம்பாளும் சக்ர பீடத்துல அமர்ந்து ஆட்சி செய்யறா...’’ என தன் பங்குக்கு கோயிலின் பெருமைகளை எடுத்துச் சொன்னார் ஆனந்தவல்லி. ‘‘தாத்தா... தாத்தா... அந்த தலத்து மேல சம்பந்தர் பாடின தேவாரத்தை சொல்லுங்க...’’ என்றான் கண்ணன். சிரித்தபடி நாகராஜன் ஹரிகாம்போதி ராகத்தில் பாடினார்... மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே!
(கஷ்டங்கள் தீரும்)
கோயில் பெயர்: கொடேந்து முலையம்மை உடனமர் தெய்வநாயகேஷ்வரர். (சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று) செல்லும் வழி: காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிமீ. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். சென்னையிலிருந்து 60 கிமீ.
ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|