பிசினஸில் கலக்கும் இளம் பெண்கள்!



மூங்கில் நார் டூத்பிரஷ்... தேங்காய் சிரட்டை சோப்பு டப்பா...

இரண்டு இளம் பெண்கள் இணைந்தால் என்ன செய்வார்கள்?
ஷாப்பிங் அல்லது கிசுகிசு பேசி அரட்டை அடிப்பார்கள். அதுவே தொழில் தொடங்கினால் ஒரு பொட்டிக் ஷோரூமோ அழகு நிலையமோ, அதையும் மீறினால் பெண்கள் சார்ந்த ஆக்சஸரிஸ்களை விற்கும் தளமோ ஆரம்பிப்பார்கள். ஆனால், அதெல்லாம் கடந்தகாலம்... நாங்கள் தொடங்கியிருக்கும் பிசினஸே வேறு என கெத்து காட்டுகிறார்கள் வீணா பாலகிருஷ்ணனும் சுதர்சனா பாய்யும்.

யெஸ். மறுசுழற்சி பொருட்கள்தான் இவர்களின் குறிக்கோள்! ‘‘நாங்க உருவாக்கி இருக்கிற ‘EverWards’ சொல்லுக்குப் பின்னாடி forever, always என்கிற இரு சொற்கள் இருக்கு!’’ என விவரமாக பேசத் தொடங்குகிறார் வீணா பாலகிருஷ்ணன். ‘‘கல்லூரில சுதர்சனா எனக்கு ஜூனியர். அப்போ படிப்புல அவளுக்கு உதவினேன்.
எங்களுக்குள்ள புரிதலும் நட்பும் உருவானது அப்பதான். கோவைல நாங்க ஃபேஷன் டெக்னாலஜி படிச்சோம். இப்ப ரெண்டு பேருக்குமே சென்னைதான் சோறு போடுது!’’ புன்னகைக்கும் வீணா, மக்காத குப்பைகள்தான் பெரும்பாலும் ஃபேஷன் உலகத்தில் உருவாக்கப்படுகிறது என்கிறார்.

‘‘படிக்கும்போதே இதைப் புரிஞ்சுகிட்டோம். ஏதாவது ஒரு தொழில் தொடங்கணும்னு சுதர்சனா ஆசைப்பட்டா. முதல் கட்டமா ஆரோக்கியமா வாழ என்னவெல்லாம் தேவைனு எங்களைச் சுத்திலும் ஆராய்ந்தோம். குறிப்பா என்னவெல்லாம் மக்காத பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்குனு பார்த்தோம்.

காலைல எழுந்து பல் தேய்க்கிற பிரஷ் தொடங்கி சோப்பு வைக்கிற டப்பா, ஷாம்பூ பாட்டில்னு எல்லாமே பிளாஸ்டிக் - அதாவது மக்காத ஆபத்தான பொருட்கள்தான். இதுக்கெல்லாம் மாற்று என்னனு யோசிக்க ஆரம்பிச்சோம். மூங்கில் மரத்தாலான டூத் பிரஷ், தேங்காய் சிரட்டைல சோப்பு டப்பா, டீ கப், மறுசுழற்சி செய்துகொள்ளக் கூடிய நேப்கின்ஸ், துணிகளில் யோகா மேட் பை, கைப்பைகள், மர / எவர்சில்வர் ஸ்ட்ரா, ஆர்கானிக் சோப்பு, ஷாம்பூ, வலி நிவாரணிகள், லிப் பாம்... இதை எல்லாம் இயற்கையான பொருட்களைக் கொண்டு உருவாக்கினோம்.

இந்தப் புள்ளில ஆரம்பிச்சதுதான் இந்த ‘எவர்வார்ட்ஸ்’. டூத்பிரஷ் மேல் இருக்கக் கூடிய பிரஷ்ல கூட நைலானை பயன்படுத்தாம மூங்கில் நார்களை பயன்படுத்தறோம். தேங்காய் நார் பாத்ரூம் பிரஷ், குளியல் ஸ்கிரப், சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்கள்ல ஷாம்பூ...’’ எனப் பட்டியலிடும் வீணா, ஆன்லைனில் வாங்கும்போது கூரியரில் எடை அதிகமாக இருக்கக் கூடாது என்று பவுடர் ஷாம்பூவை தாங்கள் உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘இப்போதைக்கு 40க்கும் அதிகமான பொருட்கள் எங்ககிட்ட விற்பனைக்கு இருக்கு. இதை https://www.everwards.co.in இணையதளம் வழியா வாங்கலாம். இந்தியாவுல எங்க இருந்தாலும் அனுப்பிடுவோம். ரூ.69ல தொடங்கி பொருட்கள் இருக்கு. இது இல்லாம சென்னைல ‘மால்காடி’, ‘எர்த் ஸ்டோரி’, ‘ஷ்மூஸிஸ்’ உள்ளிட்ட கடைகள்ல நேரடியாகவும் வாங்கலாம்...’’ என்கிறார் வீணா.

ஷாலினி நியூட்டன்