மெளனகுரு to மகாமுனி 14 வருடப் போராட்டம்... 8 வருட இடைவெளி...‘‘வணக்கம் சகோ. ‘மகாமுனி’ ரெடி. என் முதல் படம் ‘மௌனகுரு’ உங்களை என்கேஜ் பண்ணின மாதிரியே இதுவும் இருக்கும். கதாபாத்திரங்கள் வழியாக கதை சொல்றேன். குற்றம், ட்ராமா, த்ரில்லர் சேர்ந்த கணக்கில் ‘மகாமுனி’ இருக்கும். ஒரு காலத்தில் சினிமா போஸ்டர் ஒட்டுறதுக்கு காத்திருந்து, தியேட்டருக்கு போனதெல்லாம் முடிஞ்சுபோச்சு. செல்போன், நெட்னு நிறைய வாய்ப்புகள் இருக்கு. இனிமேல் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் நகரவிடாமல் கதை சொன்னால்தான் உண்டு.

அஞ்சு நாள் கிரிக்கெட் ரிலாக்ஸாக விளையாடியது போய் இப்ப பரபரப்பாக 20 - 20 மேட்ச் ஆகிப்போச்சு. அந்த பரபரப்பு மனநிலையில்தான் மக்கள் இருக்காங்க. எனக்குச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. அதில் இருந்து பின்வாங்கவே முடியாது. கதைன்னா ஏதோ தேவலோகத்திலிருந்து வந்ததல்ல. கண்ணில் படக்கூடிய நிகழ்வுகள்தான். சதா நம்ம கண்ணில் படுகிற மனிதர்கள்தான். சொல்ல அவ்வளவு இருக்கு.

நாம எளியவங்க. ரெண்டு கையாலதான் அள்ளிப் பருகலாம். அப்படி இருக்கும் ‘மகாமுனி’ படம்...’’ என மனதில் இருப்பதைப் பேசிவிடுகிறார் இயக்குநர் சாந்தகுமார். ‘மௌன குரு’ படத்தில் மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
விளையாட்டுப் பிள்ளை ஆர்யாவை வேறு தினுசில் பார்க்கிற மாதிரி இருக்கு…

ஆர்யா இந்தப் படத்தில் பெரிய சர்ப்ரைஸ். அவர் கதாநாயகனாக இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் நடிச்சிட்டார். இதில் இன்னமும் ஃப்ரெஷ் ஆன ஆர்யா. இந்த மாற்றமே எல்லோருக்கும் புதுமையாக இருக்கும்.

ஒரு ஸ்க்ரிப்ட்டை எழுதிவிடலாம். அதை முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்கிறது அவங்க கையில்தான் இருக்கு. என்னதான் இருந்தாலும், நம்மால் அதை வெளியிலிருந்து கொடுக்க முடியாது. முழுமையாக எங்க கைக்கு ஆர்யா வந்திட்டார். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆபீஸ்க்கு வந்து ரெடியாகி, ஸ்பாட்டுக்கு வந்து அப்படியே கேரக்டராகவே உட்கார்ந்திருப்பார். 55 நாட்கள் அந்த மேஜிக் நடந்தது. அவ்வளவு ஆழமாக உள்வாங்கினார். நிச்சயமாக இதில் அவரை உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

‘மகாமுனி’க்குப் பிறகு கடினமான எந்த ஒரு கேரக்டருக்கும் அவர் பொருந்துவார். அப்படி எழுதுகிற இயக்குநர்களின்
விருப்பப் பட்டியலில் அவர் வந்துவிடுவார். இதற்கு முன்னாடி ஆர்யாவின் நடிப்புக்கு ஒரு எல்லையிருந்தது. அது விரிவாகியிருக்கு. என்னோட விருப்பத்திற்கு அவர் இணங்கி நடிச்சதுதான் அருமையானது.

இந்துஜா, மகிமா நம்பியார்… இரண்டு பேர் இருக்காங்க…
யார் பெஸ்ட்ன்னு அவங்களுக்குள்ளே ஒரு போட்டி எழ வாய்ப்பிருக்கு. என் படத்தில் பெண்களுக்கு பெரிய இடம் உண்டு. ஒரு சின்னக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஹீரோயின்கள் பயப்படுவாங்க. அடுத்தடுத்தும் அதேமாதிரி ரோலுக்கு கூப்பிடுவாங்களோ என்ற பயமாக இருக்கலாம்.

அப்படி எதுவும் இல்லாமல் இந்துஜா நடித்தார். எக்ஸ்பிரஷனில் நல்ல இடத்திற்கு வந்திட்டார். சில ரோல்களைச் செய்ய புதுசா இருந்தா நல்லாயிருக்கும். அதே மாதிரி மகிமா. அவங்களும் ஒரு பிரமாதமான ரோல் பண்ணியிருக்காங்க. மேல்தட்டுவர்க்கப் பெண்கள் இல்லை. சதா நம் கண்முன்னே தென்படுகிற பெண்களின் கதையும் இதிலிருக்கு.

சமுதாயக் கருத்துகளும் பளிச்சின்னு வெளியே வருமோ…
நான் எப்பவும் கேரக்டரோட பின்புலத்தை சொல்வது கிடையாது. வட்டார வழக்கும் கிடையாது. முழுக்க முழுக்க வெடிச்சு தெறிக்கிற கமர்ஷியல் படமாகவும் இருக்காது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘டூலெட்’ மாதிரி கலைப்படைப்பு மாதிரியும் தென்படாது. ‘சிங்கம்’, ‘சிறுத்தை’ மாதிரி கண்டிப்பாக இல்லை.

எல்லாம் சேர்ந்து பரபரப்பான திரைக்கதையில் கதாபாத்திரங்களை உணர்வுகளில் ஓடவிட்டிருக்கோம். அந்த இடங்கள்தான் மக்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.‘மௌனகுரு’வில் திரும்பிப் பார்க்க வைச்சிட்டு, எட்டு வருஷங்களுக்கு மேல காணாமல் போயிட்டிங்க...

ஒன்பதாவது படிக்கும் போதே நான் விருது வாங்க, கீழே நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற அம்மாவும், அப்பாவும் கைதட்டுற காட்சி கற்பனையில் வரும்.
இங்கே 14 வருஷங்கள் படாதபாடு பட்டிருக்கேன். தீபாவளி, பொங்கலுக்கு அறை நண்பர்கள் சொந்த ஊருக்குப் போக, அப்படி போகமுடியாமல் தனிமையில் இருந்திருக்கேன்.

14 வருஷம் வரிசையிலே நின்னுக்கிட்டு வந்து, அத்தனை வருஷம் கழிச்சு வரிசை முடிஞ்சால் எப்படியிருக்கும்!
சினிமாவில் ஜெயிக்கிறது ஆழ்துளைக் கிணத்துல சிக்கி மீண்டு வரும் குழந்தைக்குச் சமம். அதுதான் ‘மெளனகுரு’ முடிஞ்சதும் கிளம்பிப் போயிட்டேன். ‘அப்பாடா’னு ஆகிப்போச்சு. தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்ததில் 500 வேக சிசி பைக் ஒண்ணு வாங்கிட்டு ஊர் சுத்தினேன்.

எனக்கு டைரியும், பென்சிலும் இருந்தால் போதும். எப்பவும் ட்ராவல்தான். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு ரகம். சிலருக்கு ஹோம் தியேட்டரில் உட்கார்ந்தால் கதை வரும். சிலர் புத்தகங்கள் ஊடே கதை பிடிப்பாங்க. எனக்கு ட்ராவல்தான். நான் நல்லா சமூகத்தை வேடிக்கை பார்ப்பேன். ஒரு லைன் வந்திட்டால், முழுக்க தனிமைக்குப் போயிடுவேன். அங்கே மனிதர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.

அது பேரானந்தம். சில கடமைகள் இருந்தது. மனச்சிதறல்களை சரிசெய்தேன். இத்தனை படம் பண்ணியாகணும்னு திட்டம் எதுவும் கிடையாது. நோயிலே, விபத்திேல விழுந்துவிடாமல் இருந்தால், ஆக்டிவா இதில் எதாவது செய்து பார்க்கலாம். அதற்கான கவனிப்பும், சிந்தனையும், யோசிக்கிறதும் நடந்துகிட்டே இருக்கு.

அதனால் இந்த எட்டு வருஷம் இடைவெளியாகத் தெரியலை. புத்திக் கொள்முதலாக எடுத்துக்கிட்டு போறேன். ‘மௌனகுரு’, ‘மகாமுனி’ எல்லாத்தையும் தாண்டி, மனிதநேயம் மட்டும்தான் வாழ்க்கைனு இப்போ புரியது.

 எப்பவும் என் மனசின் மூலையில் உட்கார்ந்திருக்கிற ஒரு நம்பிக்கைதான் என்னைக்காப்பாத்தி அழைச்சிட்டே வருதுமுழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்படுகிற கதை ஹைட்ரஜன் பலூன் மாதிரி! அனுபவமும் சேர்ந்தால் அது திருவிழாவில் ஊதிக் கொடுக்கிற பலூன் மாதிரி! அவனோட மூச்சுக்காத்தும் அந்த பலூனில் இருக்கும். நாம எப்பவும் திருவிழா பலூன்தான்! ‘மகாமுனி’ நிச்சயம் உங்க மனதை ஆள்வான்!l

நா.கதிர்வேலன்