கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-27அழகு அழகு என பணத்தை வீணாக்குபவர்களை திருத்தும் ஆலயம்!

நாகராஜ தாத்தாவின் வீட்டு வாசலில் ஒரு புதிய நபரின் செருப்பு இருந்தது. அதைக் கண்ட கண்ணனின் மூளையில் பொறி தட்டியது. உடன் படித்துக் கொண்டிருந்த தன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மெல்ல நாகராஜனின் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு நாற்காலியில் பக்கத்து ஃப்ளாட் மாலதி ஆன்ட்டி அமர்ந்திருந்தாள். கண்களில் ஏகத்துக்கும் கண்ணீர்.

கண்ணன் எதுவும் பேசாமல் நாகராஜனுக்கும் ஆனந்தவல்லிக்கும் கண்களாலேயே ஒரு ‘ஹாய்...’ சொல்லிவிட்டு சோஃபாவில் அமர்ந்தான்.‘‘அங்கிள்... என் மகனை எப்படி திருத்தறதுனு தெரியலை. அவன்கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்ல! வாழ்க்கைல அவன் வழி தவறிப் போய் பல நாட்கள் ஆகுது. சகவாசமும் சரியில்ல. அழகு அழகுனு பணத்தை வீணடிக்கறான். அவன் சம்பாதிக்கறதெல்லாம் வீணாகுது...’’ மாலதி தழுதழுத்தாள்.
மெல்ல சமையலறைக்குச் சென்று குளிர்ச்சியான மோரை கொண்டு வந்து கொடுத்தாள் ஆனந்தவல்லி.

‘‘தேங்க்ஸ் மாமி...’’ என்றபடி மாலதி அதை வாங்கி பருகினாள். ‘‘எனக்கு இப்ப நீங்களும் மாமியும்தான் ஒரே கதி மாமா. என் கஷ்டங்களைத் தீர்க்க ஒரு கோயிலைச் சொல்லுங்க. இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையா?’’ அழுதபடியே நாகராஜனை கைகுவித்து வணங்கினாள் மாலதி. கூப்பிய கைகளில் ஆனந்தவல்லி பாட்டி ஒரு விபூதி பொட்டலத்தை வைத்துவிட்டு தன் கணவரைப் பார்த்து கண்சிமிட்டினாள்.

‘‘நீங்க செஞ்ச புண்ணியம்... உங்க கஷ்டத்தை தீர்க்கும் கோயில் பிரசாதம் இப்ப உங்க கைல இருக்கு. ஆனந்தி கொடுத்தது அதைத்தான்...’’ என மாலதிக்கு நம்பிக்கை ஊட்டினார் நாகராஜன். ‘‘அது எந்தக் கோயில் தாத்தா..?’’ கண்ணன் ஆர்வத்துடன் கேட்டான். நாகராஜன் பயபக்தியுடன் சொல்ல ஆரம்பித்தார்...தென்றல் காற்றில் தேவலோகத்து பாரிஜாதத்தின் வாசம் வீசியது. பல அரியவகை தேவலோக மலர்கள் வாசம் வீசும் நந்தவனத்தின் நடுவே தேவகுரு பிரகஸ்பதியின் குடில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அந்த ஆஸ்ரமத்தை நோக்கி பல அழகிய நங்கைகள் நடந்து கொண்டிருந்தார்கள். அன்னம் போன்ற நடை. மின்னலைப் பழிக்கும் இடை. அவர்களின் வனப்பு மிகுந்த வதனம் அவர்கள் நிச்சயம் தேவலோக மங்கைகள்தான் என்பதை ஆணித்தரமாக உரைத்தது. ஆஸ்ரமத்துள் நுழைந்தார்கள். தேவகுரு நிஷ்டையில் இருந்தார். ஞான ஜோதியாய் பிரகாசித்த அவரது தவத்தைக் கலைக்க மனமில்லாமல் மவுனமாக அமர்ந்தார்கள் அந்த தேவ கன்னிகைகள்.  
நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடின. ஆனால், தேவமங்கைகளின் பொறுமை கரையவில்லை. தேவகுரு பிரகஸ்பதி மெல்ல தவத்தை முடித்து, கண்களைத் திறந்தார். தேவ மங்கைகளைக் தன் எதிரே கண்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற அவர், மெல்ல சுதாரித்தார். ‘‘தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா... என நீங்களெல்லாம் கலை என்னும் இன்பவெள்ளத்தில் சதா நீந்துபவர்கள் அல்லவா? உங்களை என் ஆஸ்ரமத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லை. வந்த விஷயம் என்ன மகள்களே..?’’ தேவகுரு பிரகஸ்பதியின் பேச்சில் கரிசனம் பொங்கி வழிந்தது.
ஆனால், அதை ரசிக்கும் மனநிலையில்தான் அந்த தேவலோக அழகிகள் இல்லை.

‘ஓ...’ என்று கதற ஆரம்பித்தார்கள். தேவகுரு அவர்களைத் தேற்றினார். அவரது முயற்சி வீண் போகவில்லை. அவர்கள் தங்களது ஆதங்கத்தை தேவகுருவின் பாதக்கமலத்தில் கொட்டத் தொடங்கினார்கள். ‘‘தேவகுரு பிரகஸ்பதி அவர்களே! ஓர் உண்மையை நாங்கள் அனைவரும் இன்று பூரணமாக உணர்ந்தோம். ஆம் சுவாமி. இந்த தேவ உலகத்தில் எங்களுக்கு அழகு இருக்கும் வரைதான் மதிப்பு. எங்கள் வனப்பு அழிந்தால் எங்களுக்கு இங்கு ஒரு நொடி கூட இடம் கிடையாது.

இந்த அழகோ நிலையானது கிடையாது. எந்த நேரம் எங்களுக்கு என்ன ஆகுமோ என்று தெரியாமல் எங்கள் நிலை ஊச லாடிக் கொண்டிருக்கிறது.
இந்த இழிநிலை எங்களை விட்டு நீங்க வேண்டும். நிலையான இன்பம் வேண்டும். சுவாமி... அதற்கு ஒரு வழி வகையை நீங்கள்தான் கூற வேண்டும்.
பெண்களாகிய நாங்கள் தவறாகப் பேசி இருந்தால் தயை கூர்ந்து தேவரீர் அதை மன்னிக்க வேண்டும்...’’ அனைத்து தேவ கன்னிகைகளும் சாஷ்டாங்கமாக தேவகுருவை நமஸ்கரித்தார்கள்.

வயதில் சிறியவர்களானாலும் குற்றமில்லாத வார்த்தை களைப் பேசிய அவர்களது பக்குவத்தைக் கண்டு பிரகஸ்பதி வியந்தார்.
அவர்கள் உய்யும் வகையை உரைக்க ஆரம்பித்தார்...உலகமே அந்தத் தேரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது. உலகிற்கே ஒளி தரும் சூரியனும் சந்திரனும் அந்தத் தேரின் சக்கரங்களாக இருந்தார்கள். நான்கு வேதங்களும் அதன் குதிரைகளாக மாறி அதை இழுத்துக்கொண்டிருந்தன. நான்முகன்பிரம்மன் அதன் கடிவாளத்தைப்பிடித்து அந்தத் தேரை ஓட்டிக் கொண்டிருந்தான். எல்லாவற்றிற்கும் மேல் பூமியே தேரின் தட்டாக மாறி அந்தத் தேரில் நடுநாயகமாக இருந்தவரைத் தாங்கிக் கொண்டிருந்தது.

வானவர்கள் அனைவரும் அந்தத் தேரின் அங்கங்களாக மாறினால் யார்தான் அதை ஆச்சரியமாகப் பார்க்க மாட்டார்கள்?
இப்படி அனைவரின் ஆச்சரியத்திற்கும் உரித்தான அந்தத் தேரின் மத்தியில் யோகிகளின் இதயக் குடிலில் கோயில் கொள்ளும் ஈசன் ராஜகம்பீரமாக அமர்ந்திருந்தார். தெவிட்டாத தெள்ளமுதாக ஈசனின் கருணை விழி நோக்கும் அனைவரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது.

திரிபுராசுரர்கள் என்ற அரக்கர்களின் தொல்லை தாங்காமல் தேவர்கள் கயிலை மலைக்குச் சென்று மகேசனைச் சரணடைந்தார்கள். சரணடைந்தவர்களை ஒருபோதும் கைவிடாத மகேசன் உடனே தேவர்களைக் காக்க அசுரர்களை எதிர்த்து போருக்குக் கிளம்பிவிட்டார்.
தங்களைக் காக்க போர்க் கோலம் பூண்ட ஈசனைத் தாங்க தேவர்கள் தேராக மாறினார்கள்.

அந்தத் தேரில்தான் கோலாகலமாக ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் ஈசன் அணிந்திருந்த திருநீற்றின் வாசம் காற்றில் கலந்து வீசியது. தேர் பவனி வரும் வீதிகளில் மாவிலைத் தோரணங்கள் அசைந்து ஆடியபடி இருந்தன. பல வண்ண மலர்க் கோலங்கள் வீதிகளை அலங்கரித்தன. வரம் தரும் மாமணிக் குன்றான ஈசனுக்கு தேவ மகளிர்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார்கள்.

ஆயினும் முக்கண்ணன் மீது பட்ட கண் திருஷ்டி நீங்கவில்லை போலும். அவர் பவனி வந்த தேர் சற்றே தடுமாறி பிறகு சீராக ஓட ஆரம்பித்தது.
அப்போது நொடியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பலரும் கவனிக்கவில்லை. ஆம். தேர் அசைந்தாடிய வேகத்தில் ஈசனின் ஜடாபாரத்தை அலங்கரித்த ஒரு கொன்றைப் பூ மாலை பூமியில் விழுந்தது. அதை தன் கடைக்கண்ணால் கண்ட கங்காதரன், ‘‘நமது குழந்தைகளின் குறை தீர்க்க ஒரு வழிவகை செய்தாகி விட்டது...’’ என்று முணுமுணுத்தார்.

அதை யார் கவனித்தார்களோ தெரியாது... ஆனால், தேவகுரு பிரகஸ்பதி கவனிக்கத் தவறவில்லை. அதோடு நிற்கவில்லை அவர். பூமியில் அந்த கொன்றை மாலை விழுந்த இடத்தை நோக்கினார். அந்தக் கொன்றை மாலை பூமியில் விழுந்தவுடன் ஒரு சிவலிங்கமாக மாறி ஒளி வீசி பிரகாசித்தது. அதைக் கண்ட பிரகஸ்பதி அந்த லிங்கத்தை உளமார வணங்கினார்.

அப்போது அவர் தேரில் கண்ட ஈசனின் மதிவதனத்தை அந்த லிங்கத்திற்குள்ளும்  கண்டார். அவர் அடைந்த ஆனந்தப் பரவசத்திற்கு எல்லையே இல்லை. உடன் அனைத்து தேவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த கொன்றை மாலை சிவலிங்கத்தின் முன் வந்தார்.
மனம் மொழி மெய்களினாலே அனைத்து தேவர்களும் அந்த லிங்கேஷ்வரரை சேவித்தார்கள்....

‘‘இப்படி நாங்கள் அனைவரும் வணங்கி வழிபட்ட தெய்வம் அம்மா அவர். ஆஹா... அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை.
அந்த லிங்கத்தை நாங்கள் பூஜிக்கும்போது அதில் ஒரு தேஜஸ் உருவானதே... அப்பப்பா... அந்த ஈசனே உங்களைக் காக்க நான் இருக்கிறேன் என்று சொன்னது போல் இருந்தது.

இப்போது நினைத்தாலும் எனக்கு புல்லரிக்கிறது. தெய்வங்களான நாங்கள் அனைவரும் வணங்கியதால் அவருக்கு தெய்வநாயகேஷ்வரர் (இலம்பயங்கோட்டூர்) என்று திருநாமம் ஏற்பட்டது. லோக மாதா உமை அம்பிகை கோடேந்து முலையம்மை என்ற திருநாமத்துடன் சொல்லை விட்டு நீங்காத பொருளைப் போல மகேசனோடு இணை பிரியாமல் அங்கு இருக்கிறாள்!

அந்த பார்வதியும் பரமேஸ்வரனும்தான் உங்களுக்கு ஒரே பற்றுக்கோடு. பூலோகத்தில் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள மரமல்லிகை வனத்தில் அருள் பாலிக்கிறார் அந்தத் தூயவர்.  அங்கே சென்று நித்தமும் நியமத்தோடு நீரையும் மலரையும் தூவி அந்த அரணை வழிபட நீங்கள் நினைத்தது நடக்கும்....’’ தேவ கன்னிகைகளை நோக்கிச் சொன்ன பிரகஸ்பதி, தொடர்ந்தார்.

‘‘என் செல்வங்களே! ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மாலனும் பிரம்மனும் தேடியும் காணாத அந்த அருட்பெரும் ஜோதியை அடைய தூய பக்திதான் ஒரே வழி. அவனது பஞ்சாட்சரத்தை விடாமல் ஜபித்து, விடாத வினை கட்டை அவிழ்த்து விடுங்கள். தாமதம் வேண்டாம். என் ஆசிகள்!’’ என்று பிரகஸ்பதி தேவ கன்னிகைகளுக்கு உபதேசித்தார்.

ஞானத்தில் கனிந்திருந்த அவரது கண்களில் அவரையும் அறியாமல் நீர் வழிந்து கொண்டிருந்தது. வலது கையை உயர்த்தி தேவ குரு அவர்களுக்கு ஆசி வழங்கினாலும் உள்ளம் அந்த தெய்வநாயகேஷ்வரரை வணங்கியபடி இருந்தது. தேவ கன்னிகைகள் தங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைத்த சந்தோசத்தில் தேவகுருவிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

காஞ்சிக்கு அருகில் இருக்கும் மரமல்லி வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வேதம் என்னும் காட்டின் நடுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பரம்பொருளைமரமல்லி வனத்திற்கு நடுவில் தேவகன்னிகைகள் தரிசித்து மகிழ்ந்தார்கள். ஹர ஹர சம்போ மகாதேவா என்று நெக்குருகி வணங்கி மகிழ்ந்தார்கள்!  

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்