உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம்…சாதித்த தமிழக வீராங்கனை!



இளவேனில் வாலறிவன் -கடந்த வாரம் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்று சாதித்திருக்கும் தமிழக வீராங்கனை!அஞ்சலி பகவத், அபூர்வி சண்டேலாவுக்குப் பிறகு பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் சீனியர் பிரிவில் தங்கம் வெல்லும் மூன்றாவது இந்தியப் பெண் இளவேனில்.

சொந்த ஊர் கடலூர் அருகேயுள்ள காராமணிக்குப்பம். இப்போது அப்பா வாலறிவன், அம்மா சரோஜாவுடன் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் வசிக்கிறார். அங்குள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியாவுக்காகக் கடந்த வருடம் சிட்னியில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இளவேனில்.

அதன்பிறகு, கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியிலுள்ள சூல் நகரில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 251.6 புள்ளிகள் பெற்று தங்கத்தைத் தட்டினார். இடையே மூனிச் நகரில் நடந்த உலகக் கோப்பை சீனியர் பிரிவில் கலந்து கொண்டார். ஆனால், அதில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். இப்போது அதே சீனியர் பிரிவில் 251.7 புள்ளிகளை எடுத்து தங்கத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார் இந்த இருபது வயது தங்க மங்கை.

சிறுவயதில் அதலெடிக் மற்றும் பாட்மின்டனில்தான் இளவேனிலுக்கு அதிக விருப்பமாம். பின்னர், பொழுதுபோக்காக துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் பயிற்சி எடுத்துள்ளார். இந்த ஆர்வம் இராணுவத்தில் பணியாற்றும் தன் சகோதரன் இறைவனைப் பார்த்து வந்திருக்கிறது.
தொடர்ந்து பதிமூன்று வயதில் பள்ளி அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார். பிறகு பயிற்சியும் தீவிரமாகி இருக்கிறது.

இந்நேரம், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ககன் நரங் துப்பாக்கி சுடுதலில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க ‘புராஜெக்ட் லீப்’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்.அந்தத் திட்டத்தில் நரங்கிடம் சேர்ந்து பயிற்சி எடுத்தார் இளவேனில். இதுவே அவரை உலக அரங்கில் சாதிக்க வைத்திருக்கிறது.

‘‘ஒவ்வொருமுறையும் என் முன்னுள்ள பெரிய சவால், எனது முந்தைய ஸ்கோரை மிஞ்சுவதுதான். அதை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தப் பதக்கத்தை என் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். இப்போதைய எனது அடுத்த இலக்கு சீனாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராவதே!’’ கண்களில் நம்பிக்கை மிளிரசொல்கிறார் இளவேனில்.

பேராச்சி கண்ணன்