பகவான்-45உடலை விட்டு விலகினார்!

அதுதான் கடைசி நாள்.1989, ஜனவரி 19.பூனே ஆசிரமம் காலையிலிருந்தே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஓஷோவுக்கு மிகவும் நெருக்கமான மருத்துவர் கோகுல் கோகனி. அவரது குடும்பமே பகவானின் சிஷ்யர்களாக தங்களை மாற்றிக்கொண்டு ஆசிரமத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தார்கள்.

அன்று இந்த கோகனியைத்தான் ஆசிரமத்தை நிர்வகித்துக் கொண்டிருந்த சுவாமி ஜெயேஷ் வலை வீசி தேடிக்கொண்டிருந்தார்.ஒரு வழியாக காலை பத்து மணி வாக்கில் டாக்டர் கோகனிக்கு செய்தி வந்தது.“ஜெயேஷ் உங்களை காண விரும்புகிறார்...”
இது அபூர்வமானது.சுவாமி ஜெயேஷ், அப்போது ஆசிரமத்தில் ஓஷோவுக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்கவராக இருந்தார். மற்றவர்கள்தான் அவரைக் காண விரும்புவார்கள். அவர் யாரையும் பார்க்க மாட்டார்.

ஆசிரமத்துக்கு விரைந்தார் கோகனி.ஜெயேஷின் அறைக்கு வெளியே அவர் சுமார் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.வரவேற்பறையில் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். எவர் முகத்திலும் புன்னகை கொஞ்சம் கூட இல்லை. இறுக்கமான சூழல் அங்கே நிலவியது. ஊசியைக் கீழே போட்டாலும் சப்தம் எழக்கூடிய அளவில் மயான அமைதி.ஆம், மயான அமைதியேதான்.

பிற்பகல் 12.30 மணி வாக்கில் ஜெயேஷ், அவரது அறைக்கு அழைப்பதாக டாக்டர் கோகனியின் காதில் மெதுவாக சொல்லிவிட்டுப் போனார் ஆசிரமப் பணியாளர் ஒருவர்.எப்போதுமே அமைதியாக இருக்கும் சுவாமி ஜெயேஷின் அறை, அன்று போர்ப்பாசறை மாதிரி பரபரவென்று இருந்தது. ஆசிரமத்தின் முக்கியத் தலைகள் அங்கே குழுமியிருந்தார்கள்.

‘‘சுவாமி... என்னை ஏன் திடீரென்று அழைத்தீர்கள்?” சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் டாக்டர் கோகனி கேட்டார்.“சிறிது நேரத்தில் டாக்டர் அம்ரிதோ நம்முடன் வந்து சேர்ந்துகொள்வார். அவரே விளக்கமாக சொல்வார்...” என்று சொல்லிவிட்டு ஜெயேஷ் சோகம் கப்பிய முகத்தோடு கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார்.

அவருடைய திடீர் அமைதி இருளென அந்த அறையைச் சூழ்ந்தது. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் மெதுவாக நிமிடங்கள் நகர்ந்தன. சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய கடிகாரத்தின் நொடிமுள் நகரும் ‘டிக் டிக்’ ஒலி மட்டுமே அங்கே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு கதவு தட்டப்படும் சப்தமும், அதைத் தொடர்ந்து கதவைத் திறந்துகொண்டு யாரோ ஒருவர் வரும் சலசலப்பும் எழுந்தது.
அவ்வளவுதான். அறையில் இருந்த அத்தனை பேரும் புதியதாக வந்தவரை கூர்ந்து நோக்கினார்கள்.

வந்தவர் டாக்டர் அம்ரிதோதான்.கடைசிக் காலத்தில் பகவானுடனேயே 24 மணி நேரமும் இருந்து கவனித்துக் கொண்ட மருத்துவர்.அம்ரிதோ மெதுவான குரலில் சொன்னார். “அவர் உடலை விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்...”

சிலர் எதுவும் பேசாமல் விம்மத் தொடங்கினர்.ஜெயேஷ் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.கோகனிதான் பதற்றமாகக் கேட்டார்.”யார்?”

“வேறு யார்? நம்முடைய பகவான்தான்!” சொல்லும்போதே அம்ரிதோவின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர்.டாக்டர் கோகனி உடைந்து போய் அழத் தொடங்கினார்.அனைவரையும் மீண்டும் சமாதானப்படுத்தியது அம்ரிதோவின் குரல்.
“இப்படி ஒப்பாரி வைப்பது நம்முடைய பகவானை வழியனுப்பும் முறையல்ல. அழுகையையும், சோகத்தையும் ஒருநாளும் அவர் அனுமதித்தவர் அல்ல. எல்லோரும் கூடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்...”

இதைத் தொடர்ந்து ஜெயேஷ் பேசினார். “நம்முடைய வழக்கமான ஆசிரமப் பணிகளை அவரவர் செய்வோம். தாங்கவொண்ணா இந்தத் துயரச் செய்தியை யாரும் யாரிடமும் இப்போது பகிர்ந்துகொள்ள வேண்டாம். பகவான், அவருடைய மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ, அதைச் செய்யட்டும். அவர் நம்மை விட்டு விலகக்கூடாது என்பது நம் விருப்பம். எனினும் அவருக்கும் தனிப்பட்ட விருப்பம் என்று ஒன்று இருக்குமில்லையா?”
அனைவரும் மவுனமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் கலைந்தார்கள்.

டாக்டர் கோகனி தன்னுடைய இருப்பிடத்துக்கு வந்தார். எப்போதுமே மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் போடுவது அவரது வழக்கம். அன்று உணவும் இல்லை, உறக்கமும் இல்லை.சுமார் நாலு மணி அளவில் அவருக்கு மீண்டும் அழைப்பு வந்தது.இம்முறை அவரை அழைத்துச் சென்ற கார், பகவான் தங்கியிருந்த லாவோட்ஸூ என்று பெயரிடப்பட்ட வீட்டுக்கு நேரடியாகச் சென்றது.அங்கே டாக்டர் அம்ரிதோ, மற்றவர்களோடு இருளடைந்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.டாக்டர் கோகனியின் வருகையை கவனித்த அவர், விரைந்து வந்து இவரது தோளில் கைபோட்டார்.“வாருங்கள்...” அழைத்தவாறே, பகவானின் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்.

“சற்று முன்பாகத்தான் பகவான் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்...”பகவான், உடலை விட்டு விலகி விட்டார் என்று சான்றிதழ் கொடுக்கும் கடமை டாக்டர் கோகனிக்கு ஒப்படைக்கப்பட்டது.இத்தகவலை வெளியுலகுக்கு தெரிவிக்கும் கடமை, பகவானுடைய கடைசிக் காலத்தில் அவருடனேயே இருந்து சேவை புரிந்த டாக்டர் அம்ரிதோவுக்கு தரப்பட்டது.ஆசிரமத்தில் அவசர அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பத்திரிகையாளர்களோடு ஏராளமான பக்தர்களும் அமர்ந்திருந்தார்கள்.

சுவாமி அம்ரிதோ, துயரம் கப்பிய குரலில் தன் உரையைத் தொடங்கினார். இடையில் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று கோரிக்கையும் விடுத்தார்.“உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். இதில் ரகசியம் எதுவுமில்லை. கடந்த சில காலமாகவே பகவானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்தது. தாங்கவொண்ணா வலியையும், துயரையும் பகவான் அனுபவித்தார்.

நேற்று இரவு அவரது கால்களில் மிகவும் மோசமான வலி. அவரால் கால்களை அசைக்கக்கூட முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. கால்களில் ஏற்பட்ட வலி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி அவரது உடல் முழுக்க அதேமாதிரியான வலியை உணர்ந்தார். அவருடைய நாடித்துடிப்பும் சீராக இல்லை.நான் உடனே சிறப்பு மருத்துவர்களை அழைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தேன். அதைக் கவனித்த பகவான் மறுத்தார்.
‘என்னைப் போகவிடு. என் உடல்ரீதியான இருப்பு போதுமென்று காலம் முடிவெடுத்து விட்டது’ என்றார்.

என்னால் அவருடைய பேச்சை மீற முடியாது. கையாலாகாத நிலையில் நின்றேன்.அவருடைய பார்வை, அந்த அறையில் இருந்த டேப்ரெக்கார்டரின் மீது விழுந்தது. அவர் மிகவும் விரும்பிய சாதனம் அது. படுக்கையறையில் இருக்கும்போது நூல்களை வாசித்துக் கொண்டே, அந்த டேப்ரெக்கார்டரில்தான் இசையை ஒலிக்க விடுவார்.‘இதை நிரூபாவிடம் கொடுத்துவிடு. அவளுக்கு இது மிகவும் பிடிக்கும்’ என்றார். நிரூபாதான் நீண்டகாலமாக அவரது அறையை சுத்தம் செய்யும் தொண்டர்.

அடுத்து அறையில் இருந்த ஒவ்வொரு பொருளையும் சுட்டிக் காட்டி யார், யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு மருத்துவராக அவரது கடைசி நிமிடங்கள் இவை என்பதை உணர்ந்தே இருந்தேன். அதே உணர்வு அவருக்கும் இருந்தது.ஆனாலும் வார இறுதி பிக்னிக்குக்கு செல்வதைப் போல அவர் குதூகலமாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.தான், உடலைவிட்டு விலகியபிறகு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று அவர் உற்சாகமாக சொல்லத் தொடங்கினார்.

‘எனக்காக புதியதாக அழகான ஒரு படுக்கையறையை கட்டித் தந்தீர்கள். என்னவோ அது எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு ஆடம்பரம் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனினும் நீங்களெல்லாம் ஆசைப்பட்டு அமைத்தது. என்னுடைய சாம்பலை அந்த அறையில் படுக்கையின் கீழ் வையுங்கள். மக்கள் அங்கே வந்து தியானித்து விட்டுச் செல்லட்டும்...’‘அப்படியெனில் இந்த அறை?’ என்று கேட்டேன்.

‘இது என்னுடைய சமாதிக்கு தகுந்தது என்று நினைக்கிறாயா?’ என்று பதிலுக்குக் கேட்டார்.
‘இல்லை...’ என்றேன்.‘அப்படியெனில் ஏற்கனவே நான் சொன்னமாதிரி சுவாங்ட்ஸூவிலேயே எனக்கு சமாதி அமையுங்கள்!’

‘வேறு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் பகவான்?’‘என் தலையில் தலைப்பாகை இருக்க வேண்டும். கால்களில் சாக்ஸ் இருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் என் உடலை புத்தா ஹாலில் காட்சிக்கு வையுங்கள்!’

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்