அமேசான் காட்டுக்கு தீ வைத்தது யார் ?உலகின் அதி அற்புதமான ஓர் இடம் அமேசான் மழைக்காடுகள். 56 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக தோன்றிய இக்காடுகள் பூமியில் உள்ள மழைக்காடுகளின் பரப்பளவில் பாதியைத் தன்வசம் வைத்திருக்கிறது. அதாவது 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிற அதிசயக்காடு இது.

சுமார் 390 பில்லியன் மரங்களைத் தன்னகத்தேகொண்ட இந்தக் காட்டில் 16 ஆயிரம் வகையிலான உயிரினங்கள் வாழ்கின்றன. தாவர இனங்களில் மட்டும் 40 ஆயிரம் வகைகள் இங்கேதான் இருக்கின்றன. அந்தளவுக்கு மரங்களாலும் நதிகளாலும் சூழ்ந்திருந்த இக்காட்டை ஒளிபுகா காடு என்றும் வர்ணிக்கின்றனர். எந்த நேரமும் மழை பொழிந்துகொண்டிருக்கும் இங்கே 25 லட்சம் பூச்சி இனங்களும், ஆயிரக்கணக்கான பறவை இனங்களும் வசிக்கின்றன.

அமேசான் மழைக்காடுகளில் இருந்துதான் உலகுக்குத் தேவையான ஆக்சிஜனில் 20 சதவீதம் கிடைக்கிறது. அதனால்தான் இது பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படுகிறது. இந்தக் காட்டை ஒரு தேசமாகக் கருதினால் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக இருக்கும். பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரெஞ்ச் கயானா ஆகிய நாடுகளில் பரவியிருக்கிறது இந்தக் காடு.

அமேசான் மழைக்காடுகளில் 60 சதவீதம் பிரேசிலிலும் 13 சதவீதம் பெருவிலும் 10 சதவீதம் கொலம்பியாவிலும் உள்ளன. இப்படி அமேசான் மழைக்காட்டைப் பற்றிய ஏராளமான சிறப்பம்சங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.விஷயம் இதுவல்ல.வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் காட்டில் கடும் தீ பரவியிருக்கிறது.

இந்த வருடத்தில் மட்டும் பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் 72,843 முறை காட்டுத்தீ பற்றியிருக்கிறது. இதனால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு அமேசான் இருக்கப்போகிறதோ என்று இயற்கை ஆர்வலர்கள் தவிக்கின்றனர். இப்போது 45 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் காட்டுக்குள் இறங்கி தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் பிரேசிலின் தலைநகரமான சாபோலோ நகரின் மேல் காட்டுத் தீயிலிருந்து கிளம்பிய கரும்புகை வானில் வட்டமிட்டபோது உலகமே டிவி முன் நின்றுகொண்டு ‘ப்ரே ஃபார் அமேசான்’ என்று வேண்டிக்கொண்டது.மழையில்லாமல் வறண்ட பூமியாகி மரங்களும் செடிகளும் உரசிக் கொள்ளும்போது உருவாகும் தீயைத்தான் காட்டுத்தீ என்பார்கள். இது இயற்கையாகவே அரங்கேறும் விபரீதம்.

ஆனால், இப்போது அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ மழையின்மையால் அல்ல… மனிதனால்தான் ஏற்பட்டிருக்கிறது என அறிவியலாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இந்தக் காட்டுத் தீ இன்னும் அதிகமானால் மேலும் புவிவெப்பமயமாதல் மற்றும் பல்வேறு கேடுகளை மனிதகுலத்துக்குக் கொண்டுவரும் என பீதியைக் கிளப்புகிறார்கள்.

‘பூமித்தாயைக் காப்பாற்றுவோம்’ எனும் சூளுரையால்தான் சில ஆண்டுகளுக்கு முன் பிரேசில் நாட்டின் அதிபரானார் பொல்சனாரோ.
ஆனால், பிரேசிலில் தனியாரின் வணிகத்துக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன என இவர் அதிபரான பிறகே ஆணித்தரமான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் ‘‘தீ வைத்தது சில என்.ஜி.ஓக்கள்...’’ என அதிபர் நூல் விட்டுப்பார்த்தார். அடுத்த தேர்தலுக்கு அனுதாபம் பெறுவதற்காக அப்படிச் சொல்கிறார் என்று என்.ஜி.ஓக்களின் கூட்டமைப்பு கையெழுத்து இட்டு எதிர்ப்பு தெரிவித்தது. பிறகுதான் அமைதியானார் அதிபர். அத்துடன் தீயை அணைக்க உலகநாடுகளின் உதவியை வெட்கத்தை விட்டுக் கேட்டார்.

பிரேசிலில் உள்ள அமேசானில் மட்டும் ஏன் தீ?  

2004ம் ஆண்டு வரை பிரேசிலில் சுமார் 28 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காடுகள் வணிக நோக்கங்களுக்காக அழிக்கப்பட்டன.
இப்போது கூட அமேசானின் அடர்ந்த  காடுகளில் தீப்பற்றவில்லை. காடுகள் அழிக்கப்பட்ட நிலங்களில் இருந்துதான் தீ கிளம்பியது என பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் அந்நாட்டு சுற்றுச்சூழல்வாதிகள்.

பொதுவாக அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி மற்றும் விவசாயிகள் மழையில்லாத காலங்களில் காய்ந்த மரம், செடிகளை எரித்து அன்றாட தேவைகளுக்காக நெருப்பைப் பயன்படுத்துவார்கள்.

இது வருடந்தோறும் சாதாரணமாக நடைபெறும் ஓர் அன்றாடச் செயல். ஆனால், இப்போது நடைபெற்றிருப்பது பெரும் தீ மூட்டல். சிறு அளவில் தீ மூட்டுவது பெரும் தீயை ஏற்படுத்தாது. ‘‘மொத்த காட்டு வளங்களை அபகரித்து, அதை வணிகப் பிரதேசமாக மாற்றுவதற்காக தனியார்களும் கார்ப்பரேட்டுகளுமாக சேர்ந்து தீ வைத்திருக்கின்றன...’’ என குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘தீ வைக்கப்பட்டதா அல்லது தானாகவே தீ மூண்டதா?’ என்பது பிரச்னை இல்லை. காடு அழிக்கப்பட்டதே இங்கு பிரச்னை. அழிக்கப்பட்ட காட்டு நிலப்பிரதேசங்களில் பற்றிக்கொள்ளும் தீயானது மேலும் காட்டுப் பிரதேசங்களுக்கு பரவக்கூடாது என்பதுதான் பிரேசில் மற்றும் உலகநாடுகளின் பிரார்த்தனை.

பிரேசிலின் மழைக்காடுகள் சீக்கிரம் தீயில் பற்றிக்கொள்ளாதவை. காரணம், அங்குள்ள ஈரப்பதம். தவிர, காடுகள் அழிக்கப்பட்ட நிலங்களில் இருந்து கிளம்பும் தீப்புகையால் பெரும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், மழைக்காடுகளின் மரங்களும் செடிகளும் எரிந்து புகையாகக் கிளம்பினால் அது மனிதகுலத்துக்கு நாசம்தான். காரணம் கார்பன் எனும் கரியமில வாயு.

பொதுவாக அமேசான் காடுகளில் உள்ள மரங்கள், செடிகள் கார்பன் வாயுவைத் தேக்கி வைத்திருக்கும். உயிர்ச்சூழல் மாற்றங்களால் இந்தக் கரியமில வாயு ஆக்சிஜனாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் சுவாசிக்கிறோம். ஆனால், மழைக்காடுகள் தீப்பிடித்தால் கார்பன் நேரிடையாகவே காற்றில் கலக்கும். இது மனிதகுலத்துக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியது.

சிறு பாதிப்பு என்றால் தலைவலி, வாந்தி, மயக்கம் என்பதோடு நின்றுவிடும். ஆனால், தொடர்ச்சியாக தீ எரிந்து கொண்டேயிருந்தால் மூளைப்பாதிப்பு, நெஞ்சுவலி என உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான்  தீயை அணைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். குறைந்த வெப்பம், ஆக்சிஜன், நிறைய கார்பனில் மனிதன் உயிர்வாழ முடியாது. ஆக்டோபஸ்கள், கடம்பா மீன் மட்டுமே வாழ முடியும்!

டி.ரஞ்சித்