ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்



* கே.என்.சிவராமன் 66

கஜத்தின் மேல் நின்ற சிவகாமி இப்பொழுது அங்கில்லை! மாறாக, வனத்தின் அடர்ந்த பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அதுவும் கரிகாலனை  நோக்கி தன் நயனங்களாலும் அங்கங்களாலும் பின்தொடரும்படி சைகை செய்துவிட்டு!அந்த அழைப்பை ஏற்று அவளை நோக்கிச் சென்றவன் பாய்ந்து  அவள் இடையில் தனது இடது கையைத் தவழவிட்டான். அருகில் வளர்ந்திருந்த செண்பக மரம் ஒன்றின் கிளை தாழ்ந்திருந்தது. அதன் நுனியில்  செண்பக மலர்கள் பல சிவந்த வாய்களைக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் நறுமணம் எங்கும் பரவி மயக்கத்தை ஏற்படுத்தவே அந்த மலர்களில்  ஒன்றைக் கிள்ளி சிவகாமியின் கருங்கூந்தலில் செருகினான்; அவள் கூந்தலை முகர்ந்து பெருமூச்செறியவும் செய்தான்.

லேசாக நகைத்த சிவகாமி தனது அழகிய கண்களை வனத்தின் பக்கம் திருப்பியபடி ‘‘இதுவும் விசாரணைதான் போலிருக்கிறது...’’ என்றாள். ‘‘ஆம்...  விசாரணையிலும் பலவகை உண்டு...’’ என்றான் கரிகாலன் தன் கையை அவள் இடையில் சிறிது அதிகமாக அழுத்திய வண்ணம். அவள் இடை  அவனைச் சிறிது அதிகமாக நெருக்கியதால் இடையின் பின்கீழ்ப் பகுதியும் அவன் காலின் பக்கத்தில் மிருதுவாகவும் கடினமாகவும் பருமனாகவும்  இழைத்தது.அதனால் ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தால், ‘‘விசாரணையில் மலருக்கும் இடம் இருப்பது ஒரு வகை போலிருக்கிறது...’’ என்று அவள் பவள  இதழ்கள் முணுமுணுத்தன.

‘‘ஆம். சந்தேகமென்ன? எத்தனையோ மலர்கள் விசாரணை சாஸ்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன...’’
‘‘அதில் செண்பக மலரும் ஒன்றா..?’’
‘‘ஆம்...’’
‘‘எந்த விசாரணைக்கோ..?’’
‘‘உணர்ச்சி விசாரணைக்கு!’’

இதற்குப் பிறகு இருவரும் நீண்ட நேரம் பேசவில்லை.அவன் வலது கை அவளைத் தனக்கு எதிரில் லேசாகத் திருப்பியது. அவன் கண்கள்  வண்டுகளாகி அவள் முகத் தாமரையில் சஞ்சரித்தன.சிறிது முன்பாக சிவகாமி நீராடியிருந்த காரணத்தினால் அவள் முகத்திலிருந்து எழுந்த வாசனைப்  பொடியின் நறுமணம் கமகம என்று அவன் நாசியில் புகுந்து அவன் சித்தத்தைக் கலக்கியது.அப்பொழுது பூரணமாக உலராத அவள் கருங்குழல் அவன்  வலது கையில் பட்டதால் அதிலிருந்த சில்லிப்பு அவன் கைக்கு சீதளத்தைத் தந்தாலும் உணர்ச்சிகளினால் காம அக்னியை வாரி இறைத்தது.கூந்தலை  முழுதும் முடியாமல் ஈரம் உலருவதற்கு அவள் இரண்டு சிறு பின்னல்களால் குறுக்கே குழலைக் கட்டியிருந்ததால் நீண்ட அவள் கருங்குழல் கீழே  அவள் பருத்த பின்னெழில்களைத் திரையிட்டு மறைத்திருந்தது.

அந்தக் குழலின் ஒரு பகுதியை வலது கையால் கரிகாலன் எடுத்தபோது அவன் கைபட்ட இடத்தின் காரணமாக சிறிது சிவகாமி நெளிந்தாள்.அவள் முகத்தை வட்டமிட்ட அவன் விழிகள் கழுத்தின் கீழும் இறங்கி கச்சையை மீறியிருந்த மார்பு விளிம்பு வட்டங்களிலும் நிலைத்தபடியால் அவள்  பெரிதும் நிலைகுலைந்தாள்.மார்பில் ஊசலாடிய வனத்தில் விளைந்த கொடியை அவன் வலதுகை பரீட்சிக்கத் தொடங்கியபோது உண்மையில் அவன்  தொட முயன்றது கொடியைத்தானா என்ற சம்சயமும், சம்சயத்தால் ஏற்பட்ட இன்ப வேதனையும் அவளைத் திணறடித்தன.அந்தத் திணறலில் இருந்து  சமாளித்துக் கொள்ள அவள் செவ்விய இதழ்கள் சிறிது குவிந்து திறந்து, ‘‘விசாரணை அழகாக இருக்கிறது!’’ என்று மெல்ல சொற்களை உதிர்த்தன.அவன் இதழ்களில் அசட்டு இளநகை ஒன்று படர்ந்தது. ‘‘விசாரணை பிடிக்கவில்லையா..?’’

இந்த இளநகையின் ஊடே அத்துடன் அவன் கைகள் இரண்டும் அவள் இடையின் பின்னால் பின்னி அவளைச் சற்று இழுத்து நெருக்கின.அவளும்  இளநகை கூட்டினாள். ‘‘விசாரணை பிடிக்கிறதோ இல்லையோ உங்கள் கைகள் நன்றாகப் பிடிக்கின்றன!’’

‘‘எதை?’’ கரிகாலன் கேட்டான் மெதுவாக.
‘‘எதை வேண்டுமோ அதை...’’
‘‘வேண்டுவது எது வேண்டாதது எது என்று புரியவில்லையே எனக்கு...’’
‘‘புரியாமல் வருவதுதான் இது!’’
‘‘எது..?’’
‘‘நீங்கள் புரியும் வஞ்சகம்...’’
‘‘என்ன வஞ்சகம் செய்தேன்?’’
‘‘கேள்வி வேறா..? நீங்கள் பெரும் மோசக்காரர்...’’
‘‘ஓர் எழுத்து தவறாக இருக்கிறது சிவகாமி...’’
‘‘எந்த எழுத்து..?’’
‘‘‘ச’ என்ற எழுத்துக்குப் பதில் ‘க’ என்ற எழுத்தை போட்டிருக்க வேண்டும்!’’

இதைச் சொன்னவனும் நகைத்தான். கேட்டவளும் நகைத்தாள். நகைப்புடன் அவள் சொன்னாள், ‘‘முதன் முதலாக உண்மையை ஒப்புக் கொண்டீர்கள்...’’ என்று.அவன் பதிலேதும் சொல்லாமல் அவள் கழுத்தில் தன் இதழ்களைப் புதைத்தான்.அதனால் அவள் உடல் சற்றே நடுங்கியது; அவனுடன் இழைந்தது.அந்த நிலையிலும் சிவகாமி சொன்னாள், ‘‘இது சரியல்ல...’’ என்று.

‘‘எது சரியல்ல..?’’ கழுத்திலிருந்த இதழ்கள் விரிந்து சொற்களை உதிர்த்தன.
‘‘விசாரணையின் நிலையைக் கவனிக்காமல்...’’ வாசகத்தை முடிக்கவில்லை அவள்.
‘‘கவனிக்காமல்..?’’
‘‘இந்த நிலையில் ஈடுபடுவது...’’

சரியல்ல என்று அவனுக்கும் தெரிந்ததால் அவள் கழுத்தின் வழவழப்பில் இருந்து, சுகந்தத்தில் இருந்து உதடுகளை நீக்கினான். பிறகு அவள் அழகிய  கண்களை நோக்கினான்.கண்களுக்கு எதிராகக் கண்களும் உதடுகளுக்கு எதிராக உதடுகளும் நின்ற நிலையில் அவன் பெரிதும் திணறினான்.
அவள் கண்களிலும் அழைப்பிருந்தது! செவ்விய உதடுகள் சற்றே விரிந்து கிடந்ததால் அவற்றிலும் அழைப்பிருந்தது!அந்த அழைப்பை அவள் ஏற்கனவே  உதிர்த்த சொற்கள் சித்தத்தில் உறைந்து தடுத்ததால் அவன் சற்று சுயநிலையை அடைந்தான். சில கணங்களுக்கு முன் கஜசாஸ்திரியான தன்  நண்பன் தன்னிடம் சொன்ன வாசகங்கள் அனைத்தும் அவன் செவியில் எதிரொலித்தன.‘‘கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டு விசாரணைக்காக  அழைத்து  வரப்பட்டவள் எப்படி இப்படி சுதந்திரமாக இருக்கிறாள் என்று யோசிக்கிறாயா  
கரிகாலா..?’’
‘‘ம்...’’
‘‘அசுவ சாஸ்திரியாக அறியப்பட்டவள் எப்பொழுது கஜசாஸ்திரியாகவும் மாறினாள் என சிந்திக்கிறாயா..?’’
‘‘ம்...’’
‘‘விடையைத் தேடு!’’அதிர்ச்சியுடன் தன் நண்பனை ஏறிட்டான் கரிகாலன்.

‘‘அதிர்வதற்கு இது நேரமில்லை கரிகாலா... உண்மையைக் கண்டறிய வேண்டிய தருணம் இது...’’
‘‘...’’
‘‘இங்கே  பார்! பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் வளர்ப்பு மகளாக உன்னிடம் அறிமுகமாகி  உன்னுடனேயே பயணப்பட்டவள் சாளுக்கியர்களால்  ஏவப்பட்ட ஆயுதம்!  மருத்துவச்சியின் உதவியால் இந்த உண்மையை நீ கண்டறிந்திருக்கிறாய். ஆனால்,  இதுவே முற்றும் முழுதுமான உண்மை  அல்ல. இதற்கும் அப்பால் இருப்பதை உடனே  கண்டுபிடி...’’

‘‘...’’
‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்! சாளுக்கிய  மன்னர் விக்கிரமாதித்தர் திரும்பத் திரும்ப உன்னிடம் சிவகாமியை நம்பாதே  என்று சொல்லியிருக்கிறார்...  இதில் இருக்கும் சூட்சுமத்தை அறிய முயற்சி  செய்... அவருக்குத் தெரிந்தே இதுபோல் ஆள்மாறாட்டம் நடந்ததா அல்லது அவர்  அறியாமல்  சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் இப்படியொரு  ஏற்பாட்டை செய்தாரா..? அப்படி என்றால் தன் நாட்டின் நலனுக்காக தன் நாட்டு   போர் அமைச்சர் அனுப்பிய ஒற்றரை - இந்த சிவகாமியை - எதற்காக அந்நாட்டு  மன்னர் எதிரி நாட்டு உபசேனாதிபதியிடம் காட்டிக் கொடுக்க  நினைத்தார்..?’’

‘‘...’’
‘‘புரிகிறதல்லவா..?  திரும்பத் திரும்ப உன்னை, உன் சித்தத்தை கலங்கடிக்க சாளுக்கிய மன்னர் உட்பட  சகலரும் முயற்சித்திருக்கிறார்கள். அது ஏன்  என்பதைக் கண்டறிவது எவ்வளவு  அவசியமோ அவ்வளவு முக்கியம் சிவகாமியின் உருவில் வந்திருக்கும் இவள் யார்  என்பதை அறிவதும்.  பார்த்தால் சாதாரண ஒற்றராகத் தெரியவில்லை. பெரிய இடத்துப்  பெண்ணை ஒற்றராக மாற்றியிருக்கிறார்கள்! இல்லையெனில் அசுவமும் கஜமும்  இப்படி  இவள் முன் மண்டியிடாது!’’

‘‘...’’
‘‘யார் கண்டது, மன்னர் குடும்பத்தைச்  சேர்ந்தவளாகவும் இவள் இருக்கலாம்! எந்த தேசத்து அரச குடும்பம் என்பதைக்  கண்டுபிடி... இந்த வனம்  முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவளால்  இங்கிருந்து தப்பிக்க முடியாது. எல்லைக்குள் இருப்பவளை எல்லை அறிந்து  விசாரித்து  உண்மைகளை வெளிக் கொண்டு வா!’’
(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்