நந்தனம் ஓல்ட் ஸ்கூல் ரெஸ்ட்டாரன்ட்



கான்டினென்டல் சமையல்

தனது அடிப்படைத் தேவையை, தான் வாழும் பகுதியைச் சார்ந்தே மனிதன் அமைத்துக் கொள்கின்றான். போலவே ஒவ்வொரு நிலப்பரப்பிலும் அங்கு  விளையும் பொருட்களை வைத்தே சமைக்கின்றனர். இதனால்தான் பகுதிக்குத் தகுந்தாற்போல உணவு முறைகள் மாறுபடுகின்றன. ஆனால், சில  உணவுகள் மட்டும் ஓர் இடத்தில் உருவாகி உலகம் முழுவதும் பயணிக்கின்றன.

அப்படி 17ம் நூற்றாண்டில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி, எல்லா தட்பவெப்பநிலையிலும் வாழும் மக்கள் விரும்பி உண்ணும் உணவாக  கம்பீரமாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது கான்டினென்டல் எனப்படும் ஐரோப்பிய உணவுகள்.பெரும்பாலும் நீராவியில் வேக வைத்து அல்லது  அனலில் சுட்டு சாப்பிடும் முறைதான் கான்டினென்டல். சாலட், சூப், பாஸ்த்தா, சிக்கன், மட்டன், மீன்... என சுட்டு சமைக்கின்றனர். ஆனால்,  செய்முறை முழுக்க வேறு. சென்னை நந்தனம் எக்ஸ்டென்ஷன் பகுதியில் இருக்கும் ஓல்ட் ஸ்கூல் கான்டினென்டல் குசைன் ரெஸ்ட்டாரன்ட், ஐரோப்பிய உணவுகளை அதன்  தன்மையிலேயே சமைக்கிறது.பொதுவாக ஒரு நாட்டு உணவை வேறு நாட்டில் சமைக்கும் போது சம்பந்தப்பட்ட நாட்டில் கிடைக்கும் பொருட்களை  வைத்தே தயாரிப்பார்கள். இதனால் சுவை மாறும்.

ஆனால், இந்த ரெஸ்ட்டாரன்டில் எல்லாமே அந்தந்த நாடுகளில் விளைந்த பொருட்களை வைத்து சமைக்கப்படுபவைதான்!  ‘‘கடல் பயணிகள்தான்  கான்டினென்டல் உணவுகள் உலகம் முழுக்க பரவியதற்கு காரணம்...’’ என்கிறார் இந்த உணவகத்தின் செஃப்பான ராம். இவர், அமெரிக்காவில்  பணிபுரிந்தவர்.‘‘கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற கடல் பயணிகள் மாதக்கணக்கில் / வருடக்கணக்கில் கண்டம் விட்டு கண்டம் பயணம்  செய்தார்கள். எனவே சமையலுக்குத் தேவையான பொருட்களை தங்களுடனேயே எடுத்துச் சென்றார்கள்.இவர்கள் புதியதாக எந்த நிலத்தைப்  பார்த்தாலும் அந்த நிலத்தின் உணவு எது என்றுதான் தேடினார்கள்! இதனால்தான் தங்கத்தை விட மிளகை விலை உயர்ந்ததாக வாஸ்கோடகாமா  நினைத்தார்; உயர்த்திப் பிடிக்கவும் செய்தார்.

நம் ஊரில் வெங்காயம், தக்காளி, பட்டை, ஏலக்காய், சீரகம் இல்லாமல் எந்த உணவும் இல்லை. அதேபோல் ஐரோப்பிய உணவில் ரோஸ்மெரி,  செல்லரி, ஒரியானோ, ஆலிவ் இல்லாத சமையலைப் பார்க்கவே முடியாது.இவற்றுடன் காய்கறிகள், சிக்கன், மட்டன், பீஃப், போர்க் ஆகியவற்றை  வைத்து சமைப்போம். கான்டி உணவுகளை பதப்படுத்திக் கொண்டே சமைக்க வேண்டும். அதாவது இட்லி மாவை நொதிக்க வைப்பது போல்.காய்கறி சாலட் வகைகள் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்ள சில மணிநேரங்களாகும். ஈஸ்ட் கலந்து  பெரும்பாலான உணவுகள் நொதித்தல்  அடையும். அசைவத்தில் அனைத்து பகுதிகளையும் சமைக்க மாட்டார்கள். கோழி, ஆட்டின் நெஞ்சுப் பகுதிகளைத்தான் கிரில் செய்வார்கள்...’’ என்கிறார்  செஃப் ராம்.

ஓல்ட் ஸ்கூல் குசைன், வெறும் ரெஸ்ட்டாரன்ட் மட்டுமில்லை. பல விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள் ஆகியவையும் இங்குண்டு. பாஸ்த்தா,  தாய்லாந்து மீல்ஸ், இத்தாலியன் மீல்ஸ், அமெரிக்கன் மீல்ஸ்... என எல்லா வகையான ஐரோப்பிய உணவுகளும் இங்கு கிடைக்கின்றன. சாலட்  வகைகளும், பாஸ்த்தாவும் இவர்களது ஸ்பெஷல். ‘‘வெளிநாடுகளில் ஓல்ட் ஸ்கூல் கிளப்புகள் அதிகம். படித்து முடித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்க  ஓர் இடத்துக்கு வருவார்கள். அது பெரும்பாலும் ரெஸ்ட்டாரன்டாகத்தான் இருக்கும். அங்கே பல ரெஸ்ட்டாரன்ட்கள் ‘ஓல்ட் ஸ்கூல்‘ என்ற  பெயரில்தான் துவங்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இத்தாலியன் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன்.

நமக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் அதில் கிடைக்கும். குறிப்பாக காய்கறி சாலட் வகைகள். நமக்கு எப்படி இட்லி, தோசை காலை  உணவோ அப்படி ஐரோப்பியர்க்ளுக்கு சாலட். மதியம் பர்கர், சீஸ் சாண்ட்விச், ரெட் மீட். இரவில் பாஸ்த்தா, நூடுல்ஸ், கார்லிக் பிரட் வகைகள்  கட்டாயம் இருக்கும்...’’ என்கிறார் ரெஸ்ட்டாரன்டின் உரிமையாளரான சுஜாதா நாம் காய்கறிகளை முழுதும் வேகவைத்து சாப்பிடுகிறோம். இவர்கள்  அரைவேக்காடாக சாப்பிடுகிறார்கள். முழுதும் வெந்தால் அனைத்து சத்துக்களும் கிடைக்காதாம். போலவே எல்லாவற்றிலும் காரம் குறைவாக  இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். ஐரோப்பியர்கள் புளிப்பு அதிகம் இருக்கும்படி சமைக்கிறார்கள்.


* திலீபன் புகழ்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்