10 ஓடாத வாட்ச்களைக் கட்டிக்கிட்டு ஒண்ணுக்கு மேலே ஒண்ணா நாலைந்து சட்டைகளை போட்டுக்கிட்டு விஜய்சேதுபதி இதுல வர்றார்..!



‘‘ஒளி என்கிற ஒற்றை வார்த்தைதான் என் கைபிடித்து சினிமாவுக்குக் கூட்டி வந்தது. சினிமாங்கிறது ஒரு கலை. கலைகள்தான் மனித உணர்வுகளை  பக்குவப்படுத்தும். என்னோட ஏக்கம் என்னன்னா, எப்பவும் இங்ேக மனுஷத்தன்மை போயிடக்கூடாது. ரசனை கெடக்கூடாது. நெஞ்சில் ஈரம்  குறைஞ்சிடக்கூடாது. என் படங்களில் அப்படியான இடங்கள் இருந்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்பட்டு அதைச் செய்தும் வந்திருக்கேன்.  வயதானவர் முக்கியப்பாத்திரம்னு சொன்னதும் ‘கடைசி விவசாயி’ படத்தை ஆரம்பிக்கக் கஷ்டமா இருந்தது. மறுபடியும் அதே போராட்டம். ஹீரோ  இல்லைன்னா அந்தப்படத்தை வேறுமாதிரி பார்க்கிறாங்க. ராமநாதபுரத்தில் ஒரு விவசாயிக்கு நேர்ந்த சில விஷயங்களைக் கேள்விப்பட்ட போது  இதற்கான கரு மனதில் விரியத் தொடங்கிவிட்டது. இந்தப் படம் ஆரம்பிச்சு கொண்டு போறதுக்கான சிரமங்களைக் கண்டபோது நானே சொந்தமாக  தயாரிச்சிட்டேன். இப்போது ‘கடைசி விவசாயி’ நீங்க பார்க்க ரெடியா இருக்கான்...’’ நிதானமாகவும், அழுத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் -  ஒளிப்பதிவாளர் மணிகண்டன். ‘காக்கா முட்டை’யை தமிழகமே வசீகரித்துக் கொண்டாடிய வரலாறு கொண்டவர்.

இவ்வளவு அக்கறையாக விவசாயம் குறித்து எப்படி?

மக்கள் ரசனையில் எனக்கு எந்தக் குறையும் கிடையாது. நல்ல படம் எடுத்தால் நிச்சயம் பார்ப்பாங்க. தேடுதல்ங்கிற பேர்ல யதார்த்தத்தை கலைக்கிற  ஆள் நான் இல்லை. இங்கே பலவிதமான ரசனைகள் இருக்கு. எல்லாம்தான் ஜனங்களுக்கு வேணும். என்னளவில் விவசாயிகள் குறித்து படம்  செய்யணும்னு தோன்றிக்கிட்டே இருந்தது. ஒரு கிராமத்தைப் பத்தி, மக்களைப் பத்தி, ஒரு விவசாயி எப்படி இருப்பான்ங்கிற விதத்தைச்  சொல்லியிருக்கேன். வர்த்தகருக்கும், விவசாயிக்கும் மனநிலையில் பெரிய வித்தியாசம் இருக்கு. பிரதிபலன் பார்க்காமல் தொழில் செய்கிற பக்குவம்,  வாழ்வியல் முறையாகத்தான் இந்த விவசாயத்தை நான் பார்க்கிறேன். அப்படியென்றால் எளிமையான வாழ்வியல் முறையில் ஏன் சிக்கல் வரணும்?  தேடிப் போனால் விவசாயம், எளிய வழிபாட்டு முறையில் போய் நிக்குது. வழிபாட்டு முறை வந்ததற்குக் காரணம் விவசாயிகள் எல்லோரும்  இணைஞ்சு நிற்கணும் என்பதற்காகவே.

இதெல்லாம் சிதையும்போது இதுவே ஒரு கதையாக உருவானது. கிராமத்தின் குலதெய்வத்திற்கு ஒரு மரக்கால் நெல்லு கொடுக்கணும். அப்பத்தான்  யாரும் விவசாயம் பண்றதில்லைன்னு புத்திக்கு உறைக்குது. அதில ஒருத்தன் விளையாத நிலத்தை வித்திட்டு யானையை வாங்கி வளர்க்கிறான்.  இப்படிப்பட்ட கிராமத்துல இருக்கிற கொஞ்ச நிலத்தில் விவசாயம் பண்ணுகிற நல்லாண்டிங்கிற விவசாயி. அவர்தான் படத்துல முக்கியமான கேரக்டர்.  இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க . ஊரே நடிச்சிருக்கு, ரியல் லைவ் சவுண்ட். அவங்க மொழியே, அங்கே பேசுகிற வடிவத்திலேயே இருக்கு.  உங்களுக்கு படத்தில் தெரிஞ்ச நடிகர்களே விஜய் சேதுபதி, யோகிபாபு மட்டும்தான். மற்ற எல்லோரும் புதுமுகங்களே! இப்படி இவர்கள் வாழ்கிற  சூழலும் அவர்களின் தீராத நம்பிக்கைகளும் இதிலிருக்கு.

இன்னிக்கும் நாம் நகரத்தில் இருந்தாலும் ஊர் இறங்கினதும், கையை வீசிக்கிட்டு சந்தோஷமாக ஒரு வேகநடை வருமே, அப்படியான உணர்வைத்  தருகிற இடங்களும் இருக்கு. நாமே நம்மை உணர்கிற தருணங்கள் நிறைந்ததுனு ஒற்றை வரியில் கூட இந்தப் படத்தைப் பத்தி சொல்லிட்டுப்  போயிடலாம்.

இதில் விஜய்சேதுபதி எப்படிங்க..?

நல்லாண்டிங்கிற பெரியவரோட சொந்தபந்தமாக சேதுபதி வர்றார். தீவிரமான முருகபக்தன். இரண்டு பையைத் தூக்கிட்டு, பத்து ஓடாத வாட்ச்களைக்  கட்டிக்கிட்டு ஒண்ணுக்கு மேலே ஒண்ணா நாலைந்து சட்டைகளை போட்டுக்கிட்டு, நெடுஞ்சாலையில் சில மனிதர்களை நீங்க அமானுஷ்யமாகப்  பார்த்திருப்பீங்க. அவரேதான் இவர்.

அவங்க வேற ஒரு ஃபேன்டசியில் கனெக்ட் ஆகியிருப்பாங்க. பேசினா, தெளிவா இருக்கும். ஆனால், உலகம் அவங்களை நல்ல மனநிலையில்  இருக்கிற ஆளாகப் பார்க்காது. புத்தி பேதலித்தவங்க கிடையாது. சிலருக்கு உண்மையில் புத்தி சரியில்லாமல் போயிருக்கும். ஆனால், அவங்க  சரியானாலும், திரும்ப இந்த சொசைட்டிக்குத் திரும்ப மாட்டாங்க. ஏதாவது அத்துவானக்காட்டில், மலையோரக் கோவிலில் தஞ்சமாகி இருப்பாங்க.

இப்படித்தான் விஜய்சேதுபதி வர்றார். ஏன் இந்த ரோலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்னு ஸ்கிரீனில் தெரியும். சராசரி மனுஷன் விரும்பக்கூடிய  ஆளாக இருப்பார். படத்தில் கம்மியாகத்தான் வருவார். ஆனால் அந்தக் கேரக்டர் நிறைவாக இருக்கும்னு நான் தெளிவாகச் சொல்ல முடியும். இந்தக்  கதையை சொல்லும் போதே இந்தக் கேரக்டர்ல யாரு யாருன்னு சேதுபதி கேட்டுக்கிட்டே இருந்தார். அந்த அளவுக்கு மக்களுக்குப் போய்ச்சேரும்.

இளையராஜா இசையமைத்தது பற்றி…

அவருக்கு சினிமா ரொம்பவும் பிடிச்சது. அதை மனம் விட்டு சொல்லவும் செய்தார். இதைச் செய்ய இளையராஜாவை விட்டால் வேறு யாரும்  இல்லைன்னு சொல்லத் தோணுது. அவருக்கு கிராமம் தெரியும். சினிமாவில் இதுவரைக்கும் வந்திருக்காத கிராமங்களும், அதன் வாழ்வியலும் அவர்  அறிந்ததுதான். எந்த இடத்தில் இசை இருக்கணும், எங்கே இசையைக்கூட மௌனிக்க வைக்கணும்ங்கிறது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.  அவருக்குத் தெரிஞ்ச வாழ்பனுவத்தை விடவா நமக்கு தெரிஞ்சிருக்கப் போகுது! இதில் ஹீரோவாக இல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் விஜய்  சேதுபதி நடிப்பது பற்றி கேட்கிறீங்க. மத்த சினிமாவைப் பத்தி சொல்ல இயலாது. இந்தப்படம் எப்படி இருக்கும்னு நீங்கள் பார்க்கணும்.

கதாபாத்திரங்களை நம்பித்தான் இருக்கோமே தவிர நடிகர்களை நம்பி இல்லை. நடிகன் ஒரு கதாபாத்திரத்தை பதிய வைக்கிற வேலையைத்தான்  பார்க்கிறான். கதாபாத்திரத்தை பிடிக்கச் செய்வது கதாபாத்திரத்தின் குணநலன்கள்தான். நடிகர்களின் முகங்கள் அல்ல.மக்களுக்குப் பிடிக்காத குணநலம்  கொண்ட கதாபாத்திரங்கள் ஜெயிச்சதாக வரலாறு இல்லை. நடிகர்கள், ஹீரோக்கள் தேவைப்படுவது கதாபாத்திரத்தை பரவலாக்குவதற்கே. நானே  சேதுபதியை நல்லாண்டிங்கிற ப.பெரியவராக நடிக்க வைத்து, படத்தை உடனே விற்றிருக்கலாம். என் நோக்கம் அதுவல்ல!

* நா.கதிர்வேலன்