மெட்ராஸ் பத்திரிக்கைகள்
பார்ட் - 2
‘சுதேசமித்திர’னை 1882ம் வருடம் வார இதழாக ஆரம்பித்தார் ஜி.சுப்பிரமணிய ஐயர். ‘தி ஹிந்து’வில் இருந்தபடியே அவர் இந்தத் தமிழ் வார இதழைத் தொடங்கினார்.காரணம், தமிழ் மக்களிடையே அரசியல் அறிவைப் புகுத்தி உண்மையான ஜனநாயக வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவே ‘சுதேசமித்திர’னை ஆரம்பித்தார். ‘‘இந்து பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகையாக இருப்பதால் இங்கிலீஷ் பாஷையறியாத தமிழ் ஜனங்களும் தேச சமாச்சாரங்களை அறிந்து கொள்ள மார்க்கமில்லாதிருப்பதை யோசித்து ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையை விருத்தி செய்து தமிழ் ஜன சமூகத்தாரின் அறிவை வளர்ப்பதே மேன்மை என்று கருதினேன்...’’ என 1907ம் வருடம் ‘சுதேசமித்திரன்’ வெள்ளிவிழாவில் ஜி.சுப்பிரமணிய ஐயர் பேசியதாக ‘இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் பெ.சு.மணி.
1885ல் இந்திய தேசிய காங்கிரஸின் பிரசார ஏடாக ‘சுதேசமித்திரன்’ விளங்கியது. தேசிய உணர்ச்சியைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தார் சுப்பிரமணிய ஐயர். காரணம், பம்பாயில் நடந்த இந்திய ேதசிய காங்கிரஸின் மாநாட்டில் கலந்துகொண்ட 72 பேரில் சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். மட்டுமல்ல; முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்ததும் அவரே. இந்த மாநாட்டிலிருந்துதான் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் உருவானது. பின்னர், 1893ம் வருடம் வாரம் இருமுறை இதழானது. தொடர்ந்து 1897ல் வாரம் மும்முறை இதழாக மாறியது. இந்நேரம் கருத்து வேறுபாட்டால் ‘தி ஹிந்து’வில் இருந்து பிரிந்து வந்த சுப்பிரமணிய ஐயர் ‘சுதேசமித்திர’னை முழுநேரமாக நடத்தலானார்.
1899ம் வருடம் ‘சுதேசமித்திர’னை சுப்பிரமணிய ஐயர் நாளிதழாக மாற்றினார். இதுவே, தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ். இதனால், ‘தி ஹிந்து’ இதழுக்கு சுப்பிரமணிய ஐயருடன் பணியாற்றிய வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். இவர், சி.கருணாகர மேனனை ‘ஹிந்து’வின் ஆசிரியராக்கி நடத்தி வந்தார். 1900ல் ‘ஹிந்து’வின் விற்பனை வெகுவாகக் குறைந்தது. இதனால், வீரராகவாச்சாரியார் அதை விற்க முடிவெடுத்தார். 1905ம் வருடம் ‘ஹிந்து’வின் சட்ட ஆலோசகராக இருந்த கஸ்தூரிரங்க ஐயங்காரே அதை விலைக்கு வாங்கினார். அவர் இறக்கும் வரை ‘தி ஹிந்து’வின் ஆசிரியராக இருந்தார். பிறகு, அவரின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சி.கருணாகர மேனன் 1905ம் வருடம் ‘ஹிந்து’வில் இருந்து வெளியேறி, ‘தி இந்தியன் பேட்ரியாட்’ பத்திரிகையை ஆரம்பித்தார். ஆனால், 1922ம் வருடம் கருணாகர மேனன் இறந்ததும் ‘பேட்ரியாட்’டின் அஸ்தமனம் தொடங்கியது. அது, 1924ம் வருடம் மூடப்பட்டுவிட்டது. இதற்கிடையே எம்ஏ பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணான கமலா சத்தியநாதனால் 1901ல் ‘தி இந்தியன் லேடீஸ் மேகசின்’ என்ற பெண்கள் இதழ் தொடங்கப்பட்டது. இதுவே, இந்தியாவின் முதல் பெண்கள் இதழ்!1904ம் வருடம் ‘சுதேசமித்திரன்’ இதழில் உதவி ஆசிரியராக மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சேர்ந்தார். ஆனால், ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1906லேயே ‘சுதேசமித்திர’னில் இருந்து வெளியேறினார்.
அதே வருடம் ‘இந்தியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார் பாரதி. ‘‘‘இந்தியா’ பத்திரிகையில்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசியல் கார்ட்டூன்களை பாரதி அறிமுகப்படுத்தினார். வ.உ.சிக்கு ஆதரவாக அவர் வெளியிட்ட கார்ட்டூன்களும் எழுதிய கவிதைகளும்தான் 1908ல் பாண்டிச்சேரிக்கு அவர் தப்பி ஓடுவதற்குக் காரணங்களாக இருந்தன. பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் பாரதி திரும்பி வந்து ‘சுதேசமித்திர’னின் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்...’’ என ‘சென்னை
மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா. ஜி.சுப்பிரமணிய ஐயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக கட்டுரைகள் எழுதியதால் கைது செய்யப்பட்டார். இதனால், நோய்வாய்ப்பட்ட சுப்பிரமணிய ஐயர் 1915ம் வருடம் ‘சுதேசமித்திரன்’ இதழை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமகனும், ‘ஹிந்து’வின் உதவி ஆசிரியராகவும் இருந்த ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். 1916ம் வருடம் சுப்பிரமணிய ஐயர் இறந்து போனார். ‘‘‘சுதேசமித்திர’னை எடுத்துக்கொண்டபின் அதை நிர்வகிக்க ரங்கஸ்வாமி ஐயங்கார் தனது உறவினர் சி.ஆர்.சீனிவாசனை உள்ளே கொண்டு வந்தார். பாரதி 1920ல் வந்து சேர்ந்து கொண்டார். மூவருமாகச் சேர்ந்து ‘சுதேசமித்திர’னை அரசியல் ஆராய்ச்சியில் சிறந்த பத்திரிகையாக மாற்றினர்.
1928ல் ‘தி ஹிந்து’வின் ஆசிரியர் ஆவதற்காக ரங்கஸ்வாமி ஐயங்கார் ‘சுதேசமித்திர’னை விட்டுச் சென்றபோது சீனிவாசன் அதன் ஆசிரியராகவும், நிர்வாகியாகவும், பின்னர் உரிமையாளராகவும் ஆனார்...’’ என்கிறார் ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் எஸ்.முத்தையா.இந்நேரம், ‘சுதேசமித்திரன்’ ஆங்கில வார இதழாகவும் ெவளிவந்தது. ஆனால், 1962ல் சீனிவாசன் மறைந்ததும் ‘சுதேசமித்திரன்’ தேயத் தொடங்கியது. 1978ல் வெளிவராமல் நின்றது. பிறகு, 1980ல் மீண்டும் வெளிவரத் தொடங்கி சில வருடங்களில் நின்று போனது.தொடர்ந்து, 1994ம் வருடம் மீண்டும் ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வந்தது. ‘‘வழக்கம் போல் பொருள் இழப்பின் சுமை தாங்காமல் ‘சுதேசமித்திரன்’ நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இறுதி இதழ் 1.5.1996ல் வெளிவந்தது...’’ என ‘இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் பெ.சு.மணி.
1914ம் வருடம் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு தங்கள் அரசியல் கொள்கைகளை விளக்க ஒரு பத்திரிகை தேவையாக இருந்தது. இதனால் ஏற்கனவே இருந்த ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கினார். பிறகு அதை, ‘நியூ இந்தியா’ என்ற பெயரில் கொண்டு வந்தார். இதன்பிறகு, மெட்ராஸ் டைம்ஸின் பதிப்பாசிரியராக இருந்த ஆர்.டபிள்யு.பிராக் 1921ல் ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை ஆரம்பித்தார். ஆனால், ஆறு வருடங்களில் இந்தப் பத்திரிகை மூடப்பட்டுவிட்டது.1923ல் வெளியான ‘தி மெட்ராஸ் இயர் புக்’கின்படி அன்று மொத்தம் 133 பத்திரிகைகள் மெட்ராஸில் இருந்து வெளியாகி உள்ளன.1925ம் வருடம் ஆயுர்வேத மருத்துவரான வரதராஜுலுநாயுடு ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். பின்னர், 1932ம் வருடம் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையைத் தொடங்கினார்.ஆனால், ஆரம்பித்த ஒரு வருடத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட பம்பாயைச் சேர்ந்த ‘ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ பத்திரிகையின் சதானந்திடம் விற்றுவிட்டார்.
இந்த சதானந்த், 1927ம் வருடம் ‘ஃப்ரீ பிரஸ் ஆஃப் இந்தியா ஏஜென்ஸி’ என்ற நியூஸ் ஏஜென்ஸி தொடங்கியவர். இதுவே, இந்தியாவில் இந்தியர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் நியூஸ் ஏஜென்ஸி. சில வருடங்களில் அது பத்திரிகையாக மாறியது. 1933ல் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக கே.சந்தானத்தை நியமித்தார் சதானந்த். பிறகு, 1934ம் வருடம் ‘தினமணி’ ஆரம்பிக்கப்பட்டது. ‘‘‘தினமணி’ என்ற பெயர் ஒரு ேபாட்டியின் மூலம் கிடைத்த பெயராகும். விரைவில் துவக்க இருக்கும் ஒரு தேசிய நாளிதழுக்கு சுருக்கமான பொருள் பொதிந்த ெபயர் தெரிவிக்கும்படி எக்ஸ்பிரஸ் வாசகர்களைக் கேட்டுக் கொண்டார்கள். தக்க பெயர் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 பரிசாக அறிவிக்கப்பட்டது.டி.என்.அட்சயலிங்கம் என்ற மயிலாப்பூர்வாசியும், எஸ்.ஸ்வாமிநாதன் என்ற தியாகராயநகர்வாசியும் ஒரே பெயரைத் தெரிவித்தார்கள். அவர்கள் இருவருமே தெரிவித்த ‘தினமணி’ என்ற பெயர் ஏற்கப்பட்டு பரிசுத்தொகை தலைக்கு ரூ.5 என பகிர்ந்து அளிக்கப்பட்டது. ‘தினமணி’ என்ற சொல் சூரியனைக் குறிக்கும். தினமும் ஒலிக்கும் மணி எனவும் பொருள்படும்...’’ என ‘இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் பொன்.தனசேகரன். வ.ரா., ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோருடன் ‘மணிக்கொடி’ இதழைத் தொடங்கிய டி.எஸ்.சொக்கலிங்கம்தான் ‘தினமணி’யின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
சில வருடங்களிலேயே எக்ஸ்பிரஸும், தினமணியும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன. ஏற்கனவே, அச்சகத்தை நவீனப்படுத்த ராம்நாத் கோயங்காவிடம் கடன் வாங்கியிருந்தார் சதானந்த். இதனால், 1939ல் ராம்நாத் கோயங்காவிடம் இரண்டு பத்திரிகைகளும் வந்தன. 1991ல் கோயங்கா மறைந்ததும் அவரின் குடும்பத்தினர் வடக்கே ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்றும், தெற்கே ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்றும் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்திலிருந்து பல்வேறு சிற்றிதழ்கள் 1900ல் இருந்து வெளிவந்தன. இந்த இதழ்களைத் தொகுத்து, ‘thamizham.net’ என்ற வலைத்தளத்தில் தந்துள்ளார் பொள்ளாச்சி நசன்.
அதில், விவேக பாநு, விவேக சிந்தாமணி, விவசாய தீபிகை, தமிழ், விவேக போதினி, ஆனந்த போதினி, ஜனோபகாரி, சுதந்திரச் சங்கு, பிரசண்ட விகடன், குமார விகடன், நவசக்தி, குடிஅரசு, சூறாவளி, திராவிட நாடு, தமிழ்த்தென்றல், பாப்பா, தம்பீ, பாலர் மலர் எனப் பல்வேறு இதழ்களைப் பார்க்க முடிகிறது.இதில், தேசபக்தன், நவசக்தி இதழ்கள் திரு.வி.க.வால் நடத்தப்பட்டன. குடிஅரசு பெரியார் நடத்திய பகுத்தறிவு இதழ். ஆசிரியராக இ.வெ.கிருஷ்ணசாமி இருந்தார்.1907ல் அயோத்திதாசப் பண்டிதரால் ‘ஒரு பைசா தமிழன்’ கொண்டு வரப்பட்டது. வடிவேலு செட்டியாரின் ‘லோகோபகாரி’, ராஜாஜியின் ‘விமோசனம்’, ரா.கிருஷ்ணமூர்த்தியின் ‘கல்கி’, 1928ல் எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய ‘ஆனந்த விகடன்’ எனப் பல்வேறு இதழ்கள் சுதந்திரத்திற்கு முன்பு வந்தவை.
1942ம் வருடம் சுதந்திரப் போராட்ட உச்சகாலத்தில் பிரிட்டிஷ் அரசு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்த ராம்நாத் கோயங்கா தணிக்கைக்கு மறுத்து மூன்று மாதங்கள் தினமணியை நிறுத்தி வைத்தார். பிறகே வெளியானது.இதே காலகட்டத்தில் மதுரையிலிருந்து ‘தினத்தந்தி’ நாளிதழ் சி.பா.ஆதித்தனாரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1948ல் மெட்ராஸில் தினத்தந்தி தொடங்கப்பட்டது.இதேபோல 1942ம் வருடம் திராவிட இயக்கப் பத்திரிகையாக கலைஞர் கருணாநிதியால் ‘முரசொலி’ தொடங்கப்பட்டது. 1951ம் வருடம் திருவனந்தபுரத்திலிருந்து டி.வி.ராமசுப்பையர் ‘தினமலர்’ நாளிதழைத் தொடங்கினார்.
பின்னர், 1957ல் அது திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. 1979ல் மெட்ராஸ் பதிப்பு தொடங்கப்பட்டது.இதற்கிடையே, 1941ம் வருடம் ‘கல்கி’ வார இதழை ரா.கிருஷ்ணமூர்த்தியும் (கல்கி), சதாசிவமும் தொடங்கினர். 1947ல் எஸ்.ஏ.பியும், பி.வி.பார்த்தசாரதியும் இணைந்து ‘குமுதம்’ இதழை ஆரம்பித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பத்திரிகைகள் நன்கு வளர்ச்சி அடைந்தன. 1977ம் வருடம், ‘தினகரன்’ நாளிதழும், ‘குங்குமம்’ வார இதழும் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து மெட்ராஸிலிருந்து பல்வேறு இதழ்கள் வெளியாகின. தொலைக்காட்சியும், இணையமும் பரவலான பிறகு இன்று பத்திரிகைகளுடன் டிவிக்களும், டிஜிட்டல் மீடியாக்களும் செய்திகளை வழங்கி வருகின்றன.படங்கள் உதவி: thamizham.net
பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால் ராஜா
|