கழிவறைகளை சுத்தம் செய்தபடியே 1500 ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார்!



மனிதர்கள்  2

‘‘எல்லா பகுதிலயும் பணக்காரங்கனு சிலர் இருப்பாங்க. அவங்க எல்லாருமே தங்களோட தேவை போக ஒரு தொகையை அவங்க பகுதில இருக்கிற  ஏழைக் குழந்தைங்களுக்கு செலவிட்டா போதும்... அந்தப் பகுதில எல்லாருமே கல்வி அறிவு பெற்றவர்களா ஆகிடுவாங்க...’’அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் நஞ்சுண்டாபுரம் பகுதியைச்சேர்ந்த லோகநாதன்.இப்படிச் சொல்வதற்கான முழுத் தகுதியும் இவருக்கு உண்டு. ஏனெனில் மிக மிக  ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கழிவறைகளை சுத்தம் செய்வதுதான் இவரது பணி. இந்நிலையிலும் 1500 ஏழைக் குழந்தைகளை இவர்  படிக்க வைக்கிறார்!

‘‘பிறந்ததெல்லாம் இங்க கோயமுத்தூர்தாங்க. அம்மா பேரு கன்னியம்மாள். அப்பா ஆறுமுகம் ரயில்வே போலீஸ்ல வேலை பார்த்தார். அதே  ரயில்வே துறைக்கு என் ரெண்டு அண்ணன்களும் போயிட்டாங்க. சகோதரி மத்திய அரசுப் பணில இருக்காங்க. எனக்கு படிப்பு ஏறலை. அப்பா  புற்றுநோயால இறந்தப்ப எனக்கு வயசு பத்து. அம்மா கலெக்டர் ஆபீஸ் முன்னாடி இளநீர் கடை போட்டிருந்தாங்க. அம்மா கூடவே கடைக்கு  வந்துட்டேன்...’’ என தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லும் லோகநாதன் பக்கத்தில் இருந்த ஸ்கூல் க்ரவுண்டில் ராட்டினம், சறுக்கு எல்லாம்  விளையாடுவாராம்.

‘‘அப்ப நான் சின்னப் பையன். நான் விளையாடின இடம் ஆதரவற்ற குழந்தைங்க தங்கற விடுதி... அவங்களுக்கு யாருமே இல்லைனு எல்லாம் அப்பத்  தெரியாது.அந்த சமயத்துலதான் ஒருமுறை இந்திரா காந்தி இறந்திட்டாங்கன்னு ரயில்களை எல்லாம் நிறுத்திட்டாங்க. அங்க நின்ன ரயில்ல  ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க மொழி தெரியாம தங்க ஊருக்குப் போக முடியாம தவிசாங்க.அவங்க பெட்டியை எல்லாம் சுமந்துட்டு போய்  ஹோட்டலைக் காட்டி தங்க வைச்சேன். நெகிழ்ந்து போனவங்க, ‘உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கறோம்... என்ன வேணுமோ தயங்காம  கேளு’ன்னாங்க.

‘பழைய துணிகளைக்கொடுங்க’னு கேட்டேன். கொடுத்தாங்க. கூடவே கொஞ்சம் பணமும். அதை அப்படியே எடுத்துட்டுப் போயி ஆசிரமத்துல  கொடுத்தேன்!அப்படி ஆரம்பிச்சதுதாங்க...’’ புன்னகைக்கும் லோகநாதன், இதன் பிறகு எங்கெல்லாம் பழைய துணிகள் கிடைக்குமோ அங்கெல்லாம்  சென்று சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார். அவற்றை எல்லாம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.‘‘இதுக்கு அப்புறம் ஒரு  ஒர்க்‌ஷாப்புல வேலைக்கு சேர்ந்தேன். கையோடு 10 குழந்தைகளோட படிப்புச் செலவை ஏத்துக்கிட்டேன்! எல்லாருமே ஏழைங்க. நல்லா படிக்கறவங்க.  இப்படிதான் பார்த்துப் பார்த்து தேர்வு செஞ்சேன். நேரடியா அவங்க வீட்டுக்கே போய் அவங்க நிலையைப் பார்த்துதான் முடிவு செய்வேன்.

வருமானம் பத்தலை. அதுக்காக குழந்தைங்களை படிக்க வைப்பதை நிறுத்த விரும்பலை. கூடுதல் பணத் தேவைக்காக இரவுல கழிவறைகளை சுத்தம்  செய்ய ஆரம்பிச்சேன். அதாவது பகல்ல ஒர்க்‌ஷாப்புல வேலை. நைட்டுல கழிவறையை சுத்தம் செய்யறது.இதை உறவினர்களும் நண்பர்களும்  விரும்பலை. கழிவறையை சுத்தம் செய்யறவனோடு பழக அவங்களுக்குப் பிடிக்கலை. என்னை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. இதையெல்லாம் நான்  பெருசுபடுத்தலை. ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கறதுல மட்டும் கவனம் செலுத்தினேன்...’’ எவ்வித வேதனையும் இன்றி இயல்பாக, தன்னை  கேலி கிண்டல் செய்ததை பதிவு செய்யும் லோகநாதனுக்கு இரு குழந்தைகள். இருவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள். மகன், எம்பிஏ. மகள், ப்ளஸ் 2.  மட்டுமல்ல; சொந்தமாக இப்பொழுது லேத் பட்டறையும் வைத்திருக்கிறார். வரும் வருமானத்தில் சரிபாதியை ஏழைகளின் படிப்புக்கே செலவிடுகிறார்.‘‘தொடக்கத்துல இருந்தே என் பசங்களை எளிமையான வாழ்க்கைக்குதான் பழக்கி இருக்கேன். அவங்களும் அப்படித்தான் வாழறாங்க. அதுவும்  சந்தோஷமா! என் மனைவி சசிகலாதேவி உண்மைலயே மகராசிதான். வீட்டுச் செலவுக்கு பணமில்லாம போனாலும் என் சேவையை நிறுத்தச்  சொன்னதே இல்ல!

ஆரம்பத்தை விட இப்ப நான் நல்லா இருக்கேன். வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கு. அதனால ஆதரவற்ற பிள்ளைகளுக்கான கல்விச் செலவையும்  அதிகரிச்சிருக்கேன்! என் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்கலை. தங்களுக்கு தேவையானதை அவங்க சம்பாதிச்சுப்பாங்க!’’ கம்பீரமாகச் சொல்லும்  லோகநாதனுக்கு 18 மொழிகள் தெரியும்!