பகவான்
யுவகிருஷ்ணா 42
பகவானின் செகண்ட் இன்னிங்ஸ்! University என்கிற ஆங்கில வார்த்தையை பல்கலைக்கழகம் என்று மொழிபெயர்த்திருக்கிறோம். ரஜனீஷ், தன்னுடைய தியானப் பல்கலைக்கழகத்தை Osho multiversity என்று அழைத்தார்.
இந்த மல்டிவெர்ஸிட்டியில் கீழ்க்கண்ட அமைப்புகள் இருந்தன. Centre for Transformation School for Centering and Zen Martial Arts International Academy of Healing Arts Institute for Love and Consciousness Meditation Academy School of Mysticism Institute of Tibetian Pulsing Healing Club Meditation Creative Leisure The Institute for Consciousness
அதாவது காலம் காலமாக ஆன்மீகக் குருக்களிடம் மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடிய வாழ்வியல் பாடங்களை, நவீன கல்விமுறை சார்ந்த முறையில் சொல்லிக் கொடுக்கக்கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்தினார். ஆன்மீகத்தை அறிவியல் பூர்வமாக அணுகியவர் என்பதே மற்ற சாமியார்களிடமிருந்து ஓஷோவை முற்றிலுமாக தனித்துக் காட்டுகிறது. எனவேதான், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கூட அறிவுத்தாகத்தோடு அவரைத் தேடி வந்தார்கள்.புனரமைக்கப்பட்ட பூனா புத்தா ஹாலில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் தினமும் கூடத் தொடங்கினர். ஓஷோவின் உரைகள் மட்டுமின்றி பல்வேறு கலைஞர்களும் தங்கள் கலைத்திறனை வெளிக்காட்டுவதற்கான இடமாக புத்தா ஹால் உருவெடுத்தது.பெரும் ஓவியர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்கள் புத்தா ஹாலை பயன்படுத்தத் தொடங்கினர்.
தியானத்துக்கு பகவான் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவுக்கு கலைகளை ஆராதிக்கும் தாராளமும் அவருக்கு இருந்தது. ஏனெனில் ஒரு கலைஞன், தன்னுடைய பணியில் ஈடுபடும்போது மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு அதில் மட்டுமே முழுமையான ஆற்றலைச் செலவிடுகிறான். தியானத்துக்கு ஒப்பான செயல்பாடாக இதை அவர் கருதினார்.ரஜனீஷ்புரம் அமைக்கும்போது ஏற்பட்ட தவறுகள் எதுவும் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் இம்முறை மிகவும் கவனமாக இருந்தார். குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வந்துவிடக்கூடாது என்று கண்டிப்பு காட்டினார்.பூனா ஆசிரமத்தில் அதிரடியான மாற்றங்களைச் செயல்படுத்தினார். அங்கிருந்த கட்டடங்களுக்கு கருப்பு நிறமும், ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு நீல நிறமும் பூசப்பட்டன. கட்டடங்கள் பெரும்பாலும் பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டன.
ஆரஞ்சுக்கு விடை கொடுத்து அங்கிருந்த எல்லோரும் காலையில் கருஞ்சிவப்பு நிற உடையணிந்தார்கள். மாலையில் வெள்ளை உடை என்று சீருடை தீர்மானிக்கப்பட்டது. ஆசிரமத்தில் இருக்கும்போது மட்டும் இந்த உடை, வெளியே எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பப்பட்டபடி அணிந்து கொள்ளலாம் என்று சுதந்திரம் அளித்தார்.பூனா ஆசிரமத்தில் இயற்கைமுறை உணவகங்கள் அமைக்கப்பட்டன. நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் விளையாட வசதிகள் செய்து தரப்பட்டன. மிகப்பெரிய புத்தகக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்தக் கடையில் ஓஷோவுக்கென்றே பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட பத்திரிகைகள் கிடைத்தன. ஓஷோவின் உரைகள் முறையாகத் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டன. ஓஷோவின் பழைய உரைகள் ஆடியோ மற்றும் வீடியோ கேசட்டுகளாக விற்பனைக்கு வந்தன.
பூனா ஆசிரமத்தில் உலகத்தரத்தில் ஒரு ‘ஜென் தோட்டம்’ அமைக்கப்பட்டது. தியானம் செய்பவர்கள் இந்தத் தோட்டத்தில் வனச்சூழலில் நீண்ட நேரம் தியானிக்க முடிந்தது.இவ்வாறாக பூனாவில் ஓஷோவின் செகண்ட் இன்னிங்ஸ் கச்சிறப்பாகத் தொடங்கியது.அதற்குள்ளாக இந்தியாவில் அரசியல் சூழல் முற்றிலுமாக மாறி இருந்தது. ஓஷோவை எதிரியாகக் கருதி அவருக்கு தொந்தரவுகள் கொடுக்கக் கூடிய சூழலில் ஆட்சியில் இருந்தவர்கள் இல்லை. அவர்களது அரசியல் இடத்தை தக்கவைக்கவே எதிர்க்கட்சிகளோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.தன் கனவான புதிய சமுதாயத் திட்டத்தை கைவிட்டிருந்தார் அல்லது தள்ளி வைத்திருந்தார் என்கிற நிலையில் புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டு பல லட்சம் பேரின் அன்புக்கு பாத்திரமானார் பகவான்.அவர் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலக்கட்டமாக இதைக் குறிப்பிடலாம்.தினமும் மாலை புத்தா ஹாலில் நடைபெறும் கலைநிகழ்வுகளுக்கு அவரும் வருவார். சீடர்கள் மத்தியில் கம்பீரமாக அமர்ந்து நிகழ்வை கவனிப்பார். நடனம், இசை என்று அமர்க்களப்படும்.
நிகழ்ச்சி முடிந்ததுமே பார்வையாளர்கள் யாரும் கிளம்பிவிடக் கூடாது என்பது பகவானின் உத்தரவு. எல்லோரும் அப்படியே மணிக்கணக்கில் அமைதியாக இருக்க வேண்டும். நடனம், இசை போன்ற கலைகளை ரசித்து முடித்தபின் அமைதியாக இருக்கும்போது, மனம் சலனங்கள் எதுவுமின்றி பிரபஞ்ச சக்தியோடு தன்னை பிணைத்துக் கொள்ளும். அத்தகைய அமைதியே தியான நுணுக்கங்களை எளிமையாக்கும் என்பது அவரது கண்டுபிடிப்பு. அதற்கு நல்ல பலன் இருந்தது. முன்பைக் காட்டிலும் குண்டலினி, டைனமிக் போன்ற தியானங்களை கற்றுக்கொண்டு மேற்கொள்பவர்கள் அதிகரித்தார்கள். போதிப்பதில் தினம் தினம் புதிய நுணுக்கங்களை உணர்ந்து, அதையெல்லாம் செயல்படுத்தினார் பகவான்.புத்தா ஹாலில் எப்போதும் ஓஷோவின் உரைகள் ஒலிபரப்பப்படும். அல்லது வீடியோ போட்டு காட்டப்படும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, அவர் நேரடியாகக் கொடுக்கும் பயிற்சிகள் எளிமையாக இருந்தன.
தியானங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமின்றி தெரப்பி முறைகளையும் பகவான் பயன்படுத்தி வந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் பகவானின் மிகவும் பிரபலமான ‘The mystic Rose’ என்கிற தியான முறை நடைமுறைக்கு வந்தது. இந்திய தியான முறைகளை ஜென் குருக்களின் நுட்பத்தோடு புதிது புதிதாக பகவான் பரிசோதித்துப் பார்த்து வெற்றிகள் அடைந்தார். விபாசனா என்கிற தியானமுறைக்கு இணையாக மிஸ்டிக் ரோஸ் முறையும் சிறந்த பலனைத் தருவதாகக் கூறினார். அதே நேரம் டைனமிக் தியான முறைக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வந்தார்.பகவானின் Mystic rose, No Mind, Who is in ஆகிய மூன்று புதிய தியான முறைகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. அவற்றைப் புரிந்து செய்வது எளிமையாக இருந்தது என்பதே பிரதான காரணமாகும்.உதாரணத்துக்கு மிஸ்டிக் ரோஸ் தியானம் என்பது நான்கு கட்டங்களைக் கொண்டது.
முதல் கட்டம் சிரிப்பு. ஒரு மனிதன் தினமும் இருபது நிமிடங்களாவது சிரித்தால் போதும். அவனுக்கு எவ்விதக் கவலையும் இருக்காது. சிரிப்பதற்குக் காரணமே தேவையில்லை. மனம் விட்டு சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிரித்துக் களைக்கும்போது மனசு அமைதியாகி விடும்.அடுத்த கட்டம் அழுகை. அழுவதால் மனசுக்குள் இருக்கும் புழுக்கம் முற்றிலுமாக கண்ணீராக வெளியேறி விடுகிறது.மூன்றாவதாக அமைதி. அமைதியாக இருக்கும் ஒருவன் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்கள் மீதும் விழிப்புணர்வோடு இருப்பான்.நான்காவது ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்று சும்மா இருப்பது. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல் நிகழ்காலத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது.
இதை மிகவும் சாத்தியமான எளிய பயிற்சிகள் மூலம் வடிவமைத்தார் பகவான். மிஸ்டிக் ரோஸ் தியானமுறை சாதாரணர்களைத் தாண்டி பெரும் தொழிலதிபர்களையும், கலைஞர்களையும், அரசியல்வாதிகளையும் கூட கவர்ந்தது. இப்போதும் கூட நீங்கள் பூங்காக்களிலும், கடற்கரையிலும் ஒரு இருபது பேர் சத்தமாக சிரித்து பயிற்சி மேற்கொள்வதை கவனிக்கலாம். ஓஷோ தொடங்கிய மிஸ்டிக் ரோஸ் தியானமுறையின் ஓர் அங்கம்தான் இந்த சிரிப்புப் பயிற்சி.புதிய தியானமுறைகள், ஆன்மீக கல்விக் கட்டமைப்பு என்று தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். மீண்டும் நிறைய நூல்கள் வாசிக்கத் தொடங்கியிருந்தார். தான் வாசித்த நூல்களில் இருந்த கருத்துகளைச் சொல்லி, சிஷ்யர்களோடு விவாதிப்பார்.இப்படியாக மீண்டு வந்திருந்த நிலையில் மீண்டும் பகவானின் உடல்நிலை மோசமானது.
(தரிசனம் தருவார்)
*யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|