வந்தாச்சு வீடியோ கேம்ஸுக்கான உலகக் கோப்பை!



அண்மையில் அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டுக்காக நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 வயதுச் சிறுவன் சுமார் மூன்று கோடி  ரூபாய் பரிசைப் பெற்று 2019ம் ஆண்டுக்கான வீடியோ கேம் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.முதல் பரிசு சுமார் மூன்று கோடி ரூபாய் தவிர  இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு எனத் தொடங்கி ஆறுதல் பரிசு வரை விளையாடியவர்கள் பல கோடி - லட்சம் ரூபாயை அள்ளி விட்டார்கள்

Epic கேம்ஸ் நிறுவனத்தார் உருவாக்கிய Fortnite Runner என்னும் வீடியோ கேம் பிரியர்களின் மத்தியில்தான் இந்த உலகக் கோப்பை போட்டி  நடந்துள்ளது. இந்தப் போட்டியில் அனைவரையும் வியக்கவைத்த விஷயம் இதில் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகைதான். மட்டுமா? அதன்  பிரம்மாண்டமும்தான்.  முதல் பரிசு சுமார் மூன்று கோடி ரூபாய், தவிர இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என தொடங்கி ஆறுதல் பரிசு வரை  விளையாடியவர்கள் பல கோடி - லட்சம் ரூபாயை அள்ளி விட்டார்கள். நியூயார்க் நகரத்தில் நடந்த இந்தப் போட்டி மிகப்பிரம்மாண்டமாக  தொடங்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக முடிக்கப்பட்டது. நியூயார்க் நகரிலேயே மிகப்பெரும் உள் விளையாட்டு அரங்கில், சுமார் 5 ஆயிரம் பேர் வரை  டிக்கெட் வாங்கி இந்தப் போட்டிகளை ரசித்தார்கள்.  

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மிகப் பிரபலமான பாப் இசைப் பாடகர்களைக் கொண்டு கச்சேரிகளை நடத்தினார்கள். அவர்களின் ஒருநாள் கச்சேரி  செலவே சில கோடிகள் வரும் என்றால் இந்த வீடியோ கேம் உலகக்கோப்பை போட்டியில் புழங்கிய பணத்தைப் பற்றி நீங்களே ஊகித்துக்  கொள்ளலாம்.இந்த Fortnite Runner வீடியோ கேம் நமக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட வகைதான். நீங்கள் pubg வீடியோ கேமைப்பற்றி  கேள்விப்பட்டிருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே மாதிரிதான். ஒரு நூறு பேரை விமானம் ஒன்று ஒரு தீவில் விட்டு விடும். அந்தத் தீவில் யார்  கடைசிவரை உயிருடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.  ஆனால் pubg விளையாட்டிற்கும் இந்த விளையாட்டுக்குமான பெரிய  வித்தியாசம், இதன் அனிமேஷன் வகைதான்.

Pubgல் ராணுவ உபகரணங்கள் உள்பட பலவும் அசல்போல் காட்சி தரும். அதாவது உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். ஆனால், இந்த Fortnite  Runner முழுக்க முழுக்க கார்ட்டூன் தொனியில் இருக்கும். அத்துடன் வெறும் போர்க் கருவிகள் என்றில்லாமல் கேலிக்கூத்தான பல கருவிகளும் இந்த  விளையாட்டில் உண்டு.உதாரணத்திற்கு, வண்ண நுரை கக்கும் துப்பாக்கி. இது மாதிரியான கேலிக் கருவிகள் இடம் பெற்றிருப்பதால் இந்த  விளையாட்டு சீரியசாகச் செல்லாமல் பல நேரங்களில் நம்மை கிச்சுகிச்சு மூட்டும்.சில ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கி இதை ஏன் பார்த்திருக்கிறார்கள்?  ஒரே நேரத்தில் சினிமாவைப் போல த்ரில்லாகவும், பரபரப்பாகவும் அதேநேரம் நகைச்சுவையாகவும் இந்த விளையாட்டு இருப்பதால்தான்.

உலகம் முழுவதும் சுமார் 25 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் மத்தியில் பல மாதங்களாக பல சுற்றுப் போட்டிகள்  நடத்தி அதில் சிறப்பானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து  அழைத்து இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கெடுக்க வைத்துள்ளார்கள்.இந்தப்  போட்டியைப் பொறுத்தவரை நேரடியாக ஒரே ஒரு விளையாட்டுதான். இதை பல சுற்றுகளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விளையாடி இருக்கிறார்கள்.  ஒவ்வொரு சுற்றிலும் புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களை அறிவித்திருக்கிறார்கள். முதலில் வந்த கைல் என்னும்  16 வயது இளைஞர், ‘புகா’ விளையாட்டு புனை பெயருடன் (avtar) விளையாடி ஆரம்பம் முதலே தன் நேர்த்தியை வெளிப்படுத்தி ‘கையில் நான்காம்’  சுற்றிலேயே அதிக புள்ளிகளை எடுத்துவிட்டார்.

இரண்டு போட்டிகள் வரை இறுதிவரை இறக்காமல் இருந்ததுடன் மேலும் சில போட்டிகளில் அவர் கடைசி மூன்று நபர்களில் ஒருவராக  இருந்திருக்கிறார். இதனால் புள்ளிகள் அதிகரித்தன. கடைசியில் முதல் பரிசையும் தட்டிச் சென்றார். இதில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் 20  வயதுக்கும் குறைவானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரது குடும்பத்தினரும் போட்டி நடந்த அரங்கில் குழுமி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். ‘என் பையன் / பொண்ணு எந்நேரமும் வீடியோ கேம் விளையாடிக்கிட்டே இருக்கான்/ள்’ என கவலைப்படும் பெற்றோர் நிச்சயம் மூன்றாம் பரிசை  வென்ற Connard என்னும் சிறுவனின் கதையை அறிய வேண்டும்.ஆமாம். எந்நேரமும் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருப்பாராம்  Connard. இது அவரது அப்பாவுக்கு பெரும் கவலையை அளித்திருக்கிறது. பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கவலைப்பட்டிருக்கிறார்.ஆனால், இந்த உலகப் போட்டியில் பங்கேற்று ஜெயிக்கத்தான் Connard தன்னை தயார்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். நிச்சயமாக தன்னால்  இந்தப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற முடியும் என உறுதியாக நம்பியிருக்கிறார்.

எனவே தன் தந்தையிடம் ஒரு டீல் போட்டிருக்கிறார்! ‘ஒரேஒரு வருடம் மட்டும் என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள். நிச்சயம் இந்த வீடியோ  கேம் பிரகாசமான வாழ்க்கையை எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன். ஒருவேளை இதில் நான் தோற்றால் அதன்  பிறகு நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்..!’மகனின் ஒப்பந்தத்துக்கு தந்தை சம்மதித்ததுடன் பிள்ளைக்கு உதவவும் செய்தார். விளைவு-மூன்றாவது  பரிசான ரூபாய் ஒரு கோடியை Connard இப்போது தட்டிச் சென்றிருக்கிறார்!யெஸ். இனி வீடியோ கேம்ஸ் வெறும் விளையாட்டல்ல. இதுவும் ஒரு  வேலை உருவாக்கும் துறை! அடுத்தகட்ட விளையாட்டுகளில் ஒன்று! வருங்காலத்தில் ஒலிம்பிக்கிலும் வீடியோ கேம்ஸ் சேர்க்கப்படலாம். ஐபிஎல்  போல் வீடியோ கேம்ஸும் நம் நாட்டில் நடத்தப்படலாம்!       

வினோத்  ஆறுமுகம்