லூசுப் பொண்ணுக்கு விடை கொடுத்தாச்சா?
தமிழ் சினிமாவின் முகம் மாறிக்கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கும், சினிமாவுக்கும், அதன் வழிபாட்டுக்கும் நம்மிடம் நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இப்போது தமிழ் சினிமா எடுத்திருக்கிற புது வடிவம் முழுக்கவும் பெண்கள் சார்ந்த படங்கள். அவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்கு வெட்டு சித்திரம் கிடைக்கிறது. அவர்களின் மனதின் அடியாழம் யோசிக்க வைக்கிறது. ஹீரோக்களுக்கு இணையான முக்கியத்துவமும், மக்களின் ஆதரவும் ஹீரோயின்களுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. ‘இமைக்கா நொடிகள்’, ‘மாயா’, ‘அறம்’, ‘ஐரா’, ‘கோலமாவு கோகிலா’, ‘36 வயதினிலே’, ‘ராட்சசி’, ‘ஆடை’, ‘ஜாக்பாட்’, ‘கேம் ஓவர்’ ‘கொலையுதிர் காலம்’ என தொடர்ந்து கிளம்பி வந்திருக்கும் படங்கள் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன.லூசுப்பெண்களாக வந்து விட்டுப்போனவர்கள் துணிச்சலாக வித்தியாசமான நடிப்பை முன் ைவக்கிறார்கள். கமர்ஷியல் சினிமாவிலும் பாடலின் அளவு குறைந்து மான்டேஜ் வகைக்கு மாறிக்கொண்டுவிட்டது. தமிழ் சினிமாவின் மைண்ட் செட் கலைந்து ஹீரோயின்கள் சொந்தக் குரலில் பேசி, அசத்தல் நடிப்பைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் இதை யாராவது சொல்லியிருந்தால் சிரித்து வைத்திருப்போம். சமீபத்தில் நயன்தாராதான் ஆரம்பித்து வைத்தார். அப்புறம் எல்லாமே அதனதன் போக்கில் மாறத்தொடங்கிவிட்டது. த்ரிஷாவின் ‘96’ நடிப்புகூட இந்த வகையை ஒட்டியதுதான். ‘ராட்சசி’யில் கோப முகம் காட்டிய ஜோதிகா, ‘ஜாக்பாட்’டில் சிரிக்க வைத்தது இப்படித்தான். ஆக ‘லூசுப்பொண்ணு’ வகையறாக்களுக்கு விடை கொடுத்தாகிவிட்டது. இப்படியெல்லாம் உருவம் மாற்றிக் காட்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பிரதானம் பெறும் விதம் பற்றி நம்முடைய கவனிப்பைக் கேள்விகளாக்கினோம். அன்பே பிரதானமாகக் களமெடுத்து விளையாடும் இயக்குநர் ராதாமோகனிடம் கேட்டால் பதில் இப்படி வருகிறது:
‘‘ரசிகர்கள் பல விஷயங்களை ரசிக்கத் தயாராகிட்டாங்க. ஹீரோயின்கள் முன்பே இப்படி இருந்திருக்கிறார்கள். உங்களுக்கு விஜயசாந்தியை மறந்து போனதா? ஆனால், இது நீண்ட இடைவெளிதான். இப்போது மறுபடியும் சரித்திரம் திரும்பிவிட்டது. அப்படித்தான் நான் இதை எடுத்துக்கொள்கிறேன். ரசனை மேம்பட்டதின் வெளிப்பாடே இது. புதிய கதைகள் புறப்பட்டு வரும். முன்பு ஹீரோக்களுக்கு மட்டுமே பிரதானமாக கதைகளை யோசிப்போம். கற்பனைக்குப் பஞ்சம் இல்லை. முன்பு பெண்களைப் பற்றி கதையை யோசித்தால், அதை நாமே நம் வாசிப்புக்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதான். நடைமுறைக்கு வரவே வராது.
இன்றைக்கு அதுமாதிரி நினைக்கத் தேவையில்லை. காலம் சிலவற்றை இப்படித்தான் புரட்டிப் போடும். இது கிரியேட்டருக்கு நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம்தான். பெண்களின் பெரும்பங்கு என்கிறபோது அதில் பெண் விடுதலை என்பது மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களை வைத்து பல விஷயங்கள் செய்ய முடியும். அதற்கான இடத்தை, கலைஞர்கள் பழையன களைந்து யோசிக்க இப்போது சரியான நேரம்...’’ எனச் சொல்கிறார்.தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளருமான தனஞ்செயன் சொல்லும் போது, ‘‘இவ்வகைப் படங்களுக்கு ஆரம்ப காரணம் நயன்தாராதான். அவரின் படங்கள் ‘மாயா’ தொடங்கி வெற்றி முகம் காட்டின. சேட்டிலைட், தெலுங்கு, இந்திப்பதிப்பு உரிமை, டிஜிட்டல், ஓவர்சீஸ் என இதர வருமானங்களும் கிடைத்தது, படம் திரையில் ஓடியும் வெற்றி அடைந்தது. தயாரிப்பாளர்கள் பொருள் ஈட்டினார்கள்.
‘கனா’ பெண் சார்ந்து இருந்தாலும், காசு பார்த்தது. ஜோதிகாவும் இந்தக் களத்தில் இறங்கியிருக்கிறார். அவருக்கென ஓர் இடம் இருக்கிறது. ஆனால், பெண்கள் சார்ந்த படங்களை பெரிய ஹீரோ படங்களோடு ஒப்பிடக்கூடாது. அவர்களின் 100 கோடி வசூலை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது...’’ என்கிறார். அவர் தரப்பை உணர்ந்து கொள்ளும்போது இயக்குநர் அமீர் எடுத்துரைப்பது இதுதான்: ‘‘பெண்களை மையப்படுத்தி படங்கள் வருவதே இல்லை. இப்பவும் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுகிற நிலைமைதான். அந்த மனநிலைதான் உலகம் முழுவதுமே இருக்கு. ஆனால், இப்படி வருகிற படங்கள் பெண்களின் உரிமையைப் பேசுதான்னு பார்க்கணும். அந்த இடம் கேள்விக்குறியாத்தான் இருக்கு. கே.பாலச்சந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘கல்யாண அகதிகள்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, பாரதிராஜாவின் ‘புதுமைப் பெண்’ மாதிரி உரிமை பேசுகிற படங்கள் குறைவாகத்தான் இருக்கு.
உதாரணமாகச் சொல்கிறேன். குறைத்து மதிப்பிடவில்லை. எனக்கு ‘ஜாக்பாட்’ படத்தைவிட ‘ராட்சசி’யை சிறந்த படமாகப் பார்க்க முடிகிறது. ‘ஜாக்பாட்’டில் நகைச்சுவை மட்டும்தான். ஓர் ஆண் செய்கிற வேலையை எல்லாம் பெண் செய்கிறாள் என்பதுதான். இதனால் ஆணுக்கு பெண் சரிநகர் சமம் என்பது கிடையாது. பெண்கள் தங்கள் பிறப்பிற்கும், உரிமைக்கும் பேசுவதே சிறந்தது. சண்டையே போடாமல் தன் கருத்துகளை முன்வைக்கலாம். தமிழகத்தில் நந்தினியை பெரிய உதாரணமாகப் பார்க்கலாம். மதுவிற்கு எதிராக ஒற்றை மனுஷியாக, எந்த இயக்கத்தின் பின்னும் நிற்காமல் அவர் போராடியது... இப்படியான பெண்களின் வாழ்க்கை படமாக வரணும். ‘ஆடை’ எதனால் விளம்பரம் பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும். இயக்குநர் சுதா போன்றவர்கள் இயக்குநராக வந்தாலும் அவர்களும் ஆண்களைப் போன்று வீரத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
இது ஆணாதிக்க உலகம். இதில் பெண்கள் சார்ந்த படம் என்பது மிகச்சிறிய பகுதி. வருஷத்திற்கு ஒரு தடவை நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். பூ வைத்து பொட்டு வைத்து, மாலை போட்டு நினைவுகூர்கிறோம். அவ்வளவுதான். மற்றபடி, மற்ற நாளெல்லாம் அவர்கள் உழைக்கத்தான் வேண்டும். இந்த ஆணாதிக்க சமூகத்தில் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கு. ‘நேர்கொண்ட பார்வை’ ஒரு நல்ல படம். இங்கே ஆண்கள் குடித்து, கும்மாளம் போட்டு, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்களே ஐம்பது வயதில் ஆன்மீகத்திற்கு வந்துவிட்டால் புனிதர். ஆனால், ஒரு பெண் இங்கே புனிதர் ஆகவே முடியாது. நயன்தாரா இங்கே இப்போது வியாபாரத்திற்கு பயன்படுகிறார். சிம்ரன், குஷ்பூ, ரேவதி, சுஜாதா, சாவித்திரி என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒருத்தர்தான் இருப்பாங்க . ஐந்தாறு பேர் இருக்க மாட்டாங்க.
ஆனால் ஹீரோக்கள் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யான்னு போய்க்கிட்டே இருக்கும். இந்த ratio பாருங்க, இதுதான் உண்மை...’’ என்கிறார்.இயக்குநர் பாலாஜி தரணிதரன் சொல்வது வேறு: ‘‘இது ரொம்ப நல்ல விஷயம். ஒரு விஷயத்தை பெண்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது ஆண்களுக்குத் தெரியாது. இப்போ மார்க்கெட் ஓபன் ஆகியிருக்கு. ஜன்னல் திறந்திருந்தால் காற்று வரும். பெண்களின் கஷ்டத்தை, துயரத்தை அவங்க மொழியில் சொன்னால் நல்லது. அவங்க ஆங்கிள் வேறு மாதிரிதான். நான்கு பெண்கள் சேர்ந்தால் என்ன பேசிக்குவாங்க என்பதே நமக்கு ஓரளவு தான் தெரியும். அவர்களைப் புரிந்துகொண்டால் நமக்கே மிகவும் நல்லது...’’ என எடுத்துரைக்கிறார். உண்மையில் நல்லதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ..!
* நா.கதிர்வேலன்
==============
|