நேர்கொண்ட பார்வை



தமிழ் சினிமா, பொருளில் தன்னை புதுப்பித்துக்கொண்ட ஒரு படமாய் ‘நேர்கொண்ட பார்வை’.அதிகாரமும், வக்கிரமும், புரிந்து கொள்ளாத  மனிதர்களும் எப்படி எளிய மனுஷிகளின் பிரியங்களையும் நடைமுறையையும் குதறிப் போடுகின்றனர் என்பதை அத்தனை அசலாக  சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினோத். ‘பிங்க்’ என இந்தியில் ‘ஹிட்’டடித்த படமே என்றாலும் தமிழுக்கென செதுக்கியதில் கூடுதல் கவனம்  பெறுகிறார்.எல்லாமே சுமுகமாக நடக்கிறது. ஒரு அபார்ட்மென்ட்டில் மூன்று தோழிகள் தங்கி வாழ்கின்றனர். அவர்கள் டின்னருக்கு ஒரு பெரிய  ஹோட்டலுக்குச் செல்ல அங்கே பிரச்னை. எதார்த்தமாக சந்திக்கிற ஆண்களின் மூலம் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட, சிறிய வன்முறையை நடத்தி  விட்டு தப்பிக்கிறார்கள். நிலைமை பெரிதாகி, கொலை முயற்சி வழக்கு என சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள்.

போலீஸ், அதிகாரம் இணைந்த நெட்வொர்க் எத்தனை வீரியமாகப் பரவியிருக்கிறது என்பதை அடுத்தடுத்து கோர்ட்டில் எடுத்துரைக்கிறார் வக்கீல்  அஜித். அவரின் மன ரீதியான பாதிப்பிற்குப் பிறகும் நடக்கிற வழக்கில் அந்தப் பெண்களின் நியாயம் ஜெயித்ததா? அஜித்தின் எடுத்துரைப்புகள்  நீதிமன்றத்திற்கும், சமூகத்திற்கும் கேட்டதா... என்பதே க்ளைமேக்ஸ்.நிச்சயம் அஜித்திற்கு ஹேட்ஸ் ஆஃப்! தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காத  ஹீரோக்களுக்கு மத்தியில் பெண்களின் பாதுகாப்பில் பெரு வெளிச்சம் பாய்ச்சும் படத்தில் நடிக்க நினைத்ததற்கே அவரைப் பாராட்டலாம். எத்தனை  பாட்டு, எத்தனை பன்ச் என தேடும் ஹீரோக்கள் மத்தியில் அவரின் முனைப்பு, கிரேட்!ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா என மாடர்ன் பெண்களின்  கேரக்டருக்கு அத்தனை பேரும் இயல்பான தேர்வுகள்.

நிலைமை சிக்கலானபிறகு அவர்களின் பதற்றம், குழப்பம், அழுது, அரற்றி பின் சமாதானமாகி நின்று சமாளிக்கும் இடங்கள் எல்லாமே அருமை. ரங்கராஜ் பாண்டே புதுமுகமாகத் தோன்றவில்லை. வழக்காடி எதிராளியை நிலைகுலையச் செய்யும் விதமெல்லாம் சிறப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும்  வித்யா பாலன் அழகு. சிறு பாத்திரம் என்றாலும் மை.பா.நாராயணன் கவர்கிறார். கவர்ச்சியின் எல்லையைத் தொட அனுமதிக்கும் கதையிலும்  கவனமாக விலகி நடந்திருப்பது… சபாஷ்!அவுட்டிங், பார்ட்டி, டேட்டிங் கலாசாரத்தில் திளைக்கும் அலட்சியமான, வக்கிரமான பணக்கார  வீட்டுப்பையனாக அர்ஜுன் கடுப்பேற்றுவதில் கச்சிதம். நடிகராக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நல்வரவு. ஆணின் மனப்போக்குக்கு எதிராக பல  இடங்களில் வசனங்கள் மரண அடி.

யுவன் ஷங்கரின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். ஆனால், பாடல்கள் அந்த வகையில்லை. நீரவ்ஷா ஒளிப்பதிவு பிசிறில்லாமல், தன்னை  வெளிக்காட்டாமல் நின்று நிதானிக்கிறது.அஜித்திற்காக திணிக்கப்பட்ட சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால், படத்திற்கு?  கோர்ட் காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பு ஏற்றியிருக்கலாம்.பெண்களின் இருப்பு மீதான அக்கறையையும், தவறான மனிதர்கள் மீதான கோபத்தையும்,  மனிதத்தையும் பேசும் இந்த பார்வையைஆதரிக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு