அன்றும் இன்றும் என்றும்
* அப்பல்லோ 11
இந்த சாகசப் பயணத்துக்காக செய்த செலவின் இன்றைய மதிப்பு 200 பில்லியன் டாலர்கள். அதாவது 13 லட்சம் கோடி ரூபாய்!பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம். சமீபத்தில் இந்தியா ‘சந்திரயான் -2’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப வெறும் 140 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு செய்தது குறிப்பிடத்தக்கது. மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்து ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கூகுள் உட்பட எல்லோரும் இதை கொண்டாடி வருகின்றனர். மனிதன் நிலவுக்குச் செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள், தொழில்நுட்பங்கள் பலவிதமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. முதல் முறையாக அப்பல்லோ 11 விண்கலத்தில்தான் ஒயர்லெஸ் மின் கருவிகள் பயன்படுத்தப்பட்டுளன. இப்போதைய ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் இட்டதே அப்பல்லோ 11 என்றால் அது மிகையாகாது.
அத்துடன் நிலவில் கால் வைப்பதற்கு நேர துல்லியம் முக்கியமானதாக இருந்தது. நேரத்தை மிகத் துல்லியமாக கணிப்பதற்கு குவார்ட்ஸ் கடிகாரங்கள் உருவாகின. அத்துடன் அப்பல்லோ 11ல் நீரைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்தான் இன்றும் நீரைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. தவிர, அப்பல்லோ 11ல் சென்ற விண்வெளி வீரர்கள் அணிந்த ஆடைகளைத்தான் இப்போதைய விண்வெளி வீரர்களும் அணிகிறார்கள். அந்தளவுக்குப் பாதுகாப்பானது அது.
விண்கலத்தில் இருந்த குளிரூட்டப்பட்ட அறைதான் இப்போதைய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன் மாதிரி. இதுமாதிரி நிலவுப் பயணத்தால் இன்றைய மனித வாழ்க்கைக்குக் கிடைத்த பலன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு விண்வெளிப் பயணமும் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.
* த.சக்திவேல்
|