நாவிதர்களின் வாழ்க்கை கதை ஆவணப்படுத்திய முதல் தமிழ் நாவல்



தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது ‘சுளுந்தீ’ நாவல். பண்டுவம் என்னும் சித்தமருத்துவம் பார்க்கும் நாவித குலத்தவனான  இராமன் மூலமாக நாவல் விரிகிறது. செந்தூரம் என்னும் பஸ்மத்தை அரைக்கும்போது இராமன் இறக்கிறார். இது விபத்தா? சதியா? எனும் துப்பறியும்  பாணியில் நகரும் நாவல், தமிழ் தொல்குடிகளின் பண்பாட்டை ஒரு வரலாற்றுப் பெட்டகமாக எடுத்துரைக்கிறது. வைகை அணைக்கு அருகாமையில்  உள்ள குறும்பபட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் முத்துநாகுவிடம், ‘சுளுந்தீ’ உருவானதற்கான பின்னணி குறித்துப் பேசினோம்.‘‘என்  தாத்தாவும் அப்பாவும் பண்டுவம் தெரிந்தவர்கள். தாத்தா ஏட்டிலிருந்து மருத்துவம் பார்த்தார். அப்பா அந்த ஏடுகளை புத்தகமாகக் கொண்டுவந்தார்.

85 - 88ல் மதுரை யாதவா கல்லூரியில் விலங்கியல் படித்துக் கொண்டிருந்தேன். சின்ன வயதிலிருந்தே மருந்துகளுக்குத் தேவையான  மூலிகைகளைப் பறித்து வந்து அரைத்துக் கொடுப்பது என் பொறுப்பு. இருந்தாலும் நான் மருத்துவராக வரமாட்டேன் என அப்பா நினைத்தார். அவரோட  மருத்துவத்தில் ஒரு ஆன்மிகம் இருந்தது. மருந்துகளை இப்படித்தான் உண்ணவேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்தன. அத்துடன்  மருத்துவருக்கான ஃபீஸ், பயணச் செலவு மற்றும் உணவு மட்டுமே.

இந்தக் காலத்துக்கு இது போதுமா? ஒருவேளை நானும் மருத்துவனாக வந்தால் இந்த முறையையே பின்பற்றவேண்டும் என அப்பா என்னிடம்  சொல்லியிருந்தார். பண்டுவம் பார்க்கும் குடும்பங்களில் அப்பாவும் மகனும் நெருக்கமாக இருப்பார்கள். இதனால் அப்பாவுக்குத் தெரிந்தது எல்லாமே  மகனுக்கும் தெரியும். இந்த அடிப்படையில்தான் என் குண நடவடிக்கைகளைப் பார்த்து, நான் மருத்துவத் தொழிலுக்கு லாயக்கற்றவன் என அப்பா  முடிவு செய்திருந்தார். ஆனால், அப்பாவையும் தாண்டி, மருத்துவத்தையும் தாண்டி நான் சுயேட்சையாக சில கேள்விகளுக்கு விடை தேடி  அலைந்தேன்...’’ என்று ஆரம்பித்த முத்துநாகு, தன் நாவலுக்கான முதல் விதையைப் பற்றி பகிர்ந்தார்.‘‘என் ஊரின் பெயர் குறும்பபட்டி. ஆனால், என்  ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு மாறமங்கலம் என பெயரை மாற்றிக் குறிப்பிட்டிருந்தது. மாறன் என்பது பாண்டியர்களுக்கான பெயர். இது உறைத்தது.  ஒரு நாள் இரவில் வேறு ஊரிலிருந்து வந்த ஆட்கள் எங்கள் ஊரிலிருந்த ஒரு குலசாமியைக் கும்பிட்டுப் போன செய்தியைக் கேள்விப்பட்டேன்.

விசாரித்தபோது, அவர்கள் ஊருக்குள் தண்ணீர்கூட குடிக்கவில்லை என்பது தெரிந்தது. தண்ணீர் கூட குடிக்காத அளவுக்கு அவர்களுக்கும் நமக்கும்  என்ன சண்டை, விரோதம் என யோசித்தேன். அவர்கள் கன்னடர்கள். இதிலிருந்து குறும்பபட்டியில் வாழ்ந்தவர்கள் குறும்பக் கவுண்டர்களாக இருக்க  வேண்டும் என முடிவுக்கு வந்தேன். சாதி ரீதியாக அவர்களைக் கவுடர்கள் எனச் சொன்னாலும் இந்தப் பகுதிகளில் அது திரிந்து கவுண்டர்கள் என  ஆகியிருந்தது.தென்  தமிழகத்தில் இவர்கள் நிறையபேர் இருந்தனர்.தமிழில் செஞ்சிப் பகுதிகளில்தான் தமிழ் குறும்பர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் இதை  ஊர்ஜிதப்படுத்தியது. அப்படியென்றால் மாறமங்கலம் என்ற பெயர் இந்த ஊருக்கு பழைய பெயர் என்றும், பிறகு கன்னடியர்கள் இந்த ஊருக்கு வந்ததால்  குறும்பபட்டியாக மாறியிருக்கும் என்றும் முடிவுக்கு வந்தேன்.

இதைத் தொடர்ந்து ஒரு நாள் ஆய்வாளர் தொ.பரமசிவத்தை நெல்லையில் சந்தித்தேன். அவரது ஆலோசனையின்படி நெல்லையைச் சுற்றிய  பகுதிகளில் ஆய்வுகள் செய்தேன். பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பிற்படுத்தப்பட்ட தெலுங்கு சாதிகள்தான் குடியிருந்தனர். சுற்றியிருந்த தமிழ்ச்  சாதிகளிடம் பேசும்போது மாடுகளுக்கான மேய்ச்சல் நிலமில்லாமல் தமிழ்க் குடிகள் நிலத்தைவிட்டு அகன்றது வரலாறாகப் பிடிபட்டது. இதைப்போல  பல்வேறு தொல் தமிழ்க்குடிகளின் நிலம் அபகரிக்கப்பட்டதை வாய்மொழியாகக் கேட்டேன். இதிலிருந்துதான் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை  நாவலில் பதிவு செய்ய முயற்சித்தேன்...’’ என்கிற முத்துநாகுவிடம் சுளுந்தீ மரம் பற்றியும், அதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை பற்றியும் கேட்டோம்.

‘‘ரொம்பவும் குட்டையாக வளரக்கூடியது சுளுந்தீ மரம். இந்த மரம் பிரிட்டிஷ் காலத்தில் சட்டப்படி தடைசெய்யப்பட்டாலும், இதற்கான தடை நாயக்கர்  காலத்திலேயே துவங்கிவிட்டது என்பதை அறிந்தேன். அத்துடன் அந்த மரத்தின் ஒன்றரை முழ குச்சி பச்சையாகவே ஐந்து மணி நேரத்துக்கு  எரியக்கூடியது. ஒரு காலத்தில் நெருப்புக்கு இந்த குச்சியே ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால், இதை வன்முறைக்கும் உபயோகிக்கலாம் என்பதால்  தடைக்கு உள்ளாகியிருக்கலாம்.. இந்தச் சம்பவம் தொல்குடிகளுக்குத் தொடர்புடையதாக இருப்பதால் நாவலுக்கான தலைப்பாகவும், அது ஆயுதமாக  மாறலாம் என்ற ஒரு அடிப்படையில் நாவலின் அடிநாதமாகவும் மாறிவிட்டது ‘சுளுந்தீ’...’’ என்கிற நாகு, மருந்துகளுக்கு அடிப்படையான செந்தூரம்  போன்ற கனிமங்கள் தடை செய்யப்பட்ட விஷயத்தையும் விவரித்தார்.

‘‘பண்டுவ மருத்துவத்துக்கு அடிப்படையான ஒரு மருந்து செந்தூரம். இதனுடன் ந்தகம், துத்தம், துருசு, பாதரசமும் முக்கியமானவை. 88ல் வழக்கமாக  மருந்துப் பொருட்களை வாங்கும் ஒரு கடையில் செந்தூரத்தைக் கேட்டபோது அது இல்லை எனவும், அதற்கு அரசு தடை விதித்திருப்பதாகவும்  சொன்னார்கள். செந்தூரம் போலவே கந்தகம், துத்தம் போன்ற மற்ற பொருட்களுக்கும் தடை என்றார்கள். விசாரித்ததில் நாயக்கர் ஆட்சிலேயே  இதற்கும் கெடுபிடி இருந்தது தெரியவந்தது.. ஆனால், பிரிட்டிஷ் காலத்தில்தான் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. வெடிக்கும் பொருளோடு  அதை ஒப்பிட்டதால் தடைவிதித்திருப்பதாக பிரிட்டிஷ் அரசின் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது. ஒரு வெடிக்கும் பொருளைத்தான் இவ்வளவு நாளும்  மருந்து என சொல்லி நாம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோமா என என் கேள்விகேட்கும் புத்தி வேலை செய்தது. பிறகுதான் பள்ளிக் காலத்தில்  இரசாயனவியலில் படித்த சில விஷயங்களைத் தூசு தட்ட ஆரம்பித்தேன். ஒரு காலத்தில் துப்பாக்கிக்குப் பயன்படும் ரவை குண்டு, எரிகுண்டு,  வெடிப்பொருட்களை செந்தூரம், துத்தம், கந்தகத்தின் கலவையில் தயாரித்தார்கள் என்ற பழைய வரலாற்றையும் அறிந்துகொண்டேன்.
 
இந்த நேரத்தில் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட ஆங்கில மருந்துகளிலும்  இதே செந்தூரம், கந்தகம், துத்தம் இருப்பதாக மேல்படிப்புக்கான இரசாயனவியல் புத்தகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அதற்காக தமிழ்  மருத்துவத்தை திருடி, ஆங்கில மருத்துவம் வளர்ந்தது என புரிந்துகொள்ளக்கூடாது. மனிதர்களின் நோயைக் குணப்படுத்த இந்த விதமான  கனிமங்களாலும் முடியும் என்பதுதான் உண்மை. ஆனால், தமிழ் மருத்துவத்தில் அடிப்படையான இந்தப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட  காலத்தில் ஆங்கில மருத்துவத்துக்கு இங்கே மவுசு அதிகரிப்பதையும் பார்த்தேன்...’’ என்னும் நாகுவிடம் நாவலில் வரும் இராமனும், அவரின் மகன்  மாடனும் பண்டுவம் பார்க்கும் நாவிதர்களாக இருக்க, ‘‘நாவிதர்கள் எல்லாம் பண்டுவர்களா...?’’ என்ற கேள்வியை வைத்தோம். ‘‘பல சாதிகளைச்  சேர்ந்தவர்கள் பண்டுவம் பார்த்தார்கள். வேலூர் போன்ற இடங்களில் மருந்துகளை இஸ்லாமியர்கள் செய்ததையும் பார்த்திருக்கிறேன். அதேபோல  சொந்தக் குலத்திலேயே நாவிதர்களை உருவாக்கும் போக்கு பிறகு சாதி இறுக்கத்தால் வளர்ந்தது. ஆனால், பழைய காலத்தில் ஒரு நாவிதன் எல்லா  குலத்துக்கும் நாவித தொழில் செய்பவனாக இருந்திருக்கிறான். இதனால் ஒருவரின் உடல்ரீதியான நோய்களை அறியும் நிலைக்கும் உள்ளாகிறான்.  இதன் காரணமாக நோய்களுக்கான முதலுதவியைச் செய்வது நாவிதர்களிடமிருந்து தொடங்கி இருக்கலாம்.

ஆனால், எல்லா நாவிதர்களுமே வைத்தியனாக முடியாது. அதற்கு சிறப்புத் தகுதி வேண்டும். அப்படிப்பட்ட தகுதியுடைய வர்களாகத்தான் இராமனும்  அவன் மகன் மாடனும் வருகிறார்கள். ஒரு சித்தரிடம்தான் இராமனும், இராமன் மூலம் மாடனும் மருத்துவத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்...’’ என்கிற  நாகுவிடம், ‘ஹீரோ,வில்லன் மாதிரி அந்தக்கால சமுதாயத்தை கறுப்பு வெள்ளையாக பிரிக்கமுடியுமா...?’ எனக் கேட்டோம். ‘‘விஜயநகர ஆட்சி  அல்லது நாயக்கர் கால நிர்வாக முறையில்தான் தமிழ் தொல்குடிகள் ஒரு சாதியாகவும் கன்னடியர்கள், தெலுங்கர்கள் இன்னொரு சாதியாகவும்  பிரிந்தார்கள் என சொல்லமுடியாது. தமிழ்ச் சாதிகள் ஏற்கனவே ஒரு குல அடையாளத்துடன் நிலவியல் ரீதியாக சிதறுண்டு கிடந்தார்கள். ஆனால்,  நாயக்கர் ஆட்சியில் இடம் விட்டு இடம் வந்த தமிழ்தொல்குடிகள் மிக நெருக்கமாகக்கூடிய சூழல் ஏற்பட்டது. காரணம் ஒரு பாதுகாப்பு. இதனால் சாதி  இறுக்கம் கண்டது. இந்த இறுக்கத்தைப் பார்த்துதான் இடம்பெயர்ந்து வந்தவர்கள் சாதிச்சட்டங்களை அடிப்படையாக்கினர்.

உண்மையில் மனுதர்மத்தின் சாதிவிதிகள் இந்தக் காலத்தில்தான் இறுக்கம் கொண்டது. உதாரணமாக, கத்தி வைத்திருக்கக்கூடாது என்பது போல, வில்  - அம்பு வைத்திருக்கக்கூடாது, இரவில் திருமணம் செய்யக்கூடாது, குலம் மாறி திருமணம் செய்யக்கூடாது, பெண்ணுக்கு அல்ல…. ஆணுக்குத்தான்  பரிசம் கொடுக்கவேண்டும் போன்ற பல விதிகள் அமலில் இருந்தன. இதை மீறுபவர்கள் குலம் நீக்கப்பட்டார்கள். இதேபோல நாயக்கர் ஆட்சியில்  இடம்பெயர்ந்து வந்த சாதியினர் கரட்டு நிலத்தை உழுது விவசாயம் செய்தார்கள் என வரலாறாக எழுதிவைத்திருக்கிறார்கள். அது முற்றிலும்  உண்மையில்லை என கள நிலவரங்கள் சொல்கின்றன. உதாரணமாக, கம்மவார் என்னும் தெலுங்கு சாதிச் சொல்லில் உள்ள கம்ம என்பதே மேகம்  என்றுதான் பொருள்படும். வார் என்பது நீரைக் குறிக்கும். இதற்கு பொருள் மழை என்றுதானே அர்த்தம்.

செழிப்பான நஞ்சை நிலமும் இல்லாமல் நீர்ப்பிடிப்புள்ள புஞ்சை நிலமும் இல்லாமல் மழையை நம்பி விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி, அதாவது  வானம் பார்த்து விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில்தான் இடம்பெயர்ந்த குடிகள் குடியேறினார்கள். இந்த  இடங்களில்தான் அடித்தள தமிழ்க்குடிகள்  குத்தகைக்கோ அல்லது இனாமாகவோ விவசாயமும் தொழிலும் பார்த்துவந்தார்கள்.விஜயநகர ஆட்சிக்கு முன் ஏற்றப் பாடல்கள்தான் தமிழில்  இருந்தன. ஆனால், கம்மவார் என்பதிலிருந்து பிறந்த ‘கம்மா’ எனும் சொல்லிலிருந்து கம்மளை எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கான  சொல் புழக்கத்தில் வந்தது. சோழர்களும், பாண்டியர்களும் கம்மாய்களை வெட்டிட, இந்த இடம்பெயர் இனம் குட்டைகளையும் கிணற்றையும்தான்  அதிகம் வெட்டியது. அதற்காக தமிழ் தொல்குடிகள் நிலம் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால், நிலத்தில் விவசாயம் உட்பட  பல தொழில்களைச் செய்தார்கள் என்று சொல்லலாம். மேய்ச்சல் நிலம் இல்லாமல்கூட இடையர்கள் பலர் இடம்பெயர்ந்தார்கள். உதாரணம், மாதாரி  குலங்கள். இவற்றையெல்லாம் நாவல் பேசுகிறது...’’ என்கிறார் முத்துநாகு.

* டி.ரஞ்சித்