டான்ஸ் என்னும் பெயரில் தட்டாமாலை ஆடும் பெண்கள்!
* அராத்து 5

ஆட்டம் உச்சத்தில் இருக்கையில் முதன் முதலாக தங்களுடன் வந்தவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பிக்கும் தருணம்  இதுதான். உடனே ஆஹா சரக்கடித்து காத்திருந்தால் பைங்கிளிகள் தோளைச் சுற்றி ஆட்டம் போடும் என தப்புக்கணக்கு போட வேண்டாம். பெண்கள் மற்ற பெண்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பிப்பார்கள். அதுவும் சுவாரசியமாக எல்லாம் இருக்காது. கிராமங்களில் சின்னப்பெண்கள் வட்டமாக  நின்றுகொண்டு கைகளைக் கோர்த்துக்கொண்டு, “தட்டா மாலை தாமரைப்பூ, சுத்துச் சுத்தி சுண்ணாம்பு...’’ என பாடிக்கொண்டு சுற்றிச் சுற்றி  வருவார்களே... அதே போலத்தான் இங்கும் ஆடுவார்கள். அது ஹிப் ஹாப்பாக இருந்தாலும் சரி மரணம் மாஸு மரணமாக இருந்தாலும் சரி தட்டா  மாலை தாமரைப்பூதான்! டான்ஸ் ஃப்ளோரில் கூட்டம் இப்போது அதிகம் இருப்பதால் சும்மா  பேருந்துக்கு காத்திருப்பது போல கால் மாற்றி மாற்றி  நின்று கொண்டிருந்தாலும், நடனம் ஆடிக்கொண்டு இருந்தாலும் யார் மீதாவது பட்டுத்தான் ஆக வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்திற்காக பலரும் டான்ஸ் ஃப்ளோருக்கு வந்து கால் மாற்றி டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்கள். எதாவது ஒரு பெண், ஒரு செகண்ட்  உரச மாட்டாளா என்ற அல்ப ஆசைதான் காரணம்!பெண்கள், தானே உரசுவது போல ஒரு சிச்சுவேஷனை சிலர் உருவாக்கிக்கொண்டு தேவுடு  காத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பார்கள். அவள் திரும்பினாலே இவர்கள் மீது அவள் மேனி பட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போல  நின்றுகொள்ளும் டெக்னிக் ஆசாமிகள் இவர்கள். போதை கொடுக்கும் தைரியத்தில் சில ஆண்கள் தாங்களாகவே போய் உரசுவது உண்டு. மெல்லுரசல்  என்றால் பெண்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது தவறான தகவல். அவர்களுக்கு சுரணை இல்லாததால் அந்த  விஷயம் அவர்களுக்குத் தெரியாது!ஆட்டு மந்தையில் கூட்டமாகச் செல்கையில் ஒரு ஆடு லேசாக இன்னொரு ஆட்டின் மீது பட்டால், அந்த  ஆட்டுக்குத் தெரியுமா?! அதுபோலத்தான் இதுவும். அதுவே அந்த ஆடு குடித்தும் இருந்தால்? பாவம் அந்த ஆட்டுக்கு எப்படித் தெரியும்?!

அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்காததை பாஸிடிவ் சிக்னலாக எடுத்துக்கொண்டு, முன்னேறி மூக்குடைபடுபவர்கள் சிலர். பெரிய அரசு அலுவலர்கள்,  தொப்பைத் தொழிலதிபர்கள் எல்லாம் சின்னஞ்சிறு பெண்களின் பக்கம் பார்வையைச் செலுத்தி கொக்கு போல ஒற்றைக் காலில் நின்று  கொண்டிருப்பார்கள். ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்ததும் அவர்களை நெருங்கி, ‘ஹாய்...’ சொல்லிவிட்டு, யூத் போன்ற பாடி லாங்வேஜில் தங்கப்  பல்லைக் காட்டிக்கொண்டு பேச ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு கொஞ்சமும் கிரியேட்டிவிட்டி கிடையாது. எல்லோரும் சொல்லி வைத்தாற்போல,  ‘‘உங்க பில்லை நான் செட்டில் செய்யறேன்!’’ என்றே சொல்வார்கள். பெண்கள் குழுவாக இருந்தால் பெரும்பாலும் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளவே  செய்கிறார்கள். தனியாகவோ, இரண்டு பெண்களாக இருந்தாலோ மென்மையாக மறுப்பார்கள். ஆனாலும் தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருப்பார்கள்  இந்த பணக்கார அங்கிள்கள்.

பில் செட்டில் செய்து, இம்ப்ரஸ் செய்து, இளம் பெண்ணை மயக்கி, மடக்கி தூக்கிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.   
‘பில் செட்டில் செய்ங்க...’ என்று பெண்கள் விருப்பம் தெரிவித்ததும், அடுத்த பிட்டை போடுவார்கள். தங்களுடைய காஸ்ட்லி கார், ஈசிஆர் பங்களா என  அடுக்க ஆரம்பிப்பார்கள். மினிஸ்டரைத் தெரியும், ஐஏஎஸ் ஆஃபீஸர்ஸ் எல்லாம் தெரியும், என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கலாம் என தூண்டில்  போடுவார்கள். எத்தனை மீன்கள் மாட்டி ஃபிஷ் ஃபிரை ஆனதோ... யாமறியோம்! இதைப்பற்றி ஒரு இளம் தோழியிடம் கேட்டேன்.  ‘இந்தப்பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? போய் மாட்டிக்குவாங்களா?’’  ‘‘அதெல்லாம் தெரியும் அராத்து. ஒண்ணுந் தெரியாத பாப்பா யாரும்  பப்புக்கு போய் போட்டுக்க மாட்டா தாப்பா!’’ என்றார் அவர். சில பெண்கள் வேலட்டில் ஒரு ரூபா கூட இல்லாமல் தைரியமாக பப்புக்குச்  செல்கிறார்கள். காசே இல்லாமல் முக்க முக்கக் குடிக்கிறார்கள், ஆடுகிறார்கள்.

யார் நம்மை நோட்டம் விடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அந்த வழிசல் ஆள் எப்படியும் வந்து பில் செட்டில் செய்கிறேன்  என்று சொல்வான் என்று தெரியும். சொன்னதும் பில்லை செட்டில் செய்து விட்டு எஸ்கேப் என்றார் அவர். ‘‘இல்லை... பில்லை செட்டில்  செய்ததால்… அதைத்தாண்டி வேறு ஏதேனும்...’’ என்றேன் நான்.“இட் டிபெண்ட்ஸ் அராத்து. ஆனா, எல்லாமும் தெரிஞ்சேதான் நடக்கும். யாரும்  இங்கே அப்பாவியோ அபலையோ இல்லை!’’ என்றார் அவர்.இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் உண்டு. ஜோடியாகப் போக வேண்டும்  என்பதால், ஒரு ஓட்டை உடைசல் ஆணையோ, பெண்ணையோ, நாகரீக உடையைப் போட்டு அழைத்துச் செல்லும் பழக்கம் உள்ளது. அவர்களுக்குள்  என்ன டீலிங் என்றால், உள்ளே போகும்வரை ஒன்றாக இருக்கலாம். நுழைந்ததும் பிரிந்துவிடவேண்டும். நீ யாரையாவது தேத்திக்கோ, நான்  யாரையாவது தேத்திக்கறேன் என்பதே!

இருவரும் உள்ளே நுழைந்து வெளியேறும்போது வேறு ஆட்களுடன் செல்வார்கள். ஆனால், இதில் காமெடி என்னவென்றால், அவர்கள் நட்பு பாராட்டி  அவர்களுடன் வெளியேறும் ஆட்களும் இதேபோல ஓட்டை உடைசல் கேட்டகிரி என்பதுதான்! அவர்களும் அந்த டீலிங்கில் உள்ளே வந்தவர்கள்தான்! இந்தக் கூத்துகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ஸ்மோக்கிங் ஏரியாவில் கொடூரமான ஒன்று நடந்து கொண்டிருக்கும்!பப்பில் நுழைந்ததில்  இருந்து சில ஆத்மாக்கள் ஸ்மோக்கிங்ஏரியாவிலேயே  இருப்பார்கள். அந்த ஸ்மோக்கிங் ஏரியா குப்பைத் தொட்டி போல இருக்கும். அங்கே   உட்கார்ந்துகொண்டு குடிப்பதற்கு, வீட்டின் வாசப்படியிலோ அல்லது மொட்டை  மாடிப்படியிலோ அமர்ந்து குடிக்கலாம், ஆனாலும் சிலர் தொடர்ந்து   ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து பப்புக்கு வந்து அந்த கேவலமான   ஸ்மோக்கிங் ஏரியாவிலேயே பொழுதைக் கழித்து சாவார்கள்.

சிலர் கேர்ள்  ஃபிரண்டுடன் வந்து, அவளை பப்பில் விட்டு விட்டு கடைசி வரை ஸ்மோக்கிங்  ஏரியாவிலேயே இருப்பார்கள். இது என்ன மாதிரியான  மனநலக் கோளாறு என்று யாரும்  கண்டுபிடிக்கவில்லை.ஒழுங்கான(!) ஜோடிகள் தங்கள் இணைகளுடன் கிளம்ப  ஆரம்பிப்பார்கள். பெண்கள்  குழுவோடு வந்தவர்கள், ஆடிக்கொண்டு இருக்கையில்,  அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் டாய்லெட்டில் போதையேறி  படுத்துக் கிடப்பாள். அவள்  டாய்லெட்டில் கிடப்பது அந்தக் குழுவுக்குத்  தெரியாது. அதேபோல பொறுப்பான பாய் ஃபிரண்டுடன் வந்த கேர்ள் ஃபிரண்டுகளின்  நிலைமை ஓகே.  ஆனால், தள்ளிக் கொண்டு வந்த ஆண்கள் போதையேறிய பெண்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்! அவர்கள் உடை விலகி, வாந்தி எடுத்து,  டாய்லெட்டில்  அசிங்கப்பட வேண்டியதுதான். அப்போது யாரேனும் வாந்தியைக் கையில் பிடித்த மகான், அவளுக்கு காவியக் காதலன் ஆகிவிடவும்  வாய்ப்புள்ளது!

(ரவுண்ட் அப் தொடரும்)