கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்
* பாவம் போக்கும் திருவள்ளூர் கோயில் குளம் 24
காய்கறி வாங்கிக்கொண்டு நாகராஜன் வீட்டுக்குள் நுழைந்தார்.அவரைக் கண்டதும் கமலாவுக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கில் வந்தது போல் இருந்தது. கண்களில் நீர் மல்க ‘‘குழந்தை ரெண்டு நாளா வயத்துவலினால அழுதுகிட்டே இருக்கு தாத்தா. மருந்தும் குடுத்துட்டேன். அப்படி இருந்தும் சரியாகல. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.... நீங்கதான் ஒரு நல்ல வழிய சொல்லணும்...’’ என்றபடி கையெடுத்துக் கும்பிட்டாள்.
‘‘ரொம்ப சின்ன விஷயம்மா. இதுக்கு எதுக்கு கையெல்லாம் குவிக்கிற..? கொஞ்சம் குழந்தையை இங்க குடு...’’ நாகராஜன் கேட்டார்.‘‘நம்ம கண்ணன்தான் குழந்தையை சமாதானப்படுத்தறேன்னு வைச்சுட்டு இருந்தான்... கண்ணா...’’ நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி குரல் கொடுத்தாள்.‘‘என்ன பாட்டி...’’ என்றபடி குழந்தையுடன் கண்ணன் பக்கத்து அறையில் இருந்து வந்தான்.
‘‘தாத்தாகிட்ட குழந்தையை கொடு...’’ என்றாள் ஆனந்தி. கண்ணனும் அழுது கொண்டிருந்த குழந்தையை நாகராஜனிடம் கொடுத்தான். வாங்கியவர் தனது கைகளில் ஏந்தி - ‘பாண்டவர் தூதனாகப் பலித்தருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி...’ - என்ற வரிகளை தாலாட்டைப் போல பாடினார்.
அதைக் கேட்டதும் குழந்தை தனது வலி எல்லாவற்றையும் மறந்து நாகராஜனின் கைகளிலேயே உறங்கிவிட்டது!‘‘தாத்தா... இது என்ன பாட்டு? குழந்தை இதைக் கேட்டதுமே தூங்கிருச்சே!’’ ஆச்சர்யத்துடன் கமலா கேட்டாள்.நாகராஜன், புன்னகைத்துக் கொண்டே குழந்தையை அவளிடம் கொடுத்தார். ‘‘இது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மேல ஒரு பெரிய மகான் பாடின பாட்டு. இதுல என்ன ஆச்சரியம்னா அவர் ஒரு பெரிய சிவ பக்தர்!’’‘‘யார் அந்த மகான் தாத்தா? எந்த மாதிரி சூழ்நிலைல அவர் இத பாடினார்?’’ கண்ணன் படபடத்தான். கமலாவின் முகத்திலும் அதே கேள்வி நிரம்பி வழியவே நாகராஜன் சொல்லத் தொடங்கினார். ‘‘அதுக்கு முன்னாடி வீரராகவ பெருமாள் பத்தி சொல்லிடறேன். ரொம்ப காலங்களுக்கு முன்னாடி பத்ரிகாஷ்ரமத்துல...’’
எங்கும் பனி சூழ்ந்த பிரதேசமான பத்ரி. அங்கே கொழுந்து விட்டு ஒரு ஹோமத் தீ எரிந்து கொண்டிருந்தது. அதன் எதிரில் இருந்த அந்த முனிவர் தனது தேஜஸினால் அந்தத் தீயை விட பிரகாசமாக இருந்தார். மகாமுனிவரான அவரது தவ வலிமையால் அந்த இடத்ல் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்திருந்தது. அவர் வேறு யாருமில்லை... புரு புண்ணிய மகரிஷிதான். நெடுங்காலமாக பிள்ளை வரம் வேண்டி அரிசியைக் கொண்டு ஹோமம் வளர்த்து வருகிறார் அந்த முனி புங்கவர். காலம் சென்றதே ஒழிய அவரது மனதிடம் குறையவே இல்லை. என்றாவது ஒருநாள் மாலவன் வருவான்... குழந்தை வரம் தருவான் என்று அவர் நம்பினார். அவர் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அன்று அவர் செய்த தவப் பலனும் புண்ணியமும் கூடி வந்தது போல மாதவன் அவருக்கு காட்சி கொடுத்தார்.
கண்களிரண்டிலும் கருணைபொங்க எதிரில் நிற்கும் வேத விழுப் பொருளைக் கண்ட மாத்திரத்தில் தவத்தால் ஏற்பட்ட களைப்பை அந்த முனிவர் மறந்து போனார். கருட வாகனம் ஏறி வந்த அந்த பரம்பொருளை, முனிவர் பலவாறு போற்றித் துதித்தார். அவருக்கு மேலும் கருணை பொழிய எண்ணம் கொண்டான் அந்த மாயவன். ‘‘புரு புண்ணியரே! உமது தவம் எனது மனத்தை உருக்கிவிட்டது. உமது கோரிக்கை விரைவில் நிறைவேறும். கல்வியிலும் ஞானத்திலும் சிறந்த மகன் உமக்கு பிறப்பான். சாலி எனப்படும் அரிசியைக் கொண்டு நீர் எம்மை வேள்வியில் ஆராதித்ததன் பயனாக உமக்கு தோன்றப்போகும் மகன் சாலி ஹோத்திரன் என்றே அழைக்கப் படுவான்!அவனால் உன் குலத்தின் பெருமை ஓங்கும். வருத்தம் வேண்டாம்...’’ புரு புண்ணியர் கேட்ட வரத்தை அவருக்கு தந்தார் அந்த மாதவன். இந்த வார்த்தைகள் முனிவரது செவிகளில் தேன் வந்து பாய்ந்தது போல விழுந்தது. அதைக் கேட்டவுடன் அவர் மாதவன் கருணையை எண்ணி வியந்து அவர் பாதத்தில் சரணடைந்தார்.
மாதவன் தன் விழிகளால் அவருக்கு ஆசி வழங்கிக் கொண்டே காற்றோடு காற்றாகக் கலந்தார். நாட்கள் பல சென்றன. மாதவன் தந்த வரத்தின் பயனாக புரு புண்ணியருக்கு ஒரு மகன் பிறந்தார். வளர்பிறை போல வளர்ந்தார். சிறுவயதிலேயே வேதம் அனைத்தையும் ஓதி உணர்ந்தார். வேதத்தின் பொருள் அந்த மாதவனைப் போற்றித் துதிப்பதே என்னும் உண்மை அவரது மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது. ஆகவே பல தலங்களுக்குச் சென்று அவரை வணங்க யாத்திரைக்கு புறப்பட்டார். அப்படிச் சென்றவர் இறுதியாக தமிழ்த்திரு நாட்டுக்கு வந்தார். அவர் இங்கு வந்து சேர்ந்த நாள் ஒரு தை அமாவாசை. வந்ததும் அவரது கண்களில் ஒரு குளம் தென்பட்டது. அதில் தேவர்கள், முனிவர்களுடன் பலரும் நீராடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட சாலிஹோத்திரருக்கு, சாதாரண குளத்திற்கு ஏன் இந்தக் கோலாகலம் என்று விளங்கவே இல்லை. தன் சந்தேகத்தை யாரிடமாவது கேட்டு விடுவது என்று தீர்மானித்தார். அருகில் நீராடச் சென்று கொண்டிருந்த முனிவரிடம் சென்றார். ‘‘சுவாமி! தேவர்கள் முதல் கொண்டு அனைவரும் இந்த அற்புதத் தீர்த்தத்தில் நீராடுகின்றனர். நீராடினவர் அனைவரது பாவங்களும் கழிந்தது போல அவர்களுடைய முகத்தில் அற்புத ஒளியையும் காண்கிறேன். இத்தனை பெருமை இந்த தீர்த்தத்திற்கு வரக் காரணம் என்ன?’’ பணிவுடன் கேட்டார்.அந்த முனிவரும் அக்குளத்தின் பெருமையை சொல்லத் தொடங்கினார்...
தன்னை மதிக்காமல் யாகம் செய்த தட்சனையும் அவனது வேள்வியையும் தனது அம்சமான வீரபத்திரரைக் கொண்டு அழித்தொழித்தார் பரமேஸ்வரன். யாகத்தை பாதியில் நிறுத்தியதாலும் வேதம் அறிந்த தட்சனைக் கொன்றதாலும் அந்த மகேசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது...‘‘உலகத்தையே ஆளும் பரமனுக்கு தோஷமானு நீங்க கேட்கலாம். தனக்கு தோஷம் ஏற்பட்டதாக ஒரு நாடகமாடி பூலோகத்துல வாழற நம் குறைகளைத் தீர்க்க ஓர் அற்புதமான தலத்தை உருவாக்கறதே அந்த மகேசனோட சித்தம். அதுமட்டுமில்ல... பெருமாளோட பெருமையை சைவர்களுக்கு உணர்த்தவும் அவர் விரும்பினார்...’’ என்றபடி நாகராஜன் தொடர்ந்தார்.பிரம்மஹத்தி தோஷத்தினால் தன்னிலை மறந்து ஆண்டியைப்போலத் திரிந்து கொண்டிருந்தார் கைலாச வாசன். அவரைக் கண்டு மாதவனின் உள்ளம் இளகியது.
‘‘பரமேஸ்வரா! பூலோகத்தில் உள்ள தமிழ்த் திரு நாட்டில் ஹிருத்தாபநாசினி என்ற அற்புதமான ஒரு திருக்குளம் உள்ளது. அதன் வாயு மூலையில் அமர்ந்து எம்மை நோக்கி தவம் புரியுங்கள். தக்க தருணம் வரும்போது உம்மைத் தடுத்தாட்கொண்டு நற்கதி தருகிறேன்!’’ வைகுண்டத்தில் இருந்தபடியே மாதவன் குரல் கொடுத்தார். இதைக் கேட்டதும் மகேசனின் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. தாமதிக்காமல் ஹிருத்தாபநாசினி குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். வாய் நிறைய திரு அஷ்டாக்ஷரத்தை ஓதி மாதவனை நோக்கி தவம் புரிந்தார் மகாதேவன். அவரது தவம் கனியும் பொற் காலம் வந்தது. ஆகவே, கருடவாகனம் ஏறி ஆனந்தமாக ஈஸ்வரனுக்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி தந்தார். அந்த ஆதிமூலனை வாயாரத் துதித்து மனதாரப் போற்றினார் மகேசன்.
‘‘முக்கண் முதல்வனே! உங்கள் தோஷம் தீரும் சமயம் வந்துவிட்டது. இதோ இந்த ஹிருத்தாப நாசினி குளத்தில் நீராடுங்கள்...’’ மாயக் கண்ணன் சொன்னார்.அதை வேதவாக்காகக் கொண்டு மகேசன் அந்தக் குளத்தில் நீராடினார். அத்துடன் அவரது தோஷம் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. முன்பைவிட அதிகப் பொலிவுடன் மின்னினார் பரமேஸ்வரன். தேநேரம் அவரது மனதை ஒரு கேள்வி வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது என்பதை அவரது முகம் நன்கு காட்டிக் கொடுத்தது. அதை அந்த மாயவன் கவனிக்கத் தவறவில்லை. ‘‘சாதாரண குளத்திற்கு தோஷம் போக்கும் சக்தி எங்கிருந்து வந்தது என்று யோசிக்கிறீர்களா?’’ ‘‘முற்றும் உணர்ந்த தங்களிடம் எதை மறைக்க முடியும்? கேள்வி கேட்ட நீங்களே பதிலையும் சொல்லிவிடுங்கள்!’’
‘‘எனக்கு பிரத்யும்மன் என்று ஒரு பக்தன் இருந்தான். அவன் இந்தக் குளக்கரையில் எம்மை நோக்கி தவம் இயற்றினான். அவன் பக்தியை மெச்சி அவனுக்கு நான் காட்சி தந்து வேண்டும் வரம் யாது என்று வினவினேன். அவன் இந்தக் குளம் மாபெரும் மகத்துவம் பெற வேண்டும் என்றும், இதில் அனைத்து புனித நதிகளும் நித்ய வாசம் செய்ய வேண்டும் என்றும், இதில் (முக்கியமாக தை அமாவாசை அன்று) நீராடுபவர்களின் பாவம், தோஷங்கள், நோய்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்றும் வேண்டினான்...’’
‘‘நீங்கள்தான் வேண்டுவோர் வேண்டியதை அளிப்பவர் ஆயிற்றே? அவன் வேண்டிய வரத்தை அவனுக்குத் தந்தருளினீர்கள்! அதற்கு அத்தாட்சியாக இதோ உங்கள் முன் நான் நிற்கிறேன்!’’ என்று எதிரில் இருந்த மாயவனைப் பார்த்துப் புன்னகைத்தார் மகேசன். அந்த மாதவனும் அதை ஆமோதிப்பது போல தன் பவளவாய் திறந்து நகைத்தார். அது பவளப் பெட்டியில் இருந்த முத்துக்கள் சிந்தியது போல இருந்தது...
‘‘இப்படி மாதவன் அருளால் தோஷம் நீங்கப் பெற்ற பரமேஸ்வரன் இன்றும் இங்கு காட்சி அளிக்கிறார்...’’ என்றபடி அந்த முனிவர் ஆள்காட்டி விரலால் ஈஸ்வரன் கோயில் கோபுரத்தைக் காட்டினார். உடனே அவர் காட்டிய திக்கை நோக்கினார் சாலிஹோத்திரர். அங்கு விண்முட்ட ஒரு கோபுரம் ஓங்கி உயர்ந்திருந்தது. அது, மாதவனை நம்பினார் என்றும் கெடுவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது. அதைக் கண்ட சாலிஹோத்திரர் மனதில் புதியதொரு எண்ணம் தோன்றியது. (கஷ்டங்கள் தீரும்)
ஜி.மகேஷ் ஓவியம்: ஸ்யாம்
|