விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரு ம் உங்கள் முயற்சி எந்த நிலையில் உள்ளது?



* மனம் திறக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

கோலிவுட்டில் நாளைய இயக்குநர்கள் ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்றாலும் கூட கொஞ்சமும் அசராமல் பரபரக்கிறார் இயக்குநரும் நடிகருமான  எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு காலத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நீதிக்கு தண்டனை’, ‘வீட்டுக்கொரு கண்ணகி’, ‘இது எங்கள் நீதி’ என புரட்சிப் படங்கள்  இயக்கியவர். தமிழ் சினிமாவில் 41வது ஆண்டை கொண்டாடும் அவரின் 70வது படமாக ரெடியாகி வருகிறது, ‘சி.எம். என்கிற cap maaரி’.  ‘‘டைரக்‌ஷனில் இது என் கடைசி படம்...’’ எனச் சொல்லி இன்னும் அதிர வைக்கிறார் எஸ்.ஏ.சி.‘‘எழுபது படம் டைரக்ட் பண்ணினதை பெருசா  நினைக்கல. சினிமாவின் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சியையும் அதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து பார்த்திருக்கேன். அதுக்கேத்த மாதிரி  என்னையும் அப்டேட்டா மாத்திக்கிட்டிருக்கேன். 25 வருஷத்துக்கு முன்னாடி தமிழ்ப் படங்கள் மட்டும்தான் நாம பார்த்தோம். அயல்நாட்டு தாக்கம்  இல்லாமல் இருந்தது. ஆங்கிலப் படங்கள் பார்த்ததில்ல. நம்ம பக்கத்து மாநில மொழிப்படங்களைக் கூட பார்க்க மாட்டோம்.

ஒரு காலம் வந்துச்சு. இங்கிலீஷ் படங்கள் உள்ளே வந்திடுச்சு. இங்கிலீஷை இங்கிலீஷ் படமா மட்டும் பார்த்திட்டிருந்தோம். அடுத்த காலம் வந்துச்சு.  அதை டப் செய்து தமிழ்ல பார்க்க ஆரம்பிச்சோம். அதோட மேக்கிங் ஸ்டைல், கல்ச்சர், டெக்னாலஜிக்கு போட்டியா இங்கேயும் மாறத் துவங்கினாங்க.  எல்லாமே காலத்தின் கட்டாயம்...’’ தீர்க்கமாக சொல்லும் எஸ்.ஏ.சி., தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.‘‘என் முதல் படம் அஞ்சு மொழிகள்ல ரீமேக்  செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்லயும் இயக்கியிருக்கேன். முப்பது வருஷங்களுக்கு இங்கே நானும் பல பரிசோதனைகளை  முயற்சி செஞ்சிருக்கேன். விஜயகாந்த், சுதாசந்திரன், ரகுமான் நடிச்ச படம், ‘வசந்த ராகம்’. சந்தர்ப்ப வசத்தால ஒரு பெண், ரெண்டு பேருக்கு தாலி  கட்டிய மனைவியாகறா.

இப்படி புரட்சி விஷயங்களை எப்பவோ தொட்டிருக்கேன். ‘முத்தம்’னு இன்னொரு படம். டிஜிட்டல்ல அதை பண்ணினேன். ரெண்டே ரெண்டு பீட்டா  கேமராக்களை வச்சு பண்ணினோம். அதுல கிராஃபிக்ஸ், ப்ளூமேட்னு, டிஐனு பல விஷயங்கள் முயற்சி பண்ணியிருப்பேன். அதுல வரும் ஒரு  பாடலுக்காக லாஸ்வேகாஸுக்கே போய், பிளேட்ஸ் எடுத்துட்டு வந்தோம். முழுப் பாடலையுமே கிரீன்மேட்ல பண்ணியிருக்கேன். ‘முத்தம்’ வசூல்  ரீதியாக போகலைனாலும், ‘வசந்த ராகம்’ பெரிய ஹிட். அதே மாதிரி ‘நீதிக்கு தண்டனை’ அரசியல்ல ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சிப்  படம்.

அப்பவெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறைதான் டிரெண்ட் மாறும். இப்ப அப்படியில்ல. ஆறு மாசத்துக்கு ஒருமுறை ஜானர், டிரெண்ட் எல்லாம்  மாறிக்கிட்டே இருக்கு. அதுக்கேத்த மாதிரி நானும் அப்டேட்டாகிக்கிட்டேன். இதுவரைக்கும் எங்கேயும் நான் சறுக்கினதில்ல. அதனாலதான் இன்னமும்  சினிமாவுல இருக்க முடியுது. நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் ‘டூரிங் டாக்கீஸ்’ பண்ணும்போது, அடுத்து படம் இயக்குற எந்த ஒரு ஐடியாவும்  இல்லாமல் இருந்தேன். ஒருநாள் கணக்கு போட்டு பார்க்கும்போது, அது 69வது படமா தெரிஞ்சது. கணக்கு ஏன் தொக்கி நிக்குதுனு அடுத்த படம்  பண்ண யோசிக்க ஆரம்பிச்சேன். இவ்ளோ படங்கள் இயக்கினதை சாதனையா நினைக்கல. எப்பவும் உழைச்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புறேன். 58  வயசில ஓய்வு பெற இது ஒண்ணும் அரசு வேலையில்லையே! சினிமா ஒரு கிரியேட்டிவ் ஒர்க். என்னோட மூளை ஃப்ரெஷ்ஷா வேலை செய்யுற  வரை, என் மனசு இளமையா இருக்கற வரை, நான் ஹெல்த்தியா இருக்கும் வரைக்கும் ஓடிட்டே இருக்கணும்னு விரும்புறேன்.

சினிமாவில் ஈடுபாடு இருக்கும் வரை இந்த தொழிலை பண்ணிட்டே இருக்க முடியும். என் இத்தனை வருஷ அனுபவத்தில் சினிமாவில் நான் கத்துக்க  முடியாத ஒரு விஷயம்னா, எந்தப் படம் வெற்றியாகுது... எந்தப் படம் தோல்வியாகுதுனு கணிக்க முடியாம இருப்பதைத்தான். ஒரு காலம் வரை  சரியா கணிச்சோம். அந்த கணக்கு எப்பவாவதுதான் தப்பாகியிருக்கு. நாம ஒரு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஜானர் சக்சஸ் ஆகுது. அந்த படம்  முடியும் போது ஆறு மாசம் ஆகிடுது. அப்ப வேற ஒரு ஜானர் சக்சஸ்ஃபுல்லா இருக்கு.சில வருஷங்களாகவே இன்றைய ஜெனரேஷன் இளைஞர்களை  கவனிக்கறேன். தியேட்டருக்கு போனால் பசங்களும், பொண்ணுங்களும் ஒண்ணா குரூப்பா உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு படத்தை பார்த்து  ரசிக்கறாங்க. அதை பார்க்கும் போது நல்லாவே இருக்கு. அந்தக் காலத்துல கோ எஜுகேஷன்னாலே ஒருமாதிரி இருந்த காலங்கள் போய், இன்னிக்கு  பையன்களும், பொண்ணுங்களும் எந்த விகர்ப்பங்களும் இல்லாம பழகறாங்க. அதே நேரத்துல பல தவறுகளும் நடக்குது.

செக்ஸ் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாம இருக்காங்க. காதல் வேற, செக்ஸ் வேறனு புரிஞ்சுக்காதவங்களின் பர்சன்டேஜ் அதிகமா இருக்கு.  அவங்களப் பொறுத்தவரை செக்ஸ்தான் லவ்வாகிடுச்சு. அதோட தாக்கம்தான் இந்தக் கதை. படத்தின் பெயர், ‘சி.எம். என்கிற கேப் மாரி’.டீன்ஏஜ்  பசங்களுக்கும் பிடிக்கற ஒரு ரொமாண்டிக் காமெடியா இயக்கியிருக்கேன். முழுப்படமும் ஷூட் முடிச்சு, இப்ப டப்பிங் ஒர்க் போய்க்கிட்டிருக்கு...’’  புன்னகைக்கிறார் எஸ்.ஏ.சி.

ரொம்காம் ஜானர்னு சொல்றீங்க. ‘கேப்மாரி’னு டைட்டில் வச்சிருக்கீங்களே..?


கேப்(cap)னாலே ஒரு நல்ல வார்த்தைதான். ஆங்கிலேயர் காலத்துல ஆபீசர்ல இருந்து பியூன் வரை ஒவ்வொரு கேட்டகிரியினருக்கும் ஒரு கேப்  (தொப்பி) உண்டு. ஒருத்தருடைய தொப்பியை வச்சு, அதாவது ‘கேப்’பை வச்சு அவர் அதிகாரியா, கடைநிலை ஊழியரானு சொல்லிட முடியும்.  ஒரு  பியூனுக்கு ஒரு யோசனை தோணுது. ஆபீசர் கேப்பை எடுத்துப் போட்டுட்டு ஆபீசர் மாதிரி பந்தா பண்ணிடறான். இதை தெரிஞ்ச அதிகாரி, அவன்கிட்ட  ‘ஏன்டா கேப்பை மாத்திப் போட்டு ஏமாத்தறே’னு கண்டிச்சாராம். இப்படி cap மாத்தி cap மாத்தி ஏமாத்தின விஷயம்தான் நாளடைவில் உருமாறி  ‘கேப்மாரி’னு கெட்ட வார்த்தையா மாறி நிக்குது! இன்றைய தலைமுறையினர் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி நடிக்கறாங்க. ஒரே  நேரத்துல ரெண்டு பொண்ணுங்ககிட்ட லவ் சொல்லி நடிக்கற பையன்களும் இருக்காங்க. அதே மாதிரி நாலு பேர்கிட்ட லவ் சொல்லி நடிக்கற  பொண்ணுங்களும் இருக்காங்க. ஒரே ஆள், ஒன்பது கல்யாணம் பண்ணி ஏமாத்தினதையும் பேப்பர்ல படிக்கறோம். இதையெல்லாம் மனசுல  வைச்சுதான் இந்த டைட்டிலை வச்சிருக்கோம். ஜெய்கிட்ட இந்தக் கதையை சொன்னதும், அவர் திடுக்கிட்டார். ‘என்னோட லைஃபை ஒளிஞ்சிருந்து  நீங்க படம் பிடிச்சது மாதிரி இருக்குது சார்’னு சொன்னார். எனக்கு ஆச்சரியமாகிடுச்சு.

அதேபோல இதோட இசையமைப்பாளர் சித்தார்த் விபின், எடிட்டர் பிரசன்னாகிட்ட சொல்லும்போதும் அவங்களும் ஜெய் சொன்ன வார்த்தையையே  சொன்னாங்க. அப்பவே படத்தோட பாதி வெற்றி உறுதியாகிடுச்சு. ஒவ்வொரு ஃபிரேமிலும் இப்ப உள்ள தலைமுறையை பிரதிபலிக்கறதால, அவங்க  எல்லாருமே எளிதா கனெக்ட் ஆவாங்க.இதுவரை பார்க்காத ஒரு ஜெய்யை பார்ப்பீங்க. ஹீரோயின்கள் அதுல்யா, வைபவி ஷாண்டில்யா ரெண்டு பேர்  ரோலுமே, இந்த ஜெனரேஷன் பெண்களை பிரதிபலிக்கும்.

விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரும் உங்கள் முயற்சி எந்த நிலையில் உள்ளது?

ஊழல் இல்லாதவர்கள், சுத்தமானவர்கள் அரசியலுக்குள் வரணும்னு எப்பவும் சொல்றதுதான். ஆனா, என் புள்ள அரசியலுக்கு வரணும்னு எப்பவும் நான்  சொல்லியிருக்க மாட்டேன்! உழைச்சு சம்பாதிச்சவங்க... மத்தவங்களை ஏமாத்தாதவங்க... மக்களுக்கு சேவை செய்ய நினைக்கறவங்க... அரசியலுக்கு  வந்தா நல்லதுனு தொடக்கம் முதலே சொல்லிட்டிருக்கேன். ஆனா, இன்னிக்கு இருக்கற அரசியல் சூழலைப் பார்க்கும் போது எனக்கு அரசியல்  மீதிருந்த நாட்டமே போயிடுச்சு! ‘நீங்க அரசியலுக்கு வந்தா என்ன பண்ண முடியும்’னு யாராவது கேள்வி கேட்டால் அதுக்கு பதிலே கிடைக்க  மாட்டேங்குது. மக்களுக்கு மொதல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியாகணும். ஓட்டு போடுறதன் வேல்யூவை புரிய வைக்கணும். ஓட்டுனா என்ன?  நமக்கு அஞ்சு வருஷம் சேவை செய்ய ஒருத்தரை செலக்ட் பண்றோம் இல்லையா...

அதுக்கான கருவிதான் ஓட்டு. மக்கள் இதை புரிஞ்சுக்கணும். அந்தக் காலத்துல பணம் வாங்காமத்தான் சேவை பண்ணினாங்க. இப்ப அப்படியா இருக்கு  நிலை? அரசியல்வாதிகள் யாரும் தனியா நோட்டு அடிச்சு, மக்களுக்கு கொடுக்கறதில்ல. நம்ம பணத்தை நம்மகிட்ட இருந்து வாங்கித்தானே நமக்கு  ‘இனாம்’னு சொல்லி திருப்பிக் கொடுக்கறாங்க. இளைஞர்களுக்கு செக்ஸைப் பத்தின அவேர்னஸ் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மக்களுக்கு  ஓட்டு பத்தியும் ஒரு தெளிவு வரணும். வரும். நாம ஒருத்தரை தேர்ந்தெடுத்து அவரை அனுப்பி வைக்கறோம். அவரது சர்வீஸ் சரியில்லாதபோது  அவரை திரும்பப் பெறக்கூடிய நிலை என்னிக்கு நம்ம நாட்டுல வருதோ... அன்னிக்குத்தான் நான் அரசியலுக்கு வருவேன். அந்தக் காலம் நிச்சயம்  வரும்னு உறுதியா நம்புறேன்!

* மை.பாரதிராஜா