தினமும் முதியவர்களுக்கு உணவளிக்கும் ஆட்டோ ஓட்டுநர்



மனிதர்கள்  1

‘‘ஐநூறு ரூபால ஆரம்பிச்சேன். இப்ப மாசம் ரூ.15 ஆயிரம் வரை செலவிடறேன்...’’ சாதித்த பெருமையுடன் அறிவிக்கிறார் கோவையைச் சேர்ந்த  பி.முருகன்.ஆட்டோ ஓட்டுநரான இவர், தினமும் ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கி வருகிறார்!, ‘‘சொந்த ஊரு சென்னை.  அப்பா பலராமனும் அம்மா கங்கையம்மாளும் பாரிஸ் கார்னர்ல சூப்பு கடை நடத்திட்டு இருந்தாங்க. பத்தாவதுல நான் ஃபெயில். தெரிஞ்சா அப்பா  அடிப்பாரு. அம்மா முகத்துலயே முழிக்க முடியாது. அதனால முந்நூறு ரூபா எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடி கோவைக்கு வந்தேன். தற்கொலை  செய்துக்கதான் கோவைக்கே வந்தேன். ஆனா, தைரியமில்ல.

என்ன செய்யறதுனு தெரியாம அப்படியே சுத்திட்டு இருந்தேன். அப்ப ரெண்டு பெரியவங்க என்கிட்ட வந்து ‘சாப்பிட்டியா தம்பி’னு கேட்டுட்டு என்னைப்  பத்தி விசாரிச்சாங்க. சொன்னேன். சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஊருக்குப் போக ஐநூறு ரூபாயும் கொடுத்தாங்க.‘பணம் வேண்டாம்... ஊருக்கு திரும்பிப்  போக முடியாது... ஏதாவது வேலைல சேர்த்து விடுங்க’னு கேட்டேன். ஒரு ஹோட்டல்ல சப்ளையரா சேர்த்துவிட்டாங்க.சாப்பாட்டுக்கு பிரச்னை  இல்லாம நாட்கள் போச்சு. இந்த நேரத்துல அப்துல் கனிகார் என்கிற பெரியவர் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து ‘பேப்பர் போடறியா’னு கேட்டார்.  செஞ்சேன். அவர் கொடுத்த ஐடியால கூரியர் டெலிவரியும் செய்ய ஆரம்பிச்சேன்.

ஓரளவு கைல பணம் சேர்ந்தது. அதுல கொஞ்சம் எடுத்து வைச்சு என் பிறந்த நாள் அப்ப ரொம்ப முடியாம இருந்த வயசானவங்களுக்கு சாப்பாட்டு  பொட்டலம் கொடுத்தேன்...’’ என்று சொல்லும் முருகன், இந்த சம்பவம்தான் தன்னை மாற்றியது என்கிறார்.‘‘ஒரு ஊதுவத்தி கம்பெனில வேலைக்கு  சேர்ந்தேன். அங்க எனக்கு ரூ.3 ஆயிரம் கிடைச்சது. ரூம் வாடகை, சாப்பாட்டு செலவு எல்லாம் போக ஐநூறு ரூபா மீந்தது. இதுல ஏன்  வயதானவங்களுக்கு சாப்பாடு போடக் கூடாதுனு தோணிச்சு. உடனே அதை செயல்படுத்த ஆரம்பிச்சேன். அடுத்து ஒரு ஜிம்ல வேலை. அங்க நிறைய  நண்பர்கள் கிடைச்சாங்க. அவங்களும் தங்களால் முடிந்த தொகையை மாசா மாசம் தர முன்வந்தாங்க. திடீர்னு வேலைல பிரச்னை. பணத்துக்கு  தட்டுப்பாடு.

இந்த நேரத்துல ஷஃபீர் இமானி ஐயாவை சந்திச்சேன். ‘ஆட்டோ ஓட்டுறியா’னு கேட்டாரு. சம்மதிச்சேன். நினைச்சதை விட கொஞ்சம் அதிகமா  வருமானம் வந்துச்சு. நிறைய முதியவர்களுக்கு சாப்பாடு போட முடிஞ்சுது.இதை தெரிஞ்சுகிட்ட என் முதலாளி, தன் பங்குக்கு பண உதவி செய்ய  முன்வந்தார். அதை ஏத்துக்க நான் தயாரா இல்ல. ‘ஏற்கனவே நீங்க நிறைய செய்துட்டு இருக்கீங்க ஐயா... வேண்டாம்’னு சொன்னேன். அவர்  சிரிச்சுகிட்டே என் சம்பளத்துல ரூ.2 ஆயிரத்தை கூட்டினார்! நிறைய மாணவர்களையும் சேர்த்து ஹோம்களுக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சேன்...’’  என்னும் முருகனுக்கு திருமணமாகி பிரியதர்ஷினி, தர்ஷன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி உஷா முழுக்க முழுக்க இவருக்கு  பக்கபலமாக இருக்கிறார்.

‘‘தனியா இருந்தப்ப தெரியலை. குடும்பம் குழந்தைகள்னு ஆன பிறகு சோதனை ஆரம்பிச்சது. வீட்டுல வைச்சுதான் நாங்க சமைப்போம்.  ல்யாணத்துக்கு செய்யற மாதிரி சமைக்கணும். யாரும் வீடு கொடுக்க தயாரா இல்ல. ஒரு வருஷத்துல காலி பண்ண சொல்லிடுவாங்க.சில சமயம்  மாடி வீடா அமையும். குழந்தைங்களை கீழ விட்டுட்டு மேல சமைச்சு, திரும்ப பாத்திரம் எல்லாம் இறக்கி, அப்புறம் குழந்தைகளை கொண்டு போயி  மாடில போட்டுன்னு நானும் என் மனைவியும் நிறைய சோதனைகளை சந்திச்சோம்.ஆனா, சோறு கொடுக்கறதை மட்டும் நிறுத்தலை. இடைல அப்பா  தவறினார்... அடுத்து அம்மா... எதுக்கும் நாங்க சளைக்கலை. பாக்குமரத்தட்டு பிஸினஸ் ஆரம்பிச்சு அதுல வந்த வருமானத்தையும் இதுக்குப் போட  ஆரம்பிச்சோம்...’’ என்னும் முருகனுக்கு செம்மொழி மாநாடு பெருமளவு உதவியிருக்கிறது.

‘‘அந்த மாநாட்டுல இந்த முதியவர்களுக்காக குரல் கொடுத்தேன். அப்ப கலைஞர் ஐயாதான் முதல்வர். என் நிலை பத்தியும் என்ன திட்டம் கைவசம்  இருக்குன்னும் அவர் சார்பா கேட்டாங்க. சொன்னேன். ஒரு ஹோம் நடத்தற அளவுக்கு என்கிட்ட அப்ப வசதி இல்லை. ஆனா, நான்கு பெரிய அமைப்புகளுக்கு ஹோம் நடத்தவும், அவர்களுக்கு ஆவன செய்யவும் அரசாங்கம் முன்வந்தாங்க. ‘இந்த ஹோம்களுக்கு நீங்க என்ன செய்யணுமோ  செய்யலாம்’னு என்னை ஊக்கப் படுத்தினாங்க. இப்ப அந்த நாலு ஹோம்கள்ல ரெண்டு ஹோம்களுக்கு நான் ஒருவேளை சாப்பாடு கொடுக்கறேன்.  அப்ப சில நண்பர்கள் மூலம் எனக்கு ஒரு ரெண்டு கிரவுண்ட் நிலம் கிடைச்சது. அங்க கொட்டகை போட்டு சமைக்க திட்டமிட்டோம். பேங்க் மானேஜர்  ஒருவர் உதவியால ஒன்பது லட்சம் ரூபாய்க்கு லோன் கிடைச்சது.  

இந்த சமயத்துல சக்தி மசாலா மேடம் மூலமா நடிகர் கார்த்தி சார் எங்களுக்கு அஞ்சு லட்சம் நிதி கொடுத்தார். அதை வெச்சு ‘நிழல் மையம்‘னு ஓர்  அமைப்பை ஆரம்பிச்சோம். கடந்த அஞ்சு வருஷங்களா ஒரு பெரிய குழுவா இணைஞ்சு 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கோம். எங்க குழுவால  ஆயிரக்கணக்கான முதியோர்கள் இன்னைக்கு ஒருவேளையாவது சாப்பிடறாங்க.எனக்கு இந்தப் பயணத்துல நிறைய பெரியவர்கள், நல்ல இளைஞர்கள்  உதவியிருக்காங்க. ஷஃபீர் இமானி, குமார் வெங்கடாசலம், விஜய் ஆனந்த், மகாவீர் ஜெய், ரங்கராஜ், என்.கே.வேலு, மாருதி ஜான்சன் ஆண்டனி...  இவங்க உதவியை எல்லாம் என்னால மறக்கவே முடியாது...’’ சிலிர்க்கும் முருகன், இப்பொழுதும் லோன்களை சமாளித்தபடியே உணவளிக்கும் தன்  பணியைத் தொடர்கிறார்.

 தொகுப்பு: ஷாலினி நியூட்டன்