பரிதலா ரவியின் கொலை வழக்கில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டியை காப்பாற்றிய ஒய்எஸ்ஆர்!



போஸ்ட் மார்ட்டம்-15

ஆமாம். மக்கள் பரிதலா ரவியை தங்கள் ‘தேவுடு’ ஆக நினைக்கிறார்கள்! அதற்கேற்ப பல காரியங்களை அவர் செய்திருக்கிறார்.மிகுந்த பஞ்சத்தில் தாக்கப்பட்ட நாசனகோட்டா பஞ்சாயத்துக்குட்பட்ட ஒன்பது கிராமங்களுக்கு அந்த நேரத்தில் ரவியின் குடும்பத்தினரே அரிசி, கோதுமை, மற்றும் உணவுகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

அனந்தப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை விஷயம் மிக அதிகம். அங்கே அது கவுரவப் பிரச்சினை. ‘இதனை முற்றிலுமாக நிறுத்துங்கள்...’ என்று தனது பதவிக் காலம் முழுவதும் ரவி ஊர் ஊராக பிரசாரம் செய்து வந்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, தானே வருடந்தோறும் 360 இலவசத் திருமணங்களை நடத்தி வந்திருக்கிறார்!

நாசன்கோட்டா கிராமத்தில் இருந்த புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா ஆலயத்தை ரூ.4 கோடி செலவில் ரவியே புனரமைப்பு செய்தார். சமுதாய நலக் கூடங்களை ஊர், ஊருக்கு அமைத்துக் கொடுத்ததுடன் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு தனது சொந்த செலவிலேயே சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

பெனுகொண்டா தொகுதிக்குட்பட்ட 44 கிராமங்களுக்கு குடிநீர் வசதியை முதன்முதலாக ரவிதான் செய்து கொடுத்தார். இத்திட்டத்திற்கு செலவான தொகையான ரூ.14 கோடியில் ரூ.3 கோடி ரவியின் சொந்தப் பணம்! அனந்தப்பூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சோமேஷ்குமாரே, ‘பரிதலா ரவி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் பெனுகொண்டா தொகுதி பல நல்ல முன்னேற்றங்களை அடைந்தது...’ என வெளிப்படையாக அறிவிக்கிறார்.

தொகுதிக்குள் அரசு கல்லூரியை ரவிதான் தனது காலத்தில் கொண்டு வந்திருக்கிறார். 3 கிராமங்களுக்கு ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று சில சுகாதார நிலையங்களை உருவாக்கியிருக்கிறார். ரவி மீதிருந்த 54 கிரிமினல் வழக்குகள், 16 கொலை வழக்குகளில் எந்த  முன்னேற்றமும் இல்லை. எந்த வழக்கையும் எடுத்து நடத்தவும் அரசுத் தரப்புக்கு  விருப்பமில்லை.. இதுவே அவரது வளர்ச்சிக்கும் ஒரு காரணமாகிவிட்டது.

என்டிஆர்  தன் கடைசிக் காலத்தில் செய்த தவறால் - திருமணத்தால் - பெரிதும்  பாதிக்கப்பட்டது இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு  பரிதாபமாக உயிரிழந்த அப்பாவி இளைஞர்கள்தான். எண்ணற்ற குடும்பங்கள்  சீரழிந்துவிட்டன. 1994 - 2004 வரையிலான பத்தாண்டுகளில் ரவியின்  தனிப்பட்ட துப்பாக்கிப் படையின் மூலம் 120க்கும் மேற்பட்ட காங்கிரஸ்  தலைவர்கள், தொண்டர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று போலீசார்  கூறுகிறார்கள். அதே சமயத்தில் 2000 - 2004 காலக்கட்டத்தில் அனந்தப்பூர்  மாவட்டக் காவல்துறையே 40க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை என்கவுண்ட்டர் என்ற  பெயரில் கொலை செய்ததாக மனித உரிமை இயக்கங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு ரவியின் கொலை வரை 41 தெலுங்கு தேசம் தொண்டர்கள் அனந்தப்பூர் மாவட்டத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
எந்தக் கொலையிலும் குற்றவாளிகள் பிடிபடவே இல்லை. எல்லாம் அடையாளம் தெரியாதவர்களால் செய்யப்பட்டது என்றே FIRல் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

ரவியின் மரணத்திற்குப் பின்பு அனந்தப்பூர் மாவட்டத்தைவிட்டு வெளியேறிய மக்கள் திரும்பத் தொடங்கினர். இன்று ரவியின் ஆட்கள் அமைதியாக இருந்தாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்தான் ரவியின் மனைவி சுனிதா வலம் வருகிறார். ரவியின் உடல் அனந்தப்பூரில் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் மிக அழகான சமாதி எழுப்பப்பட்டது. அவரது நினைவு தினத்தன்று அவரது ஆதரவாளர்களும், தெலுங்கு தேசத் தொண்டர்களும் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இப்போது  சுனிதாவும் தன் கணவரின் வழியில் மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டும் செயல்படுத்தி வருகிறார்.ரவி மறைந்த பின்பு நடந்த தேர்தலில் சுனிதா நின்று ஜெயித்தாலும், 2009ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘இரு குடும்பத்திற்கும் இடையில் சண்டை வேண்டாம்’ என்ற பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் காங்கிரஸ் பானுமதிக்கும், தெலுங்கு தேசம் சுனிதாவுக்கும் சீட் கொடுக்கவில்லை.

இந்த சமாதான ஒப்பந்தத்தில் முழுமூச்சாக களமிறங்கிச் செயல்பட்டவர் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி என்கிற ஒய்எஸ்ஆர்தான்!ரவியின் மரணத்தில் தனது குடும்பத்தையும், தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டியையும் இணைத்து பலரும் பேசி வரும் நிலையில் அந்த அவப் பெயரைத் துடைக்க இப்படியொரு சமாதான ஏற்பாட்டுக்கு ராஜசேகர ரெட்டி வந்ததாக சொல்கிறார்கள்.

இந்த சமாதான தூதை சுனிதாவின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபுவும் ஏற்றார்.எனவே 2009ல் தெலுங்கு தேசம் சார்பில் பார்த்தசாரதி நிறுத்தப்பட்டார். அத்தேர்தலில் இவரே வெற்றி பெற்றார். எல்லாம் ரவியின் பெயர் சொல்லும் மகிமைதான்!  

(தொடரும்)


கே.என். சிவராமன்