சென்னை பழனி மார்ஸ்



செவ்வாய் கிரகத்திற்கு சென்றுவிடத்துடிக்கும் இளைஞர்களின் வெறி கொண்ட ஃபேன்டசி பயணமே ‘சென்னை பழனி மார்ஸ்’. விஞ்ஞானி(!)யான பிரவீன் ராஜாவின் அப்பாவிற்கு செவ்வாய் கிரகத்திற்குச் சென்றுவிட ஆசை.
அதற்கான முயற்சிகள் தோற்றுவிட்ட பிறகு, மகன் தன் நண்பனோடு அதைச் செய்து முடிக்க திட்டமிடுகிறான்.  பழனி மலையின் உச்சியில் இருந்து செவ்வாய்க்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களின் பயணம் நடந்ததா... என்பதே படம்.

கதை, வசனத்தை விஜய்சேதுபதி எழுதி தயாரித்திருக்கிறார் என்பதே படம் உடனடி கவனிப்பு பெறக் காரணமாகிறது. புதிய களம், கணிக்க முடியாத திரைக்கதையில் நம்மை திணறடிக்க முயற்சி எடுத்த இயக்குநர் பிஜுவிற்கும், கதை எழுதிய விஜய் சேதுபதிக்கும் பாராட்டுகள். கிடைத்த வாய்ப்பில் பிரவீனும், ராஜேஷ் கிரி பிரசாத்தும் கொஞ்சமாக கலகலக்க வைக்கிறார்கள். வசனம் ஆங்காங்கே சிரிப்பு மூட்டுவதோடு, தத்துவ விசாரணைகளுக்கும் இட்டுச்செல்கிறது.

சென்னை - பழனிக்கு போக ஏதோ கரடுமுரடான இடத்தை தேர்ந்தெடுத்து பயணிப்பது ஏனோ! படத்தின் ஒளிப்பதிவு பிஜுதான். சில இடங்களில் கலர்ஃபுல். நிரஞ்சன் பாபுவின் இசை பலம் சேர்க்கவில்லை.வித்தியாசமாக முயன்றிருக்கிறார்கள். அடுத்த முயற்சிக்கு காத்திருக்கலாம்.              

குங்குமம் விமர்சனக் குழு