கொளஞ்சி



ஆதிகாலம் தொட்டு புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் தந்தை - மகன் உறவைப் பேசுவதே ‘கொளஞ்சி’.பகுத்தறிவாளராக கிராமத்தில் வாழ்கிற சமுத்திரக்கனிக்கு இரண்டு மகன்கள். வழக்கம்போல் தன் பிடிக்குள் வைக்க முடியாமல் போகும் மூத்த மகனோடு சதா முரண்படுகிறார்.
குடும்பத்தின் அமைதி கெடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மனைவியுடனும் உறவுகள் உரசிக் கொள்ள மூத்த மகன், அம்மாவுடனும்; இளைய மகன் அப்பாவுடனும் இருக்க.. தம்பதியினர் பிரிகிறார்கள்.

மகனும், அப்பாவும் பரஸ்பரம் புரிந்து கொள்கிறார்களா..? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா.. என்பதே மீதிக்கதை. சமுத்திரக்கனிக்கு என்றே பிரதி எடுத்தது போன்ற பாத்திரப்படைப்பு. மகன் மீது கனன்று கொண்டிருக்கும் கோபத்தையும், உருகிக்கொண்டிருக்கும் அன்பையும் வெறும் கண்களிலேயே சொல்லி அசரடிக்கிறார். சங்கவி ரொம்ப நாளைக்குப் பிறகு ரீஎண்ட்ரி. அனுபவத்தின் கனம் பெருகி கேரக்டரில் தெறிக்கிறது.

மகன்களாக கிருபாகரன், நசாத். இரண்டு பேரிடமும் பக்குவம் தெரிகிறது. நவீன் - தன்ராம் சரவணன் வசனங்களில் பல இடங்களில் யதார்த்தமும், சமூகமும் பிரதிபலிக்கிறது. பின்னணியிலும், பாடல்களிலும் மிளிர்கிறது நடராஜ சங்கரனின் இசை. அறிமுக  இயக்குநர் தன்ராம் சரவணன் என்னதான் அக்கறையாக செதுக்கியிருந்தும் நாடகத்தனம்தென்படுவதை தவிர்க்க முடியவில்லை. ‘கொளஞ்சி’ அக்கறையான  படைப்பே.                 

குங்குமம் விமர்சனக் குழு