வந்தாச்சு 5 கேமரா உள்ள ஸ்மார்ட்போன்!



ஒரு காலத்தில் செல்போன் என்றாலே அது ‘நோக்கியா’தான். பிறகு டெக்னாலஜியில் அதிரடியான மாற்றங்கள் வந்து ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தையை ஆக்கிரமித்தன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ‘நோக்கியா’ மொபைல் சந்தையை விட்டு வெகு தூரம் விலகிப்போனது.
இருந்தாலும் அவ்வப்போது சில தயாரிப்புகளை வெளியிட்டாலும் அவை பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அத்துடன் ‘‘அவை வயதானவர்களுக்கான போன்...’’ என்று இணையத்தில் பல விமர்சனங்களைச் சந்தித்தது.  

துவண்டு போகாத ‘நோக்கியா’, இழந்த சந்தையை மீட்டெடுக்க இப்போது புதுப்பொலிவுடன், லேட்டஸ்ட் டெக்னாலஜியின் துணையுடன் களமிறங்கியிருக்கிறது. ஆம்; உலகிலேயே முதல் முறையாக 5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அதிரடியாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. ‘நோக்கியா 9 ப்யூர் வியூ’ என்பது அந்த மாடலின் பெயர்.

போனின் வேகம் எப்போதும் சீராக இருக்க ஆக்டோ - கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜிபி ரேம், 5.99 இன்ச்சில் மெகா டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்கு தளம், ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் நிற்க 3,320 mAh பேட்டரி திறன், வெளியே எடுக்க முடியாதபடிக்கு பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒயர்லெஸ் சார்ஜ் வசதியும் உண்டு.

தவிர, 12 எம்பி திறன் கொண்ட ஐந்து கேமராக்கள், ஆட்டோ ஃபோகஸ் வசதி, தொலைவில் இருப்பதை தெளிவாக படம் பிடிக்க அதிநவீன சென்சார், வைடு ஆங்கிள் வசதி, அத்துடன் செல்ஃபிக்காக பிரத்யேகமாக 20 எம்பியில் ஒரு கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ், இரண்டு சிம்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, நீர் மற்றும் தூசு புகாத பாதுகாப்பு, வலிமையான டிஸ்பிளே கிளாஸ் என அசத்துகிறது ‘நோக்கியா’வின் புது வரவு. விலை ரூ.49,999 மட்டுமே!    
                       
தொகுப்பு: த.சக்திவேல்