நியூஸ் வியூஸ்-புலியோடு விளையாடு!
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இதே ‘நியூஸ் வியூஸ்’ பகுதியில் ‘கொலப்பசியில் இருக்கு புலி!’ என்கிற கட்டுரையை வாசித்த நினைவு உங்களுக்கு வரலாம்.அக்கட்டுரையில், ‘கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் ஒரு இலட்சம் புலிகள் இருந்ததாக தகவல். இப்போது உலகில் 4,000க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் இருக்கின்றன. தேசிய விலங்கு அந்தஸ்து பெற்றிருக்கும் இந்தியாவில் 2,250க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன’ என்கிற தகவலை தந்திருந்தோம். அதை வாசித்து கவலைப்பட்டோருக்கு நற்செய்தி கொடுத்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. ‘அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை 2018’ல் இந்தியாவில் மட்டுமே 2,967 புலிகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 2006ல் இந்த எண்ணிக்கை 1,411 ஆக மட்டுமே இருந்தது. கடந்த பதிமூன்று ஆண்டுகளில் மட்டுமே நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. புலித்தோலுக்காக, மருத்துவப் பயன்பாடுகளுக்காக, சர்க்கஸில் வித்தை காட்டுவதற்காக, பணக்கொழுப்பு எடுத்துப் போனவர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவதற்காக வேட்டையாடுதல்... என எத்தனையோ சப்பைக் காரணங்களால் கடந்த நூற்றாண்டில் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்திருக்கிறோம். அத்துடன் அவற்றின் வாழ்விடமான காடுகளை அழித்து, மனிதர்கள் வசிக்க ஊர்களையும், நகரங்களையும் உருவாக்கி விட்டோம்.எழுபதுகளின் தொடக்கத்தில்தான் இந்த அவமான நிலைமையை இந்தியா உணர ஆரம்பித்தது. புலியில்லாத சூழல் ஏன் அவலம் என்றால், புலிகள் இல்லையேல் காடுகள் இல்லை!மாமிசபட்சிணியான புலிகள், தாவரங்களைப் புசித்து வாழும் சைவப்பட்சிணி விலங்குகளை வேட்டையாடி சரியான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ளாவிட்டால் காடுகள் முற்றிலுமாகவே அழிந்துவிடும்.
புலிகளே இல்லாத காடு ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள். மான், யானை, காட்டெருமை மாதிரி ‘வெஜிட்டேரியன்’ விலங்குகள் இம்மாதிரி காட்டில் நிறைய உண்டு, நிறைய இனப்பெருக்கம் செய்து பெருகிவிட்டால் என்னாகும்? அவற்றின் உணவுத்தேவைக்காக ஒட்டுமொத்த காடுகளையும் உண்டு செரித்துவிடும். அதன் காரணமாக அவ்விலங்குகளே வசிக்க காடின்றி அழிந்தும் விடும்.
காடுகளுக்கு இத்தகைய நெருக்கடி உருவாகக்கூடாது என்பதால்தான் புலிகளைப் போன்ற ‘நான் வெஜிட்டேரியன்’ விலங்குகள், இயற்கையால் படைக்கப்பட்டன.1973ல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை இந்திய அரசு அறிவித்தது. இந்தியா, சீனா, நேபாளம், ரஷ்யா, பூடான், மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் காடுகளில் புலிகள் வசிக்கின்றன என்றாலும், புலிகளை பாதுகாக்கும் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கிய முதல் நாடு இந்தியாதான்.
இந்தியாவில் மொத்தம் 19 மாநிலங்களில் புலிகள் வசிக்க ஏதுவான காடுகள் அமைந்திருக்கின்றன. புலிகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக நாம் 39 புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களை உருவாக்கி இருக்கிறோம்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கண்காணிப்பில் புலிகள் பாதுகாப்பு கடந்த நாற்பத்தி ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டமும் புலிகளின் உயிருக்கும், வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. புலிகள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மேற்கொண்ட விவரங்களை நீங்கள் www.projecttiger.nic.in என்கிற இணையதள முகவரியில் அறியலாம்.
இந்தியக் கலாச்சாரத்தில் புலிகளுக்கு தனியிடம் உண்டு. அவற்றின் கம்பீரமான தோற்றம், ஆற்றல், அழகு, வீரம் போன்றவை மக்களைக் கவர்ந்தவை. எனவேதான் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு வாகனமாக புலியை உருவகித்தனர் மக்கள். நம் நாட்டின் தேசிய விலங்காகவும் தேர்வு செய்யப்பட புலிக்கும், இந்தியக் கலாச்சாரத்துக்குமான பிணைப்பே காரணம்.
பல நூற்றாண்டுகளாக காட்டு விலங்குகளோடு இணைந்தே மனித சமுதாயம் வாழ்ந்திருக்கிறது. குறிப்பாக இந்தியர்கள், வனவிலங்குகளோடு மிகவும் நெருங்கிய வாழ்க்கைமுறையைக் கொண்டவர்கள். அப்போதெல்லாம் மனிதர்களின் வசிப்பிடங்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும், காடுகளின் பரப்பளவு பெரிதாகவும் இருந்து வந்தன.
சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகள் சுருங்கி வருகின்றன. மேலும் -மனிதர்கள் ஆடு, மாடு வளர்ப்பதற்காக காடுகளில் இருக்கும் தாவரங்களை கபளீகரம் செய்கிறார்கள்.
இதனால் வனவிலங்குகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. தாவரபட்சிணிகள் குறையும் பட்சத்தில், அவற்றை உண்டு வாழும் மாமிச பட்சிணிகளும் இயல்பாகவே குறையும். வன விலங்குகளான யானை, சிறுத்தை போன்றவை ஊர்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் செய்திகளை டிவியில் நீங்கள் காண்பது இதுபோன்ற இக்கட்டுகளால்தான்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான இதுபோன்ற மோதல்கள் நடைபெறக்கூடாது என்றால் காடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். காடுகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் புலிகள் போன்ற விலங்குகள் போதுமான எண்ணிக்கையில் இருந்தாக வேண்டியது சுற்றுச்சூழல் சுழற்சியின் விதி.
கால்நடைகளை இனப்பெருக்கம் செய்யவைத்து எண்ணிக்கையை பெருக்க வைக்கிறோமே, அதுபோல புலிகள் போன்ற அரிய விலங்குகளின் எண்ணிக்கையை பெருக்கச் செய்ய முடியாதா என்கிற அடிப்படை சந்தேகம் உங்களுக்கு எழலாம்.தர்க்கரீதியாக இந்த சந்தேகம் சரிதான். அப்படிச் செய்ய முடியுமேயானால் பல நூறு கோடி ரூபாய் திட்டங்கள் தீட்டி புலிகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லையே?
சிங்கம், புலி போன்ற விலங்குகள் நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வனங்களில் வசித்து வந்திருக்கின்றன. காட்டெருமைக் கூட்டம் போலவோ, மான்களைப் போலவே அதிக எண்ணிக்கையில் அவை இருந்ததில்லை.
இயற்கையான வாழ்விடம், வளர்வதற்கு ஏதுவான இயல்பான சூழல் போன்றவை இருந்தால் மட்டுமே புலிகளின் இனப்பெருக்கம் சாத்தியம். அவற்றை நம்மால் செயற்கையாக உருவாக்க முடியவில்லை. உயிரியல் பூங்காக்களில் புலிகள் பிரசவிப்பதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறைதான். காடுகளில் இயல்பாக புலிக்கூட்டம் பெருகுவதற்கு ஒப்பாக இவற்றைக் கருதிவிட முடியாது.
நாம் என்னதான் செய்யமுடியும்?
இப்போது செய்துகொண்டிருக்கும் வன பாதுகாப்புத் திட்டங்களை தொடர்ந்து நடத்துவதும், மேலும் மேம்படுத்துவதுமே தற்காலிகத் தீர்வு. மேலும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் அம்சங்களைக் கடுமைப்படுத்த வேண்டும். முறைகேடாக நடக்கும் வன வணிகங்களை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்.உலகம் அதன் இயல்பில்தான் இயங்க வேண்டும். மனிதன், அதை மாற்ற நினைத்தால் விபரீதம்தான் ஏற்படும்.
உதாரணத்துக்கு மொரீஷியஸ் தீவில் dodos என்கிற பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? Acacia என்கிற மரவகை அதன் பிறகு எங்கும் வளரவே இல்லை.
இயற்கையைப் பொறுத்தவரை எந்த சுவிட்ச்சைப் போட்டால் எந்த விளக்கு எரியும் என்பதையெல்லாம் கணிக்கக்கூடிய அளவுக்கு நம்முடைய அறிவியல் இன்னமும் முன்னேறவில்லை. ஏதோ ஓர் உயிரினம் அழிந்தால், அதன் விளைவு என்னவாக இருக்குமென்று நம்மால் கணிக்கவே முடியாது.நாம் நாட்டில் இருப்போம். புலிகள் காட்டில் இருக்கட்டுமே? யுவகிருஷ்ணா
|