பகவான்-40



Bravo America!

ஒரு மனிதரை நாடு கடத்துவது என்பது அவரை உச்சபட்சமாக அவமானப்படுத்துவது.“என் உயிரே போனாலும் உங்களை நாடு கடத்த மாட்டேன்...” என்கிற உருகுவே குடியரசுத் தலைவரின் பெருந்தன்மைக்கு, பகவான் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார்.

ஆனால் -விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் வல்லூறுகள் மாதிரி காத்திருந்தார்கள்.பகவானின் பாஸ்போர்ட்டில் அவர் நாடு கடத்தப்பட்டதாக பதிவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.உருகுவே குடியரசுத் தலைவரின் உறுதிக்கு மாறாக, விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் ஓஷோவை நாடு கடத்தியதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்கள்.

உருகுவேயில் இருந்து ஓஷோவின் விமானம் மீண்டும் இலக்கில்லாமல் வானில் பறந்தது.இதற்கிடையே அவரை தாங்கள் கொடுத்த கெடுவுக்குள் வெளியேற்றி விட்டதால் உருகுவேவுக்கு முப்பத்தி ஆறு மில்லியன் டாலர்களை ஊக்கத் தொகையாக அமெரிக்க அரசு கொடுத்தது. அதாவது முப்பத்தி ஆறு மணி நேரக் கெடுவுக்குள் வெளியேற்றியதால் முப்பத்தி ஆறு மில்லியன் டாலர்களாம்!

இதைக் கேள்விப்பட்ட ஓஷோ நகைச்சுவையாக அறிவித்தார்.“உலக நாடுகளே உங்களுக்கு பணம் வேண்டுமானால், என்னை வரவேற்று உபசரியுங்கள். என்னை நாடு கடத்தி வெளியேற்ற அமெரிக்கா உங்களுக்கு எத்தனை மணி நேரம் கெடு விதிக்கிறதோ, அத்தனை மில்லியன் டாலர்களை நீங்கள் வெல்லலாம்!”

பகவான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை மொரீஷியஸ் பிரதமர் சீரியஸாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. ஓஷோவை, தான் வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் தங்கள் நாட்டுக்கு வந்தால் தங்களுக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் கிடைக்கக்கூடும் என்று வெளிப்படையாகவே ‘பிசினஸ்’ ரகசியத்தைப் போட்டு உடைத்தார்.

பகவானின் விமானம் மொரீஷியஸ் தீவில் தரையிறங்கியது.விஷயம் கேள்விப்பட்டு அமெரிக்கா சுறுசுறுப்பானது. வந்த வேகத்திலேயே விமானம் மீண்டும் விண்ணில் கிளம்பியது. மொரீஷியஸுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் கைமாறியது என்று துல்லியமான தகவல்கள் இல்லை.அமெரிக்கா இவ்வளவு டார்ச்சர் செய்தும், அமெரிக்கர்கள் மீது பகவானுக்கு கோபமே வரவில்லை.

‘Bravo America!’ என்று அடிக்கடி வாழ்த்துவார். அமெரிக்கா தன்னுடைய முதன்மை எதிரியாகக் கருதி, இவரை உலகின் மூலை முடுக்குக்கு எல்லாம் துரத்திக் கொண்டிருந்த நிலையிலும், இம்மாதிரி அமெரிக்காவை வாழ்த்திப் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை.

“ஒவ்வொரு அமெரிக்கனும் தனி மனிதனாக அப்பாவி. துடிப்பான செயல்வேகம் கொண்ட அமெரிக்கர்களால் புதிய சமுதாயத்தை அமைக்க முடியும். ஆனால், அரசியல் என்று வரும்போது அமெரிக்காவின் கூட்டு மனச்சாட்சி சர்வாதிகாரமாக, சுயநலமாக நடந்துகொள்கிறது.

ஒரு தனி அமெரிக்கன் வேறு. அமெரிக்கா என்கிற பெரிய நாடு வேறு. அமெரிக்கன் நல்லவன். ஆனால், அவனுடைய நாடு…?” என்று புரியும்படியாக விளக்கம் அளித்தார். அதாவது அமெரிக்கா வேறு, அமெரிக்கன் வேறு என்பது அவர் எண்ணமாக இருந்தது.

தன்னுடைய அரசு செய்யும் எல்லா அநியாயங்களையும், அந்நாட்டில் பிறந்துவிட்டதாலேயே அந்நாட்டின் குடிமகன் ஏற்றுக்கொண்டாக வேண்டியதில்லை. அரசைத் தாண்டி தன்னிச்சையாக சிந்திக்க முடிபவர்களாலேயே புதிய சமுதாயம் சாத்தியம் என்பது ஓஷோவின் நம்பிக்கை. இந்தியர்களைவிட அமெரிக்கர்கள்தான் புதிய சமுதாயத்துக்கு வேலைக்கு ஆவார்கள் என்று அவர் கருதியதும் அதன் பொருட்டுதான்.

ஓஷோவின் விளக்கம் சரிதான். தங்கள் நாடு, ஒரு சாமியாரை தேவையே இல்லாமல் அலைச்சலுக்கு உள்ளாக்குவது அறிந்து அங்கிருந்த மக்கள் வேதனைப்பட்டனர். பெரும்பாலும் அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளும், தனியான ஒரு அமெரிக்கக் குடிமகனின் மனஓட்டமும் ஒத்திசைவாகச் செயல்படவில்லை.

வியட்நாம் போரில் தொடங்கி சமீபத்திய வளைகுடாவில் அமெரிக்காவின் வணிக ஊடுருவல் வரையிலும் சராசரி அமெரிக்கனுக்கு தன் நாடு மீது கடுமையான அதிருப்தி உண்டு. உலக நாடுகளை எல்லாம் ஏகாதிபத்தியம் செய்து ஏய்த்துப் பிழைக்கும் நாடாக இருந்தாலும், சொந்த நாட்டு மக்களுக்கு கருத்து சுதந்திரம் மற்றும் போராட்டங்களுக்கான அனுமதி வழங்குவதில் அமெரிக்கா தாராளமாகவே நடந்துகொள்வது நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு முரண்தான்.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டிலேயே கூட அரசை மக்கள் விமர்சிப்பது குறித்த சகிப்புத்தன்மை ஆட்சியாளர்களுக்குக் குறைந்துகொண்டே வருவதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுவது நமக்குக் கொஞ்சம் கவலையான அம்சம்தான்.

எனவேதான் ஓஷோ, தீர்க்கதரிசனமாக ‘புதிய சமுதாயம் அமைக்க இந்தியன் வேலைக்கு ஆகமாட்டான்’ என்று கருதினாரோ என்னவோ?

சரி, கதைக்கு வருவோம்.மொரீஷியஸில் இருந்து கிளம்பிய ஓஷோவின் விமானம் எங்கே தரையிறங்கப் போகிறது என்பதை அவரது பக்தர்களைவிட ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள்தான்.

எல்லா நாடுகளிடமுமே ‘பகவானை சேர்க்காதீர்கள். சேர்த்தால் அமெரிக்க உறவில் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம்’ என்று அந்தந்த நாடுகளின் அமெரிக்கத் தூதர்கள் வாய்மொழியாக ‘அன்புடன்’ ஆலோசனை கூறியிருந்தார்கள்.மீண்டும் கரீபியன் தீவுகளை நோக்கி பகவானின் விமானம் சென்றது.

அங்கிருக்கும் குட்டி குட்டி நாடுகளில் ஏதோ ஒன்று ஓஷோவை வரவேற்கக் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்க அரசு அதிகாரிகள், எல்லா நாடுகளின் முக்கிய விமான நிலையங்களுக்கும் விரைந்தார்கள்.

அவர்களது கையில் டாலர் நோட்டுகள் நிரம்பிய சூட்கேஸ்கள் இருந்தன. குடியேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஓஷோ குழுவினரை விமான நிலையத்திலிருந்தே திருப்பியனுப்ப சட்டத்துக்கு விரோதமாக மிகவும் அசிங்கமான முறையில் திட்டமிட்டிருந்தனர் அமெரிக்கர்கள்.

ஆனால் -ஜமைக்காவில் மாண்டிகோ பே என்கிற அழகிய நகரத்துக்கு பகவானும், அவரது குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். அங்கே அவர் தங்கியிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஜமைக்கா செய்திருந்தது.ஓஷோ இங்கே சில நாட்கள் தங்கியிருந்தால், அமெரிக்கா வந்து பேரம் பேசும் என்பது ஜமைக்காவின் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஜமைக்கா நாட்டின் உயரிய பதவிகளில் இருந்தவர்களை அமெரிக்க அதிகாரிகள் (கையில் பெரிய சூட்கேஸுடன்தான்) ‘மரியாதை நிமித்தமாக’ சந்தித்தார்கள். வாஷிங்டனில் இருந்து ஜமைக்காவின் முக்கியஸ்தர்களுக்கு போன்காலும் வந்தது. அன்பாகவும், அதட்டலாகவும் சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பகவான் குழுவினர் தங்கியிருந்த வீடு, காவலர்களால் முற்றுகையிடப்பட்டது.“தவிர்க்க முடியாத காரணங்களால், இங்கே தங்குவதற்கு உங்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியை ஜமைக்கா அரசு திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறோம்...” என்று போலீஸ் தலைவர், ஓஷோவிடம் தெரிவித்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த பகவான், புன்னகையோடு வெளியேற ஒப்புக் கொண்டார்.இவ்வாறாக நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஐரோப்பாவில் இருந்த பக்தர்கள் போராடி, போர்ச்சுகல் நாட்டில் தங்க பகவானுக்கு அனுமதி பெற்று விட்டார்கள்.

விஷயம் கேள்விப்பட்ட அமெரிக்கா நறநறத்தது. உடனடியாக போர்ச்சுகல்லின் லிஸ்பன் நகரை அமெரிக்க அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

பகவான் தரையிறங்கியதுமே பிரச்னை செய்ய திட்டமிட்டார்கள். தங்கள் வழக்கமான முறையில் அங்கிருந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, விமான நிலையத்தில் வைத்தே திருப்பியனுப்ப ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.மேலும் -போர்ச்சுகல்லை பகவான் அடைய, வழியில் கனடாவில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.கனடா அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.எனவே -எந்த மார்க்கமாக பகவான் லிஸ்பனுக்கு வரப்போகிறார் என்பது யாருக்குமே தெரியவில்லை.

லிஸ்பன் நகரின் விமான நிலையத்தில் பகவானை வரவேற்க நூற்றுக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, வரவேற்பு ஏற்பாடுகளை பிரமாதமாக செய்து கொண்டிருந்தார்கள்.அமெரிக்க அதிகாரிகளும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருந்தார்கள்.

ஏற்கனவே பெற்ற அனுபவங்களால் இம்முறை அமெரிக்காவுக்கு ‘பெப்பே’ காட்டும் வகையில் பகவானின் பக்தர்கள் செயல்பட்டனர்.லிஸ்பனுக்குத்தான் அவர் வரப்போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில், பகவானின் விமானம் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தாமல் தரையிறங்கியது.

ஏமாந்துபோன அமெரிக்க அதிகாரிகள், உடனடியாக லிஸ்பனில் இருந்து மாட்ரிட்டுக்கு விரைந்தார்கள்.அவர்களது கார் வரிசையாக மாட்ரிட் நகருக்குள் நுழையும்போது, எதிரில் இன்னொரு கார் வெளியேறிக் கொண்டிருந்தது. அதனுள்தான் பகவான் இருந்தார் என்பதை அவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்?!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்