கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பாராளுமன்றத்துக்குப் போகிறார்கள்... நீங்கள்?



வைரமுத்து Exclusive

அவரின் கவிதைகள் அனைத்து அனுபவங்களையும் பேசியிருக்கின்றன. மரபை முறைப்படி கற்ற வித்தையும், எதையும் கவிதையாக்குகிற கலையும், வைரமுத்துவின் வாழ்வனுபவம் தந்த வரம். இத்தகைய நல்வேளையில் நடந்தது இந்த உரையாடல்...‘தமிழாற்றுப்படை’யைத் துவக்கி தமிழ்ச்சான்றோர்களை வெகுமக்களிடம் கொண்டு சென்றீர்கள். இந்த அரிய, நல்ல முயற்சியை மறுபடியும் தொடர்வீர்களா?

சமுத்திரத்தைக் குடத்திற்குள் அடக்க முடியாது. அது பரந்துபட்ட காற்று மண்டலம் மாதிரி. எந்த ஒரு பலூனுக்குள்ளும் அடங்காது. தமிழின் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் தலைமை தாங்கி, திருப்புமுனை தந்தவர்களை, இவர்கள் இல்லாது போயிருந்தால், தமிழ் அடுத்த  நூற்றாண்டுக்குக் கடத்தப்பட்டிருக்க முடியாது என்று கருதப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

இவர்கள் என் கன்னத்தில் அறைந்தவர்கள். சின்ன வயதிலிருந்து தூக்கத்தைக் கெடுத்தவர்கள். வாழ்நாள் எல்லாம் நான் வாய்விட்டுச் சொன்ன இலக்கியம் படைத்தவர்கள். இலக்கணத்தில், இலக்கியத்தில், காவியத்தில், கருத்தியலில், சமூக இயலில் புதுமையும் புரட்சியும் செய்தவர்கள்.

நான் 50 பேரைப் பட்டியலிட்டு, 24 ஆளுமைகளாகக் குறைத்தேன். மிச்சமுள்ளவர்கள் இருக்கிறார்கள். காலமும், எனக்கு ஆற்றலும் கூடி வரும் பட்சத்தில் இரண்டாம் பாகம் எழுதப்படும். எப்போதென்று தெரியாது. சில கனிகள் எப்போது பழுக்கும் என்று மரத்திற்கே தெரியாது.

உதாரணமாக ‘சீவகசிந்தாமணி’ படைத்த திருத்தக்கதேவர் இதில் விடுபட்டிருக்கிறார். இலக்கணத்தைப் புதுப்பித்துக் கொடுத்த ‘நன்னூல்’ ஆசிரியர் பவணந்தியாரும் விடுபட்டிருக்கிறார். எழுத்துச் சீர்திருத்தம் செய்த வீரமாமுனிவர் இதில் இல்லை. கல்கியும் இல்லை. நவீன இலக்கியத்தில் தி.ஜானகிராமன் முதல் மிக நவீனமான தமிழ் இலக்கியவாதிகள் சிலர் வரை விடுபட்டிருக்கிறார்கள்.

காலம் என்னை ஆசீர்வாதம் செய்தால் அவர்களையும் எழுதுவேன்.உங்களின் அடுத்த படைப்பு என்ன? டால்ஸ்டாய், தாகூர் போன்றவர்கள் உச்சபட்சப் படைப்புகளைக் கொடுத்த நல்ல வயது உங்களுக்கும் வந்திருக்கிறது...

இளமையில் மனிதன் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டிருப்பான். வாழ்வையே ஓர் அழகியல் கூறோடு பார்ப்பதற்கு இளமை அழைக்கும். முதுமை, உணர்ச்சிகளை வடித்துவிட்டு, அறிவுத்தளத்திற்கு வந்து நின்றுவிடும். முழுக்க உணர்ச்சி வயப்பட்ட இளைய வயது, பெரும்பாலும் அறிவுவசப்பட்ட முதுமை வயது, இரண்டிற்கும் மத்தியில் இருக்கும் நடுத்தர வயதில் நான் இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். படைப்பைச் சில நேரங்களில் நான் தீர்மானிப்பதை விடக் காலம் தீர்மானிக்கிறது. மனதில் விழுந்திருக்கிற எல்லா விதைகளும் முளைத்துவிடும் என்று சொல்ல முடியவில்லை.

ஒரு காட்டில் நீங்கள் விதைத்த விதைகளும் முளைக்கலாம். அந்த நிலத்தைக் கடந்துபோகிற பறவை பழம் தின்று எச்சமிட்டுப் போட்டதும் முளைக்கலாம். விதைத்த விதைகள் முளைக்காமல் போவதும், விதைக்காத விதைகள் முளைத்து வருவதும் நிலத்தின் மிகப்
பெரிய கூறு. அதுதான் காடு. நீர் பாய்ச்சி வருவதல்ல காடு. தானாக உருவாவது கானகம்.

அதுபோன்ற படைப்புதான் சிறந்த படைப்பு. விதைத்து, பாத்தியிட்டு, களையெடுத்து வந்ததைவிட யாரும் விதைக்காமல் முளைத்து வரும் அடர்ந்த காடு அருமையானது; காலம் கை கொடுக்கும் என நம்புகிறேன்.கவிதை எப்படியெல்லாமோ மாறிவிட்டது. உள்வயப்பட்டு வேறு பயணத்திற்குப் போய்விட்டது. எல்லாவற்றையும் நுணுக்கமான உங்கள் பார்வையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

காலம்தோறும் மாறி வருவதுதான் மொழியின் இயல்பு. கவிதையில் வடிவங்கள் மாறுவதும், உள்ளடக்கங்கள் உருமாறுவதும் நடப்பதுதான். உரைநடையே தமிழுக்கு பின்னாளில்தான் வந்தது. உரைநடை வந்தபிறகு இலக்கியத்தில் வடிவங்கள் மாறிவிட்டன. தன் அகவய அனுபவத்தைப் பொது அனுபவமாக மாற்றுவதுதான் உயர்ந்த கலை. எனக்கு நேர்ந்த வலியை, வடித்த கண்ணீரை, என்மேல் விழுந்த மழைத்துளியை ஊரின் மேல் விழுந்ததாக உணர வைப்பதுதான் கலை.

இப்போது அப்படி உணர முடிகிறதா என சந்தேகங்கள் விளைகின்றன. எங்கோ ஒரு பனிப்பிரதேசத்தில் ஒரு எஸ்கிமோ எழுதுகிற கவிதை எனக்குள்ளும் குளிர வைக்க வேண்டும். அரேபியப் பாலைவனத்தில் எழுதப்பட்ட கவிதை ஊட்டியில் இருக்கிற எனக்கு அப்படியே தகித்து உணரப்பட வேண்டும்.

கண்ணீர், ரத்தம், வலி, மகிழ்ச்சி, வானம், பூமி என்பதெல்லாம் பொதுதான். வெவ்வேறு விதங்களில் எழுதப்பட்டாலும் கவிதை என்பது பொது. சிக்கல்களிலிருந்து எளிதில் அடிப்படையான எளிமையைச் சென்றடையும் ஒரு பயணம் கவிதையில் வேண்டும்.

கவிதை அனுபவத்தை வரையறுத்தல் சாத்தியமற்றது. கவிதை பௌதிக விவரணைகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம். அது வலியாகலாம், தவிப்பாகலாம், நெருடலாகலாம், அழுத்தும் சோகமாகலாம். நடு ஆற்றில் அள்ளிய நீர்போல தூயதாகலாம். ஆக, அது காலம் புன்னகைக்கும் தருணம்.கண்ணதாசன், இப்பொழுது நீங்கள் இருக்கும் இடம்... ஆனால், இப்போது சினிமாவில் யாரும் பாட்டெழுதலாம் என்றாகி விட்டது...

இந்த நிலையை சமூக இயங்கியலோடு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். காட்டாறு பிரவாகமெடுத்து வரும்போது அது குடிதண்ணீராக இருக்க முடியாது. அதில் நுரை, காட்டு மரங்கள், மலையில் கருகிக்கிடந்த நிலக்கரி, பிணங்கள்கூட மிதந்து வரும். ஆடு, மாடுகள் அடித்து ஒதுங்கும். வெள்ளம் வடியக் காத்திருக்க வேண்டும்.

இது காட்டாற்றின் காலம். காட்டாறு இல்லாமல் குடிதண்ணீர் கிடையாது. நல்ல மழை பெய்கிறது. அதை வரவேற்க வேண்டும். சின்னச் சின்ன சேதாரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளம் வடிந்தபிறகு குடிதண்ணீர் கிடைப்பது மாதிரி, தகுதி மிக்க சிலர் நீந்திக் கரையேறுவார்கள். ஆனாலும் திரைப்பாடல்களில் இருந்த ஓர் உயரத்தை இங்கே சிலர் குறைத்துவிட்டார்களோ என்ற வேதனையும், ஒரு வகையான சோகமும் எனக்குள் இருக்கின்றன.

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் காலங்களில் கதாநாயகன் பாட்டு, கதாநாயகி பாட்டு, காமெடியன் பாட்டு... என வேறு வேறு இருந்தன. ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா’ என எம்ஜிஆருக்காகவும், ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ என ரஜினிக்காகவும் பாடல் கேட்டு இருந்தோம்.

இப்போது காமெடியன் பாட்டுதான் கதாநாயகன் பாட்டு. கதாநாயகன் பாடுகிற கருத்தியல் பாடலை ஏன் இழக்க வேண்டும்? மொழி, இசை, அசைவு மூன்றும் கீழே வந்துவிட்டன. இவைநிவர்த்தியானால் திரை உலகில் பாடல் வரிகள் மீட்டெடுக்கப்படும்.

கலைஞருக்கும், உங்களுக்குமான நட்பை கலைஞர் காவியமாக எழுதும் எண்ணம் உண்டா?

அது நட்பல்ல. உறவு. எப்போது தமிழை வாசிக்கிறேனோ, எப்போது வீட்டில் தொலைபேசி மணி அடிக்கிறதோ, எப்போது சென்னையின் மேம்பாலங்களைக் கடந்து போகிறேனோ, எப்போது அவரின் வசனம் ஏற்ற இறக்கத்தோடு சொல்லப்படுகிறதோ... இப்படி எல்லா நேரங்களிலும் அவரின் நினைவில் ஆழ்கிறேன்.

தமிழ்நாட்டின் சாலைகள், கட்டமைப்புகளோடு சேர்ந்து தமிழனின் எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அளப்பரியது. கலைஞர் காவியம் பற்றியா கேட்கிறீர்கள்... எல்லா உண்மைகளையும் சொல்லிவிட முடியாது. உண்மை இல்லாததை எழுதவும் முடியாது என்ற இருமுனைத் தாக்குதலில் நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்...

40 வருடமாக இடையறாத உழைப்பு. அந்த எனர்ஜிக்கு என்ன ரகசியம் இருக்கிறது?

மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். உடற்பயிற்சி, யோகாவை அக்கறையாகச் செய்கிறேன். என் தந்தை கொடுத்த மரபணு இது. முக்கியமாக, யார் மீதும் பொறாமைப்படுவதில்லை. பொறாமை என்பது பஞ்சின் பக்கத்தில் வைக்கப்பட்ட நெருப்பு. அது பஞ்சையே எரித்துவிடும். வயிற்றை அடைக்கிற உணவுக்கு ஆசைப்படாமல், நல்ல பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்துவிடுகிறேன்.  

கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பாராளுமன்றத்துக்குப் போகிறார்கள்... ஆனால் நீங்கள்?

நான் மொழியோடு பணியாற்றுகிறேன். ஒரு குறிப்பிட்ட பதவியில், குறிப்பிட்ட இடத்திலிருந்து செய்ய வேண்டிய பணிகளின் ஒரு பகுதியை நான் வாழ்நாள் முழுக்கச் செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் அதை ஐந்தாண்டுச் சிப்பிக்குள் அடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? l

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்