வருடத்துக்கு ஒரு லட்சம் லிட்டர் நீர்… நாள் ஒன்றுக்கு 22 யூனிட் மின்சாரம்…வீட்டிலேயே உற்பத்தி செய்யும் ஆச்சரிய மருத்துவர்!

தமிழகமே தண்ணீர் தட்டுப்பாட்டால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வென மழைநீர் சேகரிப்பையே நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.  இந்நிலையில்தான் அந்தச் செய்தி முகநூல் முழுவதும் வைரலாகியது. வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவுத் துறைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி, சுமார் ஒரு லட்சம் லிட்டர் மழைநீரைச் சேகரித்து பயன்படுத்தி வருகிறார் என்பதே தகவல்!  

அதுமட்டுமல்ல. வேலூர் துத்திப்பட்டில் இருக்கும் அவர் வீட்டின் மாடியில் சோலார் பேனல் அமைத்து குடும்பத்தின் தேவைக்கான மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறார். இதனுடன் இயற்கை மாடித் தோட்டம் வழியாக தேவையான காய்கறிகளையும் பயிரிட்டு பயன்படுத்துகிறார். அதாவது அன்றாட குடும்பத் தேவைகளைத் தொழில்நுட்பம் வழியாக சாத்தியமாக்கி இருக்கிறார்!

‘‘சோலார் பேனல் போட்டு ஆறு வருஷங்களாச்சு. மழைநீர் சேகரிப்பை அஞ்சு வருஷமா செய்திட்டு இருக்கேன்...’’ என்றபடியே உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் டாக்டர் கந்தசாமி சுப்பிரமணி. ‘‘எங்க பகுதில எப்பவுமே வெயில் அதிகம்.

அதனால, சோலார் பேனல் தொழில்நுட்பம் வந்ததும் அதைப் பயன்படுத்தணும்னு தோணுச்சு. என்னோட சோலார் பேனல் ஐந்து கிலோ வாட் சக்தி கொண்டது. இதுல ஒரு நாளைக்கு சரா
சரியா 22 யூனிட் கிடைக்கும். வாஷிங்மிஷின், ஏசி, மின் அடுப்புனு வீட்டுக்குத் தேவைப்படுற கரண்ட்டை இதுலயே எடுத்துப்போம். எங்களுக்கு ஒருநாளைக்கு ஐந்து யூனிட் வரை செலவாகும்.

மீதி கரண்ட்டை மின்சார வாரியத்திற்குக் கொடுக்கும்படி செய்திருக்கேன். அதுக்காகவே மின்வாரிய லைனை இதனுடன் இணைச்சிருக்கேன். ஆரம்பத்துல இந்தத் தொழில்நுட்பம் பத்தி மின்வாரிய ஊழியர்களுக்கே தெரியல. அதனால, சோலார் பேனல் கரண்ட்டை பேட்டரில சேகரிச்சு பயன்படுத்தினேன். ஆனா, அதிகமா கிடைக்கிற கரண்ட்டை ஓரளவுக்கு மேல சேகரிக்க முடியல. இதனால, உற்பத்தியான கரண்ட் நிறைய வீணாச்சு.

பிறகு, நண்பர் ஒருவர் உதவியுடன் மின்வாரியத்துல பேசி, கிரிட்ல (மின் விநியோக அமைப்பு) இணைச்சோம். உள்ளே வர்ற கரண்ட்டையும், வெளியே போறதையும் மீட்டர்ல கணக்கீடு செய்யும்படி அமைச்சோம்.. அதாவது, நான் பயன்படுத்தியது போக மீதி கரண்ட் மின்வாரிய லைன் மூலம் போயிடும். நான் எவ்வளவு அவங்களுக்குக் கொடுத்திருக்கேன் என்கிறதையும், நான் பயன்படுத்தியதையும் மீட்டரே கணக்கீடு செய்யும்.

இந்த ஆண்டு மார்ச் வரை 1100 யூனிட் அவங்களுக்குக் கொடுத்திருந்தேன். இப்ப ஏப்ரல், மே, ஜூன் முடிஞ்சிடுச்சு. இன்னும் என் கணக்குல 200 யூனிட் மிச்சம் இருக்கு! இதனால, கடந்த பத்து மாசமா நான் கரண்ட் பில் கட்டலை! அப்புறம், இதுல ஒரு லைனை இன்வெர்ட்டருடனும் இணைச்சிருக்கேன். கரண்ட் போனால் இதைப் பயன்படுத்திக்கலாம்...’’ என்கிற டாக்டர் கந்தசாமி சுப்ரமணியின் சொந்த ஊர் காங்கேயம். 1991ல் வேலூரில் செட்டிலாகி இருக்கிறார்.

‘‘இந்த வீட்டை 2007ல் கட்டினேன். அப்போ, வெறும் பத்தாயிரம் லிட்டர்ல சின்னதா மழைநீர் சேகரிப்பு அமைச்சிருந்தேன். எங்க கார்டனுக்கு மட்டும் அந்தத் தண்ணீரை செலவழிச்சோம். பிறகு, 2013ல் குடிநீர் பிரச்னை அதிகரிச்சது. அப்ப எங்க பகுதில தண்ணீரை வெளியில வாங்க ஆரம்பிச்சாங்க. அதனால நான், கார் ஷெட்டுக்கு அடியில 60 ஆயிரம் லிட்டர் பிடிக்கும்படி பெரிசா மழைநீர் சேகரிப்பை உருவாக்கினேன்.

வேலூர்ல ஒரு வருஷத்துக்கு 700ல் இருந்து 900 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும். என் வீட்டுக் கூரை, கார் ஷெட் எல்லாம் சேர்த்தா 125 சதுர மீட்டர் இருக்கும். ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லி மீட்டர் மழை பெய்ஞ்சா ஒரு லிட்டர் தண்ணீர் சேகரமாகும்.  

ஆக, 125 சதுர மீட்டருக்கு 125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த வகைல வருஷத்துக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கிறேன்! இப்ப எல்லாம் மழை பெஞ்சா நிறைய கொட்டுது இல்லையா?! அதனால, தண்ணீர் சேர சேர அதை சேகரிச்சு உபயோகப்படுத்திட்டு இருக்ேகாம். இந்த மழைநீர் சேகரிப்பு போட்ட பிறகு கடந்த அஞ்சு வருஷமா தண்ணீர் பிரச்னையைச் சந்திக்கல. இப்ப நாங்க எல்லாத் தேவைகளுக்கும் மழைநீர்தான் பயன்படுத்திட்டு வர்றோம்.

வீட்டுல உள்ள போர் தண்ணீரைக் கழிப்பறைக்கு மட்டும் பயன்படுத்துறோம். மற்றபடி குடிக்க, சமைக்க, குளிக்க எல்லாத்துக்குமே மழைநீர்தான். குடிக்கிறதுக்கும் சமைக்கிறதுக்கும் ஆர்ஓ போட்டு இருக்கோம். மழைநீர் ஆர்ஓவுக்கு வரும்படி செய்து அதைச் சுத்தப்படுத்தியே குடிக்கறோம். அதனால, ஒவ்வொரு வருஷமும் மழைநீர் சேகரிப்பையும் துடைச்சு சுத்தம் பண்ணிடுவோம். இதுவே எங்களுக்குப் போதுமானதா இருக்கு...’’ என்ற டாக்டர் கந்தசாமி சுப்ரமணி மொட்டைமாடித் தோட்டம் பக்கம் திரும்பினார்.

‘‘2008ல இந்தத் தோட்டத்தை வைச்சோம். இதுல கேரட், வெண்டைக்காய், கீரை, தக்காளி, கொத்தமல்லினு வீட்டுக்குத் தேவைப்படுற காய்கறிகளை எடுத்துக்கறேன். கிச்சன்ல மிச்சமாகிற வேஸ்ட்டை இதுக்கு உரமா பயன்படுத்தறேன். இதுக்கு என் மனைவி சத்யாவும் உறுதுணையா இருக்காங்க. அவங்களும் சிஎம்சில பேராசிரியர்தான்.

ஒண்ணு தெரியுமா..? எங்க ரெண்டு பசங்களும் இந்த மழை நீர் சேகரிப்பு, சோலார் பேனல், மாடித் தோட்டங்கள்ல எல்லாம் அவ்வளவு ஆர்வமா இருக்காங்க!’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் டாக்டர் கந்தசாமி சுப்ரமணி.தன்னிறைவு பெற்ற குடும்பம் என்பது இதுதான்!

பேராச்சி கண்ணன்

இ.ராஜ்குமார்