ரத்த மகுடம்-61



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலன் இதை எதிர்பார்க்கவில்லை


சிவகாமியின் உடல்வாகும் கை கால் வலுவும் மற்றவர்களை விட அவனுக்கு நன்றாகவே தெரியும்! அளந்தும் உருட்டியும் தூக்கியும் சுமந்தும் தடவியும் பார்த்தவனல்லவா?!போலவே தன் உடலின் வலுவும் அவனுக்குத் தெரியும். அனு தினமும் அதை பரிசோதித்து வருகிறானே..?

எனவே அருவியின் அருகில் சிவகாமியை அழைத்துச் சென்றபோதும், நீரில் பிரதிபலித்த அவள் வதனத்தை அவளிடமே காண்பித்து ‘‘யார் நீ..?’’ என வினவியபோதும் தயார் நிலையில்தான் இருந்தான். ஒருவேளை திமிறினாலும் அவளை தன்னால் அடக்க முடியும் என உறுதியாக நம்பினான்.

அந்த நம்பிக்கை எக்கணத்தில் பொய்த்தது என்பதை கரிகாலனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.ஏனெனில் ‘‘யார் நீ..?’’ என அவளிடம் விசாரித்த மறுகணம் புல்தரையில் உருண்டு கொண்டிருந்தான்!இமைக்கும் பொழுதுக்குள் தன் பிடியில் இருந்து அவள் நழுவியதையும், தனக்கு முன்னால் நின்றவள் உடனடியாக மீனைப் போல் வளைந்து தன் பின்னால் வந்ததையும் அவன் உணரவேயில்லை. எனவே தன் இடுப்பில் கை வைத்து அவள் தூக்கும்போதும்... உயர்த்திய தன் உடலை அப்பால் வீசியபோதும் செய்வதறியாமலேயே திகைத்தான்.

இத்தனையும் புல்தரையில் அவன் உருண்டபோது இப்படி நடந்திருக்கலாம் என ஊகித்ததுதான். மற்றபடி துல்லியமாக என்ன நடந்தது என்பதை கரிகாலனால் காட்சி வடிவில் நினைத்துப் பார்க்க முடியவில்லை.இதனை அடுத்து அவன் முகத்தில் வியப்பின் ரேகைகள் படர்ந்தன. அறிந்த தேகத்துக்குள் இருந்த அறியாத சக்தி அவனை மலைக்க வைத்தது.

அதை அதிகப்படுத்தும் விதமாகவே அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறின!உருண்டவன் ஓர் எல்லைக்குப் பின் எழ முற்பட்டான். அதற்குள் பாய்ந்து வந்த சிவகாமி அவன் மீது அமர்ந்து அவன் கழுத்தை நெரிக்கத் தொடங்கினாள்.பிஞ்சு விரல்கள்... உணர்ச்சியுடன் தன் முதுகிலும் மார்பிலும் படர்ந்த விரல்கள்... அவைதான் உலோகமாக அக்கணத்தில் உருமாறியிருந்தன!

கரிகாலனின் கண்கள் செருகத் தொடங்கின. அதைப் பார்த்தபடியே தன் விரலை இன்னமும் சிவகாமி அழுத்தினாள்.
இதே நிலை இன்னும் சில கணங்கள் நீடித்தால் அவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்கும். அப்படி பிரிய வேண்டும் என்றுதான் தன் அழுத்தத்தை சிவகாமியும் அதிகரித்தாள்.ஆனால், மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே... மனம் போடும் திட்டங்களை அழித்து மறுதிட்டம் தீட்டுவதுதானே இயற்கைக்கு அழகு!

அப்படியொரு அழகை நோக்கித்தான் அடுத்தடுத்த கணங்கள் நகர்ந்தன. இந்த நகர்தலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது கரிகாலனுக்குள் இருந்த கரிகாலன்தான்!மல்யுத்தத்தில் மாவீரராக இருந்ததாலேயே மாமல்லன் என்று பெயர் பெற்றவர் நரசிம்மவர்ம பல்லவர். அவர் யாரிடம் மல்யுத்தக் கலையைக் கற்றாரோ அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் கரிகாலனும் இப்போதைய பல்லவ இளவரசருமான இராஜசிம்மனும் மல்யுத்தம் பயின்றார்கள்.

அந்த பயிற்சியும் கலையும்தான் கரிகாலனுக்கு கைகொடுத்தன.சுவாசத்தை இழுத்துப் பிடித்தவன் ஒரே உதறலில் சிவகாமியின் பிடியிலிருந்து நழுவினான்.
இதனைத் தொடர்ந்து நடந்த மல்யுத்தத்தை பார்க்கும் பாக்கியம் அங்கிருந்த செடி கொடிகளுக்கே வாய்த்தன! அசுவ சாஸ்திரமும் மல்யுத்தக் கலையும் ஒன்றிணைந்த அந்த தேக விளையாட்டை அங்கிருந்த பட்சிகள் அனைத்தும் கண்டு ரசித்தன.

இருவரும் கட்டி உருண்டார்கள்; புரண்டார்கள்; ஒருவர் உடலில் மற்றவர் குத்து விட்டார்கள்; ஒருவர் வியர்வையில் மற்றவர் குளித்தார்கள்.
கடைசியில் இருவரது கால்களும் ஒருசேர உயர்ந்து அடுத்தவர் இடுப்பில் குத்துவிட்டன.திசைக்கு ஒருவராக இருவரும் விழுந்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்றார்கள். பாய்வதற்கு தயாரானார்கள்.‘‘யார் நீ..?’’ மீண்டும் அழுத்தமாக கரிகாலன் கேட்டான்.

‘‘தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்..?’’ சிவகாமி சீறினாள்.‘‘ஏதாவது செய்ய முற்பட்டால்தான் உன்னை வெளிப்படுத்துவாயா..?’’
‘‘ஏன்... இப்பொழுது மட்டும் வெளிப்படாமலா இருக்கிறேன்! அதுதான் நான் சிவகாமி அல்ல என்பதை கண்டுபிடித்துவிட்டாயே! பச்சிலைச் சாறு என் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி விட்டதே!’’‘‘ஆக நீ சிவகாமி அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறாய்!’’

‘‘ஆம்...’’‘‘அப்படியானால் பல்லவர்களின் குல விளக்கும், நரசிம்மவர்ம பல்லவரின் மனம் கவர்ந்தவரும், வாதாபியை தீக்கிரை ஆக்க காரணமாக இருந்தவருமான நாட்டியப் பேரொளி சிவகாமி அம்மையாரின் வளர்ப்பு பேத்தியும்... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் தன் மகளாக வளர்த்து ஆளாக்கியவளும், பாட்டியின் பெயரையே தனது பெயராகக் கொண்டவளுமான சிவகாமி எங்கே..?’’
‘‘சாளுக்கியர்களின் சிறையில்!’’

சிவகாமியின் உருவத்தில் அதுநாள் வரையில் தன்னுடன் ஒட்டி உறவாடியவள் இப்படிச் சொன்னதும் கரிகாலன் எரிமலையானான்.
அதைக் கண்டு ‘சிவகாமி’ நகைத்தாள். ‘‘உன் பலத்தை பயன்படுத்தி இந்த இடத்திலேயே என்னைக் கொன்றாலும் சரி... சாளுக்கியர்களின் எந்தச் சிறையில் இராஜசிம்ம பல்லவரின் வளர்ப்பு சகோதரியான சிவகாமி இருக்கிறாள் என்பதை சொல்ல மாட்டேன்! ஏனெனில் அந்த விவரம் எனக்கே தெரியாது!’’

‘‘இதை நான் நம்ப வேண்டுமா..?’’
‘‘உன் விருப்பம்!’’ அலட்சியமாக சிவகாமி பதில் சொன்னாள்.‘‘சாளுக்கியர்களின் உளவாளியான உனக்கே இந்தளவு தைரியம் இருந்தால்... பல்லவ சேனையின் உபதளபதியான எனக்கு எந்தளவு துணிச்சல் இருக்கும்! உன்னை என்ன செய்கிறேன் பார்...’’
‘சிவகாமி’யின் மீது கரிகாலன் பாய்ந்தான்!‘‘மன்னா... என்னை மன்னித்துவிடுங்கள்!’’ ராமபுண்ய வல்லபரின் குரல் தழுதழுத்தது.‘‘எதற்கு..?’’ புருவத்தை உயர்த்தினார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.

‘‘அறையில் தங்கள் மீது நடந்த விசாரணைக்கு அடியேனும் ஒரு காரணமாக அமைந்துவிட்டேன்...’’‘‘எந்த அறையில்..? என்ன விசாரணை நடைபெற்றது..?’’கேட்ட சாளுக்கிய மன்னரை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னா...’’‘‘சொல்லுங்கள் சாளுக்கியர்களின் போர் அமைச்சரே..!’’எதுவும் பேசாமல் ராமபுண்ய வல்லபர் தலைகுனிந்தார்.

இந்தக் கோலத்தில் அவரைப் பார்க்கவே விக்கிரமாதித்தருக்கு பாவமாக இருந்தது. மெல்ல அருகில் வந்து அவர் தோளில் கை வைத்தார். ‘‘அங்கு நடந்ததை அங்கேயே நான் மறந்துவிட்டேன்... தென்னகம் முழுக்க சாளுக்கியர்கள் ஆளவேண்டும் என நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்... ஏனெனில் நாம் அனைவருமே மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் வழி வந்தவர்கள்.

நமக்குள் ஓடுவது சாளுக்கிய ரத்தம். எனவே இதற்கு இடைஞ்சலாக யார் வந்தாலும் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி நகர நினைக்கிறோம். அவ்வளவுதான்...’’‘‘அதற்காக தங்களை நாங்கள் தவறாக நினைத்தது எந்த வகையில் சரியாகும்..? எங்களைவிட சாளுக்கியப் பேரரசு கனவு உங்களுக்கு அதிகம் என்பதை நாங்கள் உணரத் தவறியது பிழைதானே..?’’

‘‘ஆம், பிழைதான். தவறல்ல! தவறுக்கும் பிழைக்கும் வித்தியாசமுண்டு சாளுக்கியர்களின் போர் அமைச்சரே! அதனால்தான் அறையில் நடந்ததை அப்படியே மறந்துவிடுங்கள் என்கிறேன்... தவிர என் மீதும் பிழை இருக்கிறது... எனது ஏற்பாடுகளை உங்களிடம் நானும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தக் குழப்பங்கள் நடந்திருக்காது...’’ராமபுண்ய வல்லபர் அமைதியாக நின்றார்.

‘‘சரி... உடனே நம் வீரர்களையும் ஒற்றர்களையும் எல்லா திசைகளிலும் அனுப்புங்கள்... சிவகாமியின் உருவத்தில் இருப்பவள் நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம் என்பது இந்நேரம் கரிகாலனுக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு ஒன்று அவன் அவளைக் கொன்றிருப்பான் அல்லது அவள் அவனைக் கொன்றிருப்பாள்... எதுவாக இருந்தாலும் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவேண்டும்...’’
‘‘...’’

‘‘அடுத்ததாக படைகள் புறப்பட ஆயத்தம் செய்யுங்கள்...’’
‘‘எங்கு செல்கிறோம் மன்னா..?’’
‘‘உறையூருக்கு! இங்கிருப்பதை விட அங்கிருந்தால் பாண்டியர்
களையும் ஒரு கை பார்க்க முடியும்!’’
‘‘உத்தரவு மன்னா...’’ வணங்கிவிட்டு சாளுக்கியர்களின் போர் அமைச்சர் நகர முற்பட்டார்.
‘‘ராமபுண்ய வல்லபரே...’’ விக்கிரமாதித்தர் தடுத்தார்.‘‘மன்னா!’’

‘‘உங்கள் மனதில் இன்னும் வினாக்கள் இருக்கின்றன என்று தெரியும். அதில் முதன்மையானது கரிகாலனை ஏன் காஞ்சியில் இருந்து தப்பிக்க வைத்தேன் என்பது... அடுத்து, என் மகனும் சாளுக்கிய இளவரசருமான விநயாதித்தன் எங்கிருக்கிறான் என்பது... மூன்றாவது, கடிகையில் இருந்த பாலகன் யார் என்பது... சரிதானே..?’’‘‘ஆம் மன்னா!’’‘‘பிறகு ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்..?’’‘‘காரணமில்லாமல் நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா...’’
‘‘காரணத்தை அறியலாமே..?’’

‘‘அறிய வேண்டிய நேரத்தில் நீங்களே அழைத்து விளக்குவீர்கள் என்று தெரியும்...’’ சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார் ராமபுண்ய வல்லபர்.அவர் செல்வதை புன்னகையுடன் பார்த்தார் விக்கிரமாதித்தர். இந்த நம்பிக்கைதான் சாளுக்கியர்களின் வெற்றிக்கான முதல் படி!தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அனந்தவர்மர். அவர் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இரண்டாவது வாய்ப்பையும் நழுவ விடப் போகிறோமா... சாளுக்கியர்களின் அரியணையில் அமரும் தகுதி மூத்தவரான தனக்குத்தானே இருக்கிறது..? எதிரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப நட்பு பாராட்டுவது ராஜ தந்திரத்தில் அனுமதிக்கப்பட்டதுதானே? அதன்படிதானே முன்பு நரசிம்மவர்ம பல்லவருடனும் இப்பொழுது பரமேஸ்வர வர்மருடனும் நட்பு பாராட்டத் துணிந்தோம்..? அது எந்த வகையில் தவறாகும்..?
முணுமுணுத்தபடியே நடந்தவர் சட்டென நின்றார்.

ஓசை எழுப்பாமல் சாளரத்தின் அருகில் வந்தார்.எதிர்பார்த்தது போலவே வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள்.சிறை!விக்கிரமாதித்தா... இந்த அண்ணனை இன்னமும் நீ புரிந்து கொள்ளவில்லை... சிவகாமியை ஆயுதமாக்கி இருக்கிறாய்... உருவாக்கியவர் யாராக இருந்தாலும் யார் கையில் ஆயுதம் சிக்குகிறதோ அவர்களுக்கே அது விசுவாசமாக இருக்கும்..!

திரும்பி அறையின் நடுவில் வந்தவர் படுக்கையின் மீது அமர்ந்தார். இடுப்பிலிருந்து மடிக்கப்பட்ட பட்டுத் துணியை எடுத்து விரித்தார். அதன் மீது ஏராளமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. அதையே உன்னிப்பாக பார்க்கத் தொடங்கினார்.கரிகாலன் சட்டென புன்னகைத்தான்.அந்த சிரிப்புக்கான அர்த்தம் ‘சிவகாமி’க்குப் புரியவில்லை.

அவனது கருவிழிகள் அலைபாயவில்லை; எங்கும் நகரவில்லை. சரியாக அவளது கருவிழிகளுக்குள்தான் அவன் நயனங்கள் ஊடுருவிக் கொண்டிருந்தன.
ஆனாலும் கணத்துக்கும் குறைவான நேரம் அவன் கண்கள் மின்னியதாக அவளுக்குத் தோன்றியது.அது பிரமையா இல்லையா என்ற தீர்மானத்துக்கு அவள் வருவதற்கு முன் -கரிகாலன் பாய்ந்தான்.

அவள் மீதல்ல. நதியாக பிரவாகம் எடுத்த அருவியில்!பார்த்தவளுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. ஆற்றில் மரக்கட்டைகள் மட்டுமே மிதந்து வந்துகொண்டிருந்தன.இதிலென்ன இருக்கிறது..?சிந்திப்பதற்கு முன்பே அவளுக்கு விடை கிடைத்தது. ஒரு மரக்கட்டையை எடுத்து மேல் நோக்கி கரிகாலன் வீசினான். அவனை நோக்கி அது கீழே வரும்போது தன் உள்ளங்கையால் அந்த மரக்கட்டையைப் பிளந்தான்.
மரக்கட்டைக்குள் வாள் ஒன்று இருந்தது.

அதை தன் கரத்தில் ஏந்தியபடி ‘சிவகாமி’யைப் பார்த்துச் சிரித்தான்!அரக்கை எடுத்து ஒரு சித்திரத்தைச் சுற்றிலும் அனந்தவர்மர் வட்டமிட்டார்.வட்டத்துக்குள் வாள் மின்னிக் கொண்டிருந்தது!அதுவும் அருவிக் கரையில் எந்த வாளை தன் கரத்தில் கரிகாலன் ஏந்தியிருந்தானோ... அதேபோன்ற வாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்