தல புராணம்-மெட்ராஸ் தியேட்டர்கள்!நம் எல்லோருக்குமே சினிமா தியேட்டர் பற்றி ஓர் அழகான அனுபவம் இருக்கும். சினிமா பார்க்க கிளம்புவதில் இருந்து படம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒரே களேபரம்தான்.  பொழுதுபோக்குகள் குறைவான அந்தக் காலத்தில் தியேட்டர்கள் மக்களின் வாழ்வோடு ஒன்றியிருந்தன. ஆனால், இன்று தொழில்நுட்பங்களால் செல்போன் வழியாகவே படங்களை எளிதாகப் பார்த்துவிடுகிறோம்.

இதனால், நம் இளமைக் காலத்தில் கண்டுகளித்த எத்தனையோ தியேட்டர்கள் இன்று காணாமல் போய்விட்டன. நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது. ‘‘80களில் மெட்ராஸிலும் அதன் புறநகரிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம்...’’

மெட்ராஸிற்கு தியேட்டர் வந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்கே கட்டப்பட்ட முதல் தியேட்டர் ‘எலக்ட்ரிக்’. இதை, வார்விக் மேஜர் மற்றும் ரெஜினால்டு அயர் ஆகியோர் 1913ம் வருடம் இன்றைய அண்ணா சாலையான அன்றைய மவுன்ட் ரோட்டில் கட்டினர். அன்று மவுனப் படங்கள் இதில் திரையிடப்பட்டன.

இந்தத் தியேட்டர் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு வருடங்களில் மூடப்பட்டுவிட்டது. தொடர்ந்து அதை தபால் துறை வாங்கியது. இதுவே இன்று அண்ணாசாலையில் தபால்தலை (Philatelic Bureau) அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் மெட்ராஸில் தியேட்டராக முதலில் செயல்பட்டது இன்றைய மாநகராட்சி அருகே உள்ள விக்டோரியா பப்ளிக் ஹால்தான்.

இங்கேதான் 1897ம் வருடம் எட்வர்ட்ஸ் என்பவர் பத்து முதல் பனிரெண்டு நிமிடங்கள் ஓடிக் கூடிய சில மவுனப் படங்களைத் திரையிட்டார். இதன்பிறகு, 1911ம் வருடம் பிராட்வேயில் கிளக் என்ற பெண்மணி ‘பயோஸ்கோப்’ என்ற பெயரில் தியேட்டர் ஒன்றை நடத்தி வந்ததாகக் குறிப்பிடுகிறார் சென்னை வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

‘‘விக்டோரியா பப்ளிக் ஹாலில் இத்தகைய மவுனப் படங்களைப் பார்க்க எப்படி கூட்டம் வந்ததோ அதேபோலவே கிளக்கின் தியேட்டருக்கும் கூட்டம் வந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அந்தத் தியேட்டர் மூடப்பட்டு விட்டது. இதன்பிறகே, மெட்ராஸின் முதல் தியேட்டர் என்று வர்ணிக்கப்படும் ‘எலக்ட்ரிக்’ தியேட்டர் வந்தது...’’ என்கிறார் அவர்.

தொடர்ந்து 1913ம் வருடம் ‘லிரிக்’ என்ற தியேட்டர் எலக்ட்ரிக் தியேட்டருக்குப் போட்டியாக மவுன்ட்ரோட்டில் உருவானது.

1907ம் வருடம் மிஸ்கித் அண்ட் கோவை கோகன் என்பவர் வாங்கினார். இந்த மிஸ்கித் அண்ட் கோவை 1842ம் வருடம் இசைப் பிரியரான மிஸ்கித் வாங்கிய கதையை ‘மியூசி மியூசிக்கல்’ பகுதியில் ஏற்கனவே பார்த்தோம்.

இதைத்தான் கோகன் வாங்கி அதன் முதல் தளத்தில் 1913ம் வருடம் ‘லிரிக்’ தியேட்டரை அமைத்தார். சினிமாவின் பேரரசன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இந்தத் தியேட்டர் 1914ம் ஆண்டு ஒரு தீ விபத்தால் மூடப்பட்டு விட்டது. பின்னர் இதை கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பயோஸ்கோப் நிறுவனத்தை நடத்திய ஜே.எஃப். மதன் வாங்கினார். அன்று இந்திய சினிமாவின் தூணாக விளங்கிய இந்த மனிதர் 1915ம் வருடம் மிஸ்கித் கட்டடத்தை முழுவதுமாக வாங்கி ‘எல்பின்ஸ்டன்’ தியேட்டரை அமைத்தார்.

இதுவே, பால்கனி கொண்ட மெட்ராஸின் முதல் தியேட்டர். ஆனால், இதற்கு முன்னரே இந்தியர் ஒருவர் மெட்ராஸில் ஒரு தியேட்டரை கட்டிவிட்டார். அவர் பெயர் ரகுபதி வெங்கய்யா.ஊர் ஊராக மவுனப் படங்களைத் திரையிட்டுக் காட்டி வந்த இவர், நிறைவில் ஒரு திரையரங்கு அமைப்பதென முடிவெடுத்தார். 1914ம் வருடம் மெட்ராஸின் புதுப்பேட்டை கூவம் நதிக்கரையில் இந்தத் தியேட்டரைக் கட்டினார். அதுவே ‘கெயிட்டி’ தியேட்டர்.

தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் மின்ட் அருகே ‘கிரவுன்’ (1916) தியேட்டரையும், புரசைவாக்கத்தில் ‘குளோப்’ (1917) தியேட்டரையும் கட்டினார்.
இந்த ‘குளோப்’ தியேட்டர்தான் பின்னாளில் ‘ராக்ஸி’ தியேட்டராக மாறியது. புரசைவாக்கம் ‘ராக்ஸி’, ஒருகாலத்தில் சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது. இப்போது இந்தத் தியேட்டர் இருந்த இடத்தில் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறது.‘கெயிட்டி’ தியேட்டர் 2005ம் வருடம் மூடப்பட்டது. இதன் அருகே 1941ல் திறக்கப்பட்ட ‘காஸினோ’ தியேட்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது.

இரானி குடும்பத்தினால் கட்டப்பட்ட இந்த ‘காஸினோ’ தியேட்டர் ஆரம்பத்தில் ஆங்கிலப் படங்களைத் திரையிட்டது. பின்னர் இதில், தமிழ் படங்களும் அடுத்து ெதலுங்கு படங்களும் திரையிடப்பட்டு வந்தன. இதனருகே கூவம் நதியின் மறுபக்கம் இருந்த ‘சித்ரா’ தியேட்டர் இதற்கு முன்பே மூடப்பட்டுவிட்டது.

1918ம் வருடம் மவுன்ட்ரோட்டில் ‘வெலிங்டன்’ தியேட்டர் திறக்கப்பட்டது. இப்போது அது ‘வெலிங்டன் பிளாசா’வாக மாறி இருக்கிறது.பின்னர், 1932ம் வருடம் மவுன்ட்ரோட்டில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ தியேட்டர் உருவானது. இங்கு தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் திரையிடப்பட்டன. இந்தத் தியேட்டர் 1970களில் தனது அந்திம காலத்திற்கு வந்தது.

பின்னர், மலையாளப் படங்களாகத் திரையிடப்பட்டு 1979ல் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. அந்த இடத்தில்தான் ரஹஜா காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. பிறகு, ‘மினர்வா’, ‘பிராட்வே’, ‘ஸ்டார்’ என அடுத்தடுத்து தியேட்டர்கள் மெட்ராஸில் உதயமாயின.1961ம் வருடம் டி.கே.என்.கேசுவரன் என்பவர் தொகுத்த ‘சென்னை மாநில தமிழ் டைரக்டரி’ நூலில் நகரில் இருந்த சினிமா தியேட்டர்களைப் பார்க்க முடிகிறது.

அதில், மொத்தம் 41 தியேட்டர்கள் உள்ளன. அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்களையும் கூட அவர் கொடுத்துள்ளார். இன்றைய மாநகராட்சியை ஒட்டிச் செல்லும் சைடன்ஹாம் சாலையில் ‘அசோக்’ என்ற தியேட்டர் இருந்துள்ளது. பிறகு இது ‘சிவசக்தி’ என்ற தியேட்டராக மாறி இப்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளதென விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்ட்டில் இயங்கிய ‘பாரத்’, ‘கிருஷ்ணா’, ‘கிரவுன்’; ராயபுரம் ‘பிரைட்டன்’; பிராட்வேயில் இருந்த ‘பிரபாத்’, ‘பிராட்வே’; ஜார்ஜ் டவுனில் செயல்பட்ட ‘மினர்வா’, ‘முருகன்’, ‘செலக்ட்’; வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த ‘பத்மநாபா’, ‘ரீகல்’... என அன்று வடசென்னையில் அதிகளவில் தியேட்டர்கள் இயங்கி வந்துள்ளன.

இதில், ‘மினர்வா’தான் ஏசி போடப்பட்ட முதல் மெட்ராஸ் தியேட்டர் என்கிறார் தியேட்டர்களை புகைப்படமாக ஆவணப்படுத்தும் கலைஞர் பாலாஜி மகேஷ்வர். ‘‘ஒரு காலத்துல இந்த மினர்வா சென்சார் கொடுக்கும் தியேட்டரா இருந்துச்சு. ‘பராசக்தி’ படத்தின் சென்சார் இங்கதான் ஆச்சு. நிறைய ஆங்கிலப் படங்கள் இந்தத் தியேட்டர்ல போடுவாங்க. அப்புறம், இது ‘பாட்சா’ தியேட்டராக மாறிடுச்சு...’’ என்கிறார் பாலாஜி.

ெதாடர்ந்து மவுன்ட்ரோட்டில் ‘சித்ரா’, ‘மிட்லண்ட்’, ‘நியூ குளோப்’, ‘ஓடியன்’, ‘பிளாஸா’, ‘சாந்தி’, ‘வெஸ்ட் எண்ட்’ போன்றவை இருந்தன.இதில், ‘மிட்லண்ட்’ தியேட்டர் ‘ஜெயப்பிரதா’வாக மாறியது. ‘ஓடியன்’ தியேட்டர் ‘மெலோடி’யானது. ‘நியூ குளோப்’, ‘அலங்கார்’ ஆனது. இப்போது இவற்றில் எதுவுமே இல்லை.

இதன் அருகில் இருந்த இன்னொரு தியேட்டர் ‘பைலட்’. இதை பைலட் பேனா கம்பெனியினர் ஆரம்பித்தனர். 1968ம் வருடம் இந்தத் தியேட்டரில் முதல் திரைப்படம் போடப்பட்டது. மெட்ராஸில் ‘சினிரமா’ தொழில்நுட்பத்தில் இயங்கிய முதல் தியேட்டர் இது. ஆனால், இப்போது இடிக்கப்பட்டுவிட்டது.

மயிலாப்பூர் ‘காமதேனு’; மந்தைவெளி ‘கபாலி’; அடையாறு ‘ஈராஸ்’; தி.நகர் ‘ராஜகுமாரி’, ‘சன்’; பெரம்பூர் ‘மகாலட்சுமி’, ‘சரசுவதி’, ‘வீனஸ்’; அயனாவரம் ‘சயானி’; அமைந்தகரை ‘லட்சுமி’; கெல்லீஸ் ‘உமா’; சேப்பாக்கம் ‘பாரகன்’; வண்ணாரப்பேட்டை ‘மகாராணி’, ‘தங்கம்’; சைதாப்பேட்டை ‘நூர்ஜஹான்’, ‘திருமகள்’; கோடம்பாக்கம் ‘லிபர்ட்டி’, ‘ராம்’... தியேட்டர்கள் போன்றவை 1961ல் ெசன்னை நகருக்குள் இருந்தவை.

இதில், தி.நகரிலிருந்த ‘ராஜகுமாரி’ தியேட்டர் நடிகை ராஜகுமாரியால் நிறுவப்பட்டது. இன்று அதில் பிக் பஜார் காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் அருகே நடிகர் நாகேஷின் தியேட்டரான ‘நாகேஷ்’ 1984ம் வருடம் எம்ஜிஆரால் திறக்கப்பட்டது. இப்போது திருமண மண்டபமாக மாறியிருக்கிறது.

இதேபோல் தி.நகரிலிருந்த இன்னொரு தியேட்டர் ‘சன்’. இது இன்று சன் பிளாசாவாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ‘கிருஷ்ணவேணி’ தியேட்டரும் இப்போது மூடப்பட்டுவிட்டது.

மவுன்ட்ரோட்டில் ஜெமினி மேம்பாலம் இறக்கத்தில் ‘சஃபையர்’ தியேட்டர் காம்ப்ளக்ஸ் இருந்தது. 1964ல் திறக்கப்பட்ட இதில் ‘சஃபையர்’, ‘புளூ டைமண்ட்’, ‘எமரால்டு’ என மூன்று தியேட்டர்கள் இயங்கின. அதனால், இதை இந்தியாவின் முதல் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர் என்கின்றனர்.

இதில் ‘புளூ டைமண்ட்’ தியேட்டரில் ஒருமுறை டிக்கெட் எடுத்துவிட்டு அன்று முழுவதும் அப்படத்தை பல காட்சிகளும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். அதேபோல், எப்போதும் டிக்கெட் தருவார்கள்.

படம் முடிய பத்து நிமிடங்கள் இருக்கும் போது கூட டிக்கெட் எடுத்து உள்ளே செல்ல முடியும். எந்த இடத்திலும் உட்காரலாம். எப்போதும் வெளியே போகலாம். அப்படியொரு முறை இருந்தது. இன்று இடிக்கப்பட்ட நிலையில் வெற்றிடமாக க் காணப்படுகிறது.

இதன் அருகே இருந்த ‘ஆனந்த்’ தியேட்டர் மூடப்பட்டு அடுக்குமாடி கட்டடமாக மாறிவிட்டது. இன்று மவுன்ட்ரோட்டில் ‘தேவி’, ‘அண்ணா’, ‘சத்யம் காம்ப்ளக்ஸ்’, ‘உட்லண்ட்ஸ்’ போன்ற சில தியேட்டர்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

கோடம்பாக்கத்தில் புகழ்பெற்ற தியேட்டர்களாக இருந்த ‘லிபர்ட்டி’, ஹோட்டலாகவும், ‘ராம்’ திருமண மண்டபமாகவும் மாறியிருக்கிறது. அயனாவரத்தில் இருந்த ‘வீனஸு’ம், திருவான்மியூரில் இருந்த ‘தியாகராஜா’வும் இன்று ‘எஸ்2’ தியேட்டர்களாக உள்ளன.  

இத்துடன், மாம்பலத்தில் ‘சீனிவாசா’, வடபழனியில் ‘கமலா’, அமைந்தகரை ‘முரளிகிருஷ்ணா’, அண்ணாநகரில் ‘கிராண்ட்’, அடையாறு ‘கணபதி ராம்’, அயனாவரத்தில் ‘கோபி கிருஷ்ணா’, புரசைவாக்கம் ‘பாலாஜி சரவணா’, ‘அபிராமி’, ‘மோட்சம்’, கீழ்ப்பாக்கம் ‘ஈகா’, ‘அனு ஈகா’, ‘சங்கம்’ என தியேட்டர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இன்று இவற்றில் தொண்ணூறு சதவீத தியேட்டர்கள் காம்ப்ளக்ஸ்களாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் உருமாறிவிட்டன. ஒருசில மட்டுமே தங்களைப் புதுப்பித்துக் கொண்டு உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன.

படங்கள் உதவி: பாலாஜி மகேஷ்வர்

பேராச்சி கண்ணன்