பரிதலா ரவி வீட்டில் ஜெகன்மோகன் ரெட்டி வெடிகுண்டு வீசினாரா?!போஸ்ட் மார்ட்டம்-12

தலைப்பு அதிர வைக்கிறதல்லவா..?

செய்தியும் அப்படித்தான்.ஆனால், இது கிசுகிசு அல்ல. போலீஸ் ரிக்கார்ட் இப்படித்தான் இருக்கிறது!சிறையில் அடைக்கப்பட்டாலும் பரிதலா ரவியைப் போட்டுத்தள்ளியே தீருவது என்பதில் சூரி உறுதியாக இருந்தார்.
அதற்கான திட்டங்களையும் தீட்டத் தொடங்கினார்.அதில் ஒன்றுதான் ரவி வீட்டில் வெடிகுண்டு வீசுவது!இந்தத் தாக்குதலும் நடைபெற்றது. வழக்கம்போல் இதிலிருந்தும் ரவி தப்பித்தார்.இந்த வெடிகுண்டு வழக்கின் முதல் குற்றவாளி சூரி. இரண்டாவது குற்றவாளி..?

ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி!
ஆமாம். இப்போதைய சீமாந்திராவின் முதலமைச்சரேதான்! காவல்துறை அப்படித்தான் வழக்குப் பதிவு செய்தது.ஆக, இம்முறையும் ரவி தப்பித்துவிட்டார். அதற்காக சும்மா இருக்க முடியுமா..? ரவியின் ஆட்களை சுத்தமாக போட்டுத் தள்ளி அப்புறப்படுத்திவிட்டால் தனி ஆளாக அல்லவா நிற்பார்..?

சூரியின் இந்த ப்ளானை செயல்படுத்த அவரது ஆட்கள் முற்பட்டனர்.இதன் ஒரு பகுதியாக ரவியின் ஆட்கள் மூவரை வெங்கடபுரம் அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்!இதைப் பார்த்துக் கொண்டு ரவி சும்மா இருப்பாரா..? சிறையிலேயே சூரியை கொலை செய்ய தன் பங்குக்கு திட்டம் தீட்டினார். இதைச் செயல்படுத்த தன் ஆட்களையும் சிறைக்கு அனுப்பி வைத்தார்.

கடைசி நேரத்தில் இந்த ‘ப்ராஜெக்ட்டை’ மோப்பம் பிடித்த காவல்துறையும் உளவுத்துறையும் சட்டென சூரியை பாதுகாப்பான வேறு செல்லுக்கு மாற்றி அவரைக் காப்பாற்றினார்கள்!ஸோ வாட்..? சிறையில் ‘போட’ முடியவில்லை. அதனால் என்ன..? கோர்ட்டுக்கு சூரியை அழைத்து வந்துதானே ஆகவேண்டும்..? அப்பொழுது வழியிலோ அல்லது திரும்பும்போதோ அல்லது நீதிமன்றத்தில் வைத்தோ தீர்த்துக் கட்டிவிடலாம் என ரவியின் தரப்பு சகல திசைகளிலும் ஆபரேஷன் ஏ, ஆபரேஷன் பி, ஆபரேஷன் சி... என ஸ்கெட்ச் போட்டது.

இதை அறிந்த காவல்துறை தங்கள் பங்குக்கு பலத்த பாதுகாப்புடனும் ஆள் மாறாட்ட திட்டத்துடனும் சூரியை கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்து வந்து காப்பாற்றியது!ஒரு பக்கம் முன்னாள் எம்எல்ஏ சென்னா ரெட்டியின் குடும்பம்; இன்னொரு பக்கம் பாரம்பரியமான சூரிய நாராயண ரெட்டியின் குடும்பம். இவர்கள் இருவரையும் பகைத்துக்கொண்டு தில்லாக நடுவில் நின்றபடி ரவி செஸ் ஆடத் தொடங்கினார்.

அதே நேரம் எல்லாத் தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டன. இதனால் மூன்று தரப்பு ஆதரவாளர்களும் குடும்பம் குடும்பமாக உயிருக்கு பயந்து அனந்தபூர் மாவட்டத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

இந்த குருதி ஆட்டங்கள் எல்லாம் நடைபெற்றது தெலுங்கு தேசம் ஆட்சியில்தான். அப்பொழுது மாநில முதல்வராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பரிதலா ரவியால் தன் கட்சிக்கு அவப்பெயர். இதனாலேயே ரவிக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் இருந்தார்.

ஆனாலும் தன் ஆட்டத்தை ரவி குறைக்கவேயில்லை.சரி... பேசாமல் ரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. காரணம் செல்வாக்கு. அனந்தபூர் மாவட்டமே ரவியின் அசைவுக்கு ஏற்பதான் நடந்தது. மாநில முதல்வராகவே இருந்தாலும் தனக்குக் கூட அனந்தபூரில் செல்வாக்கு கிடையாது என்பது சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றாகவே புரிந்தது. கூடவே அடுத்து வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வி அடையவும் வாய்ப்பிருக்கிறது என சந்திரபாபு நாயுடுவின் உள்ளுணர்வு சொன்னது.

எனவே மக்களுக்கு நெருக்கமான திட்டங்களை தன் கட்சி நிறைவேற்றியிருப்பதாக தேர்தலுக்கு முன்பிருந்தே முழங்கத் தொடங்கினார்.
மாநில முதல்வரும் தனது கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்குள் இவ்வளவு மனப்போராட்டங்கள் நடக்கிறது என்பதெல்லாம் ரவிக்கு தெரியாது. அறியும் நிலையிலும் அவர் இல்லை.

ஏனெனில் ரவியை ஆதரிக்கும் நக்ஸல் குழுவின் எதிர் அணியிலிருந்து - இவர்களும் நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் - அவருக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கின.‘உங்களுடைய படுகொலைகள் எல்லை மீறிவிட்டன. நீங்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் நாங்கள் உங்களை எதிர்ப்போம்..!’ எனச் ‘செய்தி’ அனுப்பினார்கள்.

அத்துடன் சந்திரபாபு நாயுடுவை படுகொலை செய்யவும் இந்த நக்ஸல் குரூப் திட்டமிட்டது. அவர் திருப்பதி செல்லும்போது வழியில் வெடிகுண்டை வெடிக்கவும் செய்தது!ஒரு மாநில முதல்வரை இப்படி படுகொலை செய்ய நக்ஸல்கள் முற்பட்டது இந்தியாவையே அதிர வைத்தது!

இப்படி அனந்தபூர் மாவட்ட குடும்பப் பகை ஒரு மாநிலத்தையே புரட்டிப் போட்டவேளையில்தான் 2004ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

உடனே ஜெகன்மோகன் ரெட்டி தனது செல்வாக்கின் மூலம் சிறைத்துறை உயரதிகாரிகளின் துணையோடு சூரியை வளைத்தார். அவரது மனைவி பானுமதியை பெனுகொண்டா தொகுதியில் நிற்க வைத்தால் காங்கிரஸ் கட்சி அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று உறுதி அளித்தார்...உடனே ‘அருகில் இருந்து பார்த்ததுபோல் எப்படி அவ்வளவு தீர்மானமாகச் சொல்கிறீர்கள்..?’ என இதை எழுதியவனை நோக்கி உங்களுக்கு கேட்கத் தோன்றும்.

ரிக்கார்ட் அப்படித்தான் இருக்கிறது... ஆங்கில மீடியாக்கள் இப்படித்தான் 2004ம் ஆண்டு எழுதின.இதை ஜெகன்மோகன் ரெட்டியும் மறுக்கவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது!ரைட். விஷயத்துக்கு வருவோம். ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டத்துக்கு சூரி சம்மதித்தார். இதனை அடுத்து சூரியின் மனைவி பானுமதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பெனுகொண்டா தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நின்றவர்..?

வேறு யார்..? சாட்சாத் பரிதலா ரவிதான்! ஆனால், உள்ளூர ரவிக்கு உதறல். ம்ஹும். சூரியின் மனைவி பானுமதி குறித்தோ அல்லது அவருக்குப் பின்னால் நின்ற ஜெகன்மோகன் ரெட்டி குறித்தோ அல்ல.மாறாக, எதிரணிக்கு ஆதரவாக நின்ற நக்ஸல் குழுவை நினைத்து!
இதை தெலுங்கு தேச கட்சித் தலைமையும் ஸ்மெல் செய்ததால் எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல் ரவியை வீட்டிலேயே அமைதியாக இருக்கச் சொன்னது.  

எப்பொழுதும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் ரவி, இம்முறை அப்படிச் செய்யவில்லை. முழுக்க கட்டுப்பட்டு தன் வீட்டிலேயே இருந்தார்!தேர்தல் பிரசாரத்தில் ரவி ஈடுபடவே இல்லை. மாறாக ரவியின் மனைவி சுனிதாவும் கட்சித் தொண்டர்களும்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள்.

தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவியின் தளபதிகளாகத் திகழ்ந்த சமான், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.இது தனக்கு வைக்கப்பட்ட செக் என கோபம் அடைந்த ரவி...என்ன செய்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது.ஆனால், வாக்குப்பதிவு  நடந்த நாளன்று ஒரு காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அவ்வளவுதான். அனந்தபூர் மாவட்டமே பற்றி எரிந்தது.இந்த நிகழ்ச்சிக்குப்  பிறகு ரவியை வீட்டுக் காவலில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இத்தனை  களேபரத்துக்கு இடையிலும் 24 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பரிதலா ரவி வெற்றி பெற்றார் என்பதுதான் ஹைலைட்!

(தொடரும்)  

கே.என். சிவராமன்